"ஹலோ தலைவரே... சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தகில் ரமானியின் இடமாறுதல் விவகாரத்தில், மத்திய அரசுக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராடும் நிலைமையை உருவாக்கியிருக்குதே!''’

ff

""ஆமாம்பா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான நீதிபதிகளை நிர்வகிக்கும் அமைப்பான கொலீஜியம், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தகில் ரமானியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கும், அங்கிருந்த தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை, சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் இடமாறுதல் செய்ததை, தகில் ரமானி ஏற்றுக்கொள்ளாமல், 2022 அக்டோபர்வரை அவருக்குப் பதவிக் காலம் இருக்கும் போதும், தன் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியிருக்காரே?''’

""உண்மைதாங்க தலைவரே, ரமானியின் ராஜினாமாக் கடிதம் திங்கள் இரவு வரை ஏற்றுக்கொள்ளப்படலை. இந்த நிலையில் அவரைத் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் சந்திச்சிப் பேசியிருக்கார். ரமானிக்கு இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைக் கண்டிச்சி, சென்னை உயர் நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் பணியாற்றும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் இறங்கினாங்க. குஜராத் கலவரம் தொடர்பா, ரமானி கொடுத்த அதிரடித் தீர்ப்புக்கு பழிவாங்கும் விதமாத்தான் 75 நீதிபதிகளைக் கொண்ட சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து, அவரை வெறும் மூணே மூணு நீதிபதிகளைக் கொண்ட மேகாலயாவுக்கு மாற்றப் பார்க்கறாங்கன்னும், இது பதவிக் குறைப்புக்கு நிகரான நடவடிக்கைன்னும் அவர் தரப்பினர் சொல்றாங்க.''’

Advertisment

""முக்கியமான தீர்ப்புகளைக் கொடுத்தவராயிற்றே தகில் ரமானி...''

""குஜராத் முதல்வராக மோடி இருந்த காலகட்டத்தில் 2002 பிப்ரவரி 28-ந் தேதி மிகக் கொடூரமாக நடத்தப்பட்ட கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. இதையடுத்து, இஸ்லாமியர்களைக் குறிவச்சி பெரும் வன்முறை அரங்கேற்றுச்சு. படுகொலைகள், வன் புணர்வுகள்ன்னு காவல்துறையின் ஒத்துழைப்போடு கொடுமையான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் கர்ப்பிணியான பில்கிஸ் பானு, பாலியல் கொடூரத்துக்குள் ளானார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தினரை கொடூரமா வெட்டிக் கொன்றது அந்த மிருகவெறிக் கும்பல். குற்றுயிராய் பிழைத்தார் பில்கிஸ். நெஞ்சைப் பதறவைக்கும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 20 பேரை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தது. அந்த வழக்கு அப்பீலுக்கு வந்தப்ப, மும்பை உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியா இருந்த தகில் ரமானி, அந்த வழக்கை கூர்ந்து கவனிச்சி, கீழ் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டவர் களையும் தப்பிக்கவிடாமல், ஆயுள் தண்டனையும் அபராத மும் விதிச்சார். இதில் ஐ.பி.எஸ். அதிகாரியான ஆர்.எஸ். பகோராங்கிற அங்கிருந்த போக்குவரத்துத்துறை துணைக் கண்காணிப்பாளர் உட்பட முக்கிய புள்ளிகள் பலரும் தண்டனைக்கு ஆளானாங்க. பில்கிஸ் பானுவின் சளைக்காத சட்டப் போராட்டத்தைப் பாராட்டி அவருக்கான நிவாரணத்துக் கும் உத்தரவிட்டார். இது பா.ஜ.க. தரப்பை அதிர வைத் திருந்தது. மோடி அரசின் இமேஜுக்கும் டேமேஜா இருந் தது. அதனாலதான் தகில் ரமானியின் மாறுதல் உத்தரவு சர்ச்சையாகப் பார்க்கப்படுது. ப.சி.க்கு அடுத்து இப்ப தலைமை நீதிபதி மாற்றம் பழிவாங்கும் படலம்-2ன்னு பேசிக்கிறாங்க.''’

""நீதிபதி ரமானி மாற்றத்துக்கும் மத்திய அரசுக்கும் சம்மந்தம் இல்லைன்னு அதே நீதித்துறையில் இருந்தும் குரல் வருதே?''’

Advertisment

aadv

""ரமானி மாறுதலை நியாயப்படுத்துறவங்க, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழகத்து வரும்போது, புரோட்டோகால்படி தகில் ரமானி நடத்தலைன்னும், அவங்க பரிந்துரையைக் கூட உயர்நீதிமன்ற நியமனங்களின் போது பின்பற்றலைன்னும் குற்றச்சாட்டுகளை அடுக்கறாங்க. இந்த காரணங்களுக்காகத்தான் தகில் ரமானி மேகாலயாவுக்கு, உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் மாற்றப்பட்டிருக் காருன்னும் சொல்றாங்க. அதே சமயம் எங்களுக்கு நெருக்கடி இருக்கத்தான் செய்யுதுன்னு உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளே, நீதிமன்றத்துக்கு வெளியில் வந்து சொல்லும் அளவுக்கான ஆட்சிதானே நடந்துக் கிட்டிருக்குது!.''’

""திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரம் எப்படி இருக்கார்?''’

""ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட நேரத்திலேயே அவருக்காக திகார் சிறையின் 7-ஆம் எண் அறை தயாராகிக் கொண்டிருந்ததை நம் நக்கீரன்தான் முதன் முதலில் சொன்னது. அதன்படிதான் எல்லாம் நடந்திருக்கு. விதிகளுக்கு உட் பட்டு அவருக்குத் தரவேண்டிய சிறப்புச் சலுகைகள் அங்கே கொடுக்கப்படுது. தன் மனைவி கொடுத்த கம்பராமாயணத் தையும், சில ஆங்கில நூல்களையும் ப.சி. படிச்சிக்கிட்டு இருக்காராம். அதேபோல் வெளியில் என்ன நடக்குதுன்னும் அடிக்கடி விசாரிச்சித் தெரிஞ்சிக்கிறாராம் ப.சி. அதேபோல் தன் கைதுக்கு தமிழகத் தில் இருக்கும் தங்கள் கட்சியினரே பெருசா ரியாக்ஷன் பண்ணலைங்கிற வருத்தமும் அவருக்கு இருக்கு. கட்சியின் அகில இந்தியத் தலைமையும் தனக்காக மாநிலக் கமிட்டிகளை ஒன்று திரட்டிப் போராடலைங்கிற ஆதங்கமும் ப.சி.க்கு அதிகமா இருக்குதாம்.''’

""தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டனப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டதே?''’

pc

""உண்மைதாங்க தலைவரே, ப.சி. கைதைக் கண்டிச்சி ஆர்ப்பாட்டப் போராட்டங்களை நடத்தணும் என்றும், பொதுக் கூட்டங்களை நடத்தி மோடி அரசின் பழிவாங்கும் போக்கை மக்களிடம் விளக்கணும் என்றும் தமிழக காங்கிரஸில் இருக்கும் 72 மாவட்டத் தலைவர்களுக்கும் மாநிலத் தலைவரான கே.எஸ். அழகிரி உத்தரவு போட்டிருந்தார். அதை பெரும்பாலானோர் பெருசா எடுத்துக்காததோட, சிதம்பரமும் அவர் மகனும் செய்ததற்காகத்தானே நடவடிக்கை எடுக் கப்பட்டிருக்கு. இதுக்கு எதுக்குக் கட்சி சார்பில் போராட்டம் நடத்தணும்?னு கேள்வி எழுப்பினாங்க. இதனால் அனைத்துக் கட்சிப் போராட் டத்தை நடத்தலாம்ன்னு நினைச்சி தி.மு.க. தலைமையைத் தொடர்பு கொள்ள முயன்றது சத்திய மூர்த்தி பவன். ஆனால் அறிவாலயமோ சைலண்ட் மோடிலேயே இருந்தது. இந்த நிலையில் ப.சி. ஆதர வாளர்கள், சத்தியமூர்த்தி பவனில் 10 ஆயிரம் பேரைத் திரட்டி மறியல் போராட்டம் நடத்தப் போறோம்ன்னு அறிவிச்சாங்க. அதனால், அங்கே பிரளயத்தை எதிர்பார்த்து 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டாங்க.''

""எவ்வளவு பேர் வந் தாங்க?''

banu

""100 பேர்தான் தேறி யிருப்பாங்க... போலீஸோ அவங்க எல்லோரையும் ரிமாண்ட் செய்யப் போறோம்ன்னு சொல்ல, திகிலான தொண்டர்கள் பின் வாங்க ஆரம்பிச் சாங்க. இதையறிந்த அழகிரி, கைது நடவடிக்கைக்கும் தயாராகுங்கள்ன்னு செய்தி அனுப்பினார். அதனால் வேற வழி இல்லாமல் 40 பேர் மட்டுமே போராட்டத்துக்கு முன் வந்தாங்க. அவங்களும் எங்களை ரிமாண்ட் பண்ணிடாதீங்கன்னு போலீஸ் அதிகாரிகளிடம் வேண்டுகோள் வச்சாங்க. போராட் டக் களத்துக்கு வருவார்ன்னு எதிர்பார்க்கப்பட்ட மாநிலத் தலைவர் அழகிரியோ, அந்தப் பக்கம் தலையையே காட்டலை. இதுக்கிடையில் ப.சி.யின் ஆதங்கத்தைத் தெரிஞ்சிக்கிட்ட ரஜினி, தன் மனைவி லதா ரஜினிகாந்த் மூலம், நளினி சிதம்பரத்தைத் தொடர்புகொண்டு, ப.சி. சட்ட போராட்டத்தில் விரைவில் வெற்றி பெறுவார்ன்னு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லியிருக்கார்.''’

""மந்திரிகள் சிலருக்கும் ஆறுதல் வார்த்தை தேவைப்படுது போலிருக்கே?''’

sellurraj

""சரியா சொன்னீங்க தலைவரே, முதல்வர் எடப்பாடி தன் ஃபாரின் டூருக்கு சுகாதாரத்துறை விஜயபாஸ்கர், வருவாய்த்துறை ஆர்.பி. உதய குமார், பால்வளத்துறை ராஜேந்திர பாலாஜி ஆகிய மூன்று அமைச்சர்களை மட்டுமே தன்னோடு அழைச்சிக்கிட்டுப் போனார். அதனால் சில அமைச்சர்களிடம் இது குறித்த ஆதங்கம் இருக்கிறதாம். குறிப்பாக மதுரைக்காரரான உதயகுமாருக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் அதே மதுரையைச் சேர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜுவுக் குக் கிடைக்கலையேன்னு அங்கிருக்கும் ஆளும் கட்சி யினர் கேலி பேசினார்களாம். இதனால் செல்லூர் வெளிப் படுத்திய ஆதங்கம், எப்ப டியோ வெளியே கசிந்ததால், அதை அவரே மறுத்து வரு கிறார். இந்த நிலையில் மாநில கூட்டுறவு சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட இருக்கிறது. இந்தப் பதவியில் எடப்பாடியின் வலது கரமான சேலம் இளங்கோவனை உட்காரவைப்பதற்கான காய் நகர்த்தல்கள் தொடங்கிவிட்டன.''’’

""பாரின் டூருக்கு அடுத்து எடப்பாடியின் முக்கிய புரோகிராம் என்ன?''’

""கட்சியின் பொதுக்குழுவை விரைவில் கூட்ட இருக்கிறாராம். ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆண்டுக்கொரு முறை பொதுக் குழுவை கூட்டவேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. இதன்படி வழக்கமாக டிசம்பரில் கூட்டும் பொதுக்குழுவை மார்ச்சுக்குள் கூட்டுவதாகத் தேர்தல் ஆணை யத்திடம் ஏற்கனவே தெரிவித்திருந்தது கட்சித் தலைமை. இடையில் நாடாளுமன்றத் தேர்தல் குறுக்கிட்டதால் பொதுக்குழு கூட்டப்படலை. இதைத் தொடர்ந்து ஆணையத்திடமிருந்து அறிவுறுத்தல் வந்திருப்பதால் தன் சகாக்களுடன் கலந்துபேசி இதற்கான தேதியை முடிவு செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம் எடப்பாடி. கட்சிக்குள் ஒற்றைத் தலைமை எனும் கோரிக்கை வலுத்திருப்பதால், மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி அதில் உட்காரவும் அவர் வியூகம் வகுத்திருக்கிறாராம்.''

rang

""மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி குமரி அனந்தன், உண்ணாவிரதம் இருக்கப்போகிறாரே?''’

""ஆமாங்க தலைவரே, இதற்காக இம்மாதம் 15-ந்தேதி குமரியார் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறார். இதில் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலராவது கலந்துகொள்ளணும்னு பலரையும் அவர் அழைத்திருக்கிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை இதற்காக அவர் தொடர்புகொண்டபோது, செப்டம்பர் 15-ல் எங்கள் கட்சியின் முப்பெரும்விழா திருவண்ணாமலையில் இருக்கிறதே என்று , தன் வாழ்த்தை மட்டுமே குமரியாருக்குத் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், குமரியாரின் போராட்டத்துக்கு வர சம்மதிச்சிருக்காராம்.''’

""நீ குமரியார் பற்றி சொன்னதும் எனக்கு அவர் மகள் தொடர்பான செய்தி நினைவுக்கு வருது. குமரி அனந்தனின் மகளான தமிழிசை, கட்சிப் பணியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தெலுங்கானா ஆளுநராகப் பதவி ஏற்றுக்கொண்டிருக்கிறார். அவர். அமர்ந்திருந்த தமிழக பா.ஜ.க. தலைவருக்கான நாற்காலியில் யாரை அமரவைக்கிறதுன்னு இன்னும் முடிவெடுக்க முடியாமல் பா.ஜ.க. தலைமை திணறிக்கிட்டு இருக்கு. காரணம், கர்நாடகாவில் நியமித்தது போல 40 வயதுக்கு உட்பட்ட ஒரு புதுமுகத்தைக் கொண்டு வருவதா? இல்லை அரசியல் அனுபவம் உள்ள ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இருக்கும் ஒருவரை நியமிப்பதாங்கிற கேள்வியை வைத்துக்கொண்டு, அதற்கு பதில்தேடி தாயக்கட்டையை உருட்டிக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. தலைமை. புதுத் தலைவரை தேர்வு செய்ய 7 பேர் கமிட்டியை அமைக்கும் யோசனையும் இருக்கிறதாம்.''’

________________

மறைந்தார் சட்டமேதை!

raமூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜேத்மலானி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராகவும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருந்தவர். 2004 மக்களவைத் தேர்தலில் அதே வாஜ்பாயை எதிர்த்து லக்னோ தொகுதியில் போட்டியிட்டார். 2010-ல் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக இருந்திருக்கிறார்.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2011-ல் ஆஜராகி வாதாடிய ராம் ஜேத்மலானி, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஷா, 2ஜி வழக்கில் கனிமொழி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு ஆதரவாக வாதாடியவர். முதுமை காரணமாக 2017-ல் தனது 70 ஆண்டுகால வழக்கறிஞர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ராம் ஜேத்மலானி, செப்டம்பர் 08-ந்தேதி நிரந்தர ஓய்வை எட்டிவிட்டார்.

தனது வாதத்திறமையால் பலரையும் புருவம் உயர்த்தச்செய்த ஜெத்மலானிக்கு வயது 95. தமிழக அரசியல் தலைவர்களுடன் சட்டரீதியாக நெருக்கமாக இருந்தவர்.

-மதி