நடிகரையும், பார்வையாளரையும் ஒரே நேரத்தில் ஒன்றுசேர்க்கவல்லது இந்த நாடகக்கலை.
தெருக்கூத்து, பாவைக்கூத்து வழியாக தமிழர்களின் நாடகக்கலை வளம்பெற்றிருந்தது. தமிழின் கூத்துமரபு நாடக அரங்கமாக உருப் பெற்றது சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில்தான். சமூகத்தின் குரலை, மக்களின் எண்ணங்களை நவீன நாடகங்கள் பிரதிபலித்தன. மக்கள் கூட்டம் கூட்டமாக பார்த்து ரசித்த இந்த ஒப்பற்ற கலை, கையில் செல்போன் செடிகள் பூத்திருக்கும் தற்போதைய சூழலில் வெகுவாக அழிவைச் சந்தித்திருக்கிறது.
அதனை மீட்டெடுத்து, மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்கும் பொருட்டு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும், சென்னை கேரள சமாஜமும் இணைந்து தென்னிந் திய மக்கள் நாடக விழாவை நடத்துகின்றன. சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள சென்னை கேரள சமாஜம் அரங்கத்தில் அக்டோபர் 02-ல் தொடங்கிய இந்த விழாவில், அக்டோபர் 06 வரை தொடர்ந்து ஐந்து நாட்கள், ஐந்து மொழிகளில், 32 நாடகக்குழுக்களின் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்களால் பல்வேறு நாடகங்கள் அரங் கேறுகின்றன.
வீதி நாடகங்கள், மரபு நாடகங்கள், விளிம்புநிலை மற்றும் மேல்தட்டு மக்களின் வாழ்வியலைப் பேசுகிற, சர்வதேசத் தரத்திலான நாடகங்கள் என இந்தியாவிலேயே இதுவரை வேறெங்கும் நடந்திராத மாபெரும் நாடக விழா, முதன்முறையாக சென்னையில் நடைபெறுவது தனிச்சிறப்பு. மத்திய அரசின் தென்னக பண்பாட்டு மையம், தமிழக அரசின் கலை மற்றும் பண் பாட்டுத்துறை இந்த விழாவிற்கு ஆதரவளித்துள்ளன. தென்னிந்திய நடிகர் சங்கமும் வாழ்த்தி இருக்கிறது.
நாடக விழாவின் தொடக்கநாளான அக்டோபர் 02-ல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த கலைஞர்கள், உழைக்கும் மக்கள் மாமன்ற அலுவலகத்தில் இருந்து சென்னை கேரள சமாஜம் அரங்கை நோக்கி பேரணியாக நடந்துசென்றனர். பறையிசைக் கலைஞர்களின் இடிமுழக்கத்துடன், பெண்கள், குழந்தைகளின் சிலம்பாட்ட அணிவகுப்பும் சேர மிடுக்காய் நகர்ந்தது பேரணி.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கியது. விழாவின் தொடக்க நிகழ்விற்கு திரைக்கலைஞர் ரோகிணி தலைமை தாங்கினார். தொடங்கிவைத்து உரையாற்றிய கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, ""கேள்வி யெழுப்புவதும், தவறைச் சுட்டிக்காட்டுவதும் சமூகத்தில் அத்தியாவசியமானவை. அதை நாடகம் எப்போதும் செய்து கொண்டிருக்கிறது. இங்கு ஏராளமான கேள்விகள் எழலாம். கேள்விகள் தவறாகப் படலாம். அதற்கெல்லாம் அனுமதி மறுக்கப்படாது. அப்படியொரு ஜனநாயக, முற்போக்கு விழாவில் கலந்துகொண்டிருக்கிறீர்கள். உயிரோட்டமுள்ள இந்த விழாவை கொண் டாடுங்கள்''’என உற்சாகமூட்டினார்.
""நான் ஒரு நாடகக் கலைஞன் என்ற அடையாளத்தோடுதான் சுதந்திரமாக இருக்க முடிகிறது. சினிமாக் கலைஞன் என்பதால் அல்ல. என் சமூகத்தின் மீது எல்லா உணர்ச்சிகளையும் காட்டுகிற உணர்வை நாடகம்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தது. "நடிகன் என்பவன் களிமண்ணைப் போல இருக்கவேண்டும். அதைப் பிசைபவனுக்கு சுகம் தரவேண்டும்' என்று சொல்வார் ந.முத்துச்சாமி. நாடகம் அத்தனை அர்ப்பணிப்பு மிக்க கலை. இதனை எதிர்காலத்துக்கான ஒன்றாக எடுத்துச்செல்ல உறுதியேற்போம்''’என்றார் திரைக்கலைஞர் நாசர்.
இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், ""திராவிட இயக்க வரலாறு என்பது கலையின் மூலமாகத்தான் மக்களிடையே சென்று சேர்ந்தது. அதைவைத்து ஆட்சியைப் பிடித்தவர்கள், ஏன் இந்தக்கலையை ஊக்குவிக்க யோசிக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. அப்படியொரு விவாதத்தை மேற்கொள்ளவே இவர்கள் பயப்படுகிறார்களோ என்றுதான் எனக்குத் தோன்றுகிறது''’என்றார். அவரது கூற்றுக்கு பதிலளித்த கவிஞர் மனுஷ்ய புத்திரன், ""எந்தக் கருத்தை நாடகங்களில் வலி யுறுத்தினோமோ, அதை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தியதால் இதைத் தவறவிட்டிருக்க லாம். எல்லாவற்றையும் எதிர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நாங்கள் முன்வைத்த கருத்தை நிறைவேற்ற தொடர்ந்து வேலை செய்திருக்கிறோம். இனியும் செய்வோம்'' என உறுதியளித்தார்.
கேரளா, கர்நாடகாவில் அங்கீகரிக்கப்பட்ட நாடகக் குழுக்களுக்கு குறைந்த வாடகையில் ஒத்திகை பார்க்கும் அரங்கம் தரப்படுகிறது. அதேபோல், சென்னையிலும் அரங்கம் வழங்க தமிழக அரசுக்கு இந்த விழாவின் மூலமாக கோரிக்கை விடுத்தார் விழாப் பொதுச்செயலாளர் பிரளயன்.
நாடகங்கள் அரங்கேறுகிற க்ரிஷ் கர்னாட் அரங்கத்தைத் திறந்துவைத்த கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ""கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இரண்டு அரங்கங்கள் உள்ளன. நாடகக் குழுக்களை முறைப் படுத்தி, பகலில் ஒத்திகை மேற் கொள்ள அந்த அரங்கங்கள் வழங்கப்படும். கர்நாடகத்தில் வாங்கப்படும் ரூ.6 ஆயிரத்தை விடவும் குறைவான அல்லது அதற்கு நிகரான கட்டணத்தில் வழங்குவோம்''’என்று நம்பிக்கை தந்து சென்றார்.
தொடக்கவிழா நிறைவடைந்ததும் நாடக அரங்கேற்றம் தொடங்கியது. அதற்கு முன்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பம்பாடி ஜமா பெரியமேளம் கலைக்குழுவின் சார்பில் முனுசாமி ஒருங்கிணைப்பில், அரங்கம் அதிர ஒலித்த பறையிசை சிதறிக்கிடந்த கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தது. அப்போதுகூடிய கூட்டம் நாடகங்களின் லயிப்பில் தரையில் அமர்ந்தும் அரங்கம் நிறைந்தே இருந்தது.
"மக்கள் நாடக விழா என்பது மக்களாட்சித் தத்துவத்தின் மாண்புகளை வெளிப்படுத்துகிற கலாச்சார வெளிப்பாடு' என்கிறார் ஃப்ரெஞ்சு நாடகவியலாளர் ரொமெய்ன் ரோலாண்ட். அதை இன்னும் ஆழமாக விவரித்து சாதாரண, விளிம்பு நிலை மக்களின் பார்வையிலேயே சமூக, கலாச்சார செயல்பாடுகளை அலசும் நிகழ்வாக தென்னிந்திய மக்கள் நாடக விழா நடக்கிறது. மக்களின் பேராதரவுடன்.…
-ச.ப.மதிவாணன்
படங்கள்: அசோக்