"நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?'' என்ற கேள்விக்கு, "வீட்டுல சும்மாதான் இருக்கேன்'' என்பதையே பதிலாகச் சொல்லிப் பழகிவிட்டார்கள் நம் இல்லத்தரசிகள்... உண்மையில் வீட்டில் காலையில் எழுந்ததிலிருந்து சமையல் வேலை, துணி துவைக்கும் வேலை, பாத்திரம் துலக்குவது, வீட்டை சுத்தம் செய்வது, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருவதென வீட்டிலிருக்கும் பெண்கள் செய்துவரும் பணிகள் கணக்கிலடங்காதவை. இவ்வளவையும் செய்துவிட்டு, "நான் வீட்ல சும்மாதான் இருக்கிறேன்'' என்று சொல்வதன் கார ணம், அவர்களுக்கென ஓர் அங்கீகாரம்... வருமானம் இல்லாதிருப்பது தான். எனவே தான் பெண்களின் நலனில், சம உரிமையில் அக்கறை கொண்ட, சமூக நீதி பேசும் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையிலேயே, இல்லத்தரசிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "ஒன்றிய அரசால், பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் என்பது, அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும். சிறப்புமிக்க இந்தத் திட்டம், கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் எனச் சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் முதல் முதல்வரால் தொடங்கிவைக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாடு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது'' என்று அறிவித்துள்ளார். இத்திட்டத்தால், தோராயமாக 1 கோடி இல்லத்தரசிகள் பயனடை யக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
முன்னதாக, தேர்தலில் வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதுமே உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகுமென்று எதிர்பார்க் கப்பட்டது. ஆனால், மகளிர் இலவசப் பேருந்துத் திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், உரிமைத்தொகை குறித்து எது வும் குறிப்பிட வில்லை. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற தருணத்தில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. அதனைக் கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் இருந்த சூழலில், முன்னர் இருந்த எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வும் பெருத்த கடன்சுமையை வைத்துவிட்டுச் சென்றதன் காரணமாக, நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது.
எனவே உரிமைத்தொகை குறித்து எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், உரிமைத்தொகையை மட்டுமே பூதாகரமாக்கிய அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் எதையுமே தி.மு.க. நிறைவேற்றவில்லை என்று ஒட்டுமொத்தமாகக் குற்றம் சுமத்தியது.
இந்நிலையில் ஈரோடு இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த அமைச்சர் உதயநிதி, இன்னும் சில மாதங்களில் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார். இறுதி நாளில் பிரச் சாரத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டா லின், "தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ள பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1000 உரிமைத் தொகையை, நிதிநிலைமை சரியாக இருந்திருந் தால், உடனே வழங்கி இருப்போம். இருப்பினும், மார்ச் மாதம் நிதி நிலை அறிக்கையில், பெண்களுக்கான உரிமைத் தொகை ரூ.1000 எப்போது வழங்கப்படும் என அறிவிக்கவுள் ளோம்'' என்று தெரிவித்தார். உடனே அவரது பேச்சுக்கெதிராக அ.தி.மு.க. தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தது. இந்நிலையில் தான் பட்ஜெட்டில் இல்லத்தரசிகளுக்கு உரிமைத்தொகை அறிவிப்பு வெளிவந்துள்ளது.
உரிமைத்தொகை குறித்து பெண்ணிய எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி கூறுகையில், "இல்லத்தரசிகளுக்கு உரிமைத்தொகை என்பது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. தகுதியான பெண்களுக்கு என்று குறிப்பிடப்பட்டி ருப்பதைவைத்து நிறைய கேலி பேசுகிறார்கள். தகுதியான பெண்களுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும், நிறைய சம்பாதிக்கும் பெண்களுக்கும் இது தேவைப் படாது. விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய, ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய பெண்களுக் கெல்லாம் கொடுக்கப்பட வேண்டியது கட்டாயம். பொதுவாக வீட்டிலிருக்கும் பெண்களுக்கு, வீட்டுச் செலவுக்கென்று பணம் தருவார்களே தவிர, உனக்கே உனக்கென்று பெண்களின் செலவுக் கென்று கொடுப்பவர்கள் எத்தனை பேர்? எனக்கிருக்கும் ஒரே கவலை, இந்தப் பணத்தையும் ஆண்கள் அடித்துப் பிடுங்கிக் கொள்ளக்கூடாது என்பதே!
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மகளிர் இலவசப்பேருந்துத் திட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதம். நிறைய பெண்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். எந்த பஸ்ஸிலாவது மாறிமாறி போயிடுறேன். சீக்கிர மாகவும் எந்த இடத்துக்கும் போக முடியுது. அதனால் வீட்டுலேயே அடைஞ்சு கிடக்காமல் சும்மாவாவது வெளியே சென்றுவரவும் முடியுது என்றும் சொல்கிறார்கள். இதெல்லாம் மிகப்பெரிய மாற்றம். பெண்களுக்கு இயல்பாகவே சேமிப்புப்பழக்கம் இருக்கிறது. செலவழிக்க மாட்டார்கள். ஊதாரித்தனம் என்பது பெண் களுக்கு ரத்தத்திலேயே கிடையாது. அவங் களுக்குக் கிடைக்கும் பணத்தை சிறுவாடு சேர்க்கக்கூடிய பழக்கமுண்டு. அவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்'' என்றார். உண்மை தான். இல்லத்தரசிகளின் சேமிப்புக்கும், சிக்கனமான செலவுகளுக்கும் இந்தத் தொகை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை மறுக்க இயலாது!