தேர்தல் முடிந்தும் ஏற்கனவே பணிபுரிந்த காவல் நிலையங்களுக்கு பணி மாறுதல் கிடைக்காததால் வீட்டையும் மாற்ற முடியாமல் குழந்தைகளை யும் பள்ளி, கல்லூரிகளில் சேர்க்க முடியாமல் இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் குழப்பத்தில் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். இதில், பெரிதும் பாதிக்கப்படுவது மகளிர் இன்ஸ்பெக்டர்கள்தான்.
இதுபற்றி, "தேர்தல் முடிந்தும்… பணிக்கு திரும்பாத இன்ஸ்பெக்டர்கள்,…டி.எஸ்.பி.க்கள்! -குமுறும் மகளிர் இன்ஸ்பெக்டர்கள்!' என்ற தலைப்பில் 2019 ஜூன் 14-ந் தேதி நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதுகுறித்து, நம்மிடம் பேசும் மகளிர் இன்ஸ்பெக்டர்களோ, ""தேர்தல் நடத்தை விதிகளின் காரணமாக ஒரே இடத்தில் மூன்று வருடங்கள் பணியாற்றிய எஸ்.ஐ.க்கள், இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்கள் பணிமாறுதல் செய்யப்பட்டார்கள். உதாரணத்துக்கு, கன்னியாகுமரியிலிருந்து மதுரை மாவட்டத்திற்கும், திருநெல்வேலியிலிருந்து இராம நாதபுரம் மாவட்டத்திற்கும் என மாற்றப்பட்டோம். இது தேர்தலுக்கான தற்காலிக மாறுதல் என்பதாலும், பிள்ளைகளின் படிப்பு காரணமாகவும் வீடுகளை காலி செய்யவில்லை. பணி நியமனம் செய்யப்பட்ட ஊர்களில் தற்காலிக ஏற்பாடு செய்து தங்கி பணிபுரிந்தார்கள். இந்த இடமாறுதல் காரணமாக ஆண் அதிகாரிகளைக் காட்டிலும் பெண் அதிகாரிகளே அதிகம் சிரமப்பட்டோம். தேர்தல் முடிந்ததும் எஸ்.ஐ.க்கள் எல்லோரும் தங்கள் பழைய பணியிடங்களுக்கு திரும்பிவிட்டார்கள். ஆனால், இன்ஸ்பெக்டர்களும், டி.எஸ்.பி.க்களும் மட்டும் தேர்தல் பணிமுடிந்து 20 நாட்கள் ஆகியும் பழைய பணியிடங்களுக்கு செல்லமுடியாமல் இருக்கிறோம்.
குடும்பத்தினரைப் பிரிந்து பல்வேறு சிக்கல்களை அனுபவித்து வருகிறோம். நாங்கள் பணிமாறுதலுக்கு உட்பட்டவர்கள் என்பதால் தற்போது பணிபுரியும் இடங்களில் உள்ள எஸ்.ஐ. மற்றும் போலீஸார் எங்கள் உத்தரவுகளை கேட்பதே இல்லை. அவர்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இவற்றை உயரதிகாரிகளிடம் கூறினால், "டி.ஜி.பி. உத்தரவு வந்ததும் மாற்றுகிறோம்' என்கிறார்கள். ஆனால், முதல்வரின் மாவட்டத்தில் மட்டும் தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் பழைய இடங்களுக்கே பணிமாறுதல் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. போராட்டம் அறிவித்த வருவாய்ப் பணியாளர்களும் பணிமாறுதல் பெற்றுவிட்டார்கள். போலீஸ் அதிகாரிகள் போராட மாட்டார்கள் என்பதால் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்''’என்று மகளிர் இன்ஸ்பெக்டர்கள் குமுறுகிறார்கள்.
மகளிர் அதிகாரிகளுக்கு உள்ள இதே கஷ்டங்கள்தான் ஆண் அதிகாரிகளுக்கும் இருக்கிறது. வாட்ஸ்-ஆப் குரூப்களில் உலவும் இந்தச் செய்திகள் குறித்து, ஐ.ஜி.க்கள் மற்றும் ஏ.டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு), ஏ.டி.ஜி.பி. (அட்மின்) ஆகியோரை தொடர்புகொண்டு கேட்டோம்.
மேற்கு மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் ஐ.பி.எஸ்.: ""கூடிய சீக்கிரம் பழைய இடங்களுக்கு மாத்திடுவாங்க. மேக்ஸிமம் ஒரு வாரத்துல மாத்திடுவாங்க'' என்றார்.
மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜ் ஐ.பி.எஸ்.: ""பழைய இடங்களுக்கு மாற்றுவதற்கான மேலிட உத்தரவுக்காக காத்திருக்கோம். இந்த வாரத்துக் குள்ள வந்துடும்'' என்றார்.
மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா ஐ.பி.எஸ்.: ""வில்லிங்னெஸ் கொடுக்கிறவங்களுக்கு பழைய இடங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் போட்டுட்டோம். புது இடம் பிடிச்சிருக்குன்னா அங்கேயும் பணி வழங்குறோம். குறிப்பா ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் டி.ஐ.ஜி. மூலமா இன்ஸ்பெக்டர்களுக்கு ட்ரான்ஸ் ஃபர் போட்டுட்டோம்'' என் றார்.
வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜ் ஐ.பி.எஸ்.ஸை தொடர்புகொண்டபோது, ""எஸ்.ஐ.களுக்கு பணி மாறுதல் கொடுத்துவிட்டோம். அடுத்தது இன்னும் மூன்று, நான்கு நாட் களில் இன்ஸ்பெக்டர்களுக்கு பணி மாறுதல் கொடுத்துவிடு வோம்'' என்றார்.
"தேர்தல் முடிந்தும் பணிமாறுதல் கொடுக்காமல் இருப்பது ஏன்' என்று ஏ.டி.ஜி.பி. (சட்டம்- ஒழுங்கு) ஜெயந்த் முரளி ஐ.பி.எஸ்.ஸிடம் கேட்ட போது, ""விரைவில் பழைய இடங்களுக்கு திரும்புவார்கள். அதற்கென இருக்கும் ஏ.டி.ஜி.பி. நடவடிக்கை எடுத்துவருகிறார்'' என்றார்.
ஏ.டி.ஜி.பி. (அட்மின்) கந்தசாமி ஐ.பி.எஸ்.ஸிடம் கேட்டபோது, ""நேற்றே அதற் கான இன்ஸ்ட்ரக்ஷன்களை கொடுக்க தொடங்கிவிட்டேன். விரைவில் பணிமாறுதல் பெறு வார்கள்'' என்றார்.
தினம் தினம் மகளிர் இன்ஸ்பெக்டர்கள் கண்ணீருடன் ஐ.ஜி., டி.ஐ.ஜி.க்களிடம் மனு கொடுக்கிறார்கள். தங்களுடைய குடும்பச்சூழலை உயரதிகாரிகள் கருத்தில் கொள்வார்கள் என்று நம்பியிருக்கிறார்கள்.
-மனோசௌந்தர்