"ஹலோ தலை வரே, பிரதமர் மோடிக்கு அண்மைக் காலமா தமிழ்மீது பற்றும் பாசமும் எக்குத்தப்பா எகிறிப்போயிருக்குதே.''
""ஆமாம்பா, ஐ.நா. சபையிலேயே "யாதும் ஊரே யாவரும் கேளிர்'னு தமிழ்க் கவிதையை உரத்து முழங்கி உணர்ச்சி வசப் பட்டு இருக்காரே?''’
""தலைவரே, கடந்த 21-ந் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்காவுக்குப் போன பிரதமர் மோடி, 27-ந் தேதி நியூயார்க்கில் நடந்த ஐ.நா.சபையின் 74-ஆவது கூட்டத்தில் கலந்துக் கிட்டுப் பேசினார். அப்ப அவர், உலக அமைதிக்காக சுவாமி விவேகானந்தர் சொன்ன போதனைகளை இந்தியா கடைப்பிடித்து வருகிறது. அதேபோல் இந்தியா எப்போதும் சுயநலமாக சிந்திப்ப தில்லை. ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ப்புலவர் கணியன் பூங்குன்றனார் பாடியிருக்கிறார். எனவே உலகத்தை ஒரே குடும்ப மாகப் பார்ப்பதுதான் பாரதத்தின் பண்பாடுன்னு, சங்கத் தமிழை உயர்த்திப் பிடிச்சிருக்கார். அதேபோல் 30-ந் தேதி ஐ.ஐ.டி.யின் 56-ஆவது பட்டமளிப்பு விழாவுக்காக சென்னை வந்த போதும் அவருடைய தமிழ்க்காதல் புல்லரிக்கும் அளவுக்கு அதிகமாவே இருந்துச்சு.''’
""அதையும் கவனிச்சேம்பா? சென்னை ஏர்போர்ட்லயே ஆரம்பிச்சிட்டாரே?''’
""ஆமாங்க தலைவரே, ஐ.ஐ.டி. விழாவுக்காக சென்னை வந்த பிரதமர் மோடியை கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப் பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வரவேற்றார்கள். பா.ஜ.க.வினரும் பெரும் திரளா மோடியை வரவேற்க வந்திருந்தாங்க. அவர்கள் மத்தியில் பேசிய மோடி, நான் அமெரிக்காவில் தமிழின் தொன்மை பற்றி பேசினேன். அதன் பிறகு, அங்கிருக்கும் நாளேடுகள் தமிழின் சிறப்பைப் பற்றி பல்வேறு செய்திகளை வெளியிட்டு என்னை வியப்பில் ஆழ்த்தினன்னு சொன் னார். அதேபோல் ஐ.ஐ.டி. விழாவில் மாணவர்களுக்கு மத்தியில் மைக் பிடிச்ச போதும் மோடி, தமிழகத்தின் விருந்தோம்பல் பண்பாடு சிறப்பு வாய்ந்தது. எனக்கும்கூட தமிழகத்து உணவில் இட்லி, தோசை, வடை, சாம்பார் ரொம்பவும் பிடிக்கும்ன்னு தமிழகத்தை, ஜாக்கி எதுவும் இல்லாமலே தூக்குத் தூக்குன்னு தூக்கினார்.''’
""ஒரு பக்கம் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இந்தித் திணிப்பிலும் சமஸ்கிருதப் பரப்பலிலும் தீவிரம் காட்டிவரும் நிலையில், பிரதமர் மோடி திடீர்னு தமிழைக் கொண்டாடுவதற்கு என்ன ரீசனாம்?''’
""மோடியையும் அமித்ஷாவையும் பொறுத்த வரை எப்படியாவது தமிழகத்தில் தாமரையை மலரவச்சே தீரணும்ன்னு நினைக்கிறாங்க. அதுக்கு கையில் எடுத்திருக்கும் கவர்ச்சியான ஆயுதம்தான் இன்ஸ்டண்ட் தமிழ்க்காதல். பொதுவாவே, வடமாநிலத் தலைவர்கள் தமிழகத்துக்கு வரும் போது ’வணக்கம், ’நன்றி’ என்பது போல் ஓரிரண்டு தமிழ்ச் சொற்களை எழுதிவந்து படிச்சி, தமிழக மக்களிடம் கைத்தட்டல் வாங்குறது வழக்கம். அதேபோல் சிலர் திருக்குறளில் இருந்தும் சங்க இலக்கியத்தில் இருந்தும் மேற்கோள்களைக் காட்டிப் பேசி இங்கிருப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பாங்க. குறிப்பா காங்கிரஸின் சீனியர் மோஸ்ட் தலைவராக இருந்த இந்திரா காந்தி தொடங்கி, சோனியா காந்தி, ராகுல் காந்தி வரை அப்படித் தமிழ்ச் சொற்களைக் கலந்துபேசி தமிழக மக்களின் அன்பைப் பெற்றிருக்காங்க. இதையெல்லாம் கவனிச்ச பா.ஜ.க. தரப்பு, இதுபோன்ற அணுகு முறையால்தான் ஒரு காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல்னா அது காங்கிரஸ் கூட்டணிக்கே தமிழ்நாட்டில் சாதகமா இருக்கும். அதை இப்ப புரிஞ்சிக்கிட்டு, அதே டெக்னிக்கை பா.ஜ.க.வும் கையில் எடுத்திருக்கு. சில மாநிலங்களில் மதத்தை யும் சில மாநிலங்களில் சாதீயத்தையும் கையி லெடுத்து அரசியல் பண்ணிவரும் பா.ஜ.க, பெரியார் வழியிலான திராவிட மண்ணான தமிழகத்தில் சாதியும் மதமும் எடுபடாதுன்னு தெரிஞ்சிக்கிட்டு தமிழ் மொழியையே கையில் எடுக்குது. தேர்தல் வெற்றி ஒரு பக்கம்னாலும் குறைந்தபட்சம் ஏர் இஹஸ்ரீந் ஙர்க்ண்யையாவது கட்டுப்படுத்தலாம்னு நினைக் கிறாங்க. பிரதமரின் தமிழ்க் குரலை பா.ஜ.க.வினர் மட்டுமில்லாமல், அ.தி.மு.க. அமைச்சர்களும் பூரிப்பா புகழ்ந்துக்கிட்டு இருக்காங்க.''
""மோடியை டாடிங்கிற ரேஞ்சில் புகழ்ந்த தமிழக அமைச்சர்கள், தமிழ் மீது மோடி ரொம்ப மதிப்பு வச்சிருக்காருன்னு புகழ்றதை நானும் கேட்டேம்ப்பா.. ஆனா நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ஜ.க.வை அ.தி.மு.க. கண்டுக்கலைன்னு பா.ஜ.க. தரப்பில் கோபம் வெளிப்படுதே!''
""இதை பா.ஜ.க. சீனியரும் மத்திய முன்னாள் இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் ஓப்பனாவே சொல்லிட்டாரு. பா.ஜ.க. ஆதரவில் தான் இடைத்தேர்தலில் வெற்றி பெறமுடியும்னு பேட்டியும் கொடுத்தாரு. பொன்னாரோட வார்த்தைகளில் கொதிப்பும் கொந்தளிப்பும் இருந்தது. பா.ஜக.வின் மாநில நிர்வாகிகள் பலருக்கும் இந்தக் கோபம் இருக்குது. வேலூர் எம்.பி. தேர்தலில் பா.ஜ.க.வை அ.தி.மு.க. புறக்கணிச்சிது. இப்ப நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. வரை ஆதரவு கேட்ட அ.தி.மு.க. பா.ஜ.க.வைக் கேட்காததால பொன்னார் குமுறிட்டாரு.''
""நியாயம்தானே?''
""அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, பா.ஜ.க.வோடு சேர்ந்து போய் வாக்கு சேகரித்தால், இருக்கிற செல்வாக்குக்கும் பாதிப்பு வருதுன்னு நினைக்குது. தமிழ்நாட்டோட அரசியல் டிசைன் அப்படி இருப்பதை புரிஞ்சிக்கிட்டு, அ.தி.மு.க. அமைச்சர்களே சைடு வாங்குறாங்க. எப்படியாவது இடைத்தேர்தலில் ஜெயித்துக் காட்டணும்ங்கிறது அ.தி.மு.க. கணக்கு. அதை பா.ஜ.க. டெல்லி மேலிடத்துக்கும் ஏற்கனவே சொல்லி அனுப்பிட் டாங்க. பா.ஜ.க. மேலிடத்தைப் பொறுத்தவரை, தங்களோட திட்டங்களை தங்கள் மாநில அரசுகளைவிட வேகமா செயல்படுத்துற அ.தி.மு.க. அரசை டிஸ்டர்ப் பண்ண விரும்பலை. அதனால, தேர்தல் களத்தில் அ.தி.மு.க. எடுக்கும் வியூகங் களைக் கண்டுக்கிறதில்லை. இந்த டீல் படி, ஐ.ஐ.டி. விழாவுக்கு வந்த பிரதமரிடம் இடைத்தேர்தலுக் கான பா.ஜ.க.வின் ஆதரவை ஃபார்மாலிட்டியாக கேட்டார் முதல்வர். பொன்னார் கொதிப்பார். அதை மோடி அணைப்பார் என்பதுதான் இடைத்தேர்தல் டீல்.''
""தங்கள் திட்டங்களை நிறைவேற்றும் அ.தி.மு.க. ஆட்சி செய்யும் தமிழகத்திற்குரிய நல்ல திட்டங்களை நிறைவேற்ற உதவுதா?''
""தென்மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்று, குலசேகரப் பட்டணத்தில் ராக்கெட் ஏவுகணைத் தளம் அமைக்கணும் என்பது. இதை விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் ஏத்துக்கிச்சு. இதைத் தொடர்ந்து மத்திய அரசின் அனுமதியோட, தமிழக அரசிடம் ஏவுகணைத் தளத்துக்கான நிலத்தைப் பெற்றுக் கொடுக்கும்படி கேட்டது. இந்த கோரிக்கையை ஏறத்தாழ ஒன்றரை ஆண்டாகக் கிடப்பில் போட்டிருந்தது அரசு. இந்த நிலையில் இஸ்ரோ, நில விவகாரத்தில் தமிழக அரசு அக்கறை காட்டாதது பற்றி பிரதமர் அலுவலகத்துக்குக் கடிதம் மூலம் நினைவூட்டியது. இதைப் பார்த்த பிரதமர் அலுவலகம், எடப்பாடி அரசிடம் காட்டம் காட்டியது. இதைத் தொடர்ந்துதான், ரெண்டு நாளைக்கு முன், ராக்கெட் ஏவுகணைத் தளத்துக்கு நிலம் எடுப்பது தொடர்பான அரசாணையை மாநில அரசு பிறப்பிச்சிருக்கு.''
""அ.தி.மு.க. அரசு எப்ப என்ன பண்ணு மோன்னு பதற்றமா இருக்குப்பா.. குடிநீருக்கும் கூட இங்கே ஆபத்து வந்துடும் போலிருக்கே?''’
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமையை முழுக்க முழுக்க சூயஸ் என்ற தனியார் நிறுவனத்திடமே ஒப்படைக்கும் முயற்சியில் எடப்பாடி அரசு இறங்கியிருக்கு. முதற்கட்டமா கோவை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தை அரசு அமல் படுத்தப் போகுது. கோவை மாநகரின் 60 வார்டுகளுக்கும் குடிநீர் சப்ளை செய்யும் உரிமத்துக்கான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கு. இதன்படி வீட்டுக்கு வீடு மின்சார மீட்டர் போல் ஒரு மீட்டரைப் பொருத்தி விடுவார்களாம். நாம் செலவிடும் தண்ணீருக்கு ஏற்ப கட்டணம் இருக்குமாம். இந்தக் கட்டணம் எப்படி இருக்கும்? என்பது குறித்த எந்த விபரமும் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்ததும், யாராவது சுயமாக போர்போட்டு நிலத்தடி நீரை எடுத்தாலும் கூட அதற்கும் இவர்களிடம் அனுமதி வாங்கி, கட்டணம் செலுத்தவேண்டுமாம். ஆக ஒட்டு மொத்த குடிநீருக்கும் ஒரு எஜமானரை நியமிக்கிது எடப்பாடி அரசு. கோவைக்கு அடுத்து சென்னை, இந்த நிறுவனத்தின் கைக்குப் போகிற தாம். அடுத்து நாம் சுவாசிக்கும் காற்றுக்கும் கட்டணம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.''
""சரிப்பா, இடைத்தேர்தல் நேரத்தில் காங்கிரஸில் சலசலப்பு பலமா இருக்குதே?''’
""உண்மைதாங்க தலைவரே, நாங்குநேரி இடைத்தேர்தல் களத்தில் காஞ்சிபுரம் மாவட் டத்தை சேர்ந்த ரூபி மனோகரனை காங்கிரஸ் நிறுத்தியிருக்கு. அதே பகுதியைச் சேர்ந்த பலர் சீட்டுக் கேட்டும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ரூபிக்கு சீட் கொடுக்கப்பட்டி ருப்பது ஒட்டுமொத்த காங் கிரஸுக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கு. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக், கட்சியின் பொதுச்செயலாளர் சஞ்சய் தத் ஆகியோரை வெயிட்டாக கவனித்துதான் ரூபி சீட் வாங்கியிருக்கிறார் என்று டெல்லித் தலைமைக்கு புகார்களைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.''’
""பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை தினகரன் போய் சந்திச் சிருக்காரே?''’
""ஆமாங்க தலைவரே அண்மையில் சசிகலாவை சிறையில் சந்திச்ச தினகரன், இடைத்தேர்தலில் நம் அ.ம. மு.க. சார்பில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். தேர்தல் செலவுக் கும் பணம் வேண்டும் என்று சொன்னாராம். இதைக் கேட்டு டென்ஷனான சசிகலா, தேர்தலில் யாரும் நிற்க வேண்டாம். இனி என்னால் பணமும் கொடுக்க முடியாது என்று கடுமை யாகப் பேசி அனுப்பி விட்டாராம். இதனால் அப்செட்டான தினகரன் வெளியே வந்து, எங்களுக்குப் பொதுச் சின்னம் கிடைக் காததால் இடைத்தேர்தலில் நிற்கவில்லை என்று அறி வித்துவிட்டார். சசி தரப்போ டிசம்பர், ஜனவரியில் சசிகலா விடுதலையாவார் என்று அழுத்திச் சொல்வதோடு, அவர் வெளியே வந்ததும் தினகரன் ஓரம்கட்டப்படுவார் என்றும் அதன்பின்னர் எடப்பாடியும் சசிகலாவும் கைகோப்பார்கள். அந்த டீலுக்குப் பிறகுதான் ஒருங் கிணைந்த அ.தி.மு.க.வின் பொதுக்குழுவே கூடப் போகுது என்றும் கிசுகிசுக் கிறார்கள்.''
""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். இடமாற்றல் உத்தரவு விவகாரத்தால் தன் பதவியை ராஜினாமா செய்த சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியான தகில் ரமானி மீது, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. சிலைக் கடத்தல் தடுப்பு வழக்கில் அரசு மற்றும் தொழிலதிபர்கள் சார்பிலான உத்தரவு பற்றி விவாதம் எழுந்த நிலையில், சென் னையில் நீதிபதி வாங்கி யிருக்கும் வீடு பற்றிய சர்ச்சை யும் உருவாகியிருக்கு. எதிலும் அரசியல்தான் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.''
_____________
இறுதிச் சுற்று!
ப.சி.க்கு ஜாமீன் மறுப்பு
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு மீண்டுமொரு முறை டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது. சி.பி.ஐ. தரப்பு, நடந்திருப்பது மிக மோசமான பொருளாதாரக் குற்றம். ப.சி. வெளியில் வந்தால் சாட்சிகளைக் கலைக்கக்கூடுமென வாதிட்டது. ப.சி. தன் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை எனவும் தன்னைப் பிணையில் வெளி விடவேண்டுமெனவும் நீதிமன்றத்தில் தெரி வித்தார். சாட்சிகளைக் கலைத்துவிடமாட் டார்தான் எனினும், சாட்சிகளின்மீது சிதம்பரம் தனது செல்வாக்கைப் பிரயோ கித்து தாக்கம் ஏற்படுத்தக்கூடுமென நீதிபதி சுரேஷ் கைத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட் 21-ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட சிதம்பரம், இதன்மூலம் திகாரில் 40 நாட்களைக் கடந்து சிறை யிலடைக்கப்பட்டிருக்கிறார்.
-க.சுப்பிரமணியன்