""ஹலோ தலைவரே "பாபரா? ராமரா?'ங்கிற சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை, 40 நாட்கள் தொடர்ந்து நடந்து, தேதி குறிப்பிடப் படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கு.''’
""இந்திய அரசியலையே புரட்டிப் போட்ட விவகாரமாச்சே இது. 92 டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளையும் அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தையும் இப்ப நினைச்சாலும் மனசு பதறுது. ரத யாத்திரையில் தொடங்கி கரசேவை, ராமர் சிலை வைப்புன்னு ஏகப்பட்ட களேபரங்களும் நடந்துச்சு. இந்த விவகாரம் இரு தரப்பின் அமைதியைக் குலைச்சதோடு இந்திய அரசியலிலும் பலமாவே தாக்கத்தை ஏற்படுத்துச்சு. மதச் சார்பற்ற அரசியல் தகர்ந்து, மதவெறி அரசியல் வளர்ந்திடிச்சி. அதனால் அயோத்தி வழக்கின் தீர்ப்பை எல்லாத் தரப்புமே பலமா எதிர் பார்க்குமே?''’
""உண்மைதாங்க தலைவரே, அயோத்தியைப் பொறுத்தவரை அது ராமர் பிறந்த இடம் என்பதற்கும், அங்கே மசூதியை பாபர்தான் கட்டினார் என்பதற்கும், இந்த வழக்கில் வாதிட்ட இரு தரப்பும் வரலாற்று ரீதியான ஆதாரங்களை எடுத்துக்காட்டலை. மத ரீதியிலான நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்கள் தங்கள் கருத்துக்களை முன்னிறுத்தினாங்க. இந்த விவகாரத்தை முன்னாள் சுப்ரீம்கோர்ட் நீதிபதி கலிபுல்லா தலைமையிலான சமரசக் குழுவும் விசாரிச்சிது. இந்தக் குழுவில் வாழும் கலை நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பிரபல வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் பல்வேறு தரப்பிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிச்சிது. அதன் இறுதிக்கட்ட விசாரணைதான் இப்ப நடந்து முடிஞ்சிருக்கு.''
""தீர்ப்பையொட்டி உத்தரபிரதேசம் உட்பட பல மாநிலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டிருக்கே?''
""தலைவரே... அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தை விட்டுத்தர சன்னி வக்ஃபு வாரியம் முன்வந்திருக்குதாம். சமரசக் குழுவிடமும் இதைத் தெரிவிச்சிருக்கு. அதே நேரத்தில் அந்த இடத்தை இந்து அமைப்புகளும் விட்டுத் தரணும்னும், அயோத்தியில் உள்ள அனைத்து மசூதிகளையும் புனரமைத்து தொழுகைக்கு அனுமதிக்குமாறு கேட்டிருக்கு.''
""அயோத்தியில் இந்துக்களின் விருப்பப்படி ராமருக்கான வழிபாட்டுத் தலமும், முஸ்லிம்களின் தொழுகைக்கான இடமும் அமைக்கப்பட வேண்டும் என்ற ரீதியிலான கருத்துக்கள் அடங்கிய தனது அறிக்கையை, கலிபுல்லா தலைமை யிலான சமரசக் குழுவிடம் தெரிவிச்சுருக்கு. அந்தக் குழு நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையை தாக்கல் செய்திருக்கு. உச்சநீதிமன்றம் தர இருக்கும் தீர்ப்பின் மூலம், இரு தரப்பிற்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படும்ங்கிற நம்பிக்கை பரவலா ஏற்பட்டிருக்கு''’
""நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் நடத்தும் பிரச்சார யுத்தத்தால் சூடேறிப் போயிருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, முதல்வர் எடப்பாடிக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடியும் வசைபாடும் பிரச்சார யுத்தத்தை நடத்திக்கிட்டு இருக்காங்க. வெற்றியை அடைஞ்சே தீரணும்ங்கிற வேகம்தான் இந்த யுத்தத்துக்குக் காரணம். இந்த இரு தொகுதிகள் பற்றி வருகிற கணிப்புகள், ஆளும்கட்சிக் கும் எதிர்க்கட்சிக்கும் மாறி மாறி சாதகம்ன்னு வருது, அதனால் இவர்கள் பிரச்சாரத்திலும் வெற்றியைத் தங்கள் பக்கம் திருப்பும் தீவிரம் தெரியுது. கடைசிக் கட்ட கள நிலவரம்ன்னு உளவுத்துறை முதல்வர் எடப்பாடிக்குக் கொடுத்திருக்கும் ரிப்போர்ட்டில், ரெண்டு தொகுதியிலுமே ஆளும்கட்சிக்கு சாதகமான நிலை நிலவுதுன்னு சொல்லப்பட்டிருக்குதாம். அதனால் இதை நம்பி ஆளும் தரப்பு வேகம் காட்டுது.''’
""சிறையில் இருக்கும் சசிகலாவும் ஒருவித வேகத்தில் இருக்காராமே?''’
""ஆமாங்க தலைவரே, சிறையில் தன்னை யார் சந்திச்சாலும் அவர்களிடம் மௌனம் சாதிக்கும் சசிகலா, சில முக்கிய சொந்த பந்தங்களிடம் மட்டும் தன் எதிர்கால வியூகங்கள் பற்றி உற்சாகமாகப் பேசுகிறாராம். இதுபற்றி நம்மிடம் மனம் திறந்து பேசிய மன்னார்குடித் தரப்பு, டிசம்பர் அல்லது ஜனவரியில் ரிலீஸ் ஆகிடுவோம்ன்னு சசிகலா அழுத்தமாவே நம்பறார். அவர் விடுதலைக்கு கர்நாடகாவில் இருக்கும் எடியூரப்பா அரசும் கிரீன் சிக்னலைக் காட்டிடுச்சாம். அதனால் தனக்கு எதிராக அங்கே சிறை அதிகாரி ரூபா கிளப்பிய புகாரும் அது தொடர்பாக நடக்கும் விசாரணையும் தன்னை ஒன்றும் செய் யாதுன்னு சொல்றார். சிறையில் இருந்து வெளியே வந்ததும், அ.தி.மு.க.வி.லோ, அ.ம.மு.க.விலோ உடனடியா சேர்ந்து செயல்படாமல், தனித்து இயங்குவதற்காக புதுப்புது ரூட்டுகளை அவர் மனதிற்குள் போட்டுக்கிட்டிருக்கார். அதனால், எல்லோரும் என்னைச் சுத்திச் சுத்தி வரும் காலம் வரப்போகுதுன்னு சசிகலா ரொம்பவும் நம்பிக்கையாவே சொல்றாருன்னு அவரோட மன நிலையை அவங்க விவரிக்கிறாங்க.''’
""இது எடப்பாடி காதுக்கும் போயிருக்குமே?''’
""உண்மைதாங்க தலைவரே, சசிகலா வெளியில் வந்தால், பெரும்பாலான மந்திரிகளும் எம்.எல்.ஏ.க்களும் அவர் பக்கம் போய்டுவாங்களோங்கிற பயம் எடப்பாடிக்கு வந்திருக்கு. காரணம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சின்னம்மா தியாகம் செய்துவிட்டுத்தான் சிறைக்குப் போகிறார். அவர் அ.தி.மு.க.வுக்குத் திரும்பி வந்து, கட்சியை வழிநடத்துவார்னு திடீர்னு அதிரடி கிளப்பியிருக்காரு. உடனே அமைச்சர் ஜெயக்குமார், எந்தக் காலத்திலும் சசிகலாவும் தினகரனும் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள்ன்னு அவருக்கு பதிலடி கொடுத்தார். இதையொட்டி அமைச்சர்கள், சசிக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரு அணியாக நின்று சலசலப்பை ஏற்படுத்தினாங்க. அதை எல்லாம் நினைச்சி சஞ்சலத்தில் இருக்கும் எடப்பாடி, சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவதற்குள் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் நாற்காலியில் அழுத்தமா உட்கார்ந்திடணும்னு நினைக்கிறார். இதற்கு ஓ.பி.எஸ்.சும் சம்மதிச்சிருக்காராம். அண்மைக் காலமா ஓ.பி.எஸ்.சோடு நெருக்கமாகக் கைகோத்திருக்கும் எடப்பாடி, தங்களின் பொது எதிரியாக சசிகலாவையும் அமைச்சர் வேலுமணியையும் கருதறார். சசிகலாவைப் போலவே வேலுமணி, ஆட்சியைத் தந்திரமாகக் கைப்பற்ற முயற்சிப்பதாக எடப்பாடி நினைக்கிறார். அதுக்குக் காரணம், வேலுமணிக்கு தைரியம் கொடுத்துவரும் ஈஷா மைய ஜக்கி வாசுதேவ்தானாம். இந்த ஜக்கி, தனக்கு டெல்லியில் இருக்கும் பலத்த செல்வாக்கை வச்சிக்கிட்டு, அரசியலில் தன் இஷ்டம் போல் சடுகுடு ஆட ஆரம்பிச்சிருக்காராம்''’
""அரசியலில் மட்டுமா? ஆன்மிக உலகிலும் தன் போட்டியாளர்களுக்கு அவர் ஆட்டம் காட்டறாரே?''’
""சரியா சொன்னீங்க தலைவரே, டெல்லியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தியதன் விளைவுதான் கல்கி சாமியாரைக் குறிவைத்து ஆந்திராவில் நடந்துவரும் ரெய்டுகள். ஏறத்தாழ 40 இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் 30 கோடிரூபாய் அளவுக்கு ரொக்கம் கைப்பற்றப்பட்டி ருக்குதாம். இந்த கல்கி சாமியாரை பல ஆண்டுகளுக்கு முன்பே அம்பலப் படுத்தியது நம்ம நக்கீரன். அவரோட மோசடிகள் வெளி யானதால் நேமத்திலிருந்த ஆசிரமத்தை காலி பண்ணிட்டு சித்தூரில் மையம் கொண்டார் சாமியார். அங்கேயும் சிக்கல்.''’
""ப.சிதம்பரத்துக் கும் விடாமல் வலைக்கு மேல் வலை பின்னப்படுதே?''.
""ஐ.என்.எக்ஸ். மீடியா தொடர்பான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக் கும் ப.சி.யை, அம லாக்கப் பிரிவும் நீதி மன்ற உத்தரவோடு சிறையில் வாக்குமூலம் வாங்கி கைது செய் திருக்கு. அவரை கஸ் டடி விசாரணைக்கு உட்படுத்தவும் ஜரூரா வரிஞ்சிகட்டி நிக்கிது அமலாக்கத்துறை. தன்னிடம் விசாரிக்க வந்த அமலாக்கத் துறை அதிகாரி களிடம், நீங்கள் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் தானே சி.பி.ஐ. என்னை விசாரித்தது. அப்படியிருக்க இன்னும் என்னிடம் நீங்கள் விசாரிக்க என்ன இருக்குது? அப்படி என்ன புதுப்புது ஆவணங்களைக் கண்டுபிடிச்சிருக்கீங்கன்னு காட்டமாவே கேட்டிருக் கார் ப.சி. விசாரணை முடிஞ்சி சிறையில் இருந்து கிளம்பிய அதிகாரிகள், சிறை முகப்பில் காத்திருந்த கார்த்தி சிதம்பரத்தைப் பார்த்து பொருள் பொதிந்த புன்னகையை வீசிவிட்டுப் போயிருக் கிறார்களாம். ஏர்செல் மேக்ஸிஸ் நிறுவன முறைகேடு தொடர்பான வழக்கில் ஏற்கனவே முன்ஜாமீன் வாங்கியிருக்கிறார் கார்த்தி. அதை ரத்து செய்யும் முயற்சியை ஆரம்பித்திருக்கிறது அதிகாரிகள் டீம். ப.சி. சிறையில் இருக்கும்போதே அவர் மகனான கார்த்திக் சிதம்பரத்தையும் சிறை வைக்கவேண்டும் என்பதுதான் டெல்லியின் அஜெண்டாவாம். அமலாக்கப் பிரிவு வழக்கில் வியாழக்கிழமையன்னைக்கு ப.சி.க்கு 15 நாள் கஸ்டடி கொடுக்கப்பட்டது. சோதனை மேல் சோதனை.'' ’
""அரசியல்வாதிகளுக்கு மத்தியில்தான் நாற்காலிப் போட்டி நடப்பது வழக்கம். ஆனால் இப்போது அதிகாரிகளுக்கு நடுவே நாற்காலிப் போட்டி நடக்குதாமே?''’
""ஓ நீங்க அங்க வர்றீங்களா? மகாபலிபுரத்தில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் சந்திச்சிப் பேசினாங் களே, அப்ப அவங்க ரெண்டு பேரும் உட்கார்ந்திருந்த நாற்காலிகள் இப்போ மதிப்பு வாய்ந்ததா மாறியிருக்கு. மோடியின் பாதுகாப்பு அதிகாரிகள், அந்த இரண்டு நாற்காலிகளையும் தங்களோடு டெல்லிக்கு எடுத்துக்கிட்டுப் போக ஆசைப்பட்டிருக்காங்க. வருவாய்த் துறை அதி காரிகள், இதை முதல்வர் எடப்பாடியின் கவனத் துக்குக் கொண்டு போயிருக்காங்க. எடப்பாடியோ, நாற்காலியை விட்றாதீங்க. அது நமக்கு நினைவுச்சின்னம்ன்னு சொல்லியிருக்கார். அதனால் அந்த டெல்லி அதிகாரிகள் வெறும் கையோடு திரும்பியிருக்காங்க. இந்த நிலையில் காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, இரு நாட்டுத் தலைவர் களும் சந்திச்சது எங்க காஞ்சிபுரம் மாவட் டத்தில்தான். அதனால், அந்த நாற்காலிகளை எங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திலேயே நினைவுச் சின்னமா வச்சிக்கப் போறோம்ன்னு தன் பங்கிற்கு நாற்காலிப் போட்டியில் குதிச்சிருக்கார்''’
""நானும் ஒரு முக்கியத் தகவலைச் சொல்றேன். மோடி தமிழகம் வந்தபோது, அவரை வரவேற்க தமிழிசை ஆதரவாளர்களை அனுமதிக்கலைங்கிற புகார் அமித்ஷாவரை போனது பற்றி ஏற்கனவே நாம் பேசியிருக்கோம். இது தொடர்பா விசாரிக்கும்படி, கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் சொல்லி யிருக்கிறார் அமித்ஷா. இதைத் தொடர்ந்து, பிரதமரை வரவேற்றவர்களின் பட்டியலை யார் தயாரித்தது? சீனியர் தலைவர்களின் பெயர்கள் இதில் எப்படி விடுபட்டது? கட்சியைச் சாராத பிரபலங்கள் பலரும் பிர தமரை வரவேற்கும் பட்டியலுக்கு வந்திருந்தார்களே. அவர்களை எல்லாம் பரிந்துரைத் தது யார் என்பது உள்ளிட்ட கேள்வி களோடு தமிழக பா.ஜ.க. பிரமுகர் களை விசாரிக்கத் தொடங்கியிருக் கிறார் நட்டா.''