ம்மூரில் பழனிக்கும் திருச்செந்தூருக்கும் காவடி எடுத்துச் செல்வது போலவே வட மாநிலங்களில், இந்து மதக் காலண்டரில் ஷ்ரவண மாதத்தில் நடத்தப்படும் யாத்திரைக்கு கன்வார் யாத்திரை என்று பெயர். வரும் ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறும். கங்கை நதியில் புனித நீரை குடங்களில் நிரப்பி, அந்த குடங்களை காவடி போல நீள கம்பில் தொங்கவிட்டபடி, வெறும் பாதத்துடன் சிவனை தரிசிக்க யாத்திரை செல்லும்போது, அந்த புனித நீர் உள்ள குடத்தை கன்வார் என்று அழைப்பார்கள். யாத்திரையில் கலந்துகொள்ளும் பக்தர்களை கன்வாரியாக்கள் என்பார்கள்.

g

உத்தரப்பிரதேசத்தி லுள்ள மீரட், காசியாபாத், அயோத்தி, வாரணாசி, உத்தரகாண்டிலுள்ள ஹரித்வார், கங்கோத்ரி மட்டுமல்லாது, கங்கை நதிக்கரையோரமெங்கும் சிவ பக்தர்கள் கன்வார் யாத்திரைக்காகக் ஏராளமாக குவிவார்கள். பல காலமாக நடைபெற்றுவந்த இந்த புனித யாத்திரையில், கடந்த சில ஆண்டுகளாக, சமூக விரோதிகளும், போதைப்பொருள் பயன்படுத்துவோரும் உள்ளே புகுந்து, பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடப்பதும் வழக்கமாகியிருக்கிறது. அதே நேரத்தில், உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் போலீசார், கன்வார் யாத்திரை செல்வோர் மீது பூக்கள் தூவி மரியாதை செலுத்தும் வழக்கமும் உருவாகியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை சற்று குறைந்துள்ள இன்றைய சூழலில் கன்வார் யாத்திரைக்கு அனுமதியளித்தால், கொரோனா மூன்றாவது அலை பரவலுக்கு இதுவே முக்கிய காரணமாகக்கூடும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சப்படுகிறார்கள். கும்பமேளா கூட்டத்தால் இரண்டாவது அலை பரவியது போல ஆகிவிடக்கூடாது என முன்னெச்சரிக்கை குரல் எழுப்புகிறார்கள்.

Advertisment

கன்வார் யாத்திரை பெரிய அளவில் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்டில், கொரோனா மூன்றாவது அலை பரவல் அபாயம், டெல்டா ப்ளஸ் கொரோனா பரவல் அபாயம் காரணமாக இந்த ஆண்டு கன்வார் யாத்திரையை ரத்து செய்து, மாற்று ஏற்பாடாக லாரியில் புனித கங்கை நீரை எடுத்துச் செல்ல முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள் ளார். ஆனால் உத்தரப்பிரதேச அரசோ, கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி கன்வார் யாத்திரை நடைபெறும் என்று அறிவித்தது. ஆனால் இந்திய மருத்துவ சங்கமோ, கன்வார் யாத்திரையை இந்த ஆண்டும் ரத்து செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை தானாக முன்வந்து எடுத்துக்கொண்டு, நீதிபதி பாலி நாரிமன் தலைமையிலான அமர்வின்மூலம் விசாரித்தது.

உத்தரப்பிரதேச அரசு, "நிபந்தனைகளுடனான அனுமதி என கோர்ட்டில் தெரிவித்தாலும், ஒன்றிய அரசு, இம்முறை கன்வார் யாத்திரைக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்து, குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் வழிபாடு நடத்தலாமென்று கூறியது. அதையடுத்து, உச்ச நீதிமன்றம் தனது கருத்தாக, நாட்டு மக்களின் உடல் நலனைப் பாதுகாப்பதே மாநில அரசின் கடமை. கொரோனா மூன்றாவது அலைப் பரவலைத் தடுப்பதில் கட்டுப்பாடுகளை 100% தீர்க்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும். உத்தரப்பிரதேச அரசு யாத்திரைக்குத் தடை விதிக்காவிட்டால், உச்ச நீதிமன்றம் தனது இறுதி முடிவை அறிவிக்கும்'' என்று தெரிவித்தது.

Advertisment