கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருந்துவரும் யுவராஜ், கோகுல்ராஜுக்காக வாதாடிய வழக்கறிஞருக்கு சமூக வலைத்தளங்களின் மூலமாக மிரட்டல் விடுத்துவரும் சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கோகுல்ராஜ் கொலை வழக்கை தமிழகம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோகுல்ராஜும் சுவாதியும். இருவரும் பழகி வந்ததை அறிந்த யுவராஜ் தலைமையிலான கும்பல், இரு வரும் சந்திப்பதற்காக கோவிலுக்கு வருவதை அறிந்து 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதி திருச்செங் கோட்டு கோவிலில் காத்திருந்தது. கோகுல்ராஜைக் கடத்தி யது. மறுநாள் நாமக்கல் பள்ளிப்பாளையம் ரயில் தண்ட வாளத்தில் கோகுல்ராஜின் உடல் தலை துண்டிக்கப்பட்டு சடலமாகக் கிடந்தது.
பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, ஏழு ஆண்டுகள் கழித்து குற்றவாளிகளுக்கு 2022-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதில் பத்துப் பேர் ஆயுள் தண்டனை பெற்றனர். யுவராஜ் மூன்று ஆயுள் தண்டனையுடன் சாகும்வரை சிறையிலிருக்கவேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார். இதனை பல சவால்களை எதிர் கொண்டு சட்டரீதியாக போராடிப் பெற்றுக்கொடுத்தவர் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன். ஒருபுறம் சமூகநீதி வென் றெடுத்த மாமனிதர் என ப.பா.மோகன் பாராட்டுக்களைப் பெற்றுவந்த சூழ்நிலையில்... சாதியவாதிகள் யுவராஜ் சார்ந்த சமூக இளைஞர்களிடம் யுவராஜை மாவீரனாக போற்றிவந்தனர்.
இதற்கிடையில் சிறையிலிருந்த குற்றவாளியான யுவராஜ் தன்னுடைய மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற் காக மார்ச் 12-ஆம் தேதி பரோலில் வெளியில் வந்துள்ளார். யுவராஜ் மகள் பூப்புனித நீராட்டு நிகழ்வில் பனங்காட்டுப் படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா, தேவர் படை கட்சித் தலைவர் சௌத்ரிதேவர், மேலும் பல ரவுடிகளும் கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. யுவராஜ் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
நிகழ்வு முடிந்து அன்று மாலையே சிறைக்குச் சென்றபிறகு இன்ஸ்டாகிராம், முகநூல், சமூக வலைத்தளங்களில் அவரது ஆதரவாளர்களும், குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்களும் ஏராளமான பதிவுகளை இட்டுவருகிறார்கள். அதில், நாட்டுக்கு விடுதலை பெற்றுத்தந்த போராளி போலவும், தங்கள் சாதிப்பெருமையை நிலைநாட்ட இன்னும் எத்தனை கொலைகளை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுபோலவும் பதிவுகள் அதிகம் காணப்படுகின்றன.
எப்போதும் ஒவ்வொரு ரவுடியும் ஒரு பேட்டர்ன்படிதான் கொலைகளைச் செய்வார்கள். அதில் யுவராஜ் பேட்டர்ன் என்பது எப்போதுமே அவர் நேராக சென்று செய்வதே இல்லையாம். அச்சமூக இளைஞர்களிடம் சாதிப் பெருமையை பேசி அவர்களை உசுப்பேத்தி அவர்களின் மூலமாக கொலைகளைச் செய்வார். தற்போது பரோலில் வந்துசென்ற யுவராஜ் தன்னுடைய இளைஞர்களிடம் சாதிய வன்மத்தைக் கக்கியதன் விளைவால், "எங்களுக்கு தண்டனை பெற்றுத்தந்ததாக கூறிக்கொண்டு சில மேதாவிகள் அவருக்கு பாராட்டு விழா நடத்திவருகிறார்கள். என் பங்களிப்பாக நானும் பாராட்டு விழா நடத்துகிறேன். அதற்கான பதில் நாளை காலை தெரியும்'’என சொன்னதும், சமூக வலைத்தளங்களில் யுவராஜை மாவீரனாக பாராட்டி அச்சமூக இளைஞர்கள் பதிவிட்டுவருவது மேலும் சாதிய வன்முறையை ஊக்கப்படுத்தும் வகையிலே உள்ளது.
மீண்டும் காதல் திருமணம் செய்தாலோ, அத்தகையவர் களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் வந்தாலோ நிச்சயம் அவர்களையும் வெட்டுவோம் என்ற தொனியிலே தனது பரோல் வருகையின்போது நடந்த ஆர்ப்பாட்டமான நிகழ்வின்மூலம் இளைஞர்களை மாற்றிவிட்டுச் சென்றுள்ளார்.
யுவராஜுக்கு எந்தவிதமான பரோலும் கொடுக்கக்கூடாது. அவருக்கு தூக்குத்தண்டனை தராமல், அவரை வாழ்நாள் முழுவதும் சிறையிலே வைத்து எந்த சுகதுக்க காரியங்களுக்கும் விடாமல் சிறையிலேயே வைத்தால்தான், இவரைப் பார்த்து அதீதமாக வரம்புமீறி செல்ல நினைக்கும் சமூகம் சமநிலையாக இருக்கும் என்பதை கருத்தில்கொண்டே நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் நன்னடத்தை காரணமாக யுவராஜை பரோலில் விட்டதாகச் சொல்கிறது சிறைத்துறை. யுவராஜை பரோலில் அழைத்து வந்த போலீஸ் அதே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலும், அவர்கள் அவரை பரோலில் விடுவதற்கு ஆதரவாக இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. நன்னடத்தை காரணமாக வெளியில் விட்டதாகச் சொல்லும் சிறைத்துறை, கோகுல்ராஜ் குடும்பத்திற்கு எந்தவிதமான நோட்டீஸும் கொடுக்காமல் எப்படி பரோலுக்கு அனுமதி கொடுத்தது. இந்த விவகாரத்தில் சிறைத்துறை அதிகாரி களின் மீது உரிய விசாரணை செய்யவேண்டும் என்று சமூக ஆர் வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் ஒரு மாநிலத்தில் சாதி வெறி எவ்வாறு வேரூன்றிக் கொண்டே செல்கிறது என்பதற்கு இந்த சம்பவம் சாட்சியாக உள்ளது. வெகுஜன போராளி வழக்கறிஞர் ப.பா.மோகன் போன்ற பிரபலமான ஒருவருக்கே இவ்வளவு வெட்ட வெளிச்சமாக தீர்த்துக்கட்டுவேன் என மறை முகமாக எச்சரிக்கை விடுத்து, சௌகரியமாக சிறையில் இருக் கின்ற யுவராஜ் போன்ற சாதி வெறியர்களை எப்படி கண்டு கொள்ளாமலிருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இதுபோன்ற சமூகநீதியை சீர்குலைக்கும் சம்பவங்களின் மீது இந்த அரசு நடவடிக்கை எடுத்து சமூக நீதிப் பாதுகாவலர்களை பாதுகாக்கப் போகிறதா, இல்லை வேடிக்கை பார்த்து மீண்டும் அவர்களை ஊக்கப்படுத்தப் போகிறதா?’
-சே