பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸுக்கும், செயல் தலைவர் அன்புமணிக் கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகிலுள்ள பட்டா னூர் சங்கமித்ரா மண்டபத்தில் நடைபெறுமென்று ராமதாஸ் அறிவித்த அடுத்த சில நிமிடங்களில், 9ஆம் தேதி மாமல்லபுரம் நட்சத்திர ஹோட்டலில் பொதுக்குழுக் கூட்டம் என அன்புமணி அறிவிப்பு வெளி யிட்டுள்ளார். இதன்மூலமாக பா.ம.க., ராமதாஸ் பா.ம.க., அன்புமணி பா.ம.க. என அதிகாரப்பூர்வமாக உடைந் தது. கட்சி யாருக்கு என சட்டரீதியான மோதலுக்கு தயாராகியுள்ளார்கள். 

கட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டுமென் பதற்காக "உரிமை மீட்க…. தலைமுறை காக்க' என்கிற பெயரில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரிலிருந்து ஜூலை 25ஆம் தேதி முதல் நடைபயணத்தை தொடங்கினார் அன்புமணி. வன்னியர் சமூக மக்களிடம் நெருங்கவேண்டுமென்பதற்காக அன்புமணி இந்த நடைபயணத்தை நடத்துகிறார். இதை உணர்ந்தே நடைபயணத்தை தடைசெய்ய வேண்டுமென காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார் ராமதாஸ். 

நடைபயணத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வந்தார் அன்புமணி. நடைபயணம் குறித்து விசாரித்தோம். "வழக்கமாக பா.ம.க. கூட்டங்களுக்கு நிர்வாகிகள் பெரிதாக செலவு செய்யமாட்டார்கள். ராமதாஸ், அன்புமணியே வந்தாலும் வசூல் நடத்தி அந்த பணத்திலிருந்துதான் கூட்டம் நடத்துவார்கள். இப்போது அப்படியே தலைகீழ். அன்புமணியால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், ஓரளவு செலவு செய்கிறார்கள், அன்புமணியும் தனது பணத்தை இறக்கியுள்ளார். அப்படியும் பெரியளவில் கூட்டம் கூட்ட முடியாதது அவருக்கு அதிர்ச்சி யளித்துள்ளது'' என்கிறார்கள் அன்புமணி தரப்பு நிர்வாகிகளே. அதேபோல், ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகளிடம் அன்புமணியே போன்போட்டு அழைக்கிறார் என்கிறார்கள். மூத்த மாநில நிர்வாகியொருவரிடம் கேட்டபோது, "என்னிடம் சின்னய்யா, சௌமியா இருவரும் தொடர்புகொண்டு பேசி, இங்க வந்திடுங்கன்னு சொன்னாங்க. நான் இப்போதைக்கு அய்யா பின்னாடி நிற்கிறேன், அய்யா காலத்துக்கு பிறகு வேணும்னா உங்களோட வர்றேன்னு சொல்லிட்டேன். சாதி மக்களும், தொண்டர்களும் அய்யா பின்னாடிதான். அதனாலதான் கூட்டம் சேர்க்க முடியாமல் தவிக்கிறார்கள்'' என்றார். 

Advertisment

இதுபற்றி அணி சேராத மூத்த பா.ம.க. நிர்வாகிகளிடம் பேசியபோது, "யார் பக்கம் நிற்பது என்பதில் என்னைப்போன்ற நிர்வாகிகளுக்குத்தான் குழப்பம். அரசியலில் வருங்காலம் அன்புமணிக்குத் தான் என்பது தெரியும், அதனால் அவர் பக்கமே நிர்வாகிகள் பெரும்பாலும் அணி திரள்கிறார்கள். தொண்டர்களும், சமுதாய மக்களும் பா.ம.க.வை தமிழகத்தில் வேரூன்ற வைக்க ராமதாஸ் கடுமையாக உழைத்ததை எண்ணிப் பார்த்து... பெரியவர் பக்கமே நிற்கிறார்கள். கட்சியை பா.ஜ.க.விடம் அடகுவைத்துவிட்டார் அன்புமணி என்று கடந்த 5 வருடமாகவே கட்சி நிர்வாகிகள் முணுமுணுத்தனர். தி.மு.க., அ.தி.மு.க. என மாறி மாறி கூட்டணி வைத்தாலும், கட்சிக்கென எம்.பி., எம்.எல்.ஏ., சேர்மன்களை உருவாக்கிக்கொண்டே இருந்தார் அய்யா. இதனால் கட்சி ஆக்டிவாக இருந்தது. பா.ஜ.க.வோடு அணி சேர்ந்தபின் கீழ் நோக்கிச்செல்வது தெரிந்தும் மகன் மீதான பாசம், குடும்பத்தின் நெருக்கடியால் பா.ஜ.க. ஆதரவி லேயே இருந்தார். இதனால் கட்சி இழந்தது அதிகம். கட்சியின் எதிர்காலம் கருதி, "பா.ஜ.க. தேவையில்லை, அ.தி.மு.க. அணியில் இருப்போம், இல்லன்னா தி.மு.க.வுக்கு போவோம்' என்கிறார் ராமதாஸ். 

அப்படிச் செய்தால் பா.ஜ.க. தன் மீதுள்ள ஊழல் வழக்கை கையில் எடுக்கும், சிறைக்கு அனுப்பும் என அன்புமணி பயப்படுகிறார். இந்த பயத்தால், கட்சியை இழக்கவேண்டி வரும் என்பதை உணர்ந்துகொள்ளும் நிலையில் அன்புமணியோ, அவரது குடும்பமோ, அவரை சுற்றியிருப்பவர்களோ இல்லை. தன் கண் முன்னால், தான் உருவாக்கிய கட்சி அழிவதைப் பார்க்க விரும்பாமல்தான் அன்புமணியை எதிர்க்கிறார். இந்த முடிவை எங்க சாதி மக்கள் மட்டுமல்ல, பிற சாதி மக்களும் ஆதரிக்கறாங்க. அன்புமணியை திட்டிக்கிட்டிருக்காங்க'' என்றார். 

பா.ம.க.வில், ராமதாஸ் அணி நிர்வாகிகள், அன்புமணி அணி நிர்வாகி கள் என இரண்டு தரப்பு நிர்வாகிகள் மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் நியமிக்கப்பட்டுள்ள னர். ராமதாஸால் பதவி பறிக்கப்பட்டவருக்கு அன்புமணி பதவி தந்துள்ளார். அன்புமணி நியமனத்தை தடுத்து ராமதாஸ் நிர்வாகிகளை அறிவித்துள்ளார். இதனால் பா.ம.க.வில் மாமா,  மச்சான் என இத்தனை ஆண்டுகளாக பழகி வந்த ஒரே சாதியினருக்குள் இப்போது பகையை மூட்டிவிட்டது போல் இருக்கிறது. ஒவ்வொரு வரும் முறுக்கிக்கொண்டு நிற்கிறார்கள். அப்பா - மகன் பிளவு என்பது அடிமட்டத் தொண்டன் வரை பரவிவிட்டது. இனி அப்பா - மகன் சேர்ந்தாலும் கட்சியில் உருவான கோஷ்டிப்பூசல் மறைய பல ஆண்டுகள் ஆகும். 

Advertisment

உதாரணத்துக்கு, வரும் தேர்தலில் ஏதோ ஒரு கூட்டணியில் சேர்ந்து சீட் வாங்கி வேட்பாளர்களை நிறுத்தும்போது, அவர் ராமதாஸ் அணியா? அன்புமணி அணியா? என்கிற கேள்வி வரும். ராமதாஸ் அணியைச் சேர்ந்தவராக இருந்தால் அன்புமணி அணி தோற்கடிக்கும். அன்புமணி டீமை சேர்ந்தவராக இருந்தால் ராமதாஸ் டீம் தோற்கடிக்கும். ஆக மொத்தம் கட்சியை காலி செய்துவிட்டார்கள்'' என்கிறார்கள்.