மிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் கூட்டணிகளில் தொகுதி உடன்பாடு இன்னும் எட்டப்படாமல் இருக்கிறது. இதனால், கூட்டணிகள் அப்படியே நீடிக்குமா? அல்லது சிதறுமா? என்கிற கேள்விகள் தமிழக அரசியலில் பலமாக எதிரொலிக்கும் சூழலில், தி.மு.க. கூட்டணியை மையப்படுத்தி ராகுல்காந்திக்கும், சோனியாகாந்திக்கும் கருத்து வேறுபாடுகள் உருவாகியிருப்பதாக டெல்லி யிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. 

Advertisment

தி.மு.க. கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் கட்சி, இந்த முறை தி.மு.க.விடம் அதிக இடங்களையும் ஆட்சியில் பங்கையும் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் களிடம் மூன்றுகட்ட ஆலோசனையை நடத்தி முடித்திருக்கிறார் ராகுல்காந்தி. 

Advertisment

அந்த ஆலோசனைகளில், கூட்டணியை மாற்ற வாய்ப்பு இருக்கும்போது தி.மு.க.வை மட்டுமே நம்பியிருக்கத் தேவையில்லை. வெறும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு எந்த வளர்ச்சியும் தமிழகத்தில் காங்கிரஸ் அடைந்துவிடவில்லை. ஆட்சி அதிகாரம் இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். இழப்பதற்கு ஏதுமில்லாதபோது மாத்தி யோசிப் பது காங்கிரஸுக்கு அவசியம் என்கிற யோசனை களே சீனியர் லீடர்களால் முன்வைக்கப்பட்டன.

இதனை ஏற்றுக்கொண்ட ராகுல்காந்தி, அதற்கேற்ப தி.மு.க.விடம் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அதனால்தான், டெல்லியில் தன்னை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் சொல்லி யனுப்பிய தகவல்களை தி.மு.க. எம்.பி. கனிமொழி பகிர்ந்துகொண்டபோது கூட, பிடி கொடுக்காமல் பேசிய ராகுல்,  பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்காமல் இருக்கும் தி.மு.க. வின் செயல்களில் வருத்தமடைவதாகவும் சுட்டிக்காட்டினார். 

Advertisment

ராகுல் -கனிமொழி சந்திப்பிற்கு பிறகும் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணிக்குள் ஒரு சுமுகமான சூழல் உருவாகவில்லை. அதேசமயம், கூட்டணியில் உருவாகும் சிக்கல்களை சோனியாவின் கவனத்துக்கு சீக்ரெட்டாக கொண்டுசென்றுள்ளது தி.மு.க.  இதனையடுத்து ராகுல்காந்தியிடம் தீவிரமாக ஆலோசித்திருக்கிறார் சோனியாகாந்தி. 

இதுகுறித்து டெல்லி சோர்ஸ்களிடம் விசா ரித்தபோது, "தி.மு.க.வுடன் ராகுல் முரண்படுவது குறித்து அவரிடம் விசாரித்தார் சோனியா. அப்போது, ஸ்டாலின் என்னுடைய மூத்த சகோதரர் மாதிரி. அவருடன் முரண்பட என்னி டம் தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை. ஆனால், தேர்தலை மையப்படுத்தி காங்கிரசின் வளர்ச்சிக்காக சில முடிவுகளை முன்னெடுக் கிறோம். அதுவும் கூட தமிழக காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளின் கருத்துக்களை அறிந்து அதன் படிதான் முடிவு எடுக்கப்படுகிறது. அப்படி எடுக்கப்பட்டதுதான், அதிக இடங்கள்; ஆட்சியில் பங்கு என்கிற யோசனை. இதனை செயல்படுத்துவது பற்றி தி.மு.க.விடம் பேசினால், அதனை ஏற்க மறுக்கின்றனர். கட்சியின் வளர்ச்சி, நலன் குறித்து தேர்தல் சமயத்தில்தானே சிந்திக்க வேண்டியதிருக்கிறது'' என சோனியாவிடம் விளக்கமளித்திருக்கிறார் ராகுல்காந்தி. 

அதனைக் கேட்ட சோனியா, "நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், தி.மு.க.விடம் இதனை வலியுறுத்துமளவுக்கு தமிழகத்தில்  காங்கிரசை வளர்த்திருக்கிறார்களா? இல்லை. அவர்களுக்காக தி.மு.க.விடம் பகைமையை உருவாக்கிக்கொள்ள வேண்டுமா? நாடாளுமன்றத்தில் அசகாய சூரர்களை (பா.ஜ.க.) எதிர்க்க காங்கிரசுடன் கைகோர்த்து வருகிறது தி.மு.க. இந்த நட்பில் விரிசலை நாம் ஏன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்? தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கியது நான். அந்த கூட்டணி உடையக் கூடாது. நமக்கும் நமக்குப் பின்னாலும் இந்த கூட்டணி எந்த சூழலிலும் உடையாதுன்னு கலைஞருக்கு உறுதி கொடுத்திருக்கிறேன். அதே உறுதிமொழியை ஸ்டாலினுக்கும் கொடுக்க வேண்டும். தி.மு.க. மனம் வருந்தும்படி நடந்துகொள்ள வேண்டாம்'' என ராகுலுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார் சோனியா. 

ஆனால், இதனை ஏற்க மறுத்த ராகுல்காந்தி, தி.மு.க.வின் தோழமையாக நாம் இருக்கிறோம். ஆனால், கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சியும் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் நம்முடன் தி.மு.க.  கலந்து பேசுவதில்லை. அவர்களாகவே ஒரு முடிவை எடுத்து அறிவித்துவிட்டு அதனை நம்மிடம் திணிக்கிறார்கள்.  இது ஆரோக்கியமான விசயமில்லையே. அதனால், கடந்தகால தவறுகளை மீண்டும் செய்யாமல், இந்தமுறை கட்சியின் வளர்ச்சிக்கு எது முக்கியமோ அதை தீர்மானிப்பது தான் சரி என சீனியர்களில் ஓரிருவரைத் தவிர எல்லோரும் வலியுறுத்துகின்றனர். 

அந்த வகையில், நமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தி.மு.க. ஒப்புக்கொண்டால் கூட் டணியை தொடரலாம். இல்லையெனில், மாற்று யோசனையாக விஜய்யுடன் கூட்டணி வைக்க லாம். தமிழகத்தின் களநிலவரம் தற்போது மாறியிருக்கிறது. இதுவரை தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் சக்தியுள்ள ஒருவர் களத்தில் இல்லாததால் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் மாத்தி மாத்தி ஓட்டுபோட்டு வந்துள்ளனர். தற்போது விஜய் களத்திற்கு வந்திருப்பதால் அவர் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறார். அதனால், விஜய்யுடன் கூட்டணி வைத்துக் கொள்ள இருக்கும் வாய்ப்புகளை நாம் ஏன் உதற   வேண்டும்?, என விஜய்யை உயர்த்திப் பிடித்துள் ளார் ராகுல். ஆனாலும், இதற்கு சோனியாகாந்தி சம்மதிக்கவில்லை''’என்று டெல்லி சோர்ஸ்கள் விவரிக்கிறார்கள். 

இப்படி ஸ்டாலினை சோனியாவும், விஜய்யை -ராகுலும் ஆதரிப்பதால் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணிக்குள் சர்ச்சைகள் வெடித்தபடி இருக்கும் அதேசூழலில், அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியிலும் சர்ச்சைகள் ஓயவில்லை. கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார்? என்கிற விவகாரம் தொடங்கி, அ.தி.மு.க.வுக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் நாங்கள்தான் சீட் எண்ணிக்கையும், தொகுதிகளையும் முடிவுசெய்வோம் என்பதுவரை எடப்பாடி பழனிச்சாமியிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. அதனாலேயே, இப்போதுவரை ஒப்பந்தம் போடப்படாமல் இருக்கிறது. 

ஆக, பிரதான கட்சிகளின் கூட்டணிக்குள் சிக்கல்கள் ஓயாததால் விஜய் பக்கம் விசில் சத்தம் ஓவராக இருக்கிறது!