கோவில் கருவறையில் இருக்கவேண்டிய அர்ச்சகர் ராம்ஜி, புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அரபு நாடுகளுக்கு பல்வேறு வேலைகளுக்காக ஆட்களை அனுப்பும் தொழிலை செய்து வந்திருக்கிறார் அசோக் நகர் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் ராம்ஜி. ராயபுரத்தை சேர்ந்த அப்துல் என்பவருடன் ராம்ஜிக்கு நட்பு உருவாகிறது. வெளிநாடுகளில் வேலைதேடும் ஆட்களை அழைத்து வந்தால் அவர்களுக்கு archagarவேலை வாங்கித்தருவதுடன், உங்களுக்கு நல்ல கமிஷன் தருவதாகவும் அப்துலுக்கு வலை விரித்துள்ளார் ராம்ஜி. அதில் மயங்கிய அப்துல், கனடா மற்றும் ஜப்பானில் டிரைவர் மற்றும் ஜெனரல் வொர்க்கர் வேலைகளுக்கு 5 நபர்களை ராம்ஜிக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அந்த 5 நபர்களிடமிருந்து தவணைமுறையில் அப்துல் மூலமாக 17 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் வசூலித்திருக்கிறார் ராம்ஜி.

மூன்று மாதங்களில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி தந்த அர்ச்சகர் ராம்ஜி, வேலையும் தரவில்லை, சொன்னபடி பணத்தைத் திருப்பியும் தரவில்லை. அர்ச்சகரை அணுகிய அப்துல், "போலீசில் புகார் கொடுப்பேன்' எனச் சொல்ல... அப்போது ராம்ஜியும் அவரது நண்பர் தயாளனும் அப்துலை மிரட்டியுள்ளனர். அதில் பயந்துபோன அப்துல், ராயபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளது போலீஸ்.

இதனால், ஜார்ஜ்டவுன் மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தை அப்துல் அணுக, மோசடியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது கோர்ட். அதன்பிறகே, வழக்குப் பதிவு செய்த ராயபுரம் போலீஸார், பணம் கொடுத்ததற்கான அப்துல் வசமிருந்த ஆதாரங்களை ஆய்வு செய்தனர். மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதால், அர்ச்சகர் ராம்ஜியை அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளது போலீஸ். ராம்ஜியை மீட்க பா.ஜ.க. தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட, தலைமறைவாகிவிட்ட அவரது கூட்டாளியான தயாளனை தேடிவருகிறது காவல்துறை.

-இளையர்.