சிஸ்டத்துக்குள் இருந்துகொண்டு மக்களுக்கான அரசியல் பேச முடியாது!  கொ.ப.செ. அருண்ராஜ் பரபரப்பு பேட்டி!

arunraj

 


டிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளரும் , மத்திய அரசின் முன்னாள் வருவாய்த்துறை அதிகாரியுமான அருண்ராஜிடம் நக்கீரனுக்காக பல கேள்விகளை முன்வைத்தோம். 

அதிகாரம் மிக்க அரசுப்பணியைத் துறந்துவிட்டு அரசியலுக்கு வருவதற்கான பிரத்யேக காரணம் ஏதேனும் இருக்கிறதா? 

பொதுவாழ்க்கைக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் எனது பள்ளிப்  பருவத்திலேயே இருந்தது. கல்லூரி காலகட்டங்களில் அது தீவிரமானது. பொதுசேவையில் எனக்கிருந்த பற்றுதல்தான் இதற்கு காரணம். அந்த வகையில் மக்களுக்கான, இந்த மண்ணுக்கான  அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதில் ஈடுபாடு இருந்தது. அதேசமயம் எனது சீனியர்கள் சிலர், சிவில் சர்வீஸ் தேர்வெழுதி மத்திய அரசின் உயரதிகாரிகளானார்கள். அரசு அதிகாரத்தில் இருந்தால் நாம் நினைக்கிற மக்களுக்கான சேவையை செய்யமுடியும் என தோன்றியது. சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதி அரசு அதிகாரியானேன். அதிகாரத்தில் உட்கார்ந்தபோதுதான், நம்முடைய எண்ணங்கள் தவறானது என புரிந்தது. நாம் நினைத்த மாதிரி இயங்கிவிட முடியாது. ஒரு சிஸ்டத்துக் குள்தான் இயங்க முடியும். நம்முடைய அரசியலமைப்பு அப்படி! இதனால், என்னுடைய எண்ணங்களுக்கும், சிஸ்டத்துக்குமிடையே நிறைய முரண்பாடுகள், மோதல்கள் வெடித்தன. ஜனநாயகத்தில் மக்களுக்கான அதிகாரத்தை சிஸ்டத்துக்குள் உட்கார்ந்து கொண்டு நிறைவேற்ற முடியாது என்பதையும், அரசியல் அதிகாரம்தான் அதனை சாத்தியப்படுத்தும் என்பதையும் உணர்ந்ததினால், அரசு பணியைத் துறந்து அரசியலுக்குள் வந்துள்ளேன்.  

அரசியலுக்கு வருவதென முடி வெடுத்த பிறகு, நடிகர் விஜய் கட்சியை தேர்ந்தெடுத்தது ஏன்? அவர் கட்சி தொடங்குவதற்காக காத்திருந்தீர்களா? 

தலைவர் விஜய்யுடன் 2011-ல் எனக்கு நட்பு ஏற்பட்டது. அது வளர்ந்தது. மக்கள் பணி செய்வதில் அவருக்கிருந்த ஆர்வமும், அதற்கான சிந்தனைகளும், அது குறித்த தொலைநோக்குப் பார்வையும் என்னை கவர்ந்தன. மதச்சார்பின்மையில் எந்த சூழலிலும், எந்த நிலையிலும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என அழுத்தமான வாதங்களுடன் விவாதிப்பார். அதுதான் அவர் மீதும், அவரது அரசியல் மீதும் எனக்கு மரியாதையை ஏற்படுத்தியது. ஒரு முடிவினை எடுத்துவிட்டால் அதில் உறுதியாக இருப்பதை விஜய்யிடம் பலமுறை கண்டிருக்கிறேன். விஜய் போன்ற சிந்தனையாளர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்திற்கு ஆரோக்கியமானது. அதனால் அவரது கட்சியைத் தேர்வு செய்தேன். 

சிஸ்டம் சரியில்லை எனச் சொல்லி அரசியல் கட்சி துவங்க நினைத்த ரஜினியை சந்தித்து அவரது கட்சியில் நீங்கள் சேர விரும்பியதாகச் சொல்லப் படுகிறதே? 

ரஜினியை சந்தித்தது உண்மைதான். அது அரசியலுக்கான சந்திப்பு கிடையாது. ஏனெனில், ரஜினியின் ஐடியாலஜியுடன் எனக்கு முரண் பாடு உண்டு. அவரது ஐடியாலாஜி என்பது பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் முன்னிறுத்தக்கூடிய அரசியல். அது, இந்த மண்ணுக்கான அரசியலாக இருக்கமுடியாது.  ரஜினி யின் ஆன்மீக அரசியல் என்பது மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்துக்கான அரசியல் அல்ல. அதனால், அவர் கட்சி ஆரம்பித்திருந்தாலும் அதில் சேர்ந்திருக்கமாட்டேன். 

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளில் உங்களை கவர்ந்தது எது? 

அனைத்துக் கொள்கைகளுமே இந்த மக்களுக்கானவை; ஆழமானவை; வலிமையானவை. அதனால் எல்லா கொள்கைகளிலுமே ஈர்ப்பும் பிடிப்பும் எனக்கு உண்டு. சுருக்கமாகச் சொல்வதானால் மதச்சார்பற்ற அரசியல், எல்லார்க்கும் எல்லாம் எனும் கோட்பாடு, ஜனநாயகத்தில் அனைவரும் சமம் ஆகியவைகளை உள்ளடக்கியே அனைத்து கொள்கைகளும் வகுக்கப்பட்டுள் ளன. இந்த அம்சம் என்னைக் கவர்ந்தது. 

தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் வரையறுத்துள்ள கொள்கைகளைத் தாண்டி த.வெ.க.வில் புதிதாக எந்த ஒரு கொள்கையும் இருப்பதாகத் தெரியவில்லை. அக்கட்சிகளின் மறு உருவமாகத்தானே த.வெ.க.வின் கொள்கைகள் இருக்கின்றன? 

கொள்கைகளுக்கு திராவிட கட்சிகள் உரிமை கொண்டாட முடியாது. அவைகள் நீர்த்துப்போய்விட்டன. தி.மு.க., தங்களின் கொள்கைவழி நின்று அரசியலையும், ஆட்சியையும் செய்யவில்லை. தி.மு.க.வின் கொள்கைகளுக் கும் அதன் செயல்பாடுகளுக்கும் தொடர்பு இருந்ததில்லை. மதவாதத்தை எதிர்ப்பதாக மதச்சார்பின்மை கொள்கை பேசுவார்கள்; ஆனால், பா.ஜ.க.வுடன் மறைமுக உறவு வைத்திருப்பார்கள். மோடி நல்லவர்; குஜராத் மாடல் நல்லது என்று சொன்னவர் கலைஞர். அதைத்தான் தற்போதைய முதல்வரும் கடைப்பிடிக்கிறார். அதனால் கொள்கைகளுக்கும், தி.மு.க.வுக்கும் சம்மந்தம் கிடையாது. ஆட்சியைப் பிடிப்பது மட்டுமே அவர்களின் கொள்கை. அதற்காக நரம்புபுடைக்க கொள்கை பேசுவார்கள். ஆனால், கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பது த.வெ.க; இருப்பவர் தலைவர் விஜய். அதனால், எங்கள் கொள்கை யோடு தி.மு.க.வை ஒப்பிடாதீர்கள். 

எங்களின் கொள்கை வழிகாட்டி தந்தை பெரியார் என விஜய் முழக்கமிட்டார். பெரியாரின் முக்கிய கொள்கையில் கடவுள் மறுப்பும் அடங்கும். கடவுள் மறுப்பை  விஜய் ஏற்கிறாரா? 

கட்சியின் முதல் மாநில மாநாட்டிலேயே, கடவுள் மறுப்புக் கொள்கையைத் தவிர, பெரியாரின்  மற்ற கொள்கையை ஏற்கிறோம் என தெளிவுபடுத்தி யிருக்கிறார் விஜய். தந்தை பெரியார் தற்போது உயிருடன் இருந்திருந்தால், கடவுள் மறுப்பை நாங்கள் ஏற்கவில்லை என்கிற விஜய்யின் நிலைப்பாட்டை ஆதரித்திருப்பார்; விஜய்யை அரவணைத்திருப்பார்.  

"பா.ஜ.க. எங்களின் கொள்கை எதிரி, தி.மு.க. எங்களின் அரசியல் எதிரி' எனச் சொல்கிற விஜய், கொள்கை எதிரி மட்டும்தான் எனில் அரசியல் ரீதியாக பா.ஜ.க.வுடன் நட்பு பாராட்டுகிறாரா? அரசியல் எதிரி மட்டும்தான் எனில் தி.மு.க.வுடன் கொள்கை ரீதியாக உடன்படுகிறாரா? 

கொள்கை இல்லாமல் அரசியல் கிடையாது; இருக்கவும் முடியாது. அந்த வகையில், ஆர்.எஸ். எஸ்.ஸின் சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்கும் பா.ஜ.க.வின் அரசியல் எங்களுக்குத் தேவையில்லை. அதனால் அந்த அரசியலை வெறுக்கும் முகமாக பா.ஜ.க.வை கொள்கை எதிரி என்கிறோம். கொள்கையை ஏட்டில் மட்டும் வைத்துக்கொண்டு நடைமுறையில் கொள்கை தவிர்த்த அரசியலுக்காக மட்டுமே தி.மு.க. இயங்குவதால் அந்த அரசியல் மக்களுக்கானதில்லை என்பதால் தி.மு.க.வை அரசியல் எதிரி என்கிறோம். எந்த கோணத்தில் பார்த்தாலும் தி.மு.க.வையும், பா.ஜ.க.வையும் வீழ்த்துவதே விஜய்யின் முதல் நோக்கம். 

விஜய்க்கு எதிராக நடந்த ஐ.டி. ரெய்டுக்கு நீங்கள் போனதால்தான் அவருடன் உங்களுக்கு தொடர்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறதே? 

விஜய்க்கு எதிரான ரெய்டுக்கு நான் போகவில்லை; என் தலைமையில் அந்த ரெய்டு நடக்கவுமில்லை. நான் கவனித்தது சேகர் ரெட்டி, சசிகலா, அ.தி.மு.க. விஜயபாஸ்கர் தொடர்புடைய வழக்குகள் மட்டும்தான்.    

மாற்று அரசியலை கொடுப்பதற் காகத்தான் விஜய் அரசியலுக்கு வருகிறாரா? 

மாற்று அரசியல் கிடையாது, மாற்றத்திற்கான அரசியல்; மக்களுக்கான அரசியல்; எது அடிப்படைத் தேவையோ அந்த அரசியல். இதைக் கொடுப்பதற்காகத்தான் அவர் அரசியலுக்கு வருகிறார்.

சினிமா புகழ் ஒன்று மட்டுமே அரசியலுக்கு வரு வதும், முதல்வர் நாற்காலியை கைப்பற்ற கனவு காண்பதும் தகுதியாகுமா? 

சினிமா என்கிற தகுதியை வைத்துக்கொண்டு விஜய் அரசியலுக்கு வரவில்லை. சினிமா என்பது ஒரு தொழில். அதில் அவருக்கு கிடைத்த பணம்; புகழ்; அந்தஸ்து எல்லாமே தமிழகம் கொடுத்தது. தனக்கு கொடுத்த மக்களுக்கு நேர்மையான சேவை செய்ய அரசியல்தான் ஒரே வழி என்பது அவரது எண்ணம். நேர்மையான அரசியலும் அரசியல் தலைவர்களும் இங்கு இல்லாததால்தான் அவர் வருகிறார். கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எல்லோருமே சினிமாவிலிருந்து வந்தவர்கள்தானே? சினிமாவை போல அரசியலை ஒரு தொழிலாக பார்க்காமல் சேவை என நினைப்பவர் விஜய். 

தேர்தல் நெருக்கத்தில் அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியில் த.வெ.க இணையும் என்கிறார்களே? இதற்காக மறைமுக பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வருகிறதே? 

200 சதவீதம் நிச்சயமாக கிடையாது... எந்த வடிவத்திலும் கிடையாது. மறைமுகமும் இல்லை; நேர்முகமும் இல்லை. இதனை பலமுறை எங்கள் தலைவர் விஜய் அழுத்தமாகச் சொல்லிவிட்டார். ஆனாலும் இதையே உருட்டிக்கொண்டிருக்கிறார் கள். தி.மு.க.வால் கட்டமைக்கப்படுகிற பொய் பிம்பம் அது. பிரித்தாளும் சூழ்ச்சி. 

பா.ஜ.க.வுடனான கூட்டணி உறவை அ.தி.மு.க. முறித்துக்கொண்டால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க விஜய் ரெடிதானே? 

தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளைத் தவிர, த.வெ.க. தலைமையை ஏற்று எந்த கட்சி வந்தாலும் கூட்டணி வைப்போம். அது மெகா கூட்டணியாக இருக்கும். எந்தக் கட்சியையும் நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பது மட்டுமே தலைவர் விஜய்யின் ஒரே இலக்கு! 

த.வெ.க.விற்கான வாக்கு வங்கியும், கூட்டணி பலமும்  நிரூபிக்கப்படாத  நிலையில், ஆட்சி யைப் பிடிப்போம் என்பது எப்படி சாத்தியம்? 

த.வெ.க.விற்கு வாக்கு வங்கி இல்லைன்னு யார் சொன்னது? இல்லை என்று சொல்பவர்கள் எதை வைத்துச் சொல்கிறார்கள்? இவர்களெல்லாம் தி.மு.க.வின் அஜெண்டாவை பிரதிபலிப் பவர்கள். தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியை விஜய் கைப்பற்றுவார். 2026 தேர்தல் அதை நிரூபிக்கும். அப்போது எங்களின் வாக்கு வங்கியைக் கண்டு மிரளப்போகிறீர்கள். 

 

படங்கள்: எஸ்.பி.சுந்தர்

nkn020725
இதையும் படியுங்கள்
Subscribe