பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முகிலனுடன், அவருடன் இணைந்து போராட்டங்களை நடத்திய கரூர் மாவட்டத்தை சேர்ந்த விசுவநாதன் என்பவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை குறித்து அவருடைய வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் நம்மிடம் பேசினார்.…""கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விசுவநாதன், அமெரிக்காவில் வாழ்ந்து தமிழ்ஈழ ஆதரவாளராக செயல்பட்டு இந்தியா திரும்பியவர். காவிரி மணல்கொள்ளையை எதிர்த்து போராட்டங்களையும் பொதுக்கூட்டங்களையும் நடத்தியவர். சமூகசெயற்பாட்டாளர் முகிலனுடனும் இணைந்து பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார். வைகோ உள்ளிட்ட தலைவர்கள் இவருடைய போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் முகிலன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக உறவு வைத்துக்கொண்டார் என்று ஒரு பெண் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் முகிலனை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைதுசெய்தனர். இப்போது, திடீரென்று "உங்கள் போராட்டங்களில் முகிலனும் அவர் மீது புகார் தெரிவித்துள்ள பெண்ணும் கலந்துகொண்டிருக்கிறார்கள். எனவே இந்த வழக்கில் நீங்கள் சாட்சியம் அளிக்க வேண்டும்' என்று கூறியிருக்கிறார்கள். "அவர்களைப் பற்றி எனக்குத் தெரிந்ததை சொல்வேன். தெரியாததை நீங்கள் சொல்வதற்காக சொல்லமாட்டேன்' என்று கூறியிருக்கிறார்.
தங்களுடைய நோக்கத்துக்கு ஒப்புக்கொள்ள மறுத்ததால், முகிலனுக்கும் புகார்கொடுத்த பெண்ணுக்கும் இடையே விசுவநாதன் உதவியாக இருந்தார் என்றும், சாட்சியங்களை மறைத்து, அவர்களுடன் கூட்டாக சதிபுரிந்தார் என்றும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்''’என்றார்.
விசுவநாதனை வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துச்சென்று கை, கால்களில் காயம் ஏற்படுத்தி, மூக்குக் கண்ணாடியை உடைத்து அவரை கைது செய்திருக்கிறார்கள். விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக கூறிய அவர்கள், முகிலனுக்கு எதிரான பாலியல் வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்த்திருக்கிறார்கள்.
இந்தத் தகவல் அறிந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், திருச்சி வழக்கறிஞர்கள் சிலருடனும், தமிழ் ஆர்வலர்கள், காவிரி பாதுகாப்பு இயக்க செயற்பாட்டாளர்கள் திரண்டனர். செய்தியாளர்களும் கூடிவிட்டனர். திருச்சி சிறையில் அடைக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸார் முயன்றனர். ஆனால், விசுவநாதனின் வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கரூர் சிறையில் அடைக்க கரூர் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
மாலையில் கைது செய்து, நள்ளிரவு வரை காவல் நிலையத்திலேயே வைத்திருந்து, நீதிபதி வீட்டில் கொண்டுபோய் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பது என்ற நடைமுறையை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். "போலீசாரின் இந்த நடவடிக்கை மனித உரிமை மீறிய செயல்' என்று வழக்கறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
-ஜெ.டி.ஆர்.