திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்ட மன்றத் தொகுதி தனித் தொகுதியாக இருந்துவருகிறது. 1957, 1962, 1967, 1971 தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்றது. 1977-ல் இருந்து அ.தி.மு.க. தொடர்ச்சியாக வெற்றி பெற்றுவந்தது. காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைத்தாலும் இத்தொகுதியை தன் கட்சிக்காக வாங்கி போட்டியிட்டு வெற்றி பெற்றுவந்தது. ஒருகட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே இத்தொகுதியை காங்கிரஸுக்கே தந்துவந்தன. 30 ஆண்டுகளுக்குப் பின் 1996-ல் தி.மு.க. நன்னன் வெற்றிபெற்றார். அதன்பின் மீண்டும் 20 ஆண்டுகளாக கூட்டணிக்கே ஒதுக்கிவந்தது. 2016 சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. நேரடியாகப் போட்டியிட வேண்டுமென மு.பெ.கிரியை வேட்பாளராக்கி, வெற்றிபெறவைத்தார் மா.செ.வும், அமைச்சரு மான எ.வ.வேலு. 2021-ல் மீண்டும் சீட் வாங்கி இத்தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றிபெற்று சிட்டிங் எம்.எல்.ஏ.வாக வலம்வருகிறார் மு.பெ.கிரி. 

Advertisment

தேர்தலின்போது மக்களிடம் தந்த வாக்குறுதியில், செங்கத்தில் அரசு கலைக் கல்லூரி, சாத்தனூர் அணை சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் என்ற இரண்டும் நிறைவேற்றப் பட்டது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. தண்டராம்பட்டு ஒன்றியத்தி லிருந்து பிரித்து தானிப்பாடி ஒன்றியம் உருவாக்குவேன், தண்டராம்பட்டு, தானிப்பாடியை பேரூராட்சியாக மாற்றுவேன், குரும்பர் இன மக்க ளுக்கு எஸ்.டி. சான்றிதழ் வாங்கித் தருவேன் எனச் சொன்னதை செய்யவில்லை என்கிற அதிருப்தி இப்பகுதி மக்களிடம் உள்ளது. 

Advertisment

அதேபோல் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள், பல லட்சம் மக்களின் தாகத்தைப் போக்கும் சாத்தனூர் அணை 40 அடிவரை சகதியால் நிரம்பியுள்ளது. தூர் வாரப்படும் என்று சொன்னதைச் செய்யாததால் பாசன வசதி   பெறும் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். தொகுதியின் ஒன்றியச் செயலாளர்கள் சிலர், எம்.எல்.ஏ. எங்களை அவமானப்படுத்துகிறார், பழிவாங்குகிறார் என அமைச்சரின் மகன் கம்பன் வழியாக அமைச்சரிடம் கூறியுள்ளனர். இதனால் வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரும், தெற்கு மா.செ.வும், அமைச்சருமான எ.வ.வேலு, எம்.எல்.ஏ. கிரி மீது அதிருப்தியில் இருக்கிறார் என்கிற தகவலும் கட்சி வட்டாரத்தில் உள்ளது. மேலிடத்தின் நேரடிப் பார்வையில் தான் இருப்பது, தற்போது கட்சியில் தெற்கு மாவட்ட துணைச்செயலாளராக இருப்பது, தொகுதியில் தனக்குள்ள செல்வாக்கு போன்றவற்றால் மூன்றாவது முறையாக சீட் கிடைக்கும் என கிரி நம்புகிறார். 

புதுப்பாளையம் ஒ.செ. சுந்தரபாண்டியன், “"40 ஆண்டுகளாக கட்சியில் ஒன்றிய மாணவரணிச் செயலாளர், இளைஞரணிச் செயலாளர், மாவட்ட துணைச்செயலாளர், சிட்டிங் ஒ.செ., இரண்டு முறை பொதுப் பிரிவிலும், இரண்டு முறை பட்டியலினப் பிரிவில் என 4 முறை புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் பதவியில் நான் இருந்துள்ளேன். இவ்வளவு தகுதியிருந்தும் புறக்கணிக்கப்படுகிறேன். கடந்த முறை எனக்கு சீட் கேட்டார்கள் என செங்கம் மேற்கு ஒ.செ. பிரபாகரன், கிழக்கு ஒ.செ. அண்ணாமலை, ந.செ. சாதிக்பாட்சா உட்பட சிலரின் பதவிகள் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டன. சீட் கேட்பது தப்பா?'' என கேள்வி எழுப்புபவர், எனக்கு ஒருமுறை சீட் தாங்கள் என அமைச்சர் வேலுவிடம் மன்றாடிவருகிறார். செங்கம் தொகுதி கட்சியின் முக்கிய நிர்வாகிகளோ, ஒ.செ. சுந்தரபாண்டியன் மகன் மருத்து வர் சாந்தகுமார், திருவண்ணாமலையில் மருத்துவமனை வைத்துள்ளார். அவரை சீட் கேட்கச்சொல்லி வலியுறுத்துகிறார்கள். ஹாஸ்பிட்டல் வச்சிருக்கீங்க, நிறைய உதவி செய்யறீங்க, நீங்க சீட் கேளுங்க என அவரை உசுப்பேற்றிவருகின்றனர். நகர முன்னாள் சேர்மனும், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளருமான சென்னம்மாள் முருகன் சீட் கேட்கிறார். வேறு சிலர் கேட்கலாம் என நினைத்தா லும், வெளியே தெரிந்தால் கட்டம் கட்டிவிடுவார்கள் என தயங்குகிறார்கள் அவர்கள்'' என்கிறார்கள். 

Advertisment

அ.தி.மு.க.வில், திருவண்ணாமலை தெற்கு மா.செ. அக்ரி.கிருஷ்ணமூர்த்தியின் கட்டுப்பாட்டில் இத்தொகுதியுள்ளது. "வேட்பாளர் யார் என்பதை நான்தான் முடிவுசெய்து தலைமைக்குச் சொல்லவேண்டும்' என அக்ரி சொல்லிவருகிறார். கடந்தமுறை தேர்தலில் நின்று தோல்வியைச் சந்தித்த முன்னாள் மாவட்ட சேர்மன் நைனாக்கண்ணுவை முன்னிறுத்துகிறார் அக்ரி. அவர் எங்கிட்ட பணமில்லை என தயங்குகிறார். கடந்த தேர்தலில் நேர்காணல் வரை சென்றுவந்த சாத்தனூர் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் அருள் இந்தமுறை சீட் வாங்கிவிட தீவிரமாக முயற்சிக்கிறார். இவருக்கு அக்ரி தடை போடுகிறார். முன்னாள் எம்.எல்.ஏ. சுரேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. சாமிக்கண்ணுவின் மகனும் நகர அம்மா பேரவை இணைச்செயலாளருமான கவுன்சிலர் வேலு, 2016-ல் போட்டியிட்டுத் தோல்வியடைந்த வழக்கறிஞர் தினகரன், செங்கம் முன்னாள் பேரூராட்சி சேர்மன் பத்மா முனிக்கண்ணு, மாவட்ட வழக் கறிஞர் அணி இணைச்செயலாளர் வழக்கறிஞர் செல்வம், மேல்பென் னாத்தூர் முருகன், மகளிரணியிலுள்ள தானிப்பாடி லஷ்மி, செங்கம் சாமுண்டீஸ்வரி சாக்ரட்டீஸ் என க்யூ கட்டுகின்றனர். 

தி.மு.க. கூட்டணி யிலுள்ள வி.சி.க.வின் மண்டலச் செயலாளர் செல்வம், மா.செ. நியூட்டன் இருவரும் தொகுதியை நமது கட்சிக்கு ஒதுக்கு வார்களா என எதிர்பார்க்கின்றனர். நடிகர் விஜய் கட்சியின் மா.செ. பாரதிதாசன் "இத்தொகுதியில் நான் போட்டியிடப்போகிறேன்' எனச் சொல்லிவருகிறார். 

படங்கள்:எம்.ஆர்.விவேகானந்தன்