ரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் யின் பரப்புரைக் கூட்டத்தில் பல மணிநேர மாகக் காத்திருந்ததாலும், கூட்ட நெரிசலில் சிக்கியதாலும் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த கொடூர சம்பவம் குறித்து தமிழக மக்களின் மனநிலை எப்படியிருக்கிறது என அறிய அவர்களிடமே விசாரித்தோம்...

Advertisment

விருதுநகர் மாவட்டம் 

பெருமாள்: விஜய் மாதிரி நடிகரெல் லாம் பிறக்கும்போதே சில்வர் ஸ்பூன் பேபியா இருந்திருப்பாங்க. கரூர்ல கொடுமையான நெரிசல்ல சிக்கி இறந்தவங்க வலியை அவரால உணர முடியாது.  என்னைப் பார்க்கிற துக்கு இம்புட்டு கூட்டமாங்கிற சினிமா புகழ் போதை அவருக்கு தலைக்கேறிருச்சு. பேச்சும் கூட பொறுப்பில்லாமத்தான் இருக்கு. ஒத்தைக்கு ஒத்தை வர்றியான்னு சவால் விடறதுக்கு பாலிடிக்ஸ் ஒண்ணும் சினிமா இல்ல. அவருக்கு மனசாட்சின்னு ஒண்ணு இருந் திருந்தா.. இந்நேரம் மன்னிப்பு கேட் ருப்பாரு. தன்னாலதான 41 பேர் உசிரு போயிருக்குங்கிற உண்மை உறைச்சிருந்தா.. அன்னைக்கு கரூர்லயே இருந்து செத்தவங்க குடும்பத்தோட துக்கத்துல பங்கெடுத்திருப்பாரு. காஸ்ட்லியான பஸ்ஸோட டாப்ல.. ரசிகர் கூட்டத்தோட தலைக்கு மேல நின்னுக்கிட்டு இனி அவரால டயலாக்க அடிச்சுவிட முடியாது. கரூர்ல விஜய் மேல வீசுனது ஒத்த செருப்பு.  கொலைகாரப் பட்டத்தோட இனி பொது வெளில முகத்த காட்டுனா எத்தனை செருப்பு பறக்குமோ? சரியா சொல்ல ணும்னா.. விஜய்யோட அரசியல் ஆட்டம்.. இத்தனை பேரு சாவோட.. ஒரு முடிவுக்கு வந்திருச்சு!

Advertisment

ரேவதி: சினிமாவுல அநீதியை தட்டிக் கேட்பாரு. கஷ்டப்படறவங்க கண்ணீரை துடைச்சு விடுவாரு. நெஜத்துல இதுக்கு நேர்மாறா மோசமான ஆளா இருக்காரு. கரூர் கூட்டத்துல பலரோட உயிர் போனது. தப்பிச்சோம் பிழைச்சோம்னு அங்கருந்து பிளைட் பிடிச்சு ஓடுனது.. இது எல்லாம் விஜய்யோட உண்மையான முகத்தை மக்களுக்கு காட்டிருச்சு. நடிச்சா ரசிச் சிட்டு போயிறலாம். ஆட்சிக்கு வரணும்னா தகுதி தராதரம் வேணாமா? விஜய்யை நேர்ல பார்க்க ணும்னு பொம்பள புள்ளைங்க கிளம்புனா இனி வீட்ல விடுவாங்களா? நடந்த கொடுமைல இருந்து விஜய் பாடம் படிச்ச மாதிரி தெரியல. ஆனா.. அவரு மேல ஒரு க்ரஷ்ல இருந்த யூத்துங்களுக்கு இது ஒரு பாடம்.

public1

சந்திரா: பாகவதர் காலத்துல இருந்தே.. சினிமால நடிக்கிறவங்கள நேர்ல பார்க்கணும்கிற ஆசை மக்களுக்கு இருக்கு. எம்.ஜி.ஆர். மேல வைக்காத பாசமா? ஜெமினிகணேசன்.. அப்புறம் கமலஹாசன்னு பொம்பளைகளுக்கு  ஏதாச்சும் நடிகரை அப்பப்ப பிடிச்சுப் போயிருது. இப்ப மார்க்கெட்ல இருக்குறது விஜய். அவரு வேற கட்சி ஆரம்பிச்சு.. அதான்.. கொள்ள பேரு கரூர்ல செத்துட் டாங்கன்னு நியூஸ்ல பார்த்தேன். அவன் நடிக்கிறான்,  சம்பாதிக்கிறான், அது பத்தாதுன்னு கட்சி ஆரம்பிக்கிறான்.  வேல சோலிய போட்டுட்டு அவனை பார்க்கிறதுக்கு கூட்டம் கூட்டமா போலாமா? அப்படி என்ன அந்த மொகரக்கட்டைல பாலும் தேனுமா வழிஞ்சு ஓடுது? பச்ச புள்ளைங்க எல்லாம் செத்துருக்கு. இந்த பாவம் அவனை சும்மா விடுமா?

Advertisment

மதுரை மாவட்டம்

கல்லூரி மாணவர் மனோஜ்: "தமிழகத் திற்கு இதுவொரு மோசமான சம்பவம். மக்கள் இன்னும் நடிகர்கள் பின்னாடி போவதை மாற்றிக் கொள்ள வேண்டும். விஜய் இன்னும் தன் தொண்டர்களை அரசியல்படுத்தவில்லை, அவரும் அரசியல்வாதியாகவில்லை என்பதையே இச்சம்பவம் காட்டுகிறது. அவரது கட்சி, அரசியல் கட்சியே இல்லை. அதன் விளைவு தான் இந்த சம்பவம். த.வெ.க. கட்சியில் எல்லோருமே டிஜிட்டல் மார்க்கெட்டிங் பார்ப்பார்கள். ஆதவ் அர் ஜூன், ஜான் போன்றோர் ஏற்கெனவே பிரசாந்த் கிஷோரிடம் வேலை செய்தவர்கள். அவர்களுக்கு கள அரசியல் செயல்பாடுகள் தெரியாது. அதேபோன்று த.வெ.க. தொண்டர்கள் இன்னமும் சினிமா மோகத்தில்தான் இருக்கிறார்கள். நான்கூட விஜய் ரசிகர்தான். இந்த சம்பவத்தையெல் லாம் பார்க்கும்போது, சினிமாக்காரன் சினிமாக்காரன்தான் என்பது புரிந்துவிட்டது. தன் முன்பாகவே பெண்களும், குழந்தை களும் மயக்கமடைந்து கீழே விழுவதை வாகனத்திலிருந்து பார்க்கிறார். ஆம்புலன்ஸில் ஏற்றும்படி மைக்கில் சொல்கிறார். இவ்வளவும் நடக்கும்போதே பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு போனதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆட்டோ டிரைவர் குமார்: விஜய் உடனே சென்னை போயிருக்கக்கூடாது. எந்தவொரு சூழ்நிலை வந்தாலும் அவர் கரூரி லேயே தங்கியிருக்க வேண்டும். இவருக்காக உயிரை விட்டவர்களை பார்க்கக்கூட மனம் வராமல் சென்னைக்கு சென்றது மன வருத் தம் அளிக்கிறது. இன்றுவரை அவர் வரவில்லை. அவர் ஒரு அரசியல் கட்சித் தலைவராக நடந்து கொள்ளவில்லை. சினிமா ஹீரோவாகவே இருப்பது அரசியலில் எடுபடாது.

public2

நாகேஸ்வரன்: விஜய் அரசியலுக்கு லாயக் கில்லை. சினிமாவிலேயே அவர் நடித்துக்கொண்டு இருந்திருக்கலாம். சொன்ன நேரத்துல சரியா வரணும் சார். அவர் நேரம் தவறி ஏழு மணி நேரம் கழித்து வந்ததே இவ்வளவு சாவுக்கும் காரணம். வேண்டுமென்றே கூட்டம் கூட வேண்டுமென்ற நோக்கத்தில் நேரம் தாழ்த்தி வந்திருக்கிறார் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. அதேபோல், தனக்காக உயிர்விட்ட மக்களை நேரில் வந்து  பார்த் திருக்கணும், அதுவும் இல்லை. அந்த உணர்வுகூட இல்லாமல் என்ன மனுசன் சார்... இவரையெல்லாம் நம்பி ஓட்டு போட்டு முதலமைச்சராக்கணும் என்ற நினைப்பு காலக்கொடுமை.

பஞ்சம்மாள்: இறப்புக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடாகாது. அவர் நேரில் வந்து பார்த்திருக்கணும். அவர் கண் முன்னாடியே மயக்கமாகி விழுகிறார்கள். அதை பார்த்துக் கொண்டே வண்டிக்குள் சென்று வேகமாகக் கிளம்பியது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மாரிமுத்து: ஒரு நடிகனுக்காக மக்கள் குழந்தை, குட்டிகளோடு சென்று உயிரிழப்பது தமிழ்நாட்டில் இதுதான் முதல்முறை. மனதுக்கு மிகவும் கஷ்டமாகவும் இருக்கிறது, நினைக்கையில் கேவலமாகவும் இருக்கிறது. தனக்காக உயிர்விட்ட மக்களைக்கூட பார்க்காமல் ஓடியது கோழைத்தனம். மக்கள் இனியாவது திருந்த வேண்டும். இப்படிப்பட்ட கவர்ச்சி அரசியல் பக்கம் செல்லாமல் கொள்கை அரசியல் பக்கம் கவனத்தைத் திருப்பவேண்டும்.

இராமேஸ்வரி: நான்கூட சின்ன வயசில் எம்.ஜி.ஆரை பார்க்கப் போயிருக்கேன். அப்ப எங்க ஏரியா எம்.ஜி.ஆர். கட்சிக்காரங்க டீ, சர்பத்து என்று எதாவது வாங்கிக்கொடுப்பாங்க. இதுல்லாம் என்ன கூட்டம், இதுக்கு மேல வரும். ஆனா இதுமாதிரி எந்த சம்பவமும் நடந்தது இல்லை. இவரெல்லாம் ஜனங்கள காப்பாத்த மருத்துவமனையில் இருந்திருக் கணும், அத செய்யாம ஓடிட்டானாமே. கலைஞர் மகனோ மெட்ராஸிலிருந்து பிளைட் புடிச்சு வந்திட்டாப்ல. அவரு அரசியல்வாதி... இவன் நடிகன்தானேப்பா.

வசந்தா: அந்த பையன், கூட்ட நெரிசலில் செத்துப்போனவங்கள துக்கம் விசாரிக்கக்கூட வரலியாமே? அது தப்புதானே! ஜனங்க கைக்குழந்தை களையெல்லாம் தூக்கிக்கிட்டு போனது தப்பு. அப்படியென்ன அந்த நடிகரை பார்க்கணும்? அப்படி என்ன மக்களுக்கு செஞ்சு கிழிச்சிட்டாரு? எல்லாம் காலக்கொடுமை.

திருப்பத்தூர் மாவட்டம்

கலையரசு, ஆம்பூர்: கரூரில் நடைபெற்ற சம்பவம் பெரும் துயரம். த.வெ.க. கட்சியால் உருவான குளறுபடியால் தான் இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்துள்ளது. இது இந்திய அளவில் எதிரொலிக் கிறது. தமிழக மக்கள் வருத்தத்தில் உள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொன்ன நேரத்துக்கு விஜய் வந்து பேசாதது முதல் காரணம். இந்த 41 பேர் மரணத்திற்கு த.வெ.க. நிர்வாகிகள், அக்கட்சித் தலைவர் விஜய்தான் பொறுப்பு. இதனை மற்ற கட்சிகள் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை சில கட்சிகள் ஆதரித்தும், எதிர்த்தும் அரசியல் செய்கிறார்கள். பா.ஜ.க. கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆதரித்துப் பேசிவருகிறார்கள், இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நடிகர் விஜய் மீதும் அக்கட்சியின் நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் கட்சியை தடை செய்ய வேண்டும்.

ரோஷன், ஆம்பூர்: தங்கள் கட்சிக்கூட்டத் துக்கு வரும் தொண்டர்களுக்கு, மக்களுக்கு அந்த கட்சிக்காரர்கள்தான் வசதிகள் செய்துதரணும். நடிகர் ஒருத்தர் வரும்போது குழந்தைகள்கூட ஆர்வமாகப் பார்க்க வரு வாங்க. அப்படி வந்த வர்கள் ரொம்ப நேரமா காத்திருந்திருக் காங்க. அவங் களுக்கு தண் ணீர் உட்பட எந்த வசதியும் செய்யல. விஜய் தாமதமா வந்ததால்தான் இவ்வளவு பிரச்சனை. முழுக்க முழுக்க அந்த கட்சிக்காரர்கள் செய்த தவறுதான். இதில் மற்றொரு கட்சி மீது குற்றஞ் சாட்டுவது சரியானதல்ல. கூட்டம் சேர்ப்பது பெரிய விஷயமல்ல, வருபவர்களுக்கு வசதிகள் செய்து தரவேண்டியது அவர்களது வேலைதானே? இப்ப பணம் கொடுத்தால் போன உயிர் திரும்பி வந்துடுமா.

public3

தென்காசி மாவட்டம்

ஜெயசேகர், வேலூர்: கரூர் சம்பவத்துக்கு காரணம், அந்த கூட்டத்துக்கு பிற மாவட்டங்களி லிந்து ரசிகர்கள் அதிகளவு வந்திருந்ததால் ஏற்பட்ட நெருக்கடிதான். அந்த மாவட்ட மக்கள் மட்டும் அக்கூட்டத்துக்கு வந்திருந்தால் இவ்வளவு கூட்டம் வந்திருக்காது. இது விபத்து தான். யாரையும் தப்பு சொல்ல முடியாது. போலீசும் கொஞ்சம் கவனமா இருந்து நெரிசலை குறைச்சிருக்கணும்.

சுதாகர், புளியங்குடி: விஜய் ஒரு உச்ச நடிகர், அரசியல் கட்சித் தலைவர். ரசிகர்கள், மக்கள் திரள்வார்கள் என்று அவருக்குத் தெரியும் தானே. அவருக்கு அதை கையாள்கிற பக்குவமில்லை. கட்சியின் மாவட்டச் செயலாளர்களை, நிர்வாகிகளை முதல்லயே கூப்பிட்டு மக்களை எப்புடி கையாளணும், எப்படி பாதுகாப்பா முறைப்படுத்தணும்னு வரைமுறை களைச் சொல்லியிருக்கணும். ஆனா அவர் உட்பட கட்சி நிர்வாகிகள் யாருமே அதை திட்டமிடல. சம்பவம் நடக்கும்போதாவது கட்சிக்காரர்களை கூப்பிட்டு மக்களை காப்பாற்ற முயற்சித்திருக்கணும். ஆனால் அதை செய்யாமல் பஸ்ஸுக்குள்ள போயிட்டாரு.  இனிமே அவர் கட்சியை எப்படிக் கொண்டுபோய் மீளுவார்னு தெரியல. இந்த பலி சம்பவத்தை மக்கள் சாதாரணமா எடுத்துக்கமாட்டாங்க.

கல்லூரி மாணவி பானுப்ரியா: நடந்தது ரொம்ப மன வேதனையான சம்பவங்க. ரொம்ப மக்கள் அவரை கைது பண்ணனும்னு சொல்றாங்க. சிலர் வேண்டாம்றாங்க. இந்த சம்பவத்தில் நடவடிக்கை வேணும். கூட்டத்தை விஜய் கண்ட்ரோல் பண்ணல. அதனாலதான் இவ்ளோ பெரிய பாதிப்பு. இந்த சம்பவத்தால மக்கள் அவருக்கு வோட்டுப் போடமாட்டாக. இத்தனை பேர் பலியானதை மக்கள் மறக்கவேமாட்டாக, அது தெரியுது.

கல்லூரி மாணவி லட்சுமி: கூட்ட நெரிசல்ல மக்கள் மேலருந்து விழுறாங்க, கூப்பாடு கேட்குது. அதப்பாக்காம விஜய் அவுங்க பாட்டுக்குப் போறாங்க. நம்பள நம்பி வந்த கூட்டம், மக்கள்னு அவர் நெனைக்கவேயில்ல. அவங்கள திரும்பிக்கூடப் பாக்காமப் போயிட்டாரு. அவர் நடந்துக்கிட்டதயும் பலிச் சம்பவத்தையும் யாரும் ஏத்துக்கமாட்டாக. மனச ரொம்ப சங்கடப்படுத்துது.

வள்ளி, சங்கரன்கோவில்: விஜய்க்கு அது என்னமோ ஒய் பிரிவு பாதுகாப்பாமே, பவுன்சர் பாது காப்பு வேற. இத்தனை பாதுகாப்போட அவரு சேஃப்டி யாயிருக்காரு... வர்றாரு. ஆனா மக்களோட உசுரு, பாதுகாப்ப பத்தி அவர் நெனைச்சுக்கூட பாக்கல்ல. மக்கள் உசுரு அவருக்கு ரொம்ப மலிவாப்போச்சா?

கடலூர் மாவட்டம்

பவானி, மேலமூங்கிலடி: நெரிசல் தாங்க முடியாமல் மூச்சுத்திணறி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தது தெரிந்தும் அந்த இடத்தைவிட்டு உடனடியாக சென்றுவிட்டார். அவர்களுக்கு எந்த ஆறுதலையும் கூறவில்லை. நாளைக்கு இவரெல்லாம் முதல்வராக வந்தால் என்னத்த செய்வார்? தமிழக அரசையும், முதல்வரையும் எல்லா கூட்டத்திலும் திட்டிப் பேசிவருகிறார். இவருக்காகக் கூடிய கூட்டத்தில் ஆபத்து ஏற்பட்டவுடன் அரசுதான் அங்கு அனைத்து உதவிகளையும் செய்தது, எனவே 41 பேர் பலிக்கு காரணமானவர்கள்மீது உரிய நடவடிக்கை யை எடுக்கவேண்டும்.

சுந்தரி, சிதம்பரம்: விஜய் கூட்டத்திற்கு கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் வர வேண்டாமென எச்சரித்துள்ளார்கள், அதேபோல் அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதையும் மீறி அந்த பகுதியில் அனுமதிக்கப்பட்ட கூட்டத்தைவிட மிக அதிகமான கூட்டம் கூடியுள்ளது. இதில் பெண்கள், குழந்தைகள் வராமல் தவிர்த் திருக்கலாம். கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்கு விஜய் தரப்பில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவில்லை. உயிரிழந்தவர்களைப் பற்றி உடனடியாக செய்தியாளர்களிடம் இரங்கல் தெரிவித்து விஜய் பேசியிருக்கலாம்.  சென்னை விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்தவர் களுடன் செல்பி எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இது வேதனையாகவுள்ளது.

அருண், குறிஞ்சிப்பாடி: அரசு எச்சரிக்கை கொடுத்தும் பெண்கள், குழந்தைகள் கூட்டத்திற்கு சென்றுள்ளனர். இது சினிமா மோகம் மட்டுமே. இவர்கள், அரசியல்  என்னவென்று அறியாதவர்கள். 2 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை கலந்துகொண்டு கட்டுப்பாடுகளை மீறி நடந்துள்ள னர். வாக்குரிமையே இல்லாதவர்கள் கலந்து கொண்டு யார் பேச்சையும் கேட்காமல் நடந்ததால் தான் கோர உயிர்ப்பலி  நடந்துள்ளது. விஜய் உடனடியாக விபத்து குறித்து அதே இடத்தில் ஊடகம் மூலமாக மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அவர் தப்பிச்சென்றது போல் சென்றுவிட்டார். விசாரணையில், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குமரி மாவட்டம்

சிபி, முட்டைக்காடு -கன்னியாகுமரி:”விஜய், திரைத்துறையில் இருந்திட்டே மக்களுக்கு நல்லது செய்யலாமே. அரசியலுக்கு வந்து நல்லது செய்யுங் கன்னு விஜய்யை மக்கள் யாரும் பூந்தட்டு வச்சி கூப்பிடல. 52 வயசு ஆகுதுனு சொல்ற விஜய், இத்தனை ஆண்டுகளாக எந்த மக்களுக்கு நல்லது செய்திருக்கிறார்னு சொல்லட்டும். சனி பிணம் தனியாக போகாதுன்னு சொல்லுவாங்க, அதுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுதான் விஜய்யின் சனி பயணம். சினிமா துறையில் நடிப்பை விட்டுட்டு, அரசியலுக்கு வருவதற்கு தகுதியான ஒரு ஆள் என்றால் அது நடிகர் சூர்யாதான். இன்றைக்கு எத்தனையோ ஏழை மாணவர் களுக்கு படிப்பிற்கு உதவி செய்து, அவர்களை உச்சத் துக்கு கொண்டுபோய் கை நிறைய சம்பளம் வாங்க வச்சி பல குடும்பங்களை காப்பாற்றி வருகிறார் சூர்யா. கோடி கோடியா சம்பாதிச்சி வச்சிட்டு யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் வரி கட்டவும் துப்பில் லாத விஜய், அரசியலுக்குள் வந்து என்ன சாதிக்கப் போகிறாராம்? அப்படியிருக்கையில் அரசியலுக்கு வாரேன்னு எதை வச்சி முடிவு எடுத்தாராம்? 41 உயிர்களை பலிவாங்கி, கரூரை சுடுகாடாக்கிய விஜய், அந்த வெறியை விட்டுட்டு பேசாம மிச்சம் மீதி இருக்கிற மானத்தை காப்பாற்றிக்கிட்டு திரைத்துறைக்கு போனால் அவரும் நல்லாயிருப்பார், தமிழ்நாடும் நல்லாயிருக்கும்”.

தினேஷ், பத்மநாபபுரம்: நாமக்கல்லிலிருந்து வரும் விஜய்யின் வண்டிக்கு பின்னே அவருடைய ரசிகர்கள் பீர் குடித்துக்கொண்டே மோட்டார் சைக்கி ளில் பின்தொடர்ந்து வந்து விஜய்யின் வண்டிக்கு அடியிலே விழுகிறார்கள். மரத்துக்கு மேலயும் மின் கம்பத்திலும் இருந்தவர்களை போலீஸ் கீழே இறங்கச் சொன்னபோதுகூட அவர்கள் கேட்கவில்லை. விஜய் பேசும்போது கூட்டத்தில் 5 வயது குழந்தையை காண லைன்னு விஜய் தான் மைக்கில் சொல்லுறார். அந்த பிள்ளையும் அவர் முன்தான் இறந்திருக்கிறது. இதெல் லாம் டிவியிலே லைவ்வாக தெரிஞ்சது. சினிமாவில் குழந்தை இறந்தால் விஜய் அதை மடியில் தூக்கிவச்சி அழுகிறார், அதை நிஜத்தில் விஜய் செய்யணும் இல்லையா? விஜய்யை நம்பிவந்த 41 பேர் இறந்ததும் அந்த கூட்டத்திலிருந்து ஓடிய விஜய்யை கட்சியின் தலைவனாக ஏற்றுக்கொள்ள முடியுமா? அவருக்கு கட்சி நடத்த ஆளுமையும் இல்லை, தகுதியும் இல்லை. 

குளோரி, காந்தி நகர்: “நான் இந்த முறை விஜய்க்குத்தான் ஓட்டு போடணும்னு இருந்தேன். இனி மனிதாபிமானம் இல்லாத அவனுக்கு ஓட்டு போட்டேன்னா என் மனசாட்சியே என்னை கொன்னுடும். எனக்கும் 7 வயசுல குழந்தை இருக்கு. விஜய்யின் மனிதாபிமானமற்ற செயலால் மாமான்னு கூறிக்கொண்டு விஜய்யை பார்க்க அந்த கூட்டத்துக்கு வந்து உயிரிழந்த அந்த பிஞ்சு குழந்தைகளின் ஆத்மா விஜய்யை சும்மா விடுமா?”

(மக்கள் கொந்தளிப்பு தொடரும்...)

-ராம்கி, ராஜா, மணிகண்டன், அண்ணல், ப.இராம்குமார், காளிதாஸ்