திரவைத்த அந்தக் கொலைச் சம்பவம் இப்போதும் ரத்தத்தை உறைய வைக்கும். சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம்-சித்ரா தம்பதியின் இளைய மகன் கோகுல்ராஜ். திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரில் 2015 ஏப்ரலில் பி.இ. படிப்பை முடித்தார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த சுவாதியும் கோகுல்ராஜும் கல்லூரி வகுப்புத் தோழர்கள் என்பதால் நிஜத்திலும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

yuvaraj

2015, ஜூன் 23-ஆம் தேதி காலை வீட்டிலிருந்து கிளம்பிச் சென்ற கோகுல்ராஜ், மறுநாள், அதாவது ஜூன் 24-ஆம் தேதி, மாலையில் நாமக்கல் மாவட்டம் கிழக்குதொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகத்தான் கண்டெடுக்கப்பட்டார். இது ஒரு சந்தேக மரணம் என திருச்செங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பல திசைகளிலும் முதல்கட்ட விசாரணை நடந்துகொண்டிருந்தது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மலையடிவாரத்தில் கோகுல்ராஜும் சுவாதியும் பேசிக்கொண்டிருப்பதும் அவர்களை ஒரு கும்பல் மிரட்டுவதும், பின் கோகுல்ராஜை மட்டும் தனியே அழைத்துச் செல்வதும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மூலம் போலீசுக்கு தெரியவந்தது.

அந்தப் பதிவுகளை வைத்து மேலும் துருவியதில், இந்தக் கொலையின் முக்கிய காரணகர்த்தா தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ்தான் என்பது நிச்சயமானதும் விசாரணையின் திசையும் மாறுகிறது. போலீசுக்கு தண்ணி காட்டியபடி தலைமறைவாகவே வாட்ஸ்-அப்களில் அலப்பறை பண்ணுகிறார் யுவராஜ். வழக்கின் விசாரணை அதிகாரியான திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியாவுக்கு பல திசைகளில் இருந்தும் நெருக்கடி. ஒரு கட்டத்தில் விஷ்ணுப்ரியாவே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நிலைமை போனது.

Advertisment

lawyersவழக்கு சி.பி.சி.ஐ.டி.வசம் ஒப்படைக்கப்பட்டதும், மூன்று மாதங்களுக்குப் பின் சரண்டரானார் யுவராஜ். அதன்பின் வரிசையாக 17 பேரை கைது செய்தது போலீஸ். கொலை, கூட்டுச் சதி, வன்கொடுமை தடுப்புச் சட்டம் என 15 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருச்சி சிறையில் யுவராஜும் சேலம் சிறையில் மற்றவர்களும் அடைக்கப்பட்டு, நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி கே.எச்.இளவழகன் முன்பாக கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையும் ஆரம்பமானது. அந்த வழக்கில் ஆக. 30-லிருந்து சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது. கோகுல்ராஜ் குடும்பத்தினர் சார்பில் வாதாட, சேலத்தைச் சேர்ந்த மூத்த வக்கீல் கருணாநிதியை, அரசு சிறப்பு வக்கீலாக நியமித்துள்ளது தமிழக அரசு. மதுரையைச் சேர்ந்த சீனியர் வக்கீல் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜு தலைமையில் வக்கீல்கள் குழுவே யுவராஜுக்காக கோர்ட்டில் களம் இறங்கியுள்ளது.

கொலை செய்யப்பட்ட நாளில் கோகுல்ராஜ் அணிந்திருந்த ஆடைகளைக் காட்டி, அரசு வக்கீல் கருணாநிதி, கோகுல்ராஜின் தாயார் சித்ராவிடம் விசாரணை செய்தார். அந்த ஆடைகளைப் பார்த்து கதறி அழுத சித்ரா, சாட்சிக் கூண்டிலேயே மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து மீசையை முறுக்கியபடி லேசான புன்முறுவலுடன் பார்த்துக்கொண்டிருந்தார், குற்றவாளிகள் கூண்டில் தனது கூட்டாளிகளுடன் நின்றுகொண்டிருந்த யுவராஜ்.

Advertisment

gokulraj

yuavaraj

செப். 01-ஆம் தேதி சித்ராவிடம் குறுக்கு விசாரணை செய்த யுவராஜின் வக்கீல், தனது நண்பர்களிடம் வாங்கிய பத்தாயிரம் ரூபாய் கடனைத் திருப்பித் தராததால்தான் கோகுல்ராஜை அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறியதும் வெடித்து அழ ஆரம்பித்துவிட்டார் சித்ரா. அதே நேரத்தில் சில முரணான பதில்களையும் கூறி திகைக்க வைத்தார் சித்ரா.

செப். 04-ஆம் தேதி, கோகுல்ராஜ் சடலம் கிடந்த ரயில் நிலைய அலுவலர் கைலாஷ் சந்த் மீனாவிடம் சில நிமிடங்களும் அதன்பின் கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வனிடமும் விசாரணை நடந்தது.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கோகுல்ராஜும் சுவாதியும் பேசிக்கொண்டிருந்தபோது யுவராஜும் அவரது ஆட்களும் அங்குவந்து இருவரையும் மிரட்டி செல்போன்களைப் பறித்துள்ளனர். சாதிப் பெயரைச் சொல்லி, "ஒனக்கு எங்க சாதிப் பொண்ணு கேட்குதா' எனக் கூறியவாறே அடித்தனர். அதன்பின் சுவாதியை மட்டும் அனுப்பிவிட்டு, கோகுல்ராஜை, ‘தீரன் சின்னமலை’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் கடத்தினார்கள். இவை அனைத்துமே சுவாதி என்னிடம் செல்போனில் பேசியபோது சொன்னது. அதை பதிவுசெய்தும் வைத்துள்ளேன்''’என விரிவாக சாட்சி சொன்னார் கலைச்செல்வன். ஒவ்வொருநாளும் விசாரணை முடிந்து, ஹாயாக சிரித்தபடியே செல்லும் யுவராஜையும் அவரது கூட்டாளிகளையும் சாபம் விட்டபடி ஆவேசமாகிறார் கோகுல்ராஜின் தாய் சித்ரா.

இந்த வழக்கின் ஒரே நேரடி சாட்சி சுவாதிதான். அவரின் சாட்சியம்தான் சகலத்திற்கும் விடை சொல்லும்.

-இளையராஜா