அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன் “""அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலையம் செயல்படுவதில்லை. காவல்துறையினரால் நானே பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்..''’என்று குற்றம்சாட்டினார்.

wrong call

Advertisment

என்ன விவகாரம் இது?

அழகுமீனா என்பவர் மீது சென்னை, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ரூ.7 லட்சத்துக்கு செக் மோசடி வழக்கும், அழகுமீனாவின் தங்கை சந்திரகலா மீது அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ரூ.1,70,000#க்கு செக் மோசடி வழக்கும் தொடுத்துள்ள கண்ணன், ""அழகுமீனாவும், சந்திரகலாவும் எனக்குத் தெரிந்தவரையில் மதுரை, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களில் துளசிராம், காவேரி, நாகலட்சுமி, கவிதா, சதீஷ், லட்சுமணன், ராஜா, மனோன்மணி, முனீஸ்வரி, ஓதுவார் நடராஜ் ஆகியோரிடம் ரூ.70 லட்சம் வரை கடன் வாங்கி ஏமாற்றியுள்ளனர்''’என்றார்.

Advertisment

மேலும் கண்ணன், ""அழகுமீனா, சந்திரகலாவுக்கு நெருங்கிய உறவினர்களில் ஒருவர் சிறைத்துறை டி.எஸ்.பி.யாகவும், இன்னொருவர் மதுரை மாவட்ட காவல்நிலையம் ஒன்றில் சப்#இன்ஸ்பெக்டராகவும் இருக்கிறார்கள். சகோதரிகள் இருவரும் அவசரத் தேவைக்கென்று என் போன்றோரிடம் 1 சதவீத வட்டிக்கு வாங்கிய பணத்தை அந்த சப்#இன்ஸ்பெக்டரிடம் கொடுத்துவிட்டார்கள். அசலை திருப்பிக் கேட்டபோது, "உங்கள் பணம் வரிச்சியூர் செல்வம் கைக்குப் போய்விட்டது. அவர்கள் மோசமானவர்கள். உங்கள் பணம் திரும்ப கிடைக்காது'’ என்று மிரட்டலாகச் சொன்னார்கள்.

அந்த சப்#இன்ஸ்பெக்டர் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டு முறைகேடாகச் சம்பாதித்த பணத்தில், மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி அருகில் நீச்சல்குளத்துடன் ரூ.1.5 கோடி மதிப்பில் பெரிய பங்களா ஒன்றைக் கட்டியிருக்கிறார். மேலும், மதுரை விமான நிலையம் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் அருகில் ரூ.2 கோடி மதிப்பிலான நிலங்களை வாங்கியிருக்கிறார். சகோதரிகள் இருவரும் என்னிடம் வாங்கிய பணம் குறித்து அந்த சப்#இன்ஸ்பெக்டரிடம் பேசியபோது, "எனக்கு எதுவும் தெரியாது. அந்த பங்களா என் மகனுடைய வருமானத்தில் கட்டியது'’என்று நழுவிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சகோதரிகள் இருவர் மீது நான் வழக்கு தொடுத்த நிலையில், என்னுடைய மொபைல் போனுக்கு எனக்கு யாரென்றே தெரியாத நபர்களிடமிருந்து, கடந்த 60 நாட்களாக தவறான அழைப்புகள் வந்தபடியே உள்ளன. இந்த டார்ச்சரை தாங்கமுடியாமல் அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். இரண்டு மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

என்னைத் தொந்தரவு செய்யும் நூற்றுக்கணக்கான மொபைல் எண் விபரங்களைத் தந்தும், சம்பந்தப்பட்டவர்கள் யார்? அவர்களை ஏவிவிட்டது யாரென்பதை சைபர் கிரைம் காவல்துறை மூலம் கண்டறிய முற்படவில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பளரிடம், என்னுடைய புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று தகவல் கேட்டேன். அதற்கான பதிலில் ‘எதிர்மனுதாரர்களை அழைத்து விசாரித்ததில், எந்த நபருக்கும் மனுதாரரின் போன் நம்பரைக் கொடுத்து மிரட்டச் சொல்லவில்லை என்று கூறியுள்ளனர். மனுதாரர் (கண்ணன்) கொடுத்த அத்தனை தொலைபேசி அழைப்புகளின் உள்-வெளி அழைப்புகளின் முழுவிபரம் தெரிந்த பின்னரே நடவடிக்கை எடுக்க இயலும். அதனால், மனு ரசீது நிலுவையில் இருந்து வருகிறது’என்றும் தெரிவித்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மிரட்டுகிறார்கள். உயிர் பயத்தில் வாழ்கிறேன். வழக்கறிஞரான எனக்கே இந்த நிலை என்றால், சாமானியர்களின் புகார்களுக்கு காவல்துறை மூலம் என்ன தீர்வு கிடைத்துவிடும்?''’என்று நொந்துபோய் கேட்டார் கண்ணன்.

நாம் தொடர்ந்து தொடர்புகொண்டும் அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் நமது லைனுக்கு வராத நிலையில், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சகோதரிகள் அழகுமீனா மற்றும் சந்திரகலா ஆகியோரிடம் பேசினோம்.

""கண்ணனிடம் நாங்கள் கடன் வாங்கவில்லை. அவருடைய அம்மா நவநீதத்திடம் இரண்டு வட்டிக்கு மருத்துவச் செலவுக்காகக் கடன் வாங்கினோம். காவல்துறையில் பணிபுரியும் எங்களின் உறவினர்களை தேவையில்லாமல் இந்த விவகாரத்தில் இழுக்கிறார்கள். நாங்கள் வாங்கிய கடனுக்கு வீட்டை எழுதி வாங்க முயற்சித்தார்கள். நாங்கள் யாரையும் மிரட்டவில்லை. "மகன் மீது கஞ்சா கேஸ் போடவைப்பேன். மகளை விபச்சார வழக்கில் சிக்க வைத்துவிடுவேன்' என்று அச்சுறுத்தினார் கண்ணன். செக் புக்கை மிரட்டி வாங்கினார். கடன் வாங்கியவர்களிடம் இதுபோல் நடந்துகொள்வதால், "கண்ணனுக்கு நிறைய எதிரிகள் இருக்கிறார்கள்' என்று கூறியபோது...

""அப்படியென்றால் கண்ணன் மீது காவல்துறையில் புகார் அளித்திருக்க வேண்டியதுதானே?''’என்று இடைமறித்தோம். “

""வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்ற நினைப்பு மட்டுமே இருந்ததால், புகார் எதுவும் அளிக்கவில்லை. அதுதான் நாங்கள் செய்த பெரிய தப்பு. நாங்களும் உயிர் பயத்துடனே வாழ்கிறோம்''’என்றனர்.

மிரட்டப்படுவதாகவும் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் இருதரப்பினருமே நடுங்கும் இந்த விவகாரத்தில், காவல்துறை விரைவாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.