அரசு செலவில் சமூகவிரோத பூங்கா!
முதல்வர் எடப்பாடி அரசால் ஆதரவற்றுக் கிடப்பது தமிழக மக்கள் மட்டுமல்ல எம்.எல்.ஏ. அலுவலக கட்டிடங்களும் பூங்காக்களும்தான். மதுரையில் பல இடங்களில் அவரவர் ஆட்சிக் காலங்களில் கட்டப்பட்ட கவுன்சிலர் அலுவலகங்களுக்கும் பூங்காக்களுக்கும் பூட்டு போட்டுவிட்டு கிடப்பில் போட்டுள்ளது அரசாங்கம். கோரிப்பாளையத்திலுள்ள ஜம்புபுரம் மார்க்கெட்டில் 2000 ஆம் ஆண்டு கட்டப்பட்டு மீண்டும் 2005-ல் புதுப்பிக்கப்பட்ட சிறுவர் பூங்கா உள்ளது.
அதை தற்போது பூங்கா என்று சொல்லமுடியாது. பெரியவர்களே பார்த்து பயப்படும் அளவுக்கு இடிந்துபோய் குப்பைக் குவியல்போல் கிடக்கிறது. பகல் முழுவதும் பூட்டிக்கிடக்கும் இந்தப் பூங்காவிற்கு அருகில் குப்பைத் தொட்டியுடன் ஸ்வட்ச் பாரத் திட்டத்திற்கு விழிப்புணர்வு பேனர் ஒன்றும் நவீன கழிப்பறையும் காணப்படுகிறது. இரவில் குடிமகன்களின் சொர்க்கமாக திகழ்ந்துகொண்டிருக்கும் இந்த பூங்காவை "கழுத பூங்கா'’என்றே அழைக்கிறார்கள். சமூக விரோத செயல்களும் நடந்துகொண்டிருக்கின்றன.
ஏன் சீரமைக்கப்படவில்லை என்று அ.தி.மு.க. கவுன்சிலர் ஜி.கே.பாலுவிடம் கேட்டபோது, “""பூங்கா கட்டும்போது பராமரிக்கும் பொறுப்பு என்கிட்ட இருந்தது. நல்லபடியா மெயின்டெய்ன் பண்ண்ணினேன். ஆனா, இப்போ மதுரை மாநகராட்சி கண்ட்ரோலில் உள்ளது இந்தப் பூங்கா''’என்றார். இதுபோன்று நிறைய பூங்காக்களும் இப்படி சீரமைக்கப்படாதது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஸ்சேகரிடம் கேட்டபோது, ""குறிப்பிட்ட அந்தப் பூங்காவை குடியிருப்போர் சங்கத்திடம் ஒப்படைத்துவிட்டோம். அவர்கள் முன்வந்து முதலீடு செய்தால் சீரமைக்கலாம்''’என்றார். இப்படி, போட்டி போட்டுக்கொண்டு மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவது, சமூகவிரோத செயல்களுக்கு அரசு செலவில் பூங்காக்களை உருவாக்கியதுபோல் உள்ளது.
-அகமது அலி
சட்டத்தை மீறும் கட்டடங்கள்!
ஜெயலலிதாவால் 2001-ஆம் ஆண்டு, நிலத்தடி நீரை அதிகரிக்கிறோம்’ என்று கூறி கொண்டுவரப்பட்ட திட்டம்தான் மழைநீர் சேகரிப்புத் திட்டம். இத்திட்டம், செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கியுள்ளதால் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக்கவேண்டும் என்றும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் எனவும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினோம்.
அப்போது, நமக்கு வந்த பதில் கடிதம் ஆச்சர்யமூட்டியது. அதாவது, மழைநீர் திட்டம் இருந்தால்தான் அந்த வீடுகளை கட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மூலம் பில்டிங் அப்ரூவல் வழங்கப்படும்... அப்படியில்லை என்றால் அப்ரூவல் வழங்கப்படாது என்பதுதான் அந்தக் கடிதம். இதுகுறித்து, நாம் விசாரித்தபோது, "மழை நீர் சேகரிப்புத்திட்டம் இல்லாமலேயே பெரும்பாலான வீடுகள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், அதற்கும் சேர்த்து லஞ்சம் வாங்கிக்கொண்டு அப்ரூவல் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள்'’’ என்று குற்றம்சாட்டுகிறார்கள்.
-சந்தோஷ்பாலு
புதுச்சேரியில் புதுவித லாட்டரி!
புதுச்சேரி என்றதும் பலருக்கும் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தாலும்... தற்போது, தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளால் சீரழிந்துகொண்டிருக்கிறது புதுச்சேரி. 2003-ல் தமிழக அரசு லாட்டரி விற்பனையை தடை செய்ததை தொடர்ந்து புதுச்சேரியிலும் தடைவிதிக்கப்பட்டது.
ஆனால், தற்போது ஆன்லைன், ஆஃப்லைன் மூலம் எண்களை மையப்படுத்தி கள்ள லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் தகவல் நமக்கு கிடைத்ததால் ஏற்கனவே லாட்டரி டிக்கெட் விற்றுக்கொண்டிருந்த சங்கரிடம் பேசினோம், ""முப்பது வருடத்துக்கு முன்னால தமிழ்நாடு, சிக்கிம், குமரன், நல்லநேரம், தங்கம், ரோசா, குயில் பூட்டான், கேரளா என பல பெயர்களில் பம்பர் லாட்டரிகளில் விற்பனை செய்துவந்த பரபரப்பான காலத்தில் கூலித்தொழிலாளிகள் தங்களது வருமானத்தை இழந்துக்கிட்டிருந்தாங்க. இப்போ, சட்டத்துக்கு புறம்பான லாட்டரிகளில் கூலித்தொழிலாளிகள், டிரைவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் நிறையபேர் பாதிக்கப்படுறாங்க. அரசு அனுமதியுடன் கேரளாவில் நடக்கும் லாட்டரிகளை மையப்படுத்தித்தான் இந்த லாட்டரி மோசடி நடக்கிறது''’என்று அவர் இண்ட் கொடுக்க... நாம் விசாரிக்க ஆரம்பித்தோம். “
""ஒரு கோடி ரூபா பம்பர் லாட்டரிய வெச்சுத்தான் புதுச்சேரி மாநிலம் மட்டுமில்லாம மற்ற மாநிலங்களிலும் சக்கப்போடு போடுது. இதுக்கு, கேரளாவுல "லிவர் பம்பர்'னு பேரு. இதற்கான ரிசல்ட் இணையத்திலும் வாட்ஸப்பிலும் வருது’என்று நமக்குக் கிடைத்த அதிர்ச்சித் தகவல் குறித்து புதுச்சேரி காவல்துறை அதிகாரியிடம் பேசியபோது... "கள்ள லாட்டரிகள் விற்றால் 100 அல்லது 1031 என்ற எண்ணுக்கு புகார் கூறலாம்'’என்றார்கள். ஆனாலும், காவல்துறை மீது நம்பிக்கை வரவேண்டும் என்றால் புகார் வரும் என்று காத்திருக்காமல் நேரடியாக சென்று நடவடிக்கை எடுத்து கூலித்தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவேண்டும்.
-சிவரஞ்சனி