வெனிசுலா நாட்டின் மீதான அதிரடித் தாக்குதல் மூலம் அந்நாட்டு அதிபரை சிறைபிடித்த அமெரிக்கா, அடுத்த அதிரடியாக ஈரான் நாட்டின் மீதான அதிரடித் தாக்குதலில் அந்நாட்டின் அதிபர் அயதுல்லா கொமெனி, ராணுவ மந்திரி அசிஸ்நாசிர் நாடே, ராணுவத் தளபதி, கொமேனி குடும்பத்தினர் உள்பட பலரையும் கொன்று குவித்து உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மத்திய கிழக்குப் பதியில் நீண்டகாலமாக அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்துவந்த நாடு ஈரான். அமெரிக்காவை எதிர்த்த ஈராக் என்றோ முடக்கப் பட்டுவிட்டது. சிரியாவையும் சமீபத்தில் வழிக்குக் கொண்டுவந்துவிட்ட அமெரிக்கா, ஈரானை முடக்க தக்க சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.

Advertisment

இந்நிலையில்தான் அமெரிக்காவில் எப்ஸ்டீன் பைல் விவகாரம் வெளிவந்து, ட்ரம்புக்கு குடைச்சலாக ஆனது. இந்தக் கோப்புகளில் பெயர் இடம்பெற்றவர்கள் மீது எதிர்க்கட்சி நடவடிக்கை கோரி வந்தது. அதில் பிரதானமாக இடம் பெற்றிருந்தது ட்ரம்ப் பெயர். அதேசமயம் ஆட்சிக்கு வந்தது முதலே ஒவ்வொரு நாட்டுக்கும் விதவிதமாக டேரிஃப் என்ற பெயரில் வரிவிதித்தார் ட்ரம்ப். இந்நடவடிக்கைக்கு எதிராக பல நிறுவனங்களும், அமெரிக்கர்களும் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், "அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியில்லாமல் வரிவிதிக்க ட்ரம்புக்கு அதிகாரமில்லை' என ட்ரம்பின் நடவடிக்கைகளை செல்லாததாக்கியது.

Advertisment

இதில் பெயர் கெட்டுப்போன வருத்தம், அமெரிக்காவில் இன்னும் இரு மாதத்தில் செனட்டுக்கு நடக்கவிருக்கும் தேர்தலில் பெரும்பான்மை பெறவேண்டும் என்ற கவலை யெல்லாம் சேர, ஈரான் அணுகுண்டு தயாரிப்பதாகக் குற்றம்சாட்டி அந்நாட்டைச் சுற்றியுள்ள தங்களது ஆயுதப்படைத் தளங்களில் கப்பல்களையும், விமானங்களையும் சில வாரங்களாகவே குவித்துவந்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதே அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்துதான் சில மாதங்களுக்கு முன்பு ஈரானில் குண்டு வீசின. குண்டுவீச்சில் ஈரானின் அணு ஆயுதங்களை தயாரிக்குமிடங்களை முற்றாக அழித்துவிட்டதாகப் பெருமை பேசின. இப்போது, திரும்பவும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகக் குற்றம்சாட்டி சுற்றி வளைத்தது விமர்சனத்துக்குள்ளாகியது.

Advertisment

iran-us1

அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களது உயர்தர தொழில்நுட்பத்தால் ஈரானுக்கு வெளியிலிருந்தபடியே ஈரான் பெருந்தலைவர்களின் நகர்வுகளை பல மாதங்களாக உளவு பார்த்தபடியே இருந்தன. அதனால்தான் போரை எப்படி எதிர்கொள்வது எனத் திட்டமிட ஆலோசனைக் கூட்டத்திலிருந்த ராணுவத் தளபதி, ராணுவ மந்திரி, அயதுல்லா கொமேனி, அவரது மருமகன், மகள், பேரன் உள்பட அனைவரையும் ஒரே தாக்குதலில் அழிக்க முடிந்திருக்கிறது. 

கொமேனியும் உயரதிகாரிகளும், குண்டு களைத் தாக்குப் பிடிக்கக்கூடிய பதுங்குகுழிகளைப் பயன்படுத்தலாம் என்பதை அமெரிக்கா யூகித் திருந்தது. இதனால் யாரும் தப்பித்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில், அவர்கள் இருந்த மாளிகையின் மீது 30 குண்டுகள் வீசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேல் தலைவர்கள் மட்டுமின்றி, தொடக்கப் பள்ளி மாணவிகள் 165க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது உலகை அதிரவைத்திருக்கிறது. தலைவர்கள் இறந்தபோதும், ஈரான் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், அமெரிக்காவுக்கு ஆதர வளிக்கும் ஆயுதத்தளங்கள் அமைந்திருக்கும் நாடுகளையும், அமெரிக்க கப்பல்களையும் தொடர்ந்து மூர்க்கமாகத் தாக்கிவருகிறது.

ஈரானின் தாக்குதலில் அரேபிய வளைகுடா வில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் நவீன போர்க்கப்பலான ஆபிரகாம் லிங்கன் சேதமடைந் துள்ளது. மறுபுறம் அமெரிக்காவுக்குத் துணை நிற்கும் இஸ்ரேல், யு.ஏ.இ., குவைத் போன்ற நாடுகளைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசிவருகிறது. ஈரான் சரணடைய விரும்புவதாக வும், அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்கான பேச்சுக்கு ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அமெரிக்கத் தரப்பில் சொல்லப்பட்டாலும் ஈரானுக்கு அத்தகைய நோக்கமிருப்பதாகத் தெரியவில்லை.

இறந்த கொமெனியின் மகன் முஸ்தபா அடுத்த தலைவராக வரலாமென்ற யூகங்கள் பரவிவரும் நிலையில், "வரம்பு மீறிவிட்டது அமெரிக்கா. இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்'” என ஈரான் எச்சரித்துள்ளது. ஆனால் ஈரானின் அணு ஆயுத விஞ்ஞானிகள், ராணுவத் தளபதிகள் பலரையும் இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து சமீபத்தில் கொன்றன. அணு மையம் அமைந்திருப்பதாக சந்தேகித்த இடத்தின்மீது குண்டுவீசின. அதற்கான பழிவாங்கலையே ஈரான் செய்து முடிக்காதபோது, தற்போதைய விவகாரத்தில் அமெரிக்காவைப் பழிவாங்குவதென்பது சாத்தியமற்றதுதான்.

அதிகபட்சம் இஸ்ரேல், அமெரிக்க கடற்படைத் தளங்கள்மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுக்கலாம். அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்கு கடைசிவரை இணங்காமல் தாக்குப்பிடிக்கலாம். இந்தப் போர் ஈரானுக்கு தேவையற்ற ஆடம்பரம். தற்போதைக்கு போர் நிறுத்தமும், பொருளாதாரச் சீர்திருத்தமுமே அவர்களது உடனடித் தேவை.

மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்கள் கடல்வழி பயணிக்கும் கோர்முஸ் ஜலசந்தி ஈரானின் தாக்குதலுக்கு எட்டும் இடத்தில் அமைந்திருப்பதுதான் சிக்கல். இந்தப் பாதையை ஈரான் சில மாதங்களுக்கு முடக்கினாலும், அதனால் பெட்ரோலியத் தட்டுப்பாடு ஏற்பட்டு கச்சா எண்ணெய் விலை உயர வழிவகுக்கும். 

இஸ்ரேல் -ஈரான் விவகாரத்தில் எந்தத் தரப்பையும் எடுக்காமல் இந்தியா நடுநிலை வகிப்பதுதான் வாடிக்கை. ஆனால் சமீபமாக இஸ்ரேல் ஆதரவுத் தரப்பை எடுத்துவருவதை எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.

இந்தப் போர் உலகப் போராக மாறிவிடக் கூடாது என உலக நாடுகள் கவலையடைந்துள்ளன.