காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை தமிழகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடக்கக்கூடாது என உணர்வாளர்கள் எழுப்பிய எச்சரிக்கைக் குரலும், நடத்தியே தீருவோம் என ஐ.பி.எல். நிர்வாகம் எடுத்த முடிவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை படாதபாடுபடுத்தி விட்டது.

நிகழ்ச்சிக்கு இரு நாட்கள் முன்பிருந்தே சென்னையில் பதட்டம் அதிகரித்தபடி இருந்தது. இதனால், போட்டிகளை மாற்றியமைக்க முடியாதா? என தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் சி.எஸ்.கே. அணியின் ஓனருமான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனிடம் கேட்டிருக்கிறார் எடப்பாடி.

EPS

Advertisment

அவரோ, "பிரதமர் அலுவலகத்திலும் மத்திய உள்துறை அதிகாரிகளிடமும் ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா உதவி கேட்டுக்கொண்டிருக்கிறார். போட்டி நடந்தாக வேண்டுமென பிடிவாதமாக இருக்கிறார் சுக்லா' என சொல்ல, எடப்பாடிக்கு ஏகத்துக்கும் பதட்டம் கூடிவிட்டது.

இந்த நிலையில், தலைமைச்செயலாளர் கிரிஜாவை தொடர்புகொண்ட மத்திய உள்துறை செயலர், ""கிரிக்கெட் போட்டி நடந்தாக வேண்டும். போட்டிக்கோ, வீரர்களுக்கோ எந்த அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது'' என எச்சரிக்கை செய்தார். இதனை எடப்பாடியிடம் கிரிஜா தெரியப்படுத்த, "அவர்களின் உத்தரவுப்படி பாதுகாப்பு பணிகளை திட்டமிடுங்கள்!' என சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பிப்போனார் எடப்பாடி.

போட்டி நடப்பதற்கு முதல்நாள் எதிர்ப்பு வலுப்பதை உணர்ந்து சீனியர் அமைச்சர்கள் எடப்பாடியை சந்தித்தனர். தமிழக விவசாயிகள் மற்றும் உணர்வாளர்களின் கொந்தளிப்பை சுட்டிக்காட்டி, "சட்டம்- ஒழுங்குக்குப் பிரச்சினை வரும்போலிருக்கு. போட்டியை நிறுத்த உத்தரவிடுங்கள். உணர்வுகளை மதிக்காத கிரிக்கெட் நிர்வாகத்துக்கெல்லாம் பயப்படக்கூடாது' என அமைச்சர்களில் சிலர் வலியுறுத்த, போட்டியை நிறுத்துவதற்காக, தான் எடுத்த முயற்சிகளையும், அதேசமயம் டெல்லி மற்றும் கவர்னர் மாளிகையிலிருந்து வரும் நெருக்கடிகளையும் விவரித்த எடப்பாடி, சட்டம் ஒழுங்குகளை எங்களால் பாதுகாக்க முடியவில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என கவர்னருக்கு கடிதம் அனுப்பாததுதான் பாக்கி. எல்லா முயற்சிகளையும் எடுத்துவிட்டேன். முடியவில்லை. இப்போ, நீங்க வேற நெருக்கடி தர்றீங்க என ஆதங்கப்பட்டிருக்கிறார்.

Advertisment

இதனையடுத்து கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்துள்ளனர் அமைச்சர்கள். அந்த மௌனத்தை கலைத்த எடப்பாடி, நடக்கவிருக்கும் போட்டிக்கு எவ்வளவு பாதுகாப்பு போடணுமோ அதை செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். அடுத்தடுத்த போட்டிகளுக்கு இந்தளவுக்குப் பாதுகாப்பு தர முடியாது என டெல்லிக்கு தகவல் தந்துவிடலாம் என்றிருக்கிறார். அதனை அமைச்சர்கள் ஆமோதித்திருக்கிறார்கள்.

iplheadஇதனைத்தொடர்ந்து பாரதிராஜா உள்ளிட்ட சினிமா பிரபலங்களை சந்திக்க எடப்பாடி நேரம் கொடுத்திருந்ததால் அவர்கள் வருவதை உறுதி செய்தனர். எடப்பாடியை சந்தித்து, போட்டியை நிறுத்த நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தார் பாரதிராஜா. அப்போது பேசிய எடப்பாடி, போட்டியை நிறுத்த முடியவில்லை. நீங்கள் வழக்கம்போல அறவழியில் போராடிக்கொள்ளலாம். தடுக்கமாட்டோம். ஆனா, சேப்பாக்கம் ஸ்டேடியத்தை நெருங்கவோ, வீரர்களை தடுக்க ஹோட்டலுக்குள் புகுவதையோ அனுமதிக்கமாட்டோம். அவங்க விளையாட அனுமதிக்கணும். போராட்டத்தை வலிமையாக நடத்துவது உங்க பாடு. ஆனா, சட்டம் ஒழுங்கிற்கு பிரச்சினையில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்கை செய்வதுபோல க்ரீன்சிக்னல் தந்தார் எடப்பாடி! அதன் அர்த்தத்தை உணர்ந்துகொண்டு அதேபோல நடந்துகொண்டனர் சினிமா பிரபலங்கள்.

இந்தச் சூழலில், கிரிக்கெட் போட்டியை ரசிக்க எடப்பாடியை அழைத்திருக்கிறார் சீனிவாசன். அழைப்பை ஏற்க மறுத்ததுடன், ஓ.பி.எஸ்.சை கூப்பிட்டுப் பாருங்கள் என சொல்லியிருக்கிறார் எடப்பாடி. ஓ.பி.எஸ்.ஸோ, முதல்வரே வராதபோது நான் மட்டும் எப்படி வருவேன்? என அவரும் மறுத்துவிட்டார். தமிழக அரசின் சார்பில் உயரதிகாரிகளையாவது ஸ்டேடியத்துக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என முயற்சித்திருக்கிறார் சீனிவாசன். அவர்களும் அசைந்துகொடுக்கவில்லை.

பரபரப்பும் பதட்டமுமாக முதல் போட்டி முடிந்த நிலையில், அடுத்த போட்டிகள் சென்னையில் இல்லை என்பதில் அதிக ரிலாக்ஸாக இருப்பவர் எடப்பாடிதான்!

-இளையர்

----------------------------------------------------

ஸ்டெர்லைட் ஆதரவாளருக்கு எதிர்ப்பு!

ஸ்டெர்லைட் ஆலையால் மாதத்திற்கு சுமார் ஐம்பது லட்ச ரூபாய் வருமானம் பார்ப்பவர் கீதாஜீவனின் தம்பி ஜெகன். நூறு லாரிகளுக்குச் சொந்தக்காரர்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தியபோது "நானும்தான் எதிர்க்கிறேன்' என்று ஒப்புக்காக நின்றவர்.

12.04.18 அன்று ஸ்டெர்லைட்டுக்கு எதிராக, ஜனநாயக தரைவழிப் போக்குவரத்து ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் சங்கம் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவது தெரிந்து ஸ்டெர்லைட்டை எதிர்க்கும் யாருக்கும் வேலை தர மாட்டேன்'' என்று எச்சரித்தாராம் ஜெகன். ஆனால், போராட்டத்தில் கலந்து கொண்டார் ஜெகனுடைய லாரி சங்கத்தின் இணைச் செயலாளர் முருகன். ஸ்டெர்லைட்டை ஆதரிப்பவர்களை அம்பலப்படுத்த ரெடியாகிவிட்டனர் போராட்டக்காரர்கள்.

-நாகேந்திரன்