"ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வேண்டுமாயின் அந்த மாநிலத்தின் தொழில் வளம் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்' என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள். கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் தொழில்துறை 18-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி கேள்விக்குறியாக, வருவாய்ப் பற்றாக்குறையும் நிதிப் பற்றாக்குறையும் விண்ணைத் தொடுமளவுக்கு அதிகரித்தன. நெருக்கடியான காலகட்டத்தில் ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துள்ள தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் தொழில்துறை எப்படி இருக்கிறது?

industry

இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட தொழில்துறை அதிகாரி ஒருவர், ‘’"பன்னாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டுவருவதற்காக கடந்த 10 ஆண்டுகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இரண்டு முறை அ.தி.மு.க. ஆட்சி யாளர்கள் நடத்தினர். ஜெயலலிதா தலைமையில் நடந்த முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் 3 லட்சம் கோடி முதலீடுகள் வந்ததாகச் சொன்னார்கள். இதற்காக, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டன. அதன்பிறகு நடந்த மாநாட்டில் 5 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்த்திருப்பதாகச் சொன்னார்கள்.

இந்த 2 மாநாடுகள் மூலம் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைத்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், போட்டுக்கொள்ளப் பட்ட ஒப்பந்தங்கள் மூலம் இந்திய நிறுவனங்களிட மிருந்து மட்டும்தான், அதுவும் சொற்ப அளவில் மட்டுமே முதலீடுகள் கிடைத்ததே தவிர பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து முதலீடுகள் பெரிய அளவில் வரவே இல்லை'' என்கிறார் அழுத்தமாக.

Advertisment

அதேபோல, புதிய தொழில் கொள்கை-2014, தொலைநோக்குத் திட்டம்-2023 போன்ற அறிவிப்புகளை செய்தது முந்தைய அ.தி.மு.க. அரசு. அவைகள் எதுவுமே நடைமுறைக்கு வராததால் தமிழகத்தில் தொழில் துவங்க நினைத்த பல நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு படை யெடுத்துவிட்டன. அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமிருந்ததே இதற்கான முக்கிய காரணம். எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாட்டு விசிட்டும் பலன் தரவில்லை.

நலிவடைந்த சூழல்களும் கடுமையான நிதி நெருக்கடிகளும் ஒன்றிணைந்து, மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் தொழில்துறையை தற்போது தாக்கிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் தொழில் துவங்க முந்தைய ஆட்சி யாளர்களால் ஏற்படுத்தப்பட்ட தடையை நீக்கு வதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதிக கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, தொழில் சீர்திருத்த திட்டத்தின் 5 கூறுகளான வெளிப்படைத்தன்மை, ஒற்றைச் சாளர முறை, தொழில் துவங்குவதற்கான நிலம், சுற்றுச்சூழல் மற்றும் கட்டுமானங்களுக்கான அனுமதிகள் ஆகியவைகளில் சமரசமில்லாத நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் தங்கம் தென்னரசு. மு.க.ஸ்டாலினின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் அதிகாரிகளிடம் வேலை வாங்குவதாக அமைச்சரை பற்றி சிலாகிக்கிறார்கள் தொழில் துறையினர்.

Advertisment

industry

தேர்தல் பிரச்சாரத்தின்போது 7 உறுதி மொழிகளை பிரகடனப்படுத்தியிருந்தார் மு.க. ஸ்டாலின். அவைகளில் பொருளாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக கட்டமைப்பு ஆகிய மூன்றும் தொழில் வளர்ச்சியை மையப்படுத்தியிருந்தன. அதற்கேற்ப, ஆட்சிப் பொறுப்பேற்றதும் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட ஆலோசகர் குழுவை அமைத்தார் ஸ்டாலின்.

அதனால் தமிழகத்தை நோக்கி சர்வதேசத் தின் கவனம் திரும்பியுள்ளது. அந்த வகையில், மனித வளத்தின் வலிமைமிக்க மாநிலமாக தமிழகம் இருப்பதால் உற்பத்தித்துறையில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகள் தற்போது வேகமெடுத்துள்ளன. வல்லுநர்களின் ஆலோசனை களைப் பெற்று, முதலீடுகளுக்கு ஏற்ற முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றும் திட்டங்களில் ஸ்டாலினும் தங்கம் தென்னரசும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

முதலீடுகளையும் தொழில் நிறுவனங்களை யும் ஈர்க்கும் வகையில், ’"முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு' எனும் மாநாட்டை நடத்தினார் ஸ்டாலின். இதில் பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் வல்லுநர்கள் கலந்து கொண்டு ஆக்கப்பூர்வமான கருத்துகளை தெரிவித் திருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல தெற்காசியாவிலேயே தொழில் துறையில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக் கும் முயற்சியில், 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான உள்நாட்டு உற்பத்தியை அடுத்த 10 ஆண்டுகளில் எட்டுவதற்கான இலக்குகளை நிர்ணயித்துள்ளார் முதல்வர்.

industry

இதற்காக தொழில் துவங்கு வதை எளிதாக்கவும், இலகுவான சூழல்களை உருவாக்கவும், அனைத்து அனுமதிகளையும் எளிதாகப் பெறவும் ஒற்றைச் சாளர இணையதளம் 2.0-வை உருவாக்கியிருக்கிறார். தமிழக அரசின் முக்கியமான 24 துறை களின் 100 சேவைகள் கொண்ட இணையதளமாக மேம்படுத்தப் பட்டுள்ளது. "இதனை நானே நேரடியாக கண்காணிப்பேன்' என ஸ்டாலின் சொல்லியிருப்ப தால் இணையதளத்தை தினமும் கண்காணித்து தொழில்துறை அதிகாரிகளுக்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்கின் றார் தங்கம் தென்னரசு. இதனால், தொழில் துவங்க முன்வரும் புதிய முதலீட்டா ளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மோடி அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. நடவடிக்கைகள், தமிழகத்தின் சிறு, குறு தொழில்கள் மீது பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியதால் அவைகள் முற்றிலுமாக முடங்கிப் போனது. இவற்றை மேம்படுத்த வல்லுநர்களுடன் தொடர்ந்து ஆலோசனை பெற்று வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

வளர்ந்து வரும் தொழில்களான மின் வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், விமான உதிரிப்பாகங்கள் தயாரிப்புக்கான தொழில் நுட்பம், காற்றாலை மின்சாரம், தகவல் தரவு மையங்கள் உள்ளிட்ட தொழில்களில் கூடுதல் கவனம் கொடுத்து வருகிறது தமிழக அரசு. இதற்காக, வளரும் தொழில்கள், வளரும் வாய்ப்புள்ள தொழில்கள் என இரண்டாக பாகுபடுத்தி திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. வாகன உற்பத்தியில் மட்டும் 35 லட்சம் கோடிகளுக்கான முதலீடுகளை ஈர்க்க மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்திருப்பதால் வாகன தொழில் நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தையை துவக்கியிருக்கிறது தமிழக தொழில்துறை.

ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் திறன்மிகு மையம் அமைக்க டிட்கோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக்கொண்டிருக்கிறது. மேலும், கடந்த 100 நாட்களில் 35 நிறுவனங்கள் தி.மு.க. அரசோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளன. இதில், 9 திட்டங்களுக்கு உடனடியாக அடிக்கல் நாட்டப்பட்டு 5 நிறுவனங்களின் வணிக உற்பத்தியும் துவங்கியுள்ளது. இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் மூலம் 49 திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதால் 28,508 கோடி ரூபாய் முதலீடு உடனடியாக கிடைத்துள்ளது. தவிர, 17,141 கோடி ரூபாய் முதலீடுகள் விரைவில் கிடைக்கும். இவைகள் மூலம் நேரடியாக 55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளது'' என்கிறார்கள் தொழில்துறை அதிகாரிகள்.

ஆட்டோ மொபைல்ஸ், ஜவுளி, தோல் பதனிடுதல், ஐ.டி. இண்டஸ்ட்ரீஸ், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவைகள் தமிழகத்தில் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், வளரும் தொழில்களான உணவு பதப்படுத்தும் தொழில்கள், உயிரித் தொழில் நுட்பம் உள்ளிட்ட தொழில் களுக்கும் முன்னுரிமை கொடுக்க தயாராகியுள்ளது தொழில்துறை.

அதற்கேற்ப தி.மு.க. அரசின் முதல் பட்ஜெட்டில் மின்வாகன பூங்கா, உணவுப் பூங்கா, தோல் பொருள் பூங்கா, மருத்துவ சாதன பூங்கா, பாதுகாப்பு கருவிகள் உற்பத்திப் பூங்கா ஆகியவற்றை பல்வேறு மாவட்டங்களில் உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், விழுப்புரம், வேலூர், தூத்துக்குடி, திருப்பூர் நகரங்களில் டைடல் பூங்காக்களும் ; திருவண்ணா மலை , தேனி, நெல்லை, விருதுநகர், விழுப்புரம், நாகை, சிவகங்கை மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பேட்டைகளும் உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளன.

அதேபோல, தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்காக மதுரை-தூத்துக்குடி தொழிற்பாதை திட்டத்தை அறிவித்திருக்கிறது தி.மு.க. அரசு. இதன்மூலம் தமிழகத்தில் பரவலான தொழில் வளர்ச்சியை அனைத்து மாவட்டங்களிலும் உருவாவதோடு, அருகாமை மாவட்டங்களிலேயே இளம் தலைமுறையினர் வேலை வாய்ப்புகளை பெறவும் முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஆக, கடந்த 100 நாட்களில் தொழில் புரட்சியை உருவாக்கத் தேவையான திட்டங்களை முன்னெடுத்துள்ள தமிழக அரசின் தொழில் துறைக்கு, சவாலாக இருக்கின்றன தமிழகத்தின் உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சரிவுகள்! உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லாததால் அதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், முதல்வர் ஸ்டாலின் எதிர்பார்க்கும் தொழில் புரட்சி தமிழகத்தில் உருவாகும் என்கிறார்கள் பொருளா தார வல்லுநர்கள்.