சிவப்பு நிறத்தில் மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சார வாகனம் ரெடியாகிவிட்டது. கட்சி நிர்வாகத்திற்காக தமிழகத்தை 3 மண்டலங்களாக பிரித்து மண்டல வாரியாக மாவட்ட செயலாளர்களை சென்னைக்கு அழைத்து ஹோட்டலில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தி,. முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை அறிவித்தது. நவம்பர் 26-ந் தேதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக கமல் அறிவித்துள்ளார். 5-ந்தேதி செய்தியாளர்களை சந்தித்த கமல், “""மூன்றாவது அணி நாங்கள்தான். கூட்டணி பற்றி இப்போது கூறமுடியாது. ரஜினியுடன் பேசிக் கொண்டு உள்ளேன், நல்லவர்கள் எல்லாரும் எங்களுடன் வந்து இணைய வேண்டும், அப்போது இது முதல் அணியாக மாறும்'' என்றார்.

kamal

மண்டலவாரியான ஆலோசனை பற்றி மய்யத்தின் மா.செக்கள் சிலரிடம் கேட்டபோது, ""கட்சியின் கொள்கை சிறப்பானது, அதனை செயல் படுத்தும் கட்டமைப்பு எங்கள் கட்சியில் கிடையாது. தலைவரை சுற்றியுள்ளவர்கள் அரசியல், தேர்தல் குறித்து சில புள்ளி விபரங்களை தந்து தலைவரை ஏமாற்றிக்கொண்டுள்ளார்கள். டேபிள் முன் அமர்ந்து இந்த டேட்டா, அந்த டேட்டா என எடுத்துவைத்து கணக்கு போட்டுக்கொண்டு இப்படி செய்தால் தேர்தலில் வெற்றி பெறலாம் என திட்டம் வகுத்து தந்துகொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு ஒன்று, மாவட்ட செய லாளர்களின் கூட்டத்தில் தலைவர் பேசும்போது, “"தேர்தல் வேலையை நீங்கள் பாருங்கள், வெற்றிக்கான வழியை நான் கூறுகிறேன்' என்றார். எப்படி என தலைமை நிர்வாகிகளிடம் கேட்டபோது, ""ஒரு சட்டமன்ற தொகுதிக்கு நமக்கு 3500 உறுப்பினர்கள் தேவை. அது இப்போது நம்மிடம் உள்ளது. அந்த 3500 உறுப்பினர்கள் ஒவ்வொரு வரும் 10 பேரை தங்கள் கீழ் இணைத்து பூத் கமிட்டி அமைக்க வேண்டும். அந்த பூத் கமிட்டியில் 5 பேர் இளைஞர் rajini-இளைஞியாக இருக்கவேண்டும். ஒரு பூத்துக்கு ஒரு வழக்கறிஞர் அல்லது 4 பூத்துக்கு ஒரு வழக்கறிஞர் என ஆலோசனை மற்றும் பாது காப்புக்காக இருக்கவேண்டும். தொகுதிக்கு 3500 உறுப்பினர்கள் பெருக்கல் 10 என்றால் 35 ஆயிரம் பேர். இந்த 35 ஆயிரம் பேரும், தலா இருவரை மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்களிப்பவர்களாக மாற்றவேண்டும். ஒருவர் இரண்டு வாக்குகளை கொண்டுவருவது என்பது சுலபம். 35 ஆயிரம் உறுப்பினர்கள் மூலமாக தொகுதிக்கு 70 ஆயிரம் ஓட்டு, மொத்தம் 1.05 லட்சம் ஓட்டு கிடைக்கும். தொகுதியில் 2 லட்சம் ஒட்டு இருக்கிறது என்றால் அதில் பாதி வாக்குகளை நாம் வாங்கி சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் என தலைவரிடம் கம்யூட்டரில் போடப்பட்ட புள்ளிவிபரங்களை காட்டி சொல்லியுள்ளார்கள். அதனை நம்பித்தான் அவரும் சொல்லியுள்ளார்.

Advertisment

ஒரு தொகுதியில் 3500 உறுப்பினர்கள் உள்ளார்களா என்பதே பெரிய கேள்விக்குறி. எங்கள் கட்சியில் ஒருவர் உறுப்பினராக வேண்டும் என்றால் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும், சிறப்பு உறுப்பினர் என்றால் 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு ந.செ., ஒ.செ. என பதவிக்கு போட்டியிடுபவர்கள் 20 சிறப்பு உறுப்பினர்களை இணைத்திருக்க வேண்டும் என்றார்கள். பல பொறுப்பாளர்கள் தாங்களே 20 பேருக்கு, 50 பேருக்கு என பணத்தைக் கட்டி, அதை முன்னிறுத்தி கட்சியில் பதவியை வாங்கிவிட் டார்கள். ஆனால், பேப்பரில் உள்ள எண்ணிக்கை களத்தில் இல்லை.

அதேபோல், வேட்பாளர் யாராக இருந்தாலும் தேர்தல் களத்தில் ஓட்டுக்கு பணமே தரக்கூடாது என உறுதியோடு சொல்லியுள்ளார் தலைவர். போன நாடாளுமன்றத் தேர்தலின் போதே, "ஓட்டுக்கு பணம் தரும் வேட்பாளர் மீது நானே தேர்தல் ஆணையத்தில் புகார் தருவேன்' என்றார். ஓட்டுக்கு பணம் தராமல் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால் அது மிகப் பெரிய சவால் என்பதுதான் களயதார்த்தம். இதை உணர மறுக்கிறார் தலைவர்.

உழைப்பது மட்டுமே உங்கள் வேலை, இப்போதிலிருந்து வேலையைப் பாருங்கள், எங்களால் தொகுதியில் வேட்பாளரை வெற்றி பெற வைக்க முடியாது என நீங்கள் நினைத்தால் ஜனவரி 15ந் தேதி வரை நேரம் எடுத்துக்கொண்டு நம்மால் வெற்றி பெற முடியாது கூட்டணி வைத்துக் கொள்ளலாம் எனச் சொல்லுங்கள், யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது பற்றி நான் முடிவெடுக்கிறேன் எனச் சொல்லி அனுப்பி யுள்ளார்'' என்றார்கள்.

Advertisment

கமல் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் மற்றொரு நடிகரின் கிச்சன் கேபினட் பேசியதாம். கமலை முதல்வர் வேட்பாள ராக எங்கள் கட்சியின் சார்பில் ஏற்றுக்கொண்டு கூட்டணி வைக்கிறோம் "400 சி' தேவை எனக் கேட்டதாகவும், அதனை கமல் மறுத்ததாகவும் மய்யம் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

-து.ராஜா