தி.மு.க.வைப் பொறுத்தவரை மதுரை அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. மதுரை அமைச்சர் மூர்த்திக்கு வெவ்வேறு பக்கங்களிலிருந்து எதிர்ப்பை வெளிப்படுத்தத் தயாராகிவருகின்றனர் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும். 

Advertisment

ஒருபக்கம் தி.மு.க.வின் முக்கிய தலைகளான தளபதி, மணிமாறன் ஆகியோர் தங்களின் அதிகார எல்லைக்குள் மூர்த்தி அத்துமீறி நுழைந்து இத்தனை நாட்களாக தாங்கள் கட்டிவைத்துக் காத்த செல்வாக்கை செல்லாக் காசாக்குகிறார் என்று கொந்தளிக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பி.டி.ஆர்.தியாகராஜன் இதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார். 

Advertisment

மதுரையில் செல்வாக்கு பெறவேண்டுமென் றால் மூர்த்தியை தட்டிவைத்தால்தான் நடக்கும் என்றிருந்த நிலையில் தி.மு.க. நகர் மற்றும் புறகநகர் மாவட்டச் செயலாளர்களுக்கு ஆதரவுக் கொடி காட்டியுள்ளார், அமைச்சர் பி.டி.ஆர். தியாக ராஜன்.  

அதேநேரத்தில் மூர்த்தி மூன்றுமுறை வென்ற மதுரை கிழக்கு தொகுதியில் பெரும் பான்மையாக இருக்கும் யாதவர் சமூகம் இந்த முறை பெரும் அதிருப்தி யில் இருப்பதாகத் தெரிகிறது. அந்த சமுதாய மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் அமைச்சர் மூர்த்தி நிறைவேற்றவில்லை என்று யாதவ சங்கங்கள் போர்க்கொடி தூக்குகின்றன. 

Advertisment

தி.மு.க. தலைமையால் பெரிதும் நம்பப்படுகிற செல்வாக்கு பெற்ற அமைச் சர் மூர்த்திக்கு என்னாச்சு? ஏன் இவ்வளவு எதிர்ப்பு? என்ன நடக்கிறது? மதுரையில் அமைச்சருக்கு எதிராக தி.மு.க.வின் முக்கிய தலைகள், அரசு அதி காரிகள், சமுதாய மக்கள் ஒன்றுதிரளுவது ஏன்? 

madurai1

2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மதுரைக்கு இரண்டு அமைச்சர்கள் என்ற அறிவிப்பு வெளியாகின. ஒன்று மூர்த்தி, மற்றொன்று பி.டி.ஆர்.தியாக ராஜன். அதில் நிதியமைச்சராக மிக முக்கிய பொறுப்பில் பி.டி.ஆர்.தியாகராஜன் அமர்த்தப்பட, மதுரை தி.மு.க.வினரிடையேயும், மக்களிடையேயும் அழகிரிக்குப் பிறகு மதுரையின் முக்கிய பவர் சென்டராக மாற, வீட்டுக்கு கட்சிக்காரர்கள் குவியத் தொடங்க, நகர் மாவட்டச் செயலாளர் தளபதியும், புறநகர் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான மூர்த்தியும் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள்.

இதனால் ஆரம்பத்தில் மதுரை நகர் மாவட்டச் செயலாளர் தளபதிக்கும் அமைச்சர் பி.டி.ஆருக்கும் அதிகாரச் சண்டை உச்சமானது. தளபதி ஆதரவாளர்களில் பெரும் தலைகள் பி.டி.ஆர்.தியாகராஜன் பக்கம் செல்ல, பொதுமேடையிலேயே இருவருக் கும் உக்கிரமாக வார்த்தைப் போர் வெடித்தது. அடுத்து வந்த மேயர் தேர்தலில் மூர்த்தியும், பி.டி.ஆரும் யார் ஆதரவாளரைக் கொண்டுவருவது என்ற போட்டியில் பி.டி.ஆரின் கையே தலைமை யிடத்தில் ஓங்கியது. 

இதனால் அமைச்சர் மூர்த்திக்கும், பி.டி.ஆருக்கும் அதிகார யுத்தம் தொடங்க, சிறிது காலத்திலேயே பி.டி. ஆர்.தியாகராஜன் பேசிய ஆடியோவால் நிதியமைச்சர் என்பதிலிருந்து டி-புரொமோஷனாகி தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரானார். 

அதனைத் தொடர்ந்து மூர்த்தியின் கை ஓங்கத் தொடங்கியது. ஆட்சியர் முதல் அனைத்து அதிகாரிகளும் மூர்த்தி பேச்சைக் கேட்கத் தொடங்கினர். மதுரை மாவட்டத்தின் அரசு நலத்திட்டங்கள் தொடங்கிவைப்பது தொடங்கி அனைத்திற்கும் மூர்த்தியின் அனுமதி முக்கியமான தாக மாறியது.

இந்த நிலையில் 2026 தேர்தல் நெருங்கு வதால், மதுரையின் மூன்று மாவட்டச் செயலாளர்களும் கட்சியின் ஆலோசனைக் கூட்டம், பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான கூட்டம், எஸ்.ஐ.ஆர். பணிகள் என்று கட்சியை வலுப்படுத்தும் வேலையில் இறங்கிய நேரத்தில் திடீரென தி.மு.க. தலைமையால் அ.தி.மு.க. சிட்டிங் எம்.எல்.ஏ. செல்லூர் ராஜுவின் மதுரை மேற்கு தொகுதியை எப்படியாவது இந்தமுறை தி.மு.க. ஜெயிக்கவேண்டும் என்று புறநகர் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான மூர்த்தியிடம் ஒப்படைக்க, கொஞ்சம் ஷாக்கானார் கோ.தளபதி.  மூர்த்தியும் உடனே களத்தில் இறங்கி மேற்கு தொகுதிக்கு உட்பட்டவர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தளபதியிடம் கலந்துகூட பேசாமல் ஏற்பாடு செய்தார். வேறுவழியில் லாமல் தளபதியின் ஆதரவாளர் கள், மூர்த்தி கூட்டத்துக்குச் செல்ல, கொஞ்சம் டென்ஷனாகி, "மதுரை மேற்கு என் எல் லைக்குள்தான் வருகிறது. என்னிடம் கலந்துகூட பேசாமல் கூட்டத்தை அறிவிக்கிறார். எப் படி கட்சிக்காரர் கள் என்னை மதிப்பார்கள்' என்று தன் ஆதரவாளர் களிடம் வருத்தப்பட்டிருக்கிறார் தளபதி. 

இது இப்படியிருக்க... அவரவர் தொகுதியைத் தக்கவைக்க தி.மு.க.வின் முக்கிய தலைகள் இறங்க, முதலில் தளபதியின் மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்தாகூர் தன் மாமனாருக்கு சீட் கேட்டு காங்கிரஸ் தலைமையிடத்தில் 

பணம் கட்டியிருக்கிறார். காங்கிரஸாரை வைத்து மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என்று போஸ்டர் ஒட்டி, அங்கு சிட்டிங் எம்.எல்.ஏ. தளபதிக்கு நெருக்கடி கொடுக்க, இதன் பின்னணியிலும் அமைச்சர் மூர்த்தியே இருப்பதாக தளபதியின் ஆதரவாளர்கள் அவரிடம் பற்றவைத்தி ருக்கிறார்கள். ஏனென்றால் ஆலாத்தூர் ரவிச்சந்திரன் மூர்த்திக்கும் நெருக்கமானவர். மூர்த்தியின் சொந்த ஊரான வெளிச்சநத்தம் கிராமத்திற்கு அருகில்தான் ஆலாத்தூர் வருகிறது. மூர்த்தியின் கிழக்கு தொகுதியைச் சேர்ந்தவர்தான் மாணிக்தாகூரின் மாமனார் ரவிச்சந்திரன் என்கிறார்கள் தளபதி ஆதரவாளர்கள். 

இந்த பிரச்சினை இப்படியிருக்க, யாதவர் சங்கத்தைச் சேர்ந்த பூமி ராஜன் நம்மிடம், “

"மூன்று முறை வென்ற அமைச்சர் மூர்த்தியின் மதுரை கிழக்கு தொகுதியில் பெரும்பாலும் யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே இருக்கிறார்கள். இருந்தும் கடந்த 15 வருடமாக மூர்த்தி எங்கள் சமூகத்திற்கு  கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது மதுரை மேயராக யாதவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கொண்டு வருவேன் என்பது. ஆனால் இதுவரை செய்யவில்லை. அடுத்து கிழக்கு தொகுதியில் அழகுமுத்துக்கோன் சிலை நிறுவப்படும் என்றார். இதுவரை நிறைவேற்றவில்லை. அதேபோன்று இந்தத் தொகுதியில் யாதவர் கல்லூரி முறைகேடுகளால் இரண்டுபட்டுக் கிடக்கிறது பலமுறை யாதவர் சங்கங்களும் கல்லூரியைச் சேர்ந்தவர்களும் அவரிடம் கேட்டுக்கொண்டும் அவர் அதை காதிலேயே வாங்கவில்லை. அந்த பிரச்சினைகளைத் தீர்க்கவோ, அதன் வளர்ச்சிக்காகவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பொதுவாக மூர்த்தி இந்த தொகுதியில் எங்கள் சமு தாயத்தை சேர்ந்தவர்களை கட்சியில் வளரவிடுவ தில்லை. இந்தமுறை அவர் மீண்டும் நிற்கும் சமயத்தில், நாங்கள் எங்களது யாதவ மக்களிடம் நேரடியாகச் சென்று அவருக்கு எதிராக திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். இது யாதவர் தொகுதி என்பதை நிரூபிப் போம்''’என்றார்.

மதுரையைப் பொறுத்த வரை தி.மு.க.வில் அழகிரிக்குப் பிறகு அமைச் சர் மூர்த்தியின் செல்வாக்கு உயர்ந்துகொண்டே போனாலும், தி.மு.க. கட்சி கட்டமைப்பைத் தாண்டி மற்ற இரு மாவட்டச் செயலாளர்களின் உரிமை உணர்வைச் சீண்டுவதால் உட்கட்சிக்குள் இருக்கும் முக்கிய தலைகள் கோபத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளனர். அதேபோன்று அவரது துறை சார்ந்து அவர் கொடுக்கும் குடைச்சலால், அதிகாரிகள் மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறார் கள். மதுரை கிழக்கு தொகுதி யில் யாதவர் சமுதாயத்தைப் புறக்கணிக்கிறார் என்ற கோபத்தில் அவர்கள் இருக்கிறார்கள். 

வெறும் வாயையே விருந்தென மென்று காட்டும் எதிர்க்கட்சிகள், மெல்லு வதற்கு அவல் இருந்தால் சும்மா விட்டுவிடுமா? இதையெல்லாம் அமைச்சர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்கிறார்கள் கட்சிக்காரர் கள்.


_____________
முடங்கிய கிட்னி திருட்டு வழக்கு!

தலைமறைவான மருத்துவர்!

madurai2

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை யத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கிட்னியை தானமாக வழங்கும் போர்வையில் விற்பனை செய்ய, பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஆனந்தன் இடைத்தரகராக செயல்பட்ட விவகாரம் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான இடைத்தரகர் ஆனந்தனை தீவிரமாக தேடிவந்தனர். கிட்னி விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் அளித்த தகவலின்படி ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடைவிதித்து சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டனர்.

இதற்கிடையில்  விசைத்தறி தொழிலாளர்களிடம் ஆசைவார்த்தை கூறி அவர்களின் கிட்னியை தானம் என்ற போர்வையில் விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஏ.ஐ.டி.யு.சி. நாமக்கல் மாவட்ட குழுவினர் புகார் மனு அளித்தனர். தொழிலாளர்கள் தங்களது கிட்னியை விற்பனை செய்ய கந்துவட்டி, மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கடன் நெருக்கடிகளே காரணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், கிட்னி திருட்டு வழக்கை விசாரித்துவந்த தென் மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா, கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வுபெற்று, ஆவடி கமிஷனராக பொறுப்பேற்றதால்,  கிட்னி திருட்டு வழக்கு விசாரணை முடங்கும் நிலையில் உள்ளதாகவும், கிட்னி திருட்டு தொடர்பாக, தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய புள்ளியிடம் போலீசார் விசாரணைகூட நடத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்டோரிடமும், தமிழகத்தைச் சேர்ந்த கும்பல் துணையுடன் கிட்னி திருட்டு நடந்திருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

இதில், டில்லியைச் சேர்ந்த டாக்டர் ரவீந்தர்பால் சிங் என்பவ ருக்கும், திருச்சி, தில்லை நகரிலுள்ள ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் ராஜரத்தினத்திற்கும் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. கிட்னியை தானமாகப் பெறுபவர்களிடம், 50 முதல் 80 லட்சம் ரூபாய் வசூல்செய்து, கிட்னியைக் கொடுத்தவர்களுக்கு, 5 முதல் 8 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளனர். இந்நிலையில் மருத்துவர் ராஜரத்தினம் தலைமறைவாகியுள்ளார்.

-துரை.மகேஷ்