திருவாரூர் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான நன்னிலம் தொகுதியில் அ.தி.மு.க. தொடர்ந்து வெற்றிபெறுவதற்கு தி.மு.க. மா.செ. கலைவாணனுக்கும், அ.தி.மு.க. மா.செ. காமராஜுக்கும்  இருக்கும் மறைமுக நட்புதான் காரணம் என்கிறார்கள் தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும்.

Advertisment

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி (தனி), நன்னிலம், திருவாரூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. நன்னிலம் தொகுதியைத் தவிர மற்ற மூன்று தொகுதிகளிலும் தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சியுமே தொடர்ந்து வெற்றிபெற்றுவருகிறது. 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும் அலையிலும்கூட நன்னிலம் தொகுதியில் தி.மு.க. தோற்றது.

Advertisment

thiruvarur1

இதுகுறித்து தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவரிடம் விசாரித்தோம். "தமிழகத்திலேயே மிகப்பெரிய தொகுதி. ஏற்கனவே வலங்கைமான் தொகுதியும், குத்தாலம் தொகுதியில் குறிப்பிட்ட பகுதியும் நன்னிலம் தொகுதியில் இணைக்கப்பட்டதால், தஞ்சாவூர் முனையிலிருந்து காரைக்கால் வரை நீண்டிருக்கிறது. நன்னிலம் தொகுதியும் தி.மு.க.வுக்கு சாதகமான தொகுதிதான். ஆனால் தி.மு.க. மாவட்டச் செயலாளர் நன்னிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்போனதால் அ.தி.மு.க.வுக்கு சாதகமாகிடுச்சி. காமராஜ், தனது தொகுதிக்கு அடிக்கடி வரக்கூடிய நபராகவும், கட்சிக்காரர்கள் மட்டுமின்றி மாற்றுக்கட்சியினர் வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்து கொள்ளும் நபராகவும் இருக்கிறார். தொகுதியின் எல்லா கட்சிக்காரர்களிடமும்  இணக்கமாக இருக்கும் சூழலை வளர்த்துவைத்திருக்கிறார். 

இதற்கு நேரெதிரானவர் தி.மு.க. மா.செ. பூண்டி கலைவாணன். சொந்த கட்சிக்காரர்களையே மதிக்கமாட்டார். கடந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஜோதிராமன் குறைந்த வாக்குகளில் தோற்றுப்போனார். இந்த முறை நன்னிலம் தொகுதியைக் கைப்பற்ற கலைவாணனை இறக்கிவிட்டுவிடுவார்கள் என்பதால் முன்கூட்டியே நன்னிலம் தொகுதியில் போட்டி நிறைய இருக்கு. வெளியிலிருந்து ஆட்களைப் போடமுடியாது என்பதுபோல ஒரு பிம்பத்தை உருவாக்கினால் கலைவாணனை நன்னிலம் தொகுதிக்கு தள்ளிவிடமாட்டாங்க என்கிற கணக்கோடு மா.செ. தரப்பில் உள்ளடி வேலைகளைத் துவங்கிவிட்டனர். 

Advertisment

ஏற்கனவே போட்டியிட்ட ஜோதிராமன், குடவாசல் ஒன்றியச் செயலாளர் பிரபாகரன், ஒன்றியச் செயலாளர் மீசை செல்வராஜ் என பலரையும் மறைமுகமாகக் கிளப்பிவிடுகிறார்கள். மீசை செல்வராஜ் தனக்குத்தான் சீட்டு என்பதை தொகுதி முழுவதும் கூறிவருகிறார். அதேபோல் ஏற்கனவே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய ஜோதிராமனும் மீண்டும் தொகுதி தனக்குத்தான் என சமீபகாலமாக தொகுதி முழுவதும் சுற்றிவருகிறார். குடவாசல் ஒன்றியச் செயலாளர் நீண்ட அனுபவம், தொகுதி முழுவதும் பரிச்சயம், எளிமை இவற்றால் தனக்குத்தான் இந்தமுறை வாய்ப்பு கொடுப்பார்கள் என கூறிவருகிறார். இவர்கள் மூவருமே கலைவாணனின் ஆதரவாளர்கள். இதுபோக எதிரணி ஒன்று கலைவாணன்தான் போட்டியிடணும், அப்போதுதான் தொகுதியைக் கைப்பற்றமுடியும் என தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளது.      

thiruvarur2

நன்னிலம் தொகுதியில் பட்டியல் சமூகத்தவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், உடையார், வெள்ளாளர், கள்ளர், வன்னியர் போன்றோரும் அதிகம். இவர்களை அரவணைத்து அனுசரித்துப் போகக்கூடிய நபராக காமராஜ் இருக்கிறார். அதோடு தொகுதியிலுள்ள குட்டி விவசாய சங்கங்களைக்கூட காமராஜ் விலைக்கு வாங்கிவைத்திருக்கிறார். காமராஜை தோற்கடிக்கணும்னா பூண்டி கலைவாணன்தான் சரியான நபர். ஆனால் கலைவாணன் ஒருபோதும் ஏற்கமாட்டார்'' என்கிறார்.

நன்னிலம் தொகுதியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவர் நம்மிடம், "அ.தி.மு.க. 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தபோதுகூட உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜை எதிர்த்து கலைவாணன் ஒரு விமர்சனமும் செய்ததில்லை. போராட்டம், ஆர்ப்பாட்டம் கூட நடத்தியதில்லை. இன்று தி.மு.க. ஆட்சி நடந்தாலும் தி.மு.க.காரர்களுக்கு எந்த ஒப்பந்தமும் கிடைப்பதில்லை. அ.தி. மு.க.வினருக்கும், காமராஜின் அக்கா மகன் குமாருக்கும்தான் அதிகம் கொடுக் கிறார். அ.தி.மு.க. ஒ.செ. குணாவின் தம்பி இன்றுவரை சவுடு குவாரியை ஜரூராக நடத்திவருகிறார். இப்படி காமராஜுடன் எப்பவுமே கூட்டணியில் இருக்கிறார். நீ நன்னிலத்தில் ஜெயிச்சிக்க,…நான் திருவாரூரில்  அதிக வாக்குகள் வித்தியாசத் தில் ஜெயிக்கணும். அதுக்கு பரஸ்பரம் நாம இடையூறு செய்யக்கூடாது என்கிற இருவருக்குமான மறைமுக டீல் இன்றுவரை தொடர்கிறது.  

கடந்த சட்டமன்றத் தேர்தலில்கூட திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வத்திற்கு பணம் தருவதாகக் கூறி கடைசி நேரத்தில் கைவிரித்தார் காமராஜ். அதேபோலதான் நன்னிலம் தொகுதியிலும் கலைவாணன் கவனம் செலுத்தாமல்போன தால் குறைந்த வாக்கில் தோற்றார் தி.மு.க. வேட்பாளர் ஜோதிராமன். 

இன்றைய திருவாரூர் எதார்த்தம் வேறுமாதிரியாக உள்ளது. திருவாரூர் முழுக்க பி.ஜே.பி. கடுமையா வளர்ந்துக்கிட்டிருக்கு. கலைவாணன் அ.தி.மு.க. மா.செ. காமராஜுக்காக எப்படி எந்த எதிர்ப்பும் காட்டலையோ, அதுபோல கருப்பு முருகானந்தத்திற்காக பி.ஜே.பி.க்கு எந்த எதிர்வினையும் கொடுக்கிறதில்லை. பி.ஜே.பி.க் காரர்கள் தி.மு.க.காரர்களை மிரட்டுமளவுக்கு திருவாரூரில் வளர்ந் துட்டாங்க. நகரத்திலுள்ள 30 வார்டுகளிலும் அமைப்புகளுள்ள கட்சியாக வளர்ந்திருக்கு. இந்தமுறை திருவாரூர் தொகுதியில் கலைவாணன் போட்டியிட்டால் வெற்றிபெறுவார். ஆனால் வாக்கு சதவிகிதம் குறைந்து தி.மு.க. கோட்டை என்கிற பெயர் தகரும்''’என்கிறார். 

தி.மு.க.வைச் சேர்ந்த திருவாரூர் வர்த்தகசங்க பிரமுகர் ஒருவர் கூறுகையில், "திருவாரூர்  நகரத்தில் வெள்ளாளர் பெல்ட் .அதிக வாக்குகளை கொண்டிருக்காங்க. கலை வாணனின் போக்கு அவர்களை எரிச்சலடையவே வைத்துள்ளது.  அ.தி.மு.க.வில் வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த காமராஜின் பினாமியான கலியபெருமாள் போன்றவர்களை இறக்கிவிட்டுவிட்டால் தி.மு.க. நகரத்தில் இன்னும் செல்வாக்கை இழக்கும். கலைஞரின் மரியாதையை குறைக்கிற சூழல் ஏற்படும். மீண்டும் திருவாரூரை தி.மு.க. கோட்டையாக மாற்றணும்னா வெள்ளாளர் சமூகத்தவரையே நிறுத்த ணும் அல்லது கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை கொண்டுவந்து நிறுத்தவேண்டும்.

கலைவாணனிடம் கட்சிக்காரர் களே நெருங்கிப்போய் எதுவும் கேட்க முடியல, கேட்டாலும் முறையான பதிலும் மரியாதையும் இருப்பதில்லை. அதனால் புதிய நபரா, எளிமையா அணுகக்கூடியவர்களா மக்களோடு பயணிக்கும் ஒன்றியச் செயலாளர் புலிவலம் தேவா.  ஒன்றியச் செயலாளர்  பவித்ரமாணிக்கத்தை சேர்ந்த கலியபெருமாள், நகராட்சி துணைச்சேர்மன் அகிலா சந்திரசேகர்  போன்ற  கட்சிக்காரர்கள் மத்தியில் பேசப்படும் நபராக நிறுத்தவேண்டும்.  

தற்போது நகராட்சி நிர்வாகம் திருவாரூரில் முழுமையாக முடங்கிப் போயிடுச்சு. பாதாளச் சாக்கடை வழிந்தோடி நாற்றமெடுக்கிறது. கடந்த நான்கு வருடங்களில் கவுன்சிலர்களே கட்சி மாறிடும் அளவுக்கு இருக்காங்க.  தி.மு.க. பிரமுகர் செந்தில் மனைவிதான் நகராட்சி சேர்மன். செந்திலும் கட்சியில் யாரையும் மதிக்கமாட்டார். நல்லது கெட்டதுகளுக்கும் போகமாட்டார். எந்த வார்டில் என்ன பிரச்சனை, என்ன வேலை நடக்குதுன்னுகூட தெரியாது. கலைவாணன் கூடவே சுற்றுவார். கலைவாணனால் அதிருப்தி ஒருபுறமிருந்தாலும் அவர்கூடவே இருக்கிற செந்திலுக்கும் டவுனுக்குள் நல்ல பெயர் இல்லை. கலைவாணனை நன்னிலத்துக்கு வேட்பாளராக அறிவித்தால் நன்னிலமும் வெற்றிபெறும். திருவாரூரில் யாரை நிறுத்தினாலும் வெற்றி உறுதியாகும்''’என்கிறார்.

திருவாரூர் விவசாயி ஒருவர் கூறுகையில்... "திருவாரூருக்கு கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் வந்த திட்டங்கள்தான். 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் எதுவுமே நடக்கலை. தி.மு.க. வந்ததும் திருவாரூர் மீண்டும் வளர்ச்சிபெறும் என்று காத்திருந்த நிலையில் கலைவாணன் குடும்பம் மட்டும்தான் வளர்ந்துள்ளது'' என்கிறார்.

2016ல் கலைஞர் 68,000 ஓட்டு வித்தியாசத்தில் தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்த பெருமை திருவாரூருக்கு உண்டு. அவர் ஆட்சிக் காலத்தில் தான் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி என பெரிய, பெரிய திட்டங்கள் வந்தன. அவருக்குப் பிறகு திருவாரூருக்கு சொல்லிக் கொள்கிற அளவுக்கு திட்டங்கள் வரவில்லை. அதேசமயம் காமராஜ் அமைச்சராக இருந்தபோது நன்னிலம் பகுதிக்கு பல திட்டங்களைக் கொண்டுவந்து தொகுதியை சிறப்பாக வைத்திருந்தார். 2021 தி.மு.க. ஆட்சியில் திருவாரூருக்கு தெற்கேவுள்ள மன்னார்குடியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவால் பல திட்டங்கள் நிறைவேறியுள்ளன. குறிப்பாக சென்னை -கிளாம்பாக்கத்துக்கு இணையாக மன்னார்குடியில் பேருந்து நிலையம் கொண்டுவந்தது, ஸ்டேடியம், ரோடு வசதி என நிறைய திட்டங்களை கொண்டு வந்து தொகுதியை நன்றாக வைத்துள்ளார். ஒருமுறை கட்சி கூட்ட மேடையில் அமைச்சர் நேரு, அமைச்சர் ராஜாவைப் பார்த்து, "யோவ் நீ மட்டும் உன் தொகுதிக்கு பஸ்நிலையம், ஸ்டேடி யம்னு எல்லா திட்டத்தையும் என்னை வச்சு கொண்டாந்துட்ட. ஆனா என் மாவட்டத்துல ஒரு தொழிற்சாலை கேட்கிறேன், கொண்டுவரமாட் டேங்கிற' என கலகலப்பாகக் கேட்டாராம். 

திருவாரூர் மட்டுமே எந்த முன்னேற்றமும் இல்லாமல் அதே நிலையில் உள்ளது. வருங்காலங்களில் முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் தொகுதிக்கு நல்ல திட்டங்கள் மற்றும் மக்களின் அடிப்படை வசதிகளைச் செய்து, கலைஞர் பிறந்த மண்ணின் பெருமை காப்பாற்றப்பட வேண்டும் என்பதே திருவாரூர் மக்களின் மனநிலை.

இதுகுறித்து விளக்கம்கேட்க தி.மு.க. மா.செ. கலைவாணனைத் தொடர்பு கொண்டோம். ஒரு நிமிடம் நாம் கூறியதைக் கேட்டவர், ஹலோ, ஹலோ எனக்கூறி கேட்காததுபோல துண்டித்துவிட்டார்.