சாத்தான்குளம் காவல் நிலையத்தில், கடந்த 19-ஆம் தேதி, ஜெயராஜுவையும், பென்னிக்ஸையும், ஒருசேர சாகடிக்கும் அளவுக்கு, காக்கிகளின் லத்திகள் கோரத் தாண்டவம் ஆடியதென்றால், 28-ஆம் தேதி, அதே காவல்நிலையத்தில் சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக, கோவில்பட்டி முதலாவது குற்றவியல் நீதிபதி பாரதிதாசன் வந்தபோது, சம்பந்தப்பட்ட காவல்துறை யினர், ஒத்துழைக்க மறுத்து, விரும்பத்தகாதவற்றை மிரட்டலாக நிகழ்த்தி, பாடி லாங்குவேஜ்’ மூலம், தங்களின் உடல் பலத்தைக் காட்டினார்கள். அப்போது அங்கு நிலவிய பாதுகாப்பற்ற சூழலை, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதிக்கு தொலைபேசி வாயிலாகத் தெரிவித்த நீதித்துறை நடுவர் (எண் 1) பாரதிதாசன், மேல் நடவடிக்கைக்காக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் பதிவாளருக்கும், இ-மெயில் மூலம் புகாராக அனுப்பினார்.

d

அன்று, சாத்தான்குளம் காவல் நிலையத்தில், மேஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் கண்முன்னே நடந்தது என்ன?

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுகளைப் பின்பற்றி, அதனை நிறைவேற்றுவதற்காக, நீதிமன்ற ஊழியர்கள் சகிதமாக, 28-ஆம் தேதி, மதியம் 12-45 மணியளவில், சாத்தான்குளம் காவல் நிலையம் சென்றார், மேஜிஸ்ட்ரேட் பாரதிதாசன். அப்போது, காவல்நிலைய பொறுப்பில் இருந்த ஏ.எஸ்.பி. குமாரும், டி.எஸ்.பி. பிரதாபனும், ஆய்வாளர் அறையில் இருந்தனர். அந்த அறைக்குள் மேஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் நுழைந்த போது, அவ்விருவரும், வரவேற்கவோ, முறையான வணக்கம் செலுத்தவோ இல்லை. மாறாக, அலட்சிய மனப்பான்மையும், பொறுப்பற்ற தன்மையும், அவர்களிட மிருந்து வெளிப்பட்டது.

Advertisment

உயர் நீதிமன்றம், இவ்வழக்கை கூர்ந்து கவனித்து வருவது தெரிந்தும், ஏ.எஸ்.பி. குமார், மிரட்டும் தொனியில் பார்த்தபடியும், உடல் பலத்தைக் காட்டும் விதத்தில், உடல் அசைவுகளைச் செய்த படியும் இருந்தார். அவர்களிடம், பொது நாட்குறிப்பேடு மற்றும் இதர பதிவேடுகளைக் கேட்டார், விசாரணை அதிகாரியான பாரதிதாசன். அவற்றை சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்காத ஏ.எஸ்.பி. குமார், "ஏய்.. இத கொண்டுவா... அத கொண்டு வா...'’என்று, அதட்டும் தொனியில், காவலர்களிடம் ஒருமையில் பேசிபடியே இருந்தார். ஏ.எஸ்.பி. குமாரும் டி.எஸ்.பி. பிரதாபனும், விசாரணையின் போது சரிவர நடந்துகொள்ளாததால், அவர்கள் அந்த அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

நண்பகல் 1 மணியளவில் விசாரணையைத் துவக்கினார் மேஜிஸ்ட்ரேட். அவர் கேட்ட, குற்ற எண் 312/20 வழக்கு பொதுக் குறிப்பு, சம்பந்தப்பட்ட பதிவேடுகள் மற்றும் கோப்புகளை, காவல் நிலைய எழுத்தர், கொஞ்சம் தாமதமாகவே எடுத்து வந்தார். அவற்றை ஆய்வுக்கு உட்படுத்திய நீதிபதி, அதன் தொடர்புடைய புகைப்பட நகல்களை எடுத்து, உண்மை நகல் என அத்தாட்சி செய்யும்படி காவல் ஆய்வாளருக்கு அறிவுறுத்தினார்.

ps

Advertisment

ps

சம்பவத்தின் நேரடி சாட்சியான, காவல் நிலைய கண்காணிப்பு கேமராவில், சம்பந்தப்பட்ட பதிவுகளை பதிவிறக்கம் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது, உயர் நீதிமன்றம். அதற்காக, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்திலிருந்து உதவி சிஸ்டம் ஆபீசர் சுரேஷ் வரவழைக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், சாத்தான்குளம் வட்டாட்சியரின் ஏற்பாட்டில், உள்ளூர் புகைப்பட நிபுணர்களும், சிசிடிவி கேமரா பதிவுகளைப் பதிவிறக்கும் உள்ளூர் நிபுணரும், காவல் நிலையத்துக்கு வந்திருந்தனர். அப்போது, சிசிடிவி-யின் ஹார்ட் டிஸ்க், சுரேஷ் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், போதுமான நினைவகம் (1 பஇ) இருந்தபோதிலும், தினமும் தானாகவே அழிந்துபோகும் விதத்தில்’"செட்டிங்ஸ்' செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, சம்பவ நாளான 19-ஆம் தேதியிலிருந்து, காணொலி பதிவுகள் எதுவும் கணினியில் இல்லை. அவை அழிக்கப்பட்ட நிலையில் இருந்தன.

முக்கிய நேரடி சாட்சியமான சிசிடிவி தரவுகளை பதிவிறக்கம் செய்யும் பொருட்டு, அது கைப்பற்றப்பட்டு, மேஜிஸ்ட்ரேட் பாதுகாப்பில் வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, காவல் நிலையப் பதிவுகளை, தொடர்ந்து சரிபார்ப்பதற்காக, சாத்தான்குளம் வட்டாட்சியர் மூலம், 500 ஏஇ கொண்ட புதிய ஹார்ட் டிஸ்க் கொண்டுவரப்பட்டு, அனைவர் முன்னிலையிலும் பொருத்தப்பட்டது. அது தொடர்ந்து இயக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, பொறுப்பு ஆய்வாளரிடம் தகவல் அளிக்கப் பட்டது. இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் காணொலியாகப் பதிவு செய்தனர். சம்பவ இடத்தைப் பார்வையிடும்போது, நீண்டகால பணியில் இருந்த காவலர் ஒருவர் உதவ, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

rev

அடுத்து, காவலர் மகாராஜா அழைக்கப்பட, அவரோ, "சம்பவம் நடந்த நாளில் நான் காவல் நிலையத்திலேயே இல்லை' என்றார். ஆனாலும், அவரிடம் பல்வேறு கேள்விகள், ஒன்றன்பின் ஒன்றாக கேட்கப்பட, அவர் பதிலளிக்க முன்வரவில்லை. அவருடைய சாட்சியம் அனைத்தும் முறையாக முடிவுற்றதும், பாதுகாப்பு கருதி, விசாரணை நடைபெற்ற முதல் மாடியிலேயே நிறுத்தப்பட்டார். அடுத்ததாக, தலைமைக் காவலர் ரேவதியின் சாட்சியம் பதிவானது. அவர், சம்பவ இடத்தில் சாட்சியாக இருந்த காரணத்தால், அந்த நேரத்தில் காவல் நிலையத்தில் என்னென்ன நடந்தது என்பதை, மிகவும் கவனத்துடன், நிறுத்தி நிதானமாகப் பதிவு செய்தனர். அப்போது, ரேவதி மிகவும் பயத்துடன் காணப்பட்டார். ""சாட்சியாக இருந்து நான் சொல்லும் உண்மைகளை வெளியில் சொல்ல வேண்டாம். நான் சாட்சியம் அளிப்பதை வெளியில் உள்ளவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்'' என்று அச்சத்தை வெளிப்படுத்தினார்.

சாட்சியம் அளிக்கும் ரேவதியின் மனநிலை கருதி, நீதிமன்ற ஊழியர்கள், வெளியில் பாதுகாப் புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனாலும், அவ்வப்போது, காவல் நிலையத்தின் வலதுபக்கம் உள்ள வேப்ப மரத்தின் கீழ், கூட்டமாக நின்று, கிண்டல் செய்த படி இருந்தனர்.

சாட்சியம் அளிக்கும் தனக்கு மிரட்டல் வரும் என்று, அவர் பயத்தை வெளிப்படுத்தினார். அவர், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு கால அவகாசம் அளித்தனர். அதன்பிறகு, ரேவதி, தனது சாட்சியத்தில், ""கைதிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ், இருவரையும் விடிய விடிய லத்தியால் அடித்தார்கள். காவலர்களின் லத்தியிலும், அந்த மேஜையிலும் ரத்தக்கறை படிந்திருக்கிறது. உடனே, அதைக் கைப்பற்ற வேண்டும்...'' என்று கூறினார். சாட்சியம் அளித்த சாட்சி பேப்பரில், அவரைக் கையெழுத்து போடச் சொன்னபோது, ""கொஞ்ச நேரம் கழித்து கையெழுத்திடுகிறேன்...''’என்று சொல்லிவிட்டு, மேல் தளத்திலிருந்து கீழ் தளத்துக்குச் சென்று விட்டார்.

மேஜிஸ்ட்ரேட் பாரதிதாசன், சாட்சி ரேவதி சொன்ன லத்திகளை எடுத்துவரச் சொன்னார். அங்கிருந்த காவலர்களோ, அவர் சொன்னது காதில் விழாததுபோல் நடந்து கொண்டனர். கட்டாயப்படுத்திய பிறகே, லத்திகளைக் கொண்டுவந்து ஒப்படைத்தனர். காவலர் மகாராஜனோ, மேஜிஸ்ட்ரேட் முதுகுக்குப் பின்னால் நின்றுகொண்டு, ""உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா...''’என்று அவர் காதில் விழும்படி பேசி, அங்கு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார். காவலர் மகாராஜன், முதலில், "தனது லத்தி சொந்த ஊரில் இருக்கிறது' என்றார். பிறகு, "போலீஸ் குடியிருப்பில் இருக்கிறது' என்று முரண்பட்டு பேசினார். பிறகு, லத்தியே தனக்கு இல்லை என்றார். ""வரேன்.. இரு..''’ என்று நீதிபதியிடம் ஒருமையில் பேசி, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததோடு, அங்குமிங்கும் நடந்தபடியே இருந்தார். அதனால், அவர்மீது கைவைத்து, தள்ளி இழுத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இன்னொரு காவலரிடம் லத்தியைக் கேட்டபோது, அவர் எகிறிக் குதித்து ஓடிவிட்டார். இதையெல்லாம், அங்கிருந்த காவலர்கள் வீடியோ எடுத்தனர்.

dd

விசாரணை நடத்தும் சூழல் சரியில்லை என்பதால், அங்கிருந்து நீதித்துறை நடுவர் கிளம்பினார். அந்த நேரத்தில், தலைமைக் காவலர் ரேவதி, சாட்சி பேப்பரில் கையெழுத்திட மறுத்தார். வெகு நேரத்துக்குப் பிறகு, அவருடைய பாதுகாப்புக்கு உறுதியளித்ததும், தான் அளித்த வாக்குமூலத்தில் அவர் கையெழுத்திட்டார்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில், நீதித்துறை நடுவர், விசாரணை நடத்துவதற்கான பாதுகாப்பான சூழ்நிலையே இல்லை. ஏனென்றால், போலீசார், அங்கங்கே சூழ்ந்துகொண்டும், நடப்பதையெல்லாம் செல்போனில் பதிவு செய்து கொண்டும், நீதிமன்ற ஊழியர்களை மிரட்டிக் கொண்டும் இருந்தனர். அதனால், அங்கிருந்து புறப்பட்டு, திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார், மேஜிஸ்ட்ரேட் பாரதிதாசன். சாத்தான் குளம் காவல் நிலையத்தில் நடந்த அனைத்தையும், உயர் நீதிமன்ற பதிவாளருக்கு, புகாராக அனுப்பவும் செய்தார். ஆவணங்களையும், தடயங்களையும் அழித்து விடாமல் பாதுகாப்பதற்காக, சாத்தான்குளம் காவல் நிலையம், தற்போது வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

-ராம்கி, நாகேந்திரன்