ரண்டொரு வாரங்களுக்கு முன்பு வடுகப்பட்டி திடீரென பரபரப்பானது. துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.ஸின் சொந்த ஊரான பெரியகுளத்தைச் சேர்ந்த அல்சுமையா பெண்கள் காப்பகத்திலிருந்து இரண்டு பெண்கள் பதற்றத்துடன் தப்பி ஓடிவந்தனர். ஊர் மக்களைத் தஞ்சமடைந்தவர்கள், "எங்களை காப்பகத்தில் கொடுமைப்படுத்துகிறார்கள்' என கதறியழுதனர். சற்றுநேரத்தில் தப்பி ஓடியவர்களைத் தேடிவந்த காப்பக நிர்வாகிகளை, அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்ததுடன், அந்த காப்பகம்மேல் நடவடிக்கை தேவையென சாலைமறியலிலும் குதித்தனர்.

Advertisment

ops-home

அங்கே என்னதான் நடந்தது?

பதினைந்து வருடங்களுக்கு முன்பு பெரியகுளம் பாரதி நகரில் அல்சுமையா பெண்கள் காப்பகத்தைத் திறந்துவைத்தவர் இன்றைய துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.தான். இந்தக் காப்பகத்தில் பல மாவட்டங்களையும் சேர்ந்த முஸ்லிம் விதவைகள், அநாதைகள், காதல் பிரச்சனையில் சிக்கிய பெண்கள் என பத்துவயது முதல் ஐம்பது வயது வரையிலான பெண்கள் இருக்கிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களையும் இந்த காப்பகத்தில் கொண்டுவந்து சேர்க்கிறார்கள்.

muslim-women

Advertisment

இரண்டு மாதங்களுக்கு முன்பு காதல் பிரச்சினையில் சிக்கிய கோவையைச் சேர்ந்த அஸ்மாவும் நெய்வேலியைச் சேர்ந்த நிகாநத்தும் அவர்களது குடும்பத்தாரால் கொண்டுவந்து சேர்க்கப்பட்டனர். இருவருமே இந்துப் பையன்களைக் காதலித்ததால், அதைத் தடுக்க பெற்றோரால் கொண்டுவந்து சேர்க்கப்பட்டவர்கள்.

நிகாநத்தும், அஸ்மாவும் ஏப்ரல் 11-ஆம் தேதி அதிகாலை வாக்கிங் கிளம்பியவர்கள், சுவர் ஏறிக்குதித்து தப்பிச்சென்றிருக்கிறார்கள். அப்படி தப்பியவர்கள் வடுகப்பட்டி மக்களைத் தஞ்சமடைய, விவகாரம் பரபரப்பானது. மீட்கவந்த அப்துல் காதரையும் காதர்மைதீனையும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கை என்னவென தெரிந்துகொள்ள தேனி மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ராமலட்சுமியைச் சந்தித்தோம். “""நாங்க விசாரித்தவரை காப்பகத்தில் சரியாக சாப்பாடு போடப்படவில்லை. வேலைகள் நிறைய வாங்குவதாகக் கூறினார்கள். ரம்ஜான் என்ற பெண் அந்தப் பெண்பிள்ளைகளை இரவுநேரங்களில்கூட சரிவர தூங்கவிடாமல் டார்ச்சர் பண்ணுவதாகக் கூறினார்கள். அந்தப் பெண்களின் உடம்பில் சில லேசான டார்ச்சர் தழும்புகளும் காணப்பட்டன. காப்பக நிர்வாகிகளிடம் இதைச் சொன்னாலும் கண்டுகொள்வதில்லையாம். இரவுநேரங்களில் ஏதோ ஒரு மருந்தை தண்ணீரில் கலந்துகொடுத்துவிடுவதாகச் சொன்னார்கள். அதுபற்றி விசாரிக்கவேண்டும். பாலியல் தொந்தரவை உறுதிப்படுத்தும் தகவல் ஏதும் அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் இருவரையும் தற்சமயம் அரசுக் காப்பகத்தில் வைத்திருக்கிறோம். விரைவில் அவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க உள்ளோம்''’என்கிறார்.

Advertisment

muslimsஜாமீனில் வெளிவந்திருக்கும் காப்பக நிர்வாகிகளில் ஒருவரான அப்துல் காதரிடம் விசாரித்தபோது, “""இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மறுவாழ்வு மையம் இருப்பதுபோல், முஸ்லிம் பெண்களுக்கான மறுவாழ்வு இல்லமாக இதனை அமைத்திருக்கிறோம். தலாக் சொல்லிவிட்டு ஆதரவில்லாமல் வரும் பெண்களை மறுமணம் செய்துதருகிறோம். இங்குவரும் பெண்கள் அனைவரும் துணிகளை அவரவரே துவைத்துக்கொள்ள வேண்டும். அதோடு ஷிப்ட் அடிப்படையில் காப்பகப் பணிகளையும் செய்யவேண்டும். இங்குள்ள யாரும் பெண்களை அடிப்பது கிடையாது. மாதம் ஒருமுறை பெற்றோர் வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். சம்பந்தப்பட்ட அந்தப் பெண்கள் காதல் பிரச்சினையால் இங்குவந்தவர்கள். இங்கு இருக்கப் பிடிக்கவில்லை. அதனால் தப்பி ஓடியதோடு பொய்யான தகவல்களையும் பரப்பி எங்களையும் அசிங்கப்படுத்திவிட்டனர்''’என்கிறார்.

அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளரான அகமது முஸ்தபா, “""வடுகப்பட்டி இந்து இயக்கங்களுக்கும் எங்களுக்கும் எப்போதுமே ஆகாது. தற்சமயம் இந்தப் பிரச்சினையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர். தப்பி ஓடிவந்த பெண்களையும், நிர்வாகிகளையும் போலீஸில் பிடித்துக்கொடுத்தால், அவர்கள் விசாரித்து உண்மையைத் தெரிந்துகொள்ளமாட்டார்களா? அதை விட்டுவிட்டு காட்டுமிராண்டிகள்போல் ஏன் நிர்வாகிகளையும் அவர்களது வண்டிகளையும் தாக்கவேண்டும். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரியகுளத்தில் சாலைமறியல் செய்ததோடு காவல்நிலையத்திலும் புகார் கொடுத்திருக்கிறோம். பதிலுக்கு பி.ஜே.பி.யைச் சேர்ந்த ராஜபாண்டி மற்றும் சில இந்து அமைப்புகள் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். இந்து அமைப்புகளின் தேவையற்ற தலையீடு காலப்போக்கில் வீணான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்’’ என கவலையுடன் பேசுகிறார்.

பா.ஜ.க.வின் தேனி பாராளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளரான ராஜபாண்டியிடம் காப்பக நிர்வாகிகளைத் தாக்கியது ஏனெனக் கேட்டபோது, ""பா.ஜ.க.வோ வேறெந்த இந்து அமைப்புகளோ இந்த விஷயத்தில் தலையிடவில்லை. ஆனால் நாங்கள்தான் தூண்டிவிட்டதாக வாட்ஸப்பில் தகவலைப் பரப்பினர். தப்பி ஓடிவந்த பெண்கள் சொன்னதைக் கேட்டு அப்பகுதி மக்கள்தான் தேடிவந்தவர்களை அடித்தனரே தவிர, இந்து அமைப்பினர் யாரும் அடிக்கவில்லை.

அந்தக் காப்பகத்திலிருந்து பெண்கள் தப்பி ஓடிவருவது இது முதல் முறையில்லை. ஏற்கெனவே இரண்டுமுறை பெண்கள் தப்பி ஓடிவந்திருக்கின்றனர். அப்போதும் இந்தக் காப்பக விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தப் பெண்கள் காப்பகத்தை நடத்துவதற்கான முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக நடத்திவருகிறார்கள்''’என்கிறார்.

காவல்துறை, காப்பக நிர்வாகிகளிடமிருந்து முழுமையாக விவரங்கள் வெளிவராத நிலையில், முறையான விசாரணை நடத்தி அரசுதான் சந்தேகத்தைத் தீர்க்கவேண்டும். ஒரு சிறு பொறியில்தான் பெருந்தீயும் பற்றியெரியும். துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.ஸின் ஊரில் அதற்கு இடமளித்துவிடக்கூடாது.