அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர் யாராக இருந்தாலும், ‘ஆண்டி-இந்தியன்’ பட்டத்தைக் கொடுக்கும் பா.ஜ.க. அரசு, அதன் சட்டப்பூர்வ வடிவத்தை உபா சட்டத்திருத்தத்தின் மூலம் கொண்டு வந்திருக்கிறது. இதன்மூலம், யாரை வேண்டுமானாலும் ‘தீவிரவாதி’ என்று அரசால் முத்திரை குத்திவிடமுடியும்.
இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் மோடி அரசு, நாடாளுமன்றத்தில் பல்வேறு சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. அவற்றில், சர்ச்சையைக் கிளப்பிய ஆர்.டி.ஐ. சட்டத்திருத்தம், முத்தலாக் தடைச் சட்டம் ஆகியவற்றின் வரிசையில், உபா சட்டத்திருத்தம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜூலை 24-ஆம் தேதி மக்களவையில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, எதிர்க்கட்சிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது. ஆகஸ்ட் 2-ஆம்தேதி மேலவையான மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, தேர்வுக்குழுவுக்கு அனுப்புமாறு எதிர்க்கட்சிகள் கோரின. ஆனால், அதற்கான வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தபிறகு, குரல் வாக்கெடுப்பின் மூலமாக இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. தற்போது அது குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.
1967-ல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டதுதான் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம்(Unlawful Activities (Prevention) Act) என்று அழைக்கப்படும் உபா சட்டம்.
பின்னர் சில சட்டத்திருத்தங்களின் மூலமாக தீவிரவாத செயல்களில் ஈடுபடும் அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்கும் வலிமையை அந்தச் சட்டம்பெற்றது. சம்பந்தப்பட்ட அமைப்புகளை (Organization) தீவிரவாத அமைப்புகளாக அறிவிக்க அரசுக்கு உரிமை கிடைத்தது. தற்போதைய சட்டத்திருத்தம், அமைப்புகள் மட்டுமின்றி, அமைப்புசாரா தனிநபர்களையும் சேர்த்து (Organization Invidivuals) தீவிரவாதிகளாக அறிவிக்க வழிவகை செய்கிறது.
ஒரு தனிநபர் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை போன்றவற்றிற்கு எதிராக செயல்பட்டாலோ, திட்டமிட்டாலோ அல்லது அப்படியெல்லாம் செய்கிறார் என்று குற்றச்சாட்டோ, சந்தேகமோ எழுந்தால்கூட அரசு நம்பினால் விசாரணையேயின்றி, வழக்குப்பதிவு-கைது என எதுவுமே செய்யாமல் அவரை தீவிரவாதி என்று அறிவிக்கலாம். மத்திய அரசின் அறிவிக்கையில் அவரது பெயர் தீவிரவாதி என்று இடம்பெற்ற பிறகே, சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியவரும். இதை எதிர்த்து மத்திய அரசிடம் அவர் மேல்முறையீடு செய்யலாம். அரசு அதனை நிராகரித்தால் ஒரு மாதத்திற்குள் மீண்டும் மேல்முறையீடு செய்யவேண்டும். இந்தமுறை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மறுஆய்வுக் குழு விசாரணை நடத்தும். ஓய்வுபெற்ற/பணியிலிருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், மேலும் மூவர் அடங்கிய இந்தக் குழுவும் மனுவை நிராகரிக்கும்பட்சத்தில், தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவர் இறுதியாக நீதிமன்றத்தை நாடவேண்டும். இப்படி நீதிமன்றத்தின் வேலையை மத்திய அரசே கையிலெடுத்திருப்பதைத்தான் பலரும் கண்டிக்கின்றனர்.
இந்தச் சட்டத்திருத்தம் அரசியல் பழிவாங்கல், சிறுபான்மையினர் மீதான விரோதம் போன்ற செயல்பாடுகளுக்கு தவறாக பயன்படுத்தப்படலாமே என்ற எதிர்க்கட்சிகளின் வாதத்திற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ""நான்கடுக்கு ஆய்வுக்குப் பின்னரே இந்த மசோதாவைத் தாக்கல் செய்திருக்கிறோம். அதனால், தவறுநடக்க வாய்ப்பேயில்லை. தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமானால், தனிநபர்களையும் தீவிரவாதிகளாக அறிவித்தாகவேண்டும்''’என்றார். அதேசமயம், "பல்வேறு தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபட்ட இந்துத்வா அமைப்பான சனாதன் சான்ஸ்தான் மீது ஏன் இந்த அரசு மென்போக்கைக் கையாள்கிறது? எதற்காக இன்னமும் அது தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்படவில்லை?' என இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்த சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த எம்.பி. எலமரம் கரீம் எழுப்பிய கேள்விக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
தனிநபர், அமைப்பு என்று எடுத்துக்கொண்டால் தனிநபர் இந்த நாட்டின் பிரஜை. அரசியலமைப்பு வழங்கும் சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவருக்கும் பொருந்தும். ஆனால், தீவிரவாதி என்று அடையாளப்படுத்தி விட்டாலே, இவையனைத்தும் பொய்யாகிவிடும். மேலும், தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ.விற்கு வழங்கப்பட்டிருக்கும் கூடுதல் அதிகாரங்களின் மூலம், தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவரின் சொத்துகளைப் பறிமுதல் செய்யமுடியும். இதற்காகவே, மாநில காவல்துறையின் உயரதிகாரிகள் வசமிருந்த பல்வேறு முக்கிய அதிகாரங்களை, என்.ஐ.ஏ.வின் ஆய்வாளருக்கே கொடுத்து அழகுபார்க்கிறது மோடி அரசு. மாநில உரிமைகள், சுயாட்சியில் நம்பிக்கைகொண்ட யாவரும் இதனை எதிர்க்கவே செய்கின்றனர்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஐ.நா. மன்றத்தில் பேசிவிட்டு திரும்பிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். நீதிபதி அவரை விடுவித்ததும் உடனடியாக உபா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். தற்போதைய உபா சட்டத்திருத்தம் குறித்து திருமுருகன் காந்தியிடம் பேசியபோது, “""தடா, பொடா, மிசா போன்ற தடைச்சட்டங்களின் வரலாற்றைப் பார்த்தால், அரசியல் எதிரிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர, அவற்றின் உண்மையான நோக்கம் நிறைவேறியதாக ஆதாரமில்லை. அதனால்தான், அவை நீக்கப்பட்டன. நமது அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால்தான், அவர் குற்றவாளி. நிரூபிக்கப்படும் வரை நிரபராதி. ஆனால், உபாவைப் பொறுத்தவரைக்கும் நீங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்கும்வரை, சிறையில்தான் இருக்கவேண்டும். இந்தக் கொடுமை கொலைக்குற்றவாளிக்குக்கூட கிடையாது. மத்திய அரசு இதற்காக சொல்லும் நிவர்த்திகளும் நடைமுறையில் சாத்தியமற்றவை, கண்துடைப்புக்கானவை. குண்டர் சட்டத்தில் எனக்கே இது நடந்திருக்கிறது.
2017, ஜூலை மாதம் வள்ளுவர்கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாலஸ்தீன படுகொலைகளைக் கண்டித்து பேசியதாக என்மீது உபா சட்டத்தின்கீழ் வழக்கு போடப்பட்டது. ஆனால், எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டிருந்த தேதியில் நான் சிறையிலிருந்தேன். ஒருவேளை நான் தண்டிக்கப்பட்டிருந்தால் என்னவாகி இருக்கும். இதுபோன்ற உள்நோக்கத்துடன் செயல்படும் அதிகாரிகளின் மீது இதுவரையில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லெகி, "என்.ஜி.ஓ.க்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்டதுதான் உபா சட்டம்' என்று வெளிப்படையாகப் பேசுகிறார். ஆர்.எஸ்.எஸ்.ஸும் என்.ஜி.ஓ.தானே, அதன்மீதும் இந்தச் சட்டம் பாயுமா? ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வுக்கு எதிராக இருப்பவர்களை ஒடுக்குவதற்காக மட்டுமே இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. பா.ஜ.க. கொண்டுவந்திருக்கும் அனைத்து மசோதாக்களுமே மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றை மாவட்டங்களாக ஆக்கும் திட்டமே தவிர வேறில்லை''’என்றார் அழுத்தமாக.
மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குனரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ஹென்றி திபேன் நம்மிடம், “""மனித உரிமைக்காக பேசுபவர்கள், தூக்கிப்பிடிப்பவர்கள், அதற்காக அமைதியான வழியில் போராடுபவர்களை மனித உரிமைக் காப்பாளர்களாகக் கருதவேண்டும். அந்தந்த அரசுகளும் அவர்களின் பணிகளை ஊக்குவிக்கவேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்துகிறது. அவர்களில் மனித உரிமைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஒன்பதுபேரை பீமா-கோரேகான் வழக்கில், உபா சட்டத்தின்கீழ் கைதுசெய்து புனே சிறையில் அடைத்திருக்கிறது இந்த அரசு. "பிரதமரை கொலை செய்யத் திட்டமிட்டார்கள்' என்பது அவர்களின் மீதான குற்றச்சாட்டு. நம்மூர் திருமுருகன் காந்திக்கும் இது நேர்ந்திருக்கிறது. யார் மக்களின் உரிமைகளுக்காக குரலெழுப்புகிறார்களோ, அவர்களை ஒடுக்குவதுதான் உபா சட்டத்தின் உண்மையான நோக்கம்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் குண்ட்டி மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராமங்களில் எல்லைக்கல் போராட்டத்தை(பத்தல்கடி மூமெண்ட்) அங்குள்ள மக்கள் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு கிராமத்தின் எல்லையிலும் உயரமான கற்களை எழுப்பி அதில், "ஆதிவாசி மக்களாகிய எங்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் பல்வேறு உரிமைகளை வழங்குகிறது. ஆகவே, நிலத்திற்குக் கீழேயும், மேலேயும் 15 ஆயிரம் கி.மீ. அளவுக்கு நிலம் எங்களுக்குச் சொந்தம். உங்கள் நிறுவனங்கள் எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள்தான் இங்கு ஆட்சியாளர்கள், அரசு எங்களின் சேவகன்'’என்று எழுதி வைத்துள்ளனர். அவர்களில் 30 ஆயிரம்பேர் மீது 124-ஏ பிரிவில் தேசவிரோத வழக்கு பதிந்துள்ளனர். நிலத்தை, நீரை, நதியைப் பாதுகாக்கவேண்டும் என்று போராடுகிற அவர்களை, உபா சட்டத்தை வைத்து நாளை தீவிரவாதிகள் என்று அழைக்கமாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம். சட்டத்தின் மூலமாக தீவிரவாதத்தை ஒழித்துவிட முடியாதென்று, எதிர்க்கட்சியாக இருந்தபோது முன்னாள் அமைச்சர் அருண்ஜேட்லியே சொல்லியிருக்கிறார். எனவே, இதுபோன்ற சட்டங்கள் இருக்குமேயானால், ஜனநாயகத்தை நம்புகிறவர்கள், அரசுக்கு எதிராக குரலெழுப்புவார்கள், அரசு தங்களின் எதிரிகளாக கருதும் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக அறிவிக்கப்படுவார்கள்''’என்று அடித்துச் சொல்கிறார்.
சட்டமியற்றத்தான் நாடாளுமன்றம் என்றாலும், சகிப்புத்தன்மை இல்லாமல் போகும்போது ஜனநாயகம் செத்துப்போகும் என்பதை இந்த அரசு எப்போது உணரப்போகிறதோ?
-ச.ப.மதிவாணன்