"ஹலோ தலைவரே, உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பு சகல மட்டத்திலும் ஆரம்பிச்சிடுச்சி.''’

""ஆமாம்பா, தேர்தல் தொடர்பா அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியிருக்கே?''’

ee

""உண்மைதாங்க தலைவரே, கடந்த 28-ந் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது மாநில தேர்தல் ஆணையம். உள்ளாட்சித் தேர்தலை மூன்று கட்டமாக நடத்தினால், கொஞ்சம் ரிலாக்ஸாக களத்தில் விளையாடலாம்ங்கிற எண்ணத்தில், ஆளும்கட்சித் தரப்பு அதையே வலியுறுத்திச்சி. தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோ ஒரே கட்டத் தேர்தலா நடத்துவதுதான் நல்லதுன்னு சொன்னதோட, மேயர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும் முடிவைக் கைவிட்டு, நேரடித் தேர்தலையே நடத்தணும் என்றும், கிராமப் புறங்களில் நடத்தும் தேர்தலிலும் வாக்குச் சீட்டு முறை இல்லாமல் முழுமையாக அனைத்து நிலையிலும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தின் மூலமே உள்ளாட்சித் தேர்தலை நடத்தணும்னு வலியுறுத்தியிருக்காங்க..''’

Advertisment

""டிசம்பர் 2 ந் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படும்ன்னு தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் சொன்னதே?''’

""ஆமாங்க தலைவரே, இதே எண்ணத்தில்தான் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் இருந்தாங்க. ஆனால், டிசம்பர் 13 வரை உச்சநீதிமன்றம் தங்களுக்கு அவ காசம் கொடுத்திருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிச்சிருக்காங்க. இந்த நிலையில் பொங்கலுக்கு ஒன்றரை மாதம் இருக்கும் நிலையிலேயே, ரேசனில் அரிசி வாங்கும் கார்டு தாரர்களுக்குத் தலா ரூ 1000 பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை அறிவிச்சிட்டாரு எடப்பாடி. பச்சரிசி, வெல்லம், முந்திரி உள் ளிட்ட பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் என்பது மக்களை நிச்சயம் அட்ராக்ட் பண்ணும்ங்கிறது ஆளுங் கட்சிக்குத் தெரியும்.''

""தேர்தல் விதிகள் நடை முறைக்கு வருவதற்கு முன்னாடி பொங்கல் பரிசுத் தொகை பட்டுவாடா ஆயிடுமா?''

Advertisment

""தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே, இதைத் தொடங்கியதால் ஆணையத்தின் கெடுபிடி இல்லாமல் வாக்காளர்களுக்கு இந்த அன்பளிப்பை விநியோகிச்சிடலாம்ங்கிற தெம்பில் இருக்குது எடப்பாடித் தரப்பு. இரண்டு கட்டமா தேர்தல் நடத்தினாலும், எத்தனை கட்டமா தேர்தல் நடத்தினாலும் சிட்டியிலிருந்து பட்டிதொட்டி வரை எல்லா ஏரியாவிலும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு மேஜிக் அ.தி.மு.க.வை அமோகமா ஜெயிக்க வச்சிடும்னு எடப்பாடி நம்புறதால, உள்ளாட் சித் தேர்தலுக்கு ரெடியாயிட்டாரு. அதே நேரத்தில் வார்டு வரையறை குறித்து ஒரு வழக்கை கடந்த 28-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. தாக்கல் பண்ணியிருக்கு.''’

""ஓ...''’

""உள்ளாட்சித் தேர்தல் முடிந்த சூடு ஆறுவதற்குள் 2020 மார்ச், ஏப்ரல் வாக்கில் சட்டமன்றப் பொதுத் தேர்தலையும் நடத்திவிடலாமா என்ற ஆலோசனையில் இருக்கார் எடப்பாடி. காரணம், ஒருவேளை ரஜினி அரசியல் கட்சியைத் தொடங்கி, அவர் கட்சியை வலுவாக்கி, கமலுடன் கைகோத்துத் தேர்தலுக்கு ரெடியாகும் வரை எதுக்கு அவ காசம் கொடுக்கணும்? அதுக்கு முன்னாடியே தேர்தலை நடத்தினால் தி.மு.க. என்கிற ஒரு பொது எதிரியை மட்டுமே சந்திச்சா போதும். அதற்கேற்ப தயாராவோம்ங்கிறது எடப்பாடி கணக்கு.''

rr

""அதற்கு உள்ளாட்சித் தேர்தலில் சொந்தக் கட்சிக்காரங்களை தாராளமா கவனிக்கணுமே?''

""உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டம் தோறும் உள்ள மந்திரி கள், மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க் கள்ன்னு உள்ளாட்சி சீட்டுக்களை இப்பவே பிரிச்சிக் கேட்கறாங்க. கட்சியில் தொண்டர்களின் ஆதரவு அதிகமா இருந்தபோதும் ஓ.பி.எஸ். தரப்புக்கு உரிய சீட்டு கிடைக்கு மாங்கிற கேள்வி எழுந்திருக்கு. அது தொடர்பான ஆதங்கம் ஓ.பி.எஸ். தரப்புக்கும் இருக்குதாம். தனக்கு சாதகமா இருக்கக்கூடிய மந்திரிகள், மா.செ.க்கள் உள்ளிட்டோரிடம் சீட் விஷயத்தில் எடப்பாடி தாராள மாவே நடந்துக்குவாராம். இதுக் கிடையில் கூட்டணிக்கட்சிகள் ஒவ்வொன்னும் பெரிய எதிர்பார்ப்புகளோட இருக்குதாம். அதை எப்படி சமாளிப்பதுன்னு எடப்பாடி தரப்பில் ஆலோசனை நடக்குதாம்.''

""விஜயகாந்த்தின் தே.மு.தி.க சீட்ஷேரிங் குறித்து. புதிய கணக்குகளைப் போட்டுக்கிட்டு இருக்குதாமே?''’

""அண்மையில் தங்கள் கட்சியைச் சேர்ந்த மா.செ.க்களையும் முக்கிய பிரமுகர்களையும் அழைத்து விஜயகாந்த்தும் பிரேமலதாவும் ஆலோசிச்சாங்க. அப்ப, விருப்ப மனுக்கள் கொடுத்தவர்களையும் அழைத்து நேர்காணல் நடத்தினாங்க. சீட்டு கேட்பவர்களில் தமிழகம் முழுக்க மாவட்ட வாரியா பண பலம் உள்ளவர்கள் யார் யார்ன்னு ஒரு பட்டியல் போடப்பட்டிருக்கு. அதன் மூலம் வலுவான வேட்பாளர்களை தேர்வு செய்துகொண்டு பட்டியல் ஒன்றை தயார் செய்துவருகிறது தே.மு.தி.க. அந்தப் பட்டியலில் உள்ள நபர்களுக்கு மட்டும் அ.தி.மு.க. தலைமை சீட்டு ஒதுக்கினால் போதும் என்று கேட்க இருக்குதாம். அதாவது தங்கள் கட்சியில் வசதியான நபர்களுக்கு, அவர்கள் இருக்கும் பகுதியில் சீட் வேண்டும் என்பது தே.மு.தி.க.வின் டிமாண்டாக இருக்குமாம். அதே சமயம் அ.தி.மு.க. தலைமையோ, உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க.வைத் தூக்கிச் சுமக்க வேண்டுமாங்கிற சிந்தனையில் இருக்குதாம். பாம.க.வோ 25 சதவீத சீட்வேண்டும் என்று முன்பே அ.தி.மு.க. தலைமையிடம் பேசிவிட்டது. அதனால் வடமாவட்டங்களில் அதிக சீட்டுக்களை அது அ.தி.மு.க.விடம் எதிர்பார்க்கிறது. பா.ஜ.க. தரப்பிலிருந்து பல வகையிலும் அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் வருது. எடப்பாடியும் அவர் சகாக்களும் கூட்டணிக் கட்சிகளுக்கு எப்படியெல்லாம் அல்வா கொடுக்கலாம்ங்கிற மனநிலையில் இருக்காங்க.''’

rr

""உள்ளாட்சித் தேர்தல் தொடர்பா காங்கிரஸ் பக்கம் விறுவிறுப்பு தெரியுதே?''’

""உண்மைதாங்க தலைவரே, உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கட்சியை ரீஃப்ரெஷ் செய்யும் விதமாக புதிய மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியல் ஒன்றைத் தயார் செய்து கொண்டு, டெல்லிக்குப் போயிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரான கே.எஸ்.அழகிரி. இப்போது இருக்கும் நிர்வாகிகளில் பெரும் பாலானோர் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் என்பதால் அவர்களை வைத்துக்கொண்டு தேர்தல் வேலைபார்ப்பது சிரமம் என்பது கே.எஸ். அழகிரியின் வாதம். இதையறிந்த திருநாவுக் கரசரோ, தேர்தல் நேரத்தில் நிர்வாகிகளை மாற்றினால், தேர்தல் பணிகள் பாதிக்கப்படும். அதனால் அழகிரியின் புதிய பட்டியலை ஏற்கவேண்டாம் என கட்சித் தலைமைக்கு பலரின் மூலமும் நிர்பந்தங்கள் கொடுத்து வருகிறார்.''

""ம்...''…

""இதற்கிடையே, சென்னை ஏர்போர்ட்டில் இண்டிகோ ஏர்லைன்ஸில் வேலைபார்க்கும் கவுஸ் என்பவர், அழகிரி தரப்புக்கு டிக்கெட் புக்கிங் விவகாரங்களில் உதவி செய்து வருவதால், அவருக்கு மனமுவந்து கட்சியின் ‘புரோட்டோகால் செகரட்டரி’ என்ற பதவியை அழகிரி உருவாக்கிக் கொடுக்க, இதற்கும் கட்சிக்குள் எதிர்ப்புச் சூறாவளி பலமாக எழுந்திருக்கிறது.''’

""உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில், தி.மு.க.வுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் ஓ.எம்.ஜி. குழுவின் தலைவர் சுனில் ராஜினாமா செய்திருக்கிறாரே?''’

rr

""ஆமாங்க தலைவரே, கலைஞர் இருக்கும் போதே மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து, அவரது இமேஜை உயர்த்தியதில் ஓ.எம்.ஜி. குரூப்பிற்கு பெரும்பங்கு உண்டு. இந்த ஓ.எம்.ஜி. குரூப்தான் ’நமக்கு நாமே’ பயணத் திட்டத்தை ஸ்டாலினுக்கு வகுத்துக் கொடுத்து, தமிழகமே அவரைத் திரும்பிப் பார்க்கும்படி செய்தது. 2016 தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியானதிலும் பங்கு உண்டு. அதேபோல் தமிழகத்தில் இருக்கும் 12,600 பஞ்சாயத்துகளிலும், தி.மு.க.வைக் கூட்டம் நடத்தச் செய்து, கட்சிக்குக் கீழ்மட்டம் வரை புதுரத்தம் பாய்ச்சச் செய்த ஓ.எம்.ஜி. ஐடியாவால, நாடாளுமன்றத் தேர்த லிலும் தி.மு.க. தன் பலமான வெற்றியை உயர்த்திப் பிடித்தது. எனினும் தி.மு.க.வின் இடைத்தேர்தல் தோல்வி, ஓ.எம்.ஜி. மீதான பிரமிப்பைக் குறைத்தது. அதோடு, ஒரு கோடி தொண்டர்கள் கொண்ட கட்சிக்கு ஒரு சில தனி நபர்களோ ஒரு குழுவோ ஆலோசனை சொல்வது முழுப் பலனைத் தராத, கட்சியின் ரகசியங்களை காப்பதும் பெரும் பாடாயிடும்னு துரைமுருகன் போன்ற சீனியர்களும் சொல்லிக்கிட்டிருந்தாங்க. இந்த நிலையில் சுனில் ராஜினாமா செய்தது புருவத்தை உயர வைத்தது. சுனிலோ, நான் சொன்னதற்கெல்லாம் உரிய முக்கியத்துவம் கொடுத்தார்கள். அது வெற்றி பெற்றது. இப்போது நான் என் சொந்த காரணங்களால்தான் ராஜினாமா செய்திருக் கிறேன்னு சொல்றாராம். பிரபல அரசியல் வியூகரான பிரசாந்த் கிஷோர் தி.மு.க. பக்கம் ஆலோசகரா வரக்கூடும்ங்கிற எதிர்பார்ப்பு பலமா இருக்குது.''’

""உளவுத்துறை ஐ.ஜி.சத்தியமூர்த்தி விரைவில் ஓய்வு பெறப்போகிறாராமே?''’

""ஆமாங்க தலைவரே, அடுத்த வருட தொடக்கத்திலேயே உளவுத்துறை ஐ.ஜி.சத்திய மூர்த்தியின் பதவிக்காலம் முடியுது. அடுத்ததா அந்த இடத்துக்கு வரப்போவது யார் என்கிற கேள்வி பெருசா எழுந்திருக்கு. ஐ.ஜி. சத்திய மூர்த்தியே, தான் இருக்கும் இடத்துக்கு ஐ.பி.எஸ். அதிகாரியான டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் பொருத்தமா இருப்பார்ன்னு பரிந்துரை செய்திருக்கிறாராம். ஏற்கனவே அவர் இந்தப் பொறுப்பில் இருந்தவர்தான். அதனால், முதல்வர் எடப்பாடி அவரை உளவுத் துறைக்கு கொண்டுவரும் முயற்சியில் இருக்கார். ஆனால் இதற்கு அ.தி.மு.க. தரப்பி லிருந்தே எதிர்ப்புக்குரல் பல மாக ஒலிக்குது. டேவிட்சன், தி.மு.க. பிரமுகர்களுக்கு நெருக்கமானவர். கூவத்தூரில் நாம் இருந்தபோது, டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் மூலம் ரெய்டு பண்ணச் செய்தவரே, இந்த டேவிட்சன்தான். அப்படிப்பட்டவரையா உளவுத்துறைக்குக் கொண்டு வருவதுன்னு கேட்குறாங்க. உளவுத் துறை அதிகாரி நியமன விவகாரத்தில் குழப்பத் தோடு தட்டாமாலை சுற்றிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி.''’

""மன்னார்குடிக் குடும்ப வகையறாவில், தினகரன் குடும்பத்துக்குள்ளே புகைச்சல்னு தகவல் வருதே?''’

""உண்மைதாங்க தலைவரே, போனமுறை நாம் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்துக்கும், ஜெ.ஜெ. டி.வி.பாஸ்கரன் மகள் ஜெயஸ்ரீக்கும் நடந்த திருமண நிச்சயதார்த்த விழா பற்றிப் பேசிக்கிட்டோமே. அந்த விழாவின் பின்னணியில்தான் களேபரங்கள் நடந்திருக்கு.. பாஸ்கரனின் மகளான ஜெயஸ்ரீயை சின்ன வயதில் இருந்தே வளர்த்தவர் ஜெயலலிதா தானாம். அதேபோல் சர்ச்பார்க் கான்வெட்டில் அவரே போய் ஜெயஸ்ரீயை சேர்த்தாராம். சசிகலாவுக்கும் இவர் செல்லமாம். இப்படி கார்டனில் செல்வாக்காக வளர்க்கப்பட்டவர் ஜெயஸ்ரீ என்பதால் தினகரனுக்கு அழைப்பு இல்லாதபோதும் அவர் மைத்துனரான டாக்டர் வெங்கடேஷ், அந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாராம். இதனால் தினகரன் குடும்பத்துக்குள்ளேயே இப்போது புகைச்சலாம்.''’

""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவரான டி.ஆர்.பாலுவுக்கு, இந்தமுறை டெல்லி பந்த் சாலையில் அரசாங்க வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. பாலுவோ, வாஸ்துப்படி இந்த வீடு எனக்கு சரியில்லை என்கிறார். அதோட, எனக்கு வசதியாகவும் இல்லை. அதனால், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எனக்கு ஒதுக்கப்பட்ட ரெய்சீனா சாலை இல்லத்தையே ஒதுக்குங்க. அதுதான் ராசின்னு கேட்டிருக்காரு. இது தொடர்பாக நாடாளு மன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவிடமும் வலியுறுத்தினார். டி.ஆர்.பாலு கேட்ட ராசியான வீடே அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.''