தி.மு.க.வின் அழைப்பை ஏற்று அறிவாலயத்துக்குச் சென்றனர் கேரளாவின் முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான உம்மன்சாண்டி, காங்கிரசின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜித்வாலா, மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி உள்ளிட்ட குழுவினர். கூட்டணியின் மெயின் பார்ட்னர் காங்கிரஸ் என்றபோதும் ஸ்டாலினோ கட்சியின் சீனியர்களோ வரவேற்கவில்லை. 20 நிமிடத்துக்கும் அதிகமான காத்திருப்பு, பேச்சுவார்த்தையில் தி.மு.க.வினர் நடந்து கொண்ட விதம் இவற்றால் ஏற்பட்ட மனக்குமுறலை ராகுல்காந்திக்கு வெளிப்படுத்தி கடிதம் எழுதும் சூழலுக்குத் தள்ளப்பட்டார் உம்மன்சாண்டி.

congress

என்ன நடந்தது என நம்மிடம் பகிர்ந்துகொண்ட காங்கிரசின் பொதுச் செயலாளர்கள்,’’ 9 எம்.பி.க்களை காங்கிரஸ் வைத்திருப்பதால் ஒரு தொகுதிக்கு 6 என்கிற வகையில் 54 இடங்கள் என ஆரம்பித்தார் சுர்ஜித்வாலா. "இதெல்லாம் ரொம்ப அதிகமுங்க' என எடப்பாடி பாணியில் அலட்சியம் காட்டிய துரைமுருகன், 12-ல் ஆரம்பித்து அதிகபட்சமாக 15 கொடுக்கலாம் என்று ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்டையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

"அந்த ரிப்போர்ட் யார் கொடுத்ததுன்னு எங்களுக்குத் தெரியும். எங்களால் விரட்டப்பட்டவர்தான் அவர். காங்கிரஸ் இல்லைன்னா எத்தனை இடங்களில் தி.மு.க. ஜெயிக்கும்'னு அவரிடமே கேட்டுப் பாருங்களேன் என்றிருக்கிறார் சுர்ஜித்வாலா. "சென்னை டூ திருச்சி வரைக்குமான ஒவ்வொரு தொகுதியிலும் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை காங்கிரசுக்கு ஓட்டு இருக்கு. திருச்சியைத் தாண்டினால் நெல்லை வரைக்கும் ஒரு தொகுதிக்கு 20 ஆயிரம் ஓட்டும், அதன் பிறகு 30 ஆயிரம் ஓட்டும் காங்கிரசுக்கு இருக்கு' என விவரிக்க, "போன தேர்தல்ல 41 சீட்டு வாங்கி 8 தொகுதியில்தான் ஜெயிச்சீங்க. காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி கூட்டணியையே பாதிச்சது' என துரைமுருகன் சொல்லியிருக்கிறார். "தி.மு.க. போட்டியிட்ட 174 தொகுதியிலுமா ஜெயிச்சீங்க' எனக் கேட்டிருக்கிறார் சுர்ஜித்.

Advertisment

தி.மு.க.வுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தை குறித்து சத்தியமூர்த்தி பவன் திரும்பியவர்களிடம் அதிருப்தி ஏற்பட்டது. இனி நான் தமிழகம் வரமாட்டேன் என சொன்னார் உம்மன்சாண்டி. கேரளாவுக்கு திரும்பிச் சென்ற அவர், உடனடியாக ராகுலுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தி.மு.க மீதான 2ஜி ஊழலால் காங்கிரசுக்கு ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி, தமிழக தலைவர்கள் தி.மு.க.வின் ஆதரவாளர்களாகவே இருக்கிறார்கள் எனவும் எழுதியுள்ளார். காங்கிரசின் தனித்தன்மையை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கக்கூடாது என வலியுறுத்தினார் ராகுல்..

இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தையிலும் காங்கிசின் அழகிரி, கே.ஆர்.ராமசாமி ஆகியோரிடம் 18 சீட்டுதான் என தி.மு.க. கறார் காட்ட அவர்களும் எழுந்து வந்துவிட்டனர். இதனையறிந்து "கூட்டணியை விட்டு வெளியேறுங்கள்' என அழகிரிக்கு உத்தரவிட்டார் ராகுல். அதைத் தொடர்ந்துதான் செயற்குழுவைக் கூட்டி கண்ணீர்விட்டார் கே.எஸ்.அழகிரி. தி.மு.க.வுக்கு எதிரான குரல்களும், தனித்து நிற்பது பற்றியும், மாற்றுக் கூட்டணி பற்றியும் குரல்கள் ஒலித்தன. கட்சியினரிடம் விருப்ப மனு வாங்கி நேர்காணலும் நடத்தியது காங்கிரஸ். அதிலும் கூட்டணிக்கு எதிரான மனநிலையே வெளிப்பட்டது. மக்கள் நீதி மய்யத்திலிருந்து அழைப்பும் வந்தது.

வாரிசுகளுக்கு சீட் எதிர்பார்க்கும் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கே.ஆர். ராமசாமி உள்ளிட்டோரும், சீட் உறுதி என கருதும் மாவட்ட -மாநில நிர்வாகிகளும் கூட்டணியை வலியுறுத்தினர். தி.மு.க. மீது அதிருப்தியில் இருந்த ராகுல்காந்தியிடம் பேசிய ப.சிதம்பரம், ""தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அது பா.ஜ.கவின் அரசாகத்தான் அமையும். அது காங்கிரசுக்கு நல்லதல்ல. நாம் 50 சீட்டு வாங்கி 5 தொகுதியில் ஜெயிப்பதால் பலனில்லை. 25 வாங்கி 25-ம் ஜெயிப்பதுதான் காங்கிரசின் எதிர்கால அரசியலுக்கு சரியாக இருக்கும்'' என்றிருக்கிறார். சோனியாவும் கூட்டணிக்கு அறிவுறுத்த, ராகுலோ "தமிழக தலைவர்களே முடிவு செய்துகொள்ளட்டும்' என்று கோபத்துடன் சொல்லிவிட்டார்.

Advertisment

தி.மு.க. சீனியர்களிடம் நாம் விசாரித்த போது, ’"தி.மு.க. வேட்பாளர் தேர்வு போலவே, தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களும் மக்களுக்கு அறிமுகமான, செல்வாக்குள்ள நபர்களாக இருக்க வேண்டுமென ஸ்டாலின் எதிர்பார்க்கிறார். ஆனால், காங்கிரசில் சீட்டுகள் விற்பனையும், அதற்கான வசூலும் நடந்திருப்பதாக காங்கிரஸ் தரப்பிலிருந்தே தகவல் தருகிறார்கள். இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து வெற்றி பெற்றால், பா.ஜ.க.விடம் விலை போகக்கூடும். பாண்டிச்சேரி நிலை தமிழகத்திலும் உருவாகலாம். அதனால்தான் தயக்கம். மற்றபடி காங்கிரசை காயப்படுத்த தி.மு.க. நினைக்கவே இல்லை''’என்று காங்கிரசுக்கு எதிரான பல விசயங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள் தி.மு.க. சீனியர்கள்.

இந்நிலையில், 6-ந் தேதி இரவில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இறுதியாக, 7-ந் தேதி அறிவாலயத்தில் ஸ்டாலினுடன் 25 தொகுதிகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது காங்கிரஸ். கூட்டணி உறுதியானாலும் தேர்தல் களத்தில் காங்கிரசும் தி.மு.க.வும் பரஸ்பரம் உண்மையாக எப்படி வேலை செய்வார்கள் என்கிற விவாதம் இப்போதே எதிரொலிக்கத் துவங்கிவிட்டது.