"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே'- என்ற ஒற்றை சொல்லின் உயிரமைப்பாய் விளங்கி அன்று முதல் இன்று வரை சமூகத்தின் மீதான அக்கறை, அரசியல் சாணக்கியம், அதிகார எதிர்ப்பு, ஊழல்வாதிகளின் முகத்திரை, அரசு நிர்வாகத்தின் சீரமைப்பு என எல்லை தாண்டிய பயணம் இன்றோடு முப்பத்தி இரண்டு ஆண்டுகள் என்பதே இமாலய சாதனை தான்.
வயல் வாசம் கடந்து நடை நடந்து பல கிலோ மீட்டர் பயணப்பட்டு வாங்கி வந்த நக்கீரன் இதழை படித்த என் தந்தைக்கு பின் இன்று நான் என் எதிர் வீட்டு கடையருகில் வாங்கி படிக்கிறேன். என் வயதை நெருங்கிய இதழின் பயணம் நெருப்பில் விளைந்த தங்கத்திற்கு சமமானது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் மர்மங்களை அரங்கேற்றிய ஆளும் கட்சிகளின் அடக்குமுறைகளை இந்த அகிலம் அறிந்திடவும், கார்ப்பரேட் கயவனிடமிருந்து தன்னை விலக்கி தூத்துக்குடி மக்களிடம் நெருங்கி நிற்கும் நக்கீரனின் துணிச்சலையும் கண்டுதான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஸ்டெர்லைட்டின் பேரழிப்பு செயல்பாடுகளையும் மக்கள் மீதான காவல்துறையின் அடக்குமுறையையும் என் நுனி விரல் துணையோடும் ஆவண ஆதாரத்தோடு எடுத்துரைத்தேன். இவ்வாறான வரிகளுக்கு வடிவம் கொடுக்கும் நக்கீரன் போன்ற பத்திரிகைகள் நாட்டுக்கும் வீட்டுக்கும் மிக அவசிய தேவையே. அதனை மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
நேற்றைய தலைமுறை கடந்து நாளைய தலைமுறையை நோக்கி வீறு நடை போடும் நக்கீரனின் வெற்றிப் பயணம் தொடரட்டும்.
2019, மே 25- 28 இதழ்
"மோடி 2.0 ஆட்டம் ஆரம்பம்' எனும் செய்திக்கட்டுரை அடுத்து என்ன என்பதை துல்லியமாக தெரிவிக்கின்றது. அந்த தேசியக் கட்டுரைக்கு சற்றும் குறைந்ததல்ல.. "கவனம் ஈர்த்தார்களா.? கமலும் சீமானும்' எனும் செய்தி அலசல் கட்டுரை. வெல்டன் நக்கீரன்
___________
வாசகர் கடிதங்கள்!
வாலாட்டும் அரசு!
முதுமக்கள் தாழி வழியே நமது தொன்ம நாகரிகத்தை மீட்டெடுக்கலாம் என்றால் வட்டார போ.வ.கழக அலுவலக கட்டடத்தை எழுப்பி அதற்கும் மூடுதிரை போடுகிறார்கள். தமிழக அரசோ, "திராவிட பண்பாட்டை தடயங்களின்றி சிதைக்க வேண்டும்' எனும் மத்திய அரசின் மனப்போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அது வடக்கு நோக்கியே வாலாட்டிக் கொண்டிருக்கிறது.
-எஸ்.கோமதி, ஸ்ரீரங்கம்.
சந்தேகமற்ற உண்மை!
"ஓட்டுக்கு 1 ரூபாய் கூட கொடுக்காமல் ஜெயித்திருக்கிறேன்' என்கிற திருநாவுக்கரசரின் நேர்பட பேச்சிலிருந்தே அ.தி.மு.க. கணக்கின்றி வைட்டமின் "ப'வை திருச்சி மக்களிடம் இறைத்திருக்கிறது எனும் உண்மை, சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்பட்டு விட்டது.
-பி.கே.சாமிநாதன், சேலம்