எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் ஹெச்.ஐ.வி. கிருமி இரத்தத்தை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணிக்கு ஏற்றிய கொடூரச்சம்பவம் கடும்பீதியை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் "ஹெச்.ஐ.வி. அபாயம்! எத்தனை பேர் உடம்பில் எய்ட்ஸ்?' என்ற தலைப்பில் கடந்த 2018 டிசம்பர்-29 2019 ஜனவரி-01 தேதியிட்ட நக்கீரனில் அட்டைப்படக் கட்டுரை வெளியிடப்பட்டது. சென்னை அரசு கே.எம்.சி. மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை என அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்குச் சென்றவர்களின் அதிர்ச்சிகரமான புகார்கள் வெளிவர தொடங்கியிருப்பதோடு, சாத்தூர் கர்ப்பிணிக்கு இரத்ததானம் கொடுத்த இளைஞர் சுரேஷின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மர்ம மரணம் பலத்த சர்ச்சையை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
"கர்ப்பிணிக்கு ஏற்றிய தனது இரத்தத்தில் ஹெச்.ஐ.வி. இருப்பதை வெளியில் சொன்னதால் விஷ ஊசிபோட்டு கொன்றுவிட்டார்கள்'’என்று சிவகாசி இளைஞர் சுரேஷின் குடும்பத்தார் குமுறிவெடித்துக்கொண்டிருக்க...…இக்குடும்பத்தினருக்காக சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் "மக்கள் கண்காணிப்பகம்' மனித உரிமை அமைப்பின் செயற்பாட்டாளர் பிரியாவிடம் இதுகுறித்து நாம் கேட்டோம், “""இளைஞர் சுரேஷ் 17 வயதிலேயே இரத்ததானம் செய்திருக்கிறார். இரத்தம் எடுத்த சிவகாசி அரசு மருத்துவமனை இரத்தவங்கி டாக்டர்கள் தவறு செய்திருக்கிறார்கள். அதாவது, 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடமிருந்துதான் தானத்திற்கான இரத்தம் எடுக்கப்பட வேண்டும். 17 வயதில் ரத்தம் எடுத்தபோதே ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ் என்று இருந்துள்ளது. ஆனால், சுரேஷுக்கு இதுபற்றி தகவல் கொடுக்கவில்லை அப்போதிருந்த இரத்தவங்கி ஆலோசகர் ரமேஷ்.
சுரேஷ் 2016 லிருந்து இறக்கும்வரை தனது பெரியம்மா வீட்டில் அதே முகவரியில்தான் வசித்திருக்கிறார். அந்த முகவரியை தேடிவந்து சுரேஷிடம் சொல்லியிருந்தால் அவருக்கு சரியான சிகிச்சை அளித்திருக்கலாம். அதற்குப் பிறகு, அவரது இரத்தம் யாருக்கும் ஏற்றப்படாமல் இருந்திருக்கும். அதே சிவகாசி இரத்தவங்கிக்கு வந்து கர்ப்பிணியான தனது அண்ணிக்கு மீண்டும் 2018 நவம்பர் 30-ந்தேதி இரத்ததானம் கொடுத்திருக்கிறார். அப்போதுகூட, ஏற்கனவே இரத்தம் கொடுத்த சுரேஷுக்கு ஹெச்.ஐ.வி. இருக்கிறது என்பதை சிவகாசி இரத்தவங்கி ஆலோசகர் ரமேஷும், பரிசோதித்த லேப் டெக்னீஷியன் கணேஷ்பாபுவும் சொல்லவில்லை. நவம்பர்-30 ஆம் தேதி இளைஞர் கொடுத்த இரத்தத்தையும் பரிசோதிக்காமல் விட்டுவிட்டார் தற்போதைய லேப் டெக்னீஷியன் வளர்மதி. இதுதான், கர்ப்பிணிப்பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. தொற்றுவதற்கு மிக முக்கிய காரணம். இது வெளியில் தெரிந்துவிட்டது. இதுபோல எத்தனை பேர் இரத்ததானம் செய்து எத்தனை நோயாளிக்கு ஹெச்.ஐ.வி. இரத்தம் ஏற்றப்பட்டிருக்கிறது என்பது ஆராயப்பட வேண்டும்'' என்றதோடு சுரேஷின் மரணப் பின்னணி குறித்தும் சொல்ல ஆரம்பித்தார் பிரியா.
""அதாவது, நவம்பர் 30-ந்தேதி தனது அண்ணிக்கு இரத்ததானம் வழங்கிய சுரேஷ், வெளிநாடு செல்வதற்காக 2018 டிசம்பர் 6-ந்தேதி மேலூரிலுள்ள தனியார் ஆய்வகத்தில் செய்த பரிசோதனையில்தான் தனக்கு ஹெச்.ஐ.வி. இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். 8-ந்தேதி மீண்டும் இன்னொரு தனியார் ஆய்வகத்திலும் இது உறுதி செய்யப்பட, 10-ந்தேதி சிவகாசி அரசு மருத்துவமனை இரத்தவங்கிக்கு வந்த சுரேஷ் விவரம் தெரிவித்து சண்டை போட்டுள்ளார்.
தனது அண்ணிக்கு தனது ஹெச்.ஐ.வி. இரத்தத்தை ஏற்றாமல் வேறொருவரிடமிருந்து இரத்தம் ஏற்றப்பட்டதாகவும், தனது ஹெச்.ஐ.வி. இரத்தத்தை கர்ப்பிணிப் பெண்ணுக்கு டிசம்பர் 3-ந்தேதியே ஏற்றிவிட்டதாகவும் விசாரணையில் தெரியவர, அதிர்ந்துபோனார் சுரேஷ்.
"உன்னாலதானே அந்த கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் வந்தது? இவ்வளவு சிறிய வயதில் உனக்கு எப்படி எய்ட்ஸ் வந்தது?' என்றெல்லாம் தொடர்ந்துவந்த போன்கால்கள், அரசு அதிகாரிகளின் விசாரணை என பரபரப்பானதால் மனம் உடைந்துபோயிருக்கிறார் சுரேஷ். டிசம்பர் 26-ந்தேதி கமுதிக்கு வேலைதேடிச் சென்ற சுரேஷிடமிருந்து பெற்றோருக்கு சுமார் 2 மணியளவில் திடீரென்று போன் வந்திருக்கிறது. அப்போது, "எலி மருந்தை சாப்பிட்டுவிட்டு ஒரு சர்ச் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறேன்'’ என்று சொல்லியிருக்கிறார். பதறியடித்துக்கொண்டு ஓடிய பெற்றோர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்திருக்கிறார்கள். பிறகு, 27-ந்தேதி அதிகாலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். யாரையுமே சந்திக்கவிடவில்லை டீன் சண்முகசுந்தரம். மெடிக்கல் ஹிஸ்ட்ரிகளை வாங்கிவைத்துக்கொண்டு பெற்றோருக்கு கொடுக்கவில்லை. 30-ந்தேதி இறந்துவிட்டார் என்று தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள், சுரேஷின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்'' என்கிறார் அவர்.
விருதுநகர் மாவட்ட மருத்துவப்பணிகள் சேவை இணை இயக்குநர் மனோகரனிடம் நாம் கேட்டபோது, ""டிசம்பர் 10-ந்தேதி சிவகாசியில் வந்து சொன்னதுமே இளைஞர் சுரேஷுக்கு பரிசோதனை செய்தபோது ஹெச்.ஐ.வி. இருப்பதை நாங்களும் உறுதிசெய்துகொண்டோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கர்ப்பிணிப் பெண்ணுக்கு அந்த இரத்தம் ஏற்றப்பட்டதாலும், போனில் சொல்லக்கூடாது என்பதாலும் அவர்களை மீண்டும் மருத்துவமனைக்கு நேரில் அழைத்தோம். 17-ந்தேதிதான் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார். 18-ந்தேதி பரிசோதித்ததில் கணவருக்கு ஹெச்.ஐ.வி. இல்லை. ஆனால், கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. இருந்தது. இளைஞரின் இரத்தத்தால்தான் ஹெச்.ஐ.வி. தொற்றியிருக்கிறது என்பதை உறுதிசெய்து 18-ந்தேதியே ஹெச்.ஐ.வி. கிருமியை எதிர்க்கும் ஏ.ஆர்.டி. கூட்டுமருந்து சிகிச்சையை ஆரம்பித்துவிட்டோம். லேப் டெக்னீஷியன் கணேஷ்பாபு, ஐ.சி.டி.சி. நம்பிக்கை மைய ஆலோசகர் ரமேஷ், லேப் டெக்னீஷியன் வளர்மதி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டனர்'' என்றார் விளக்கமாக.
சென்னை மாங்காட்டை சேர்ந்த கர்ப்பிணி, சேலத்தைச் சேர்ந்த மற்றொரு கர்ப்பிணி என அடுத்தடுத்து அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு சென்றபோது ஹெச்.ஐ.வி. இரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் கொடுத்திருப்பது பலத்த சர்ச்சையை உண்டாக்கிக்கொண்டிருக்கும் சூழலில்... சாத்தூர் கர்ப்பிணிப்பெண் லட்சுமியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய கருத்து மேலும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. ""தவறு செய்யக்கூடிய இளைஞர்கள் இரத்ததானம் செய்யவேண்டாம். அப்படிப்பட்டவர்கள் தானம் செய்வது சமுதாய குற்றமாகும். நானும் பட்டாசு தொழிலாளியாக இருந்தவன்தான்''’ என்று பேசியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. "சுரேஷுக்கு எப்படி ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டது? உள்நாடா, வெளிநாடா முறையான சிகிச்சை செய்யப்பட்டதா?' என கேள்விகள் எழுந்துள்ளன.
சென்னை அரசு கே.எம்.சி. மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. இரத்தம் ஏற்றப்பட்டதா என்பது குறித்து டீன் வசந்தாமணியிடம் நாம் கேட்டபோது, “""மாங்காடு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு சிகிச்சைக்கு சென்ற அந்த பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. நெகட்டிவ் என்று எழுதப்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 5-ந்தேதி அட்மிட் ஆன ஐந்துமாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஹீமோகுளோபின் 5.5 என மிகக் குறைவாக இருந்ததால் 2 யூனிட் இரத்தம் ஏற்றப்பட்டது. அதற்குப்பிறகு, ஆகஸ்ட் 16-ந்தேதி சிகிச்சைக்கு புறநோயாளியாக வரும்போது நமது ஐ.சி.டி.சி. ஆலோசகர்தான் சந்தேகித்து பரிசோதனை செய்து பார்த்தபோது மாங்காடு பெண்ணிற்கு ஹெச்.ஐ.வி. இருப்பது தெரியவந்தது. உடனே, அவருக்கு ஏற்றப்பட்ட இரத்தம் பரிசோதிக்கப்பட்டதா என்று மருத்துவ ரெக்கார்டுகளை ஆய்வுசெய்தபோது, நான்காவது ஜனரேஷன் எலைசா டெஸ்ட் முறைப்படி பரிசோதித்ததில் அந்த இரத்தம் நெகட்டிவ் -அதாவது ஹெச்.ஐவி. கிருமி இல்லை என்று வந்துள்ள ஆவணங்களை தெளிவாக வைத்திருக்கிறோம். அதனால், கே.எம்.சி. மருத்துவமனையில் ஏற்றப்பட்ட இரத்தத்தால் அவருக்கு ஹெச்.ஐ.வி. வரவில்லை'' என்று விளக்கமளித்தார்.
இப்படிப்பட்ட சர்ச்சைகள் வருவதற்கு என்ன காரணம்?
விருதுநகர் மாவட்டத்தில் எய்ட்ஸ் மருத்துவப்பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் பழனியப்பா நம்மிடம்,
""பி.சி.ஆர். பரிசோதனை என்பது பிரத்யேக பரிசோதனை ஆகும். இந்தப் பரிசோதனையை எந்த ஒரு அரசு மருத்துவமனையும் மேற்கொள்வதில்லை.
இரத்ததானம் என்ற பெயரில், இரத்தத்தைச் சேகரிக்கும் இரத்தச் சேமிப்பு வங்கிகளிலுள்ள இரத்தமானது, பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமலேயே, இரத்தம் தேவைப்படுவோருக்கு செலுத்தப்படுகிறது. இதன்மூலம், அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை எளிய மக்களும் ஹெச்.ஐ.வி. நோயாளிகள் ஆகிவிடுகிறார்கள். இரத்தச் சேமிப்பு வங்கி என்பது, தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டி என்ற அரசு சார்ந்த ஒரு சங்கம் ஆகும். இதை நடத்துவதற்கு மாவட்ட மருந்துக்கட்டுப்பாட்டு தலைமை அலுவலகத்திலிருந்து பிரத்யேக உரிமம் பெறவேண்டும். இந்த உரிமம் பெற்ற பிறகுதான், இரத்தச் சேமிப்பு வங்கி நடத்த முடியும். இந்த இரத்தச் சேமிப்பு வங்கிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மருத்துவத்துறையில் யாரும் கண்காணிப்பதில்லை. இரத்தச் சேமிப்பு வங்கிகளை முறையாகக் கண்காணித்தால் போதும். இரத்தம் தேவைப்படும் எந்த ஒரு மனிதருக்கும் எய்ட்ஸ் பரவாமல் இனி தடுக்க முடியும்'' என்கிறார் ஆலோசனையாக.
-சி.என்.இராமகிருஷ்ணன், மனோசௌந்தர், அண்ணல்