""ஹலோ தலைவரே, பிரதமர் மோடியின் அமெரிக்க டூரை ஊடகங்கள் மூலம் பெரிசு படுத்திக் கொண்டாடுது பா.ஜ.க. அரசு.''’
""ஆமாம்பா, இந்தியப் பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரே மேடையில் தோன்றியதை இதுவரை நடக்காத சாதனையா சொல்றாங்களே?''’’
""அமெரிக்காவில் இருக்கும் ’உலகின் எரிசக்தி நகர்னு வர்ணிக்கப்படும் ஹூஸ்டன் நகரில், "மோடி நலமா?'ங்கிற "ஹீடி மோடி' நிகழ்ச்சி நடந்தது. இதை டெக்ஸாசில் இருக்கும் இந்திய மன்றம் மூலம் சரியா கணக்குப் போட்டு இந்தியத் தரப்பு ஏற்பாடு செய்தது. இதில் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் ஒரே மேடையில் ஏறியதோட, ஒருத்தரை ஒருத்தர் வானளாவப் புகழ்ந்துக்கிட்டாங்க. மோடியைப் பொறுத்தவரை பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியத் தரப்பின் விளக்கத்தைச் சொல்லி, இந்தியாவுக்கு ஆதரவு கேட்கத்தான் போனார். அந்த விசிட்டை இந்திய மக்களைக் கவரும் படி மாத்தியதுதான், அவர் தரப்பின் உச்சபட்ச சாகஸம். இந்தியாவின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி சரிஞ்சி உருண்டுக்கிட்டு இருக்கும் இந்த நேரத்தில், மோடி இந்திய மக்களை மீட்டெடுத்து வருகிறார்ன்னு டிரம்ப்பைக் கொண்டே மோடி பேச வச்சிருப்பது பற்றி இங்குள்ள எதிர்க்கட்சிகள் முணுமுணுக்குது. அதோட, மோடியின் அமெரிக்க விசிட்டால் இந்தியாவுக்கு லாபம் என்னங்கிற கேள்வியும் எழுப் பப்படுது.''’
""திகார்ல கம்பி எண்ணும் ப.சி. கூட அங்கிருந்தே விமர்சனத்தை வச்சிருக் காரே?''’
""உண்மைதாங்க தலைவரே, மோடி அமெரிக்காவில் இருக்கும் இந்த நேரத்தில், அங்க நடக்கும் ஆர்ப்பாட்ட அமர்க்களங் களைப் பார்த்து எரிச்சலான ப.சி., இந்தியாவில் வேலை இல்லாத் திண் டாட்டம், வேலை இழப்பு, வருமான இழப்பு, செல்போன் குற்றங்கள், காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவர்களின் சிறை வாசம்ன்னு இந்தியா அமோகமா இருக்குன்னு டுவிட்டர்ல மோடி அரசைக் கிண்டலடிச்சிருக்கார். மோடியின் அமெரிக்க விசிட் பற்றிய அலப்பறைகளைப் பார்க்கும் போது, கறுத்துப்போன மோடியின் இமேஜுக்கு அடர்த்தியா அடுக்கடுக்கா பவுடர் பூசி மேக்கப் போடுற முயற்சிதான் இதுன்னு தோணுது.''’
""ப.சி.யின் கிண்டல் இருக்கட்டும். அவரை திகார் சிறைக்குப் போய் சோனியா காந்தி பார்த்திருக்காரே?''’
""ஆமாங்க தலைவரே, போன வாரம் ப.சி.யைப் பார்க்க, காங்கிரஸ் சீனியர் தலைவர்களான கபில் சிபலும், அபிசேக் சிங்வியும் போனாங்க. சீனியர் மோஸ்ட் வழக்கறிஞர்களான இவங்கதான் ப.சி.க்காக நீதிமன்றங்களிலும் வாதாடிக்கிட்டு இருக்காங்க. இவங்களைப் பார்த்த ப.சி., கட்சித் தலைவரான சோனியாவே தன்னை வந்து பார்க்கலைங்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கார். இது சோனியா காதுக்குப் போனதால்தான், 23-ந் தேதி காலை, முன்னாள் பிரதமரான மன்மோகன்சிங்கோடு திகார் சிறைக்கே போய் ப.சி.யை சந்திச்சிருக்கார். அப்ப நலம் விசாரிச்ச சோனியாவிடம், இன்னும் நாற்காலி, தலையணைகளைக் கூட எனக்கு சிறை அதிகாரிகள் தரலை. அதனால் முதுகுவலி தொல்லைப்படுத்துதுன்னு சொல்லியிருக்கார் ப.சி. இதுக்காக வருத்தப்பட்ட சோனியா, "கவலைப்படாதீங்க. சி.பி.ஐ. புனைந்திருக்கும் வழக்கில் நீங்கள் குற்றமற்றவர் என்பது எங்க ளுக்குத் தெரியும். சட்டத்தின் துணையோடு நீங்கள் விரைவில் வெளியே வருவீர்கள்'ன்னு ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.''’
""தமிழ்நாட்ல இருக்கும் காங்கிரஸ் பிரமுகர்கள் மீதும் ப.சி. கடுமையான ஆதங்கத்தில் இருக்காராமே?''’
""ஆமாங்க தலைவரே, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரா இருக்கும் கே.எஸ். அழகிரியை, அந்தப் பதவியில் உட்கார வச்சதே ப.சி.தான். ஆனால் அவர் ப.சி. கைதுக்காக நடத்தப்பட்ட எந்த போராட்டத்திலும் கலந்துக்கலை. அதுமட்டும் இல்லாம ப.சி. ஆதரவாளர்கள்னு சொன்னாலே இந்த நெருக்கடியான நேரத்திலும் அவர்களை ஓரம்கட்டறாராம். காஞ்சிபுரத்தில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட் டத்தில், தீவிர ப.சி.யின் விசுவாசிகளை ஓரம்கட்டிட்டு வேறொரு பிரமுகரை வச்சி ஒப்புக்கு ஆர்ப்பாட் டத்தை அழகிரி நடத்தியதா ப.சி.கிட்டயே புகார் போயிருக்கு. இதனால் அவர் ரொம்பவே அப்செட்டில் இருக்காராம். ஒரு காலத்தில் ப.சி.யின் தீவிர ஆதரவாளரா இருந்த கே.எஸ்.அழகிரி, அவரை விட்டு ஏன் விலகி நிக்கிறார்ன்னு விசாரிச்சப்ப, ப.சி.க்கு எதிரா கட்சிக்குள்ளேயே அரசியல் பண்ணிக்கிட்டு இருக்கும் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்களில் ஒருவரான வேணுகோபாலும், விருதுநகர் எம்.பி. மாணிக் தாக்கூரும்தான் அதுக்குக் காரணம்ன்னு சொல்றாங்க. இவங்க ரெண்டுபேரும், இனி ப.சி.க்கு அரசியல் வாழ்வு இருக்காது. காங்கிரஸும் இன்னும் 5 வருசத்துக்கு ஆட்சிக்கு வரமுடியாது. இந்த நிலையில் அவரை எதுக்கு வெட்டியாத் தூக்கிச் சுமக்கணும்னு போதிச்சதால்தான், அழகிரியின் போக்கில் மாற்றம்ன்னு கதர்ச்சட்டைக்காரங்களே சொல்றாங்க.''’
""முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும்ன்னு எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க. பொதுக்குழு, ஒத்தி வைக்கப்பட்டிருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, வரும் அக்டோபர் 6-ந் தேதி நடப்பதா இருந்த தி.மு.க. பொதுக்குழு, அதே அக்டோபர் 21-ல் நடக்க இருக்கும் நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் காரணமா, ஒத்திவைக்கப்பட்டிருக்கு. பொதுக்குழுவில் கட்சிப் பொதுச்செயலாளர் பற்றிய ஒரு முக்கிய முடிவை எடுக்க இருந்ததாம் தி.மு.க. தலைமை. அண்ணா மறைவுக்குப் பின் கலைஞர் கட்சி யின் தலைவர் பதவியை உருவாக்கி ஏற்றுக்கொண்டப்ப நாவலருக்கு முக்கி யத்துவம் கொடுக் கும் வகையில் அவர் பொதுச் செயலாளராக நீடித்தார். நாவல ருக்குப் பிறகு கலைஞரைவிட மூத்தவரான பேரா சியர் அன்பழகன், தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். கலைஞர் தன் கடைசி நாட்களில் செயல்பட முடியாமல் சிரமப்பட்ட போது, கட்சிக்குச் செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு, அதில் ஸ்டாலின் அமர்ந்து, தலைவருக்கான பணிகளை கவனிக்கும் வகையில் சட்டவிதிகள் திருத்தம் செய்யப் பட்டது. அவரே கலைஞருக்குப் பிறகு தலைவராகிவிட்டார். அதேபோல் முதுமை காரணமாக உடல் நலிவுற் றிருக்கும் கட்சியின் பொதுச்செய லாளரான பேராசிரியரால் திரு வண்ணாமலை முப்பெரும் விழாவில் கலந்துக்க முடியலை. இப்படிப்பட்ட நிலையில், அவரிடம் தலைமைக் கழக அறிவிப்புகளில் கையெழுத் துக் கேட்டு சிரமப்படுத்தக் கூடாதுங்கிற எண்ணம் சீனியர்கள் எல்லோருக்கும் இருக்கு. அதனால் வாழ்நாள் முழுதும், அவரே பொதுச் செயலாளர் பதவியில், தொடரட்டும். அவர் பொறுப்புகளை வேண்டுமானால் கட்சியின் அமைப்புச் செயலாளரோ அல்லது தலைவரோ பார்ப்பதற்கான வழிமுறைகளை, இந்தப் பொதுக்குழுவில் எடுக்கலாம்னு கட்சித் தலைமை திட்டமிட்டிருந்தது. இப்போது பொதுக்குழு தள்ளி வைக்கப்பட்டாலும், தேர்த லுக்குப் பிறகு பொதுக்குழு கூட்டப்படும்போது, இதுபோல் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்னு தெரியுது.''’’
""கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திச்சதின் பின்னணியில் சட்ட சிக்கல்கள் இருப்பதா சொல்லப்படுதே?''’
""கர்நாடகத்தில் நடைபெற்று வந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் கூட்டணி அரசு கவிழ்வதற்கு, இந்தக் கட்சிகளில் இருந்த 15 எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தாவியதுதான் காரணம். 15 பேரையும் இடைத்தேர்தலில் நிற்கவச்சி, அவர்களுக்குப் பதவிகளைக் கொடுக்கத் தயாராக இருப்பதாக ஆசைகாட்டிதான் பா.ஜ.க. தரப்பு, அவர்களைத் தங்கள் பக்கம் இழுத்தது. ஒருவழியா எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந் தாலும், கட்சி மாறிய அந்த 15 எம்.எல்.ஏ.க்களின் பதவியையும் பறித்து, அவர்கள் 4 ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்கத் தடையையும் விதித்துவிட்டார் அப்போதைய சபாநாயகர். இந்தப் பதவிப் பறிப்பால் ஷாக்கான எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு தீர்ப்பிற்குக் காத்திருக்கிறார்கள்.
""ம்...''
""காலம் வெட்டியாய்க் கழிவதை உணர்ந்து அப்செட் ஆன அந்த எம்.எல்.ஏ.க்கள், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம், உங்களை நம்பித்தானே கட்சி மாறினோம். மாறியதால் எங்கள் எதிர்காலம் என்னவென்றே தெரியாதபடி நாங்கள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் கட்சி மாறிய தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறித்ததால், ஆளும்கட்சிக்கு எதிராக செயல்பட்ட அவர்களுக்குப் பெரிய இழப்பு என்று எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் ஆளும்கட்சியில் இருந்தோம். எங்களுக்குப் பதவிப் பறிப்பால் பெரும்பாதிப்பு ஏற்பட்டுவிட்டதுன்னு புலம்பினார்களாம். இதைத் தொடர்ந்து தான் எடியூரப்பா, அமித்ஷாவை சந்தித்து, சட்டத்துறை மூலம் அந்த 15 பேருக்கும் நல்லது நடக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். வழக்கு தீர்ப்பு எதிர்பார்க்கப்படும் நிலையில், அமித்ஷாவும் ஒரு புன்னகையோடு எடியூரப்பாவை முதுகில் தட்டிக்கொடுத்து அனுப்பி வச்சிருக்காராம்.''’
""நானும் முக்கியச் செய்தி ஒன்னைப் பகிர்ந்துக்கறேன். தமிழக அமைச்சர் ஒருவரோடு ரொம்பவே நெருங்கி விட்டதால் சர்ச்சைகளில் சிக்கிய அந்தப் பெண் அதிகாரிக்கு, இப்ப மேலும் மேலும் சிக்கலாம். அவர் பற்றிய புகார்கள், அதிகாரிகள் தரப்பிலிருந்தே டெல்லிக்கு மூட்டை மூட்டையாய்ப் போகுதாம். அதில் அவர் ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ஒருவருடன் நெருக்கம் பாராட்டியவர் என்றும் இப்போது தொடர்பில் இருக்கும் அமைச்சரால் ஆடம்பர வசதிகளில் கொழிக் கிறார் என்றும் புகார்களை அடுக்கியி ருக்கிறார்களாம். கிழக்குக் கடற்கரைச் சாலையில் மிகப்பெரிய பங்களா கட்டி வருகிறார். பென்ஸ் கார், தங்க ஆபரணங்கள் என நிறைய சேர்த்துவிட்டார் என சில ஆதாரங்களையும் இணைத்திருக்கும் அவர்கள், அவரை பழைய கலிங்க நாடான சொந்த மாநிலத்துக்கே மூட்டை கட்டுங்கள்னு வலியுறுத்தியிருக்கிறார்களாம். அமைச்சரோ, அந்த பிரியத்திற்குரிய பெண் அதிகாரியை எங்கும் மாற்றிவிடாதபடி தடுப்பணைகளைப் போட்டுக்கொண்டிருக்கிறாராம். இதற்கிடையே அமைச்சரின் வீட்டில் இந்த விவகாரத்தால் ஓயாத சண்டையாம்.''’
_______________
இறுதிச் சுற்று!
போலீசை தாக்கிய அமைச்சரின் உறவுகள்!
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகர போலீசார் கடந்த 22-ஆம் தேதி தொகுதியின் அமைச்சர் ராஜலட்சுமியின் உறவினர்களான தங்கதுரை, சங்கர் வந்த வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர். அப்போது இருவரும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிவந்தது தெரியவர... ஸ்பாட் போலீசார் மெமோ போட்டு அவர்களை மருத்துவ சோதனைக்காக அழைத்துச் செல்ல... மகேஷ், மகேந்திரன், செந்தில் ஆகிய மூன்று காவலர்களிடமும் ஒப்படைத்திருக்கின்றனர்.
நகர அரசு மருத்துவமனையில் அவர்களை சோதனைக்குட்படுத்திய சமயத்தில், வாகனத்தில் வந்த அமைச்சரின் உறவினர்கள் சிலர், பிடிபட்டவர்களை விட வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்கள். "ஏற்கனவே ரெக்கார்ட் செய்தாகிவிட்டது, விட முடியாது' என்று போலீசார் பதில் சொன்னதையும் ஏற்காதவர்கள், குற்றவாளிகளை மீட்பதற்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூன்று போலீசாரையும் தாக்கி விட்டு குற்றவாளிகள் இருவரையும் மீட்டுக்கொண்டு சென்றிருக்கிறார்கள்.
எஸ்.பி. அருண் சக்திகுமாரிடம் பேசியதில், ""தொடர்புடையவர்கள் மீது எப்.ஐ.ஆர். போடச் சொன்னதோடு குற்றவாளிகளை உடனே பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.
இதுகுறித்து அமைச்சர் ராஜலட்சுமியின் மாமனார் வேலுச்சாமியை தொடர்புகொண்டதில், "உடனே வேறு லைனில் வருகிறேன்' என்று சொன்னவர் வரவேயில்லை.
-பரமசிவன்