""ஹலோ தலைவரே, முதல்வர் எடப்பாடி வெளிநாடு போயிட்டு வந்த பிறகு பல்வேறு குழப்பத்தில் இருக்காராம்.''’
""நாடே குழப்பத்துலதாம்ப்பா இருக்கு. வெளிநாட்டில் இருந்து அவர் திரும்பி வந்ததும் அமைச்சரவையில் மாற்றம் நடக்கும்ன்னு சொல்லப்பட்டதே?''’
""தலைவரே, லண்டன், அமெரிக்கா, துபாய்ன்னு எடப்பாடி வெளிநாட்டுப் பயணம் கிளம்பினப்ப, "நான் திரும்பி வந்ததும் சரியா செயல்படாத அமைச்சர்கள் சிலருக்கு கல்தா கொடுக்கப்போறேன்'னு சொல்லிட்டுத்தான் போனாராம். அதனால் அமைச்சர்கள் பலருக்கும் பதட்டம் இருந்தது. அதேபோல் அவர் ஃபாரின் டிரிப்பை முடிச்சிட்டு வந்ததும், துணை முதல்வ ரான ஓ.பி.எஸ். உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சிலரிடம் இது குறித்து ஆலோசனை பண்ணியிருக் கார். அப்ப பெஞ்சமின், ராஜலட்சுமி உள்ளிட்ட நால்வரை அமைச்சரவையில் இருந்து தூக்கிட்டு, அவங்களுக்குப் பதிலா மாஜி மந்திரி தோப்பு வெங்கடாசலம், அப்புறம் குமரகுரு, ராஜன் செல்லப்பா, சதன் பிரபாகரன், மாஜி மந்திரி சண்முகநாதன், முருகு மாறன் ஆகியோரில் நால்வரை அமைச்சராக்கும் தன் விருப்பத்தையும் கோடிட்டுக் காட்டியிருக்கார். ஆனால் இந்த நேரத்தில் உளவுத்துறை இது தொடர்பாகக் கொடுத்த ஒரு ரிப்போர்ட் அவர் மனசை அப்படியே மாத்தியிருக்கு''’
""உளவுத்துறை ரிப்போர்ட்டில் என்ன சொல்லப்பட்டிருந்தது?''’
""ஏற்கனவே மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டிருக்கு. அதிலிருந்து, இவர் தி.மு.க.வோடு நல்ல தொடர்பில் இருக்கார். இப்ப மேலும் நால்வரை அமைச்சரவையில் இருந்து நீக்கினால் அவர்களும் மேலும் சிலரும் தி.மு.க.வில் ஐக்கியமாகி, ஆட்சிக்கு ஆபத்தை உருவாக்கலாம்ன்னு அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கு. இதைப் பார்த்து ஷாக்கான எடப்பாடி, அமைச்சரவை மாற்றத்தை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்ன்னு சொல்லிட்டாராம். அதேபோல் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி அவர் கட்சியின் பொதுக் குழுவைக் கூட்ட வேண்டிய நிர்பந்தத்திலும் இருக்கார்.''’
""பொதுக்குழுவை எடப்பாடி எப்ப கூட்டப்போறாராம்?''
""அதிலும் சிக்கல் வருமோன்னு குழம்பறார் எடப்பாடி. அவரைப் பொறுத்தவரை அ.தி.மு.க.வுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது அவ ருடைய எண்ணம். அந்த ஒற்றைத் தலை மையும் தானாகத்தான் இருக்கவேண்டும் என்பதும் அவருடைய ஆசை. அதா வது கட்சியின் ஒட்டுமொத்த கடிவாள மும் தன் கையில்தான் இருக்கணும்னு அவர் நினைக்கிறார். ஆனால் இப்ப இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் ஓ.பி.எஸ்.சின் தீவிர ஆதரவாளர் களா இருக்காங்களாம். பொதுக்குழு உறுப்பினர் களை உடனடியாக மாற்றவும் முடியாது. அது சட்டச் சிக்கலை ஏற்படுத்தும். அதனால் ஓ.பி. எஸ்.சின் விசுவாசிகளாக இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்களை முதலில் தன் பக்கம் இழுத்துக் கிட்டு, அதன்பிறகு பொதுக்குழுவைக் கூட்டி கட்சி யின் தலைமைப் பதவியைக் கைப்பற்றலாமான்னு இப்ப எடப்பாடி யோசிக்கிறாராம். இப்படிப்பட்ட குழப்பங்கள்தான் அவரை முற்றுகை இட்டுக்கிட்டு இருக்கு.''’
""இவ்வளவுக்கிடையிலும் சசிகலா தரப்பிடம் நம்பிக்கையானவராத்தானே எடப்பாடி இருக்காரு. சசிகலா வட்டாரம் எப்படி இருக்கு?''’
""கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலாவும் பலத்த அப்செட்டில் இருக்காராம். அவர் அங்க யாரோடவும் அதிகம் பேசுறதில்லையாம். காரணம், தான் சிறையில் இருக்கும் போதும் தன் சொந்த பந்தங்கள் அது பற்றிக் கொஞ்சமும் கவலைப்படா மல் தங்கள் வேலைகளைப் பார்ப்பது அவரை நோகடிச்சிருக்கு. இதனால் தன் சொந்தபந்தங்கள் மீது இருந்த அவருடைய நம்பிக்கையும் சுத்தமா போயிடுச்சாம். இதற்கிடையே தினகரன் நடவடிக் கையால் அ.ம.மு.க.வில் இருக்கும் பெரும்புள்ளிகள் ஒவ்வொருத்தரா வெளியேறுவதும் அவரை திகிலடைய வச்சிருக்கு. அதனால்தான் தினகரன், தன்னை விமர்சிச்ச பெங்களூரு புகழேந்தியைக் கட்சியை விட்டு நீக்கணும்னு சொன்னப்ப, அதற்கு சசிகலா ஒத்துக்கலை. என்னை அடிக்கடி வந்து பார்த்து வெளியில் நடக்குற கூத்தையெல்லாம் அப்படியே மறைக்காம புகழேந்தி ஒருத்தர்தான் என்கிட்ட சொல்றார். அவரையும் விரட்டப் பார்க்கிறியான்னு தினகரனிடம் ரொம்பவே சசி கோபப்பட்டாராம். அந்த தெம்பில்தான் புகழேந்தி யும் "அ.ம.மு.க. கட்சியை ஆரம்பிச்சதே நான்தான். என்னை நீக்க முடியாது'ன்னு சொல்லியிருக்காரு.''’’
""சசிகலாவை, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா சந்திச்சிருக்காரே?''
""ஆமாங்க தலைவரே, ஆனால் சந்திரலேகா தன்னைப் பார்க்க வந்தப்பவும் அவரிடம் சசிகலா சரியா முகம் கொடுத்துப் பேசலையாம். அதுக்குக் காரணம் ஒன்னும் இருக்கு. ஜெ., தன் அண்ணன் ஜெயராமன் குடும்பத்தை வெறுக்கக் காரணம், அவங்க சுப்பிரமணிய சாமியோடும் மறைந்த காஞ்சிமட ஜெயேந்திரரோடும் வச்சிருந்த நெருக்க மான தொடர்புதானாம். அந்த வெறுப்பு சசி கலாவுக்கும் இருந்ததால்தான், சந்திரலேகாவிடம் அவர் சகஜமாக நடந்துக்கலைன்னு அவரை அறிந்தவர்கள் சொல்றாங்க. இந்த நிலையில் தினகரனை ஓரம் கட்டினால்தான் கட்சியைச் சரி பண்ண முடியும்ன்னு திவாகரன் ஒரு பக்கம் கலகக்குரல் எழுப்பறார். அண்மையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் திவாகரனும் ஓ.பி.எஸ்.சின் மைத்துனர் காசியும் சந்திச்சி ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாங்களாம். இந்தப் பின்னணியில்தான் தினகரனுக்கு எதிரா திவாகரனின் போர்க்கொடி உயர்ந்திருக்காம்.''’
""கோட்டையில் ஓ.பி.எஸ். அலுவலக அறையைச் சுற்றி பரபரப்புச் சூறாவளி தெரியுதே?''’
""உண்மைதாங்க தலைவரே, ஓ.பி.எஸ்.சின் பி.ஏ.க்களில் ஒருவரான அருணகிரி, இஷ்டத்துக்கும் கை நீட்டறாராம். குறிப்பா வீட்டு வசதித் துறை, வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், சி.எம்.டி.ஏ., ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் போன்றவற்றில் ஓ.பி.எஸ்.சுக்குத் தெரியாமலே ஏகத்துக்கும் கரன்ஸி மழையில் குளிக்கறாராம். இது பற்றி உளவுத்துறை, முதல்வர் எடப்பாடிக்கு நோட் போட்டிருக்குதாம்.''’
""எடப்பாடி அலுவலகத்திலும் பரபரப்பு தெரியுதேப்பா?''’
""ஆமாங்க தலைவரே, முதல்வர் எடப்பாடி யின் கண்ட்ரோலில் இருக்கும் நெடுஞ்சாலைத் துறை சென்னையில் 9 பாலங்களைக் கட்டப் போகுது. இதற்கான திட்ட வரைவைத் தயாரிக் கவே 2 கோடியே 35 லட்ச ரூபாயை ஒதுக்குது எடப்பாடி அரசு. இந்த பாலங்களைக் கட்டும் காண்ட்ராக்ட்டைப் பெற நிறைய கட்டுமான நிறுவனங்கள் வரிசைகட்டி நிற்குது. ஆனால் இந்த காண்ட்ராக்ட் வேலைகளை மீண்டும் செய்யாத் துரைகிட்டயே ஒப்படைப்பதற்கான ஆயத்த காரி யங்கள் இப்ப கோட்டையில் வேகமெடுக்க ஆரம்பிச்சிருக்கு. இந்த செய்யாத்துரைதான் முதல்வர் எடப்பாடியின் பினாமி என்ற புகாரோடு வருமான வரித்துறையால் சில மாதங்களுக்கு முன், அதிரடி ரெய்டுக்குள்ளாகி, கணக்கில் காட்டப்படாத 3,500 கோடி ரூபாய் விவகாரத்தில் சிக்கியவர்.''’
""தி.மு.க. எம்.பி. கனிமொழி, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேயைச் சந்திச்சிருக்காரே?''’
""இலங்கையின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்லத் திருமணவிழா 14-ந் தேதி அங்குள்ள கொழும்பில் நடந்துச்சு. இதில் கலந்துக்குறதுக்காக கனிமொழி எம்.பி., த.ம.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பலரும், இலங்கைக்குப் போயி ருந்தாங்க. அங்கபோன கனிமொழியும் ஜவாஹி ருல்லாவும் இலங்கைப் பிரதமர் ரணிலைச் சந்திச் சிப் பேசினாங்க. அப்ப கனிமொழி, ஈழத் தமிழர் களின் வாழ்வாதாரம், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பற்றியெல்லாம் விவாதித்ததோடு, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், முடங்கியே இருப்பதைச் சுட்டிக்காட்டி, தமிழ்ச் சமூகத்துக்கு உரிய நீதி கிடைக்கணும்ன்னு வலி யுறுத்தியிருக்கார். ரணிலோ இது குறித்து இலங்கை அதிபரிடம் பேசுவதாகச் சொல்லியிருக்கிறாராம். ஜவாஹிருல்லாவும் இது தொடர்பான கோரிக்கை மனுவை ரணிலிடம் கொடுத்திருக்கிறார்.''’
""வன்னியர் சமூக தலைவர் ராமசாமி படையாச்சியார் பிறந்தநாள் விழாவை மையமா வைத்தும் சர்ச்சைகள் கிளம்புதே?''’
""ஆமாங்க தலைவரே, ராமசாமி படையாச்சியா ரின் பிறந்த நாள் செப்டம்பர் 16-ந் தேதி அரசு விழாவா கொண்டாடப்படுது. இந்த ஆண்டு முதல் வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும் சென்னையில் இருந்தும் கூட படையாச்சியார் சிலைக்கு மரியாதை செய்ய வராதது அந்த சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை உருவாக்கியிருக்கு. அதே போல் எந்தக் காலத்திலும் படை யாச்சியார் பிறந்த நாளில் அவர் சிலைக்கு மாலை அணிவிக்காதவரான பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்த ஆண்டு கிண்டியில் இருக்கும் சிலைக்கு மாலையணிவிச்சி மரியாதை செலுத்தி, பலரையும் புருவம் உயர்த்த வச்சிருக்கார். இதுபற்றி விசாரிச்சப்ப, கடந்த ரெண்டு வாரமா சமூக ஊடகங்கள்ல வன்னியர் அமைப்புகள் சில, ராமதாஸ் பற்றிய விமர்சனங்களைப் பரப்பி வந்திருக்கு. குறிப்பா அவர் வன்னிய மக்களையும் அந்த சமூகத்தைச் சேர்ந்த தலைவர் களைப் புறக்கணிக்கிறார், வன்னியர் அறக்கட்டளைச் சொத்துக்களில் கவனம் செலுத்துறாருன்னு விதவிதமா புகார்களை எழுப்பியிருக்காங்க. இதைப் பார்த்து திகைத்துப்போன ராமதாஸ், வன்னிய சமூக மக்களின் மனதைக் கவர படையாச்சியாருக்கு மரியாதை செய்திருக்காருன்னு சொல்றாங்க.''’
""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். சென் னையில் ரியல் எஸ்டேட் தொழிலில் சிலர் அடாவடி தர்பாரை நடத்த ஆரம்பிச்சிருப்பது காவல்துறைக்குத் தலைவலியை ஏற்படுத்தியிருக்கு. குறிப்பா ஒரு சமூகத்தின் பிரமுகர்களா தங்களை அடையாளப்படுத்திக்கிட்ட ராக்கெட் ராஜா, சுபாஷ் பண்ணையார் போன்றோரை இந்தப் பட்டியலில் சொல்றாங்க. அண்மையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் 3 கிரவுண்ட் இடத்தை, தி.நகர் எம்.எல்.ஏ. சத்யாவின் உதவியாளரான அர்ஜுன், போலி டாகுமெண்ட் மூலம் விற்றாராம். இது தொடர்பாக சுபாஷ் பண்ணையார், எம்.எல்.ஏ. சத்யாவை சந்திச்சிக் கேட்டிருக்கார். அப்ப வாக்குவாதம் முற்றி இருவருக்கும் கைகலப்பு நடந்ததா சொல்லப்படுது. போலீஸ் தரப்போ, சுபாஷ் பண்ணையாரும், ராக்கெட் ராஜாவும், அமைச்சர் மாஃபா.பாண்டியராஜனை பாஸுன்னு சொல்லிக்கிட்டி ருப்பதால், என்ன பண்றதுன்னு தெரியாம தவிக்கிறோம்ன்னு சொல்லுது.''’
_______
இறுதிச்சுற்று!
பேனர் வழக்கில் நடவடிக்கை இல்லை!
சுபஸ்ரீயைக் கொன்ற, அனுமதியில்லாத பேனர் விவகாரத்தில் திங்கள் இரவு வரை யாரும் கைது செய்யப்படவில்லை. திருமண விழாவை நடத்திய அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால், இரண்டு நாட்கள் காமாட்சி மருத்துவமனையில் அட்மிட்டாகியிருந்து, ஞாயிறு இரவில் டிஸ்சார்ஜ் ஆகி, தலைமறைவாகிவிட்டார். திருமணம் நடந்த மண்டபத்திற்கு வரும் பேனர் காண்ட்ராக்டுகளை மேடவாக்கம் மணி என்பவர்தான் எடுத்துச் செய்வது வழக்கம். பேனரை பிரிண்ட் செய்த நிறுவனத்திற்கு சீல் வைத்த பிறகு போலீஸ் நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. சுபஸ்ரீ பலியான நிலையில், எவ்வித பதற்றமுமின்றி திருமண விழாவில் கலந்து கொண்டார் துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆளுந்தரப்பிலிருந்து யாரும் சுபஸ்ரீ குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை.
-அரவிந்த்