சாலை விபத்தில் படுகாயம் அடைபவர்களுக்கு, 48 மணி நேரத்திற்கு கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கும், ‘"இன்னுயிர் காப்போம்!'‘ திட்டத்தை செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தொடங்கி வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணித்தபோது, பல இடங்களிலும் ஆளுங்கட்சியினர் வரவேற்பளித்தனர். தாம்பரம் ரயில்நிலையம் அருகிலும் தொண்டர்கள் காத்திருந்தனர்.
ஆதிமாறன் மற்றும் அவரது ஆதரவாளரான தாம்பரம் நாராயணன், வழக்கறிஞர் ஜெயமுருகன் மற்றும் வீரப்பன் ஆகியோர் நின்றுகொண்டிருந்தனர். அங்கு வந்த தாம்பரம் தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, வழக்கறிஞர் ஜெயமுருகனை தாக்கினார். அருகே இருந்த தாம்பரம் நாராயணன் அவரை தடுக்க முயன்றார். எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவின் மைத்துனன் காமராஜ், தாம்பரம் நாராயணனை தாக்கினார். சற்றும் எதிர்பாராத தாம்பரம் நாராயணன் கீழே சரிந்தார்.
ஆனாலும் அவரையே டார்கெட் செய்த எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்களான காமராஜ், கருணாகரன், வேலுமணி, சீனா மற்றும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் தாம்பரம் நாராயணனை சரமாரியாக தாக்கியதில் அவரின் கண் மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் வந்து தாக்குதலில் காயம்பட்டவர்களை மீட்டனர்.
சற்று நேரத்தில் முதல்வர் வாகனமும் ஸ்பாட்டுக்கு வர... ரத்தக் காயத்துடன் இருந்த தாம்பரம் நாராயணனிடம் நடந்ததை கேட்டறிந்தார் முதல்வர். உரிய சிகிச்சைக்கு ஏற்பாடாக, தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தாம்பரம் நாராயணன் காங்கிரஸ், அ.ம.மு.க. என பயணித்து, 4 மாதங்களுக்கு முன் தி.மு.க.வுக்கு வந்தவர். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். ஆரம்பத்திலிருந்தே எஸ்.ஆர்.ராஜாவுக்கும் மாவட்ட செயலாளரான அமைச்சர் தா.மோ.அன்பரசனுடன் கோஷ்டி பூசல் இருந்து வருகின்றது, தா.மோ.அன்பரசனின் ஆதரவாளரான ஆதிமாறனுடன் தாம்பரம் நாரா யணன் இணைந்து கட்சிப்பணி செய்து வருகிறார். கடந்த 27-ஆம் தேதி நடந்த உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை அமைச்சர் தா.மோ.அன்பர சன், எஸ்.ஆர்.ராஜா ஆகியோரை வைத்து மிக பிரம்மாண்டமாக தாம்பரம் நாராயணன் நடத்திய நிகழ்ச்சி அனை வரையும் திரும்பிப் பார்க்க வைத்து விட்டது.
"முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் நான்கு முறை தாம்பரம் வழியே வெவ்வேறு நிகழ்ச்சிக்கு செல்லும்போது, அவரை வரவேற்று நாராயணன் சால்வை மற்றும் பூச்செண்டு கொடுத்தது எஸ்.ஆர்.ராஜா தரப்பை கடுப்பாக்கியதால், இந்தமுறை திட்ட மிட்டு அவரைத் தாக்கியுள்ளார்'' என்கிறது அமைச்சர் தா.மோ.அன்பரசன் தரப்பு. இந்தமுறை அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த எஸ்.ஆர். ராஜா தரப்புக்கு ஏமாற்றமே மிஞ்சியதால், உள்கட்சி உள்ளடி அதிகமாகி வருகிறது. இன்னுயிர் காப்போம் திட்டத் தொடக்க நாளில், சொந்தக் கட்சிக்காரரின் உயிரை, சொந்தக் கட்சிக்காரர்களிடமிருந்தே காத்திருக்கிறார் முதல்வர்.