ந்தியச் சமூகச்சூழலில், கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், சொத்துரிமை எனப் பலவற்றிலும் ஆணுக்குக் கீழ்தான் பெண்கள் என்றிருந்த நிலை, பல்வேறு போராட்டங்களாலும், சட்டங்களாலும், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களாலும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்துள்ளது.

பெண்களை அடிமைப் படுத்தும் பால்ய விவாகத்தை ஒழிக்கும் நோக்கில் "சாரதா சட்டம்' என்றழைக்கப்பட்ட குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டமானது, 1930-ம் ஆண்டில் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. அதன்படி ஆண்களுக்கான திருமண வயது 16 என்றும், பெண்களுக்கான திருமண வயது 14 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கே சமூகத்தில் பல்வேறு பிரிவினர் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர், இச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பெண்ணின் திருமண வயது 15 ஆக உயர்ந்து, 1978-ல் பெண்ணின் திருமண வயது 18 என்றும், ஆணின் திருமண வயது 21 என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

bb

Advertisment

இச்சட்டம் கொண்டுவரப் பட்டு 40 ஆண்டுகளைக் கடந்துள்ள சூழலில், தற்போதும்கூட முழுமையாகக் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க முடியவில்லை. போதுமான விழிப்புணர்வும் மக்களைச் சென்றடையவில்லை. திருமணமாகாத பெண்ணை வீட்டிலேயே வைத்திருப்பது மிகக்கடினமான விஷயம் என்பதுபோன்ற எண்ணப்போக்கு கொண்ட பெற்றோர் அதிகமாக இருக்கிறார்கள். சமூகப் பழக்கம், பொருளாதாரம், பாதுகாப்பின்மை என பல காரணங்களால் இளம் வயது திருமணம் செய்வதால், பெண் கல்வி பாதிக்கப்படுகிறது.

18 வயதிலேயே திருமணம், மகப்பேறு என்பதெல்லாம் பெண்களை உடல்ரீதியில் பலவீனப் படுத்துமென்றும், ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்துமென்றும் மருத்துவ ரீதியாகக் கூறப் படுகிறது. உளவியல் ரீதியாகவும், பெண்கள் திருமணத் துக்கான மனப்பக்குவத்தைப் பெறுவதற்கு 18 வயது போதுமானதல்ல என்று கூறப்படுகிறது.

marriage

Advertisment

சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர், "ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இருந்து பெண்களைக் காக்க, அவர்கள் சரியான வயதில் திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்வது அவசியம். எனவே, குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் மற்றும் இந்து திருமணச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளத் திட்ட மிட்டுள்ளது. அவ்வாறு திருத்தம் மேற்கொண்டு பெண்ணின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படும்'' என்று கூறியிருந்தார். அதன்படி, பெண் ணின் திருமண வயதை அதிகரிப்பது குறித்து ஆலோ சித்து முடி வெடுக்க, ஜெயா ஜெட்லி தலைமையில் ஒரு செயற்குழு அமைக்கப்பட்டது. அந்த செயற்குழுவில், நிதி ஆயோக் நிபுணர் மருத்துவர் வி.கே.பால், சுகாதார அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகங்களின் உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்தக் குழு ஆய்வு நடத்தி, "பெண்ணின் திருமண வயதை அதிகரிப்பதால் பொருளாதார, சமூக, ஆரோக்கிய மேம்பாடு உறுதி செய்யப்படும்' என்று தனது பரிந்துரையை டிசம்பர் மாதத் தொடக்கத்தில் வழங்கியது. அதையடுத்து, பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இனி நாடாளுமன்றத்தில் மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்படும். மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கலவையாக எழுந்துள்ளது.

mm

"பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் இந்த புரட்சிகர முடிவு உதவும்' என்று மருத்துவர் ராமதாஸ் இச்சட்டத்தை வரவேற்றுள்ளார். "உலக அளவில் இந்திய பெண்கள் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு இளம் வயது திருமணமும், தாய்மையும்தான் காரணம்' என்று கூறியுள்ள அவர், "இதைக் கருத்தில்கொண்டு தான் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வந்ததாக' கூறியுள்ளார்.

ஆனால், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், "இச்சட்டத்தைக் கொண்டு வருவதற்குமுன் மக்களிடம் கலந்தாலோசனை செய்ய வேண்டுமென்று' குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய அரசியல் அமைப்புகளைப் பொறுத்தவரை, இச்சட்டத் திருத்தத்தைத் தங்களுக்கு எதிரான நோக்கில் கொண்டுவரப் பார்க்கிறார்களோ என்ற ஐயம் எழுப்பப் படுகிறது.

பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சமாஜ்வாடி, ஓவைசி கட்சி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட நோட்டீஸில், "பெண்களின் திருமண வயது உயர்வால் சமூகத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து மக்களவையில் விவாதிக்கப்பட வேண்டும். இது அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தில் மத்திய அரசு தலையிடும் செயல் ஆகும். இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு தவிர்ப்பது அவசியம்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே சி.ஏ.ஏ., முத்தலாக் விஷயங்களில் மோடி அரசின் செயல்பாடுகள் இஸ்லாமிய விரோதத் தன்மையுடன் இருந்ததை வைத்தே இதனையும் பார்க்க வேண்டியிருப்பதாக எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணை தலைவர் உ.வாசுகி கூறுகையில், "இந்த நடவடிக்கை மேலோட்டமாக சரியானது போல தோன்றினாலும், ஏராளமான பெண்கள், குழந்தைகள் அமைப்புகள், குடும்பநல வல்லுனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் 18 வயதில் வழங்கப்பட்ட பின், திருமணத்துக்கு மட்டும் இவ்வயது போதாதென்பது பொருத்தமாக இல்லை. 18 வயதை நிர்ணயித்து 40 ஆண்டுகளான பின்னும் குழந்தைத் திருமணத்தை 10%க்குள் கூட கொண்டுவர முடியவில்லையே, ஏன்?

வறுமை, வரதட்சணை, பெண்ணடிமைப் பார்வை, பாதுகாப்பு பற்றிய அச்சம் போன்ற காரணங்களே கண்முன் நிற்கின்றன. பெண் கல்வி, வேலை வாய்ப்பு உயரும் போதுதான் குழந்தைத் திருமணத்தைக் கட்டுப்படுத்த முடியும். திருமண வயதை மட்டும் உயர்த்துவது பலனளிக்காது. பிரசவ மரணம், ஊட்டச்சத்து குறைவு போன்ற விஷயங்களை தடுக்கவே இச்சட்டம் என அரசு சொல்வது உண்மைக்கு வெகுதொலைவில் உள்ளது.

பா.ஜ.க.வின் சித்தாந்தத்தில் பெண் சமத்துவம் இல்லை, எனவே இவர்களின் பெண் ஆளுமை குறித்த வாதங்களில் நம்பகத்தன்மை இல்லை. சாதி, மத மறுப்பு திருமணங்களைத் தடுக்கும் நோக்கமே இதில் தூக்கலாகத் தெரிகிறது.

ஜெயா ஜெட்லி கமிட்டி, திருமண வயதை உயர்த்தும்முன் இதனை ஏற்கச் செய்வதற்கு பரந்துபட்ட பிரச்சாரம் தேவை என்று கூறுகிறது. பெண் கல்விக்கான சூழலை உருவாக்குவது, பாலியல் கல்வி அளிப்பது, திறமை உயர்வுக்கான பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்வது போன்றவற்றை உருவாக்காமல் வெறுமனே சட்டம் கொண்டு வருவதில் பலனில்லை எனவும் கூறுகிறது. அக்கமிட்டியின் பரிந்துரைகளில் ஒன்றை மட்டும் செலக்டிவாக அமல்படுத்துவது சந்தேகம் கொள்ள வைக்கிறது'' என்கிறார்.

இந்த சந்தேகத்தை புறந்தள்ள முடியாது. சபரிமலைக்குப் பெண்களும் செல்லலாமென்று உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்த பின்னும் அதற்கெதிராகப் போராட்டங்களை உருவாக்கி, கலவர பூமிபோல கேரளாவை உருமாற்றி, பா.ஜ.க. செய்த எதிர்வினையால், பெண்கள் சட்டரீதியாகப் போராடிப்பெற்ற உரிமை கிடப்பில் போடப்பட் டுள்ளது. அதேவேளை, முத்தலாக் தடைச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த உடனேயே செயல்படுத்தியது. ஆக, பெண்ணுரிமை என்பதில் மதரீதியில் தங்களை வெளிப்படுத்திய ஒன்றிய அரசின்மீது சந்தேகப்பார்வை விழத்தான் செய்யும்.

ஜெயா ஜெட்- குழுவின் முன், கடந்த ஆண்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்து இளம் குரல் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த 2,500 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று எம்.பி.க்கள் பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் சிறார் திருமணத்திற்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து தீர்வு கண்டு பாலின சமத்துவத்திற்கு வழி காணுமாறு வலியுறுத்தியிருப்பதுடன், எந்த வயதில் திருமணம் என்பதை சம்பந்தப்பட்ட பெண்களே தீர்மானிக்கும்படியான சமுதாயக் கட்டமைப்பை உருவாக்குமாறு கோரியுள்ளனர். இந்த அமைப்பினரும் எம்.பி.க்களும், பெண்களின் திருமண வயது குறித்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப வலியுறுத்துவதால், பா.ஜ.க. அரசு கொஞ்சம் இறங்கி வந்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.