கொரோனா தடுப்பூசிகளின் தேவை உள்ளூரில் அதிகரித்திருக்கும் நிலையில் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பிரதமர் மோடியின் முடிவுகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து, சோனியாவின் தலைமையில் நடந்த காங்கிரஸ் செயற்குழுவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டி ருக்கிறது. மெல்ல... மெல்ல தடுப்பூசி மீது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ள மக்களுக்கு உரிய அளவில் மருந்து சப்ளை இல்லை. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிகளவிலான தடுப்பூசி களை அனுப்பி வைப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றன பிற மாநில அரசுகள். தமிழகத்தில், சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி ஒருவரிடம் நாம் பேசியபோது, ""தமிழகத்தில் போடப்படும் "கோவிஷீல்டு', "கோவேக்சின்' ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் தேவையறிந்து மத்திய அரசுதான் அனுப்பி வைக்கிறது. ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய-மாநில அமைச்சர்கள் என ஆட்சியின் உயர்பொறுப்பில் இருப்பவர்கள் கோவேக்சின் போட்டுக் கொண்டதால், மக்களும் அதையே எதிர்பார்க்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை இரண்டு தடுப்பூசி களுக்குமே தட்டுப்பாடுதான்.
5 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகளையும், 15 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளையும் தமிழக அரசு கேட்டிருந்த நிலையில், கோவேக்சினில் 1 லட்சமும், கோவிஷீல்டில் 2 லட்சமும்தான் அனுப்பி வைத்துள்ளது மத்திய சுகாதாரத்துறை. ஒரு நாளைக்கு 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப் படும் சூழலில், தமிழக அரசு கேட்கும் எண்ணிக்கையில் 50 சதவீதமாவது உடனடியாக அனுப்பி வைத்து உதவ வேண்டும். இதேநிலை நீடித்தால், தமிழகம் முழுவதும் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு அபாயம் விரைவில் ஏற் படும்''‘’ என்று சுட்டிக்காட்டுகிறார்.
பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர்சிங், ""நம் நாட்டுக்கே போதுமான அளவில் தடுப்பூசிகள் இல்லை; தட்டுபாடு நிலவுகிறது. இந்த நிலையில் ஏற்றுமதி அவசியமா? முதலில் இந்தியர்களுக்கு கொடுங்கள்; பிறகு நல்லெண்ணத்தில் மற்ற நாடுகளுக்கு உதவலாம்'' என்று கடுமையாகச் சாடியிருக்கிறார்.
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரசின் செயற்குழுவை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக 17-ந் தேதி நடத்தினார் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியாகாந்தி. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், வேணுகோபால், அசோக் கெலட், திக் விஜய்சிங், மீரா குமார், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, ஜிதேந்திரசிங், பிரமோத் திவாரி, அஜய்மக்கான், ராஜீவ் சுக்லா, செல்லக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட னர். செயற்குழு குறித்து தமிழக எம்.பி.க்களிடம் பேசினோம். செயற்குழுவில் நடந்ததை நம்மிடம் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
செயற்குழுவில் பேசிய மன்மோகன்சிங், ""கொரோனா வைரஸை தடுப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தும் மோடி அரசு அக்கறை காட்டாததால்தான் இரண்டாவது அலை அதிகரித்திருக்கிறது. உள்நாட்டில் (இந்தியா) தடுப்பூசிகளுக்கு தட்டுப் பாடு அதிகரித்துள்ள சூழலில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய, அதுவும் இலவசமாக கொடுக்கவேண்டிய அவ சியம் ஏன் வந்தது?'' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பிரியங்கா காந்தி பேசும்போது, “""தடுப் பூசி தட்டுப்பாடு இந்தியாவில் அதிகரித்து வருவதால்தான், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது பா.ஜ.க. அரசு. இந்த உண்மையை மறைத்துவிடு கிறார்கள். வைரஸ் நோய்களுக்கு எதிரான போரில் இந்தியா எப்போதும் சாதித்திருக்கிறது. எப்போதுமே தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இருந்த தில்லை. இன்றைக்கு மத்திய பா.ஜ.க. அரசின் தவறான செயல்பாடுகளால் இறக்குமதி செய்யவேண்டிய நிலை இருக்கிறது. இதையெல்லாம் மறைக்கத்தான் நல்லெண்ண அடிப்படையில் ஏற்றுமதி என்ற நாடகத்தை போடுகிறார் மோடி'' என்று கடுமை காட்டியுள்ளார்.
ப.சிதம்பரம் பேசும்போது, ’’""ஒரு கொடிய நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்காமல் தேர்தலில் பிரதமர் கவனம் செலுத்துவது மக்களுக்குச் செய்யும் அதிகபட்ச அயோக்கியத்தனம்'' ‘என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ராகுல்காந்தி பேசும்போது, ""கடந்த 1 வருடமாக நாம் சொல்லிவந்த விசயங்கள்தான் நடந்துகொண்டிருக்கிறது. கொரோனா விசயத்தில் போதிய வியூகமும், திட்டமிடலும் மோடியிடம் இல்லை. தடுப்பூசி முதல் ஆக்சிஜன்வரை தட்டுப்பாடுகள் அதிகரித்திருப்பது கவலையளிக் கிறது''‘’ என்றிருக்கிறார்.
இறுதியாகப் பேசிய சோனியாகாந்தி, ""எதிர்க்கட்சிகளை எதிரிக் கட்சிகளாக மோடி கருதுகிறார். அதனால்தான் எதிர்க்கட்சிகள் சொல்லும் கருத்துக்களை அவர் ஏற்பதேயில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு தேவையான அளவில் உதவுவதில்லை. இந்திய மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தடுப்பூசிகள் ஏற்றுமதியை நிறுத்தவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வயதை 45-லிருந்து 25 ஆக குறைக்கவேண்டும். கொரோனாவை தடுப்பதற்கான மருந்து மற்றும் உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிப்பது அவசியம். சாமானிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சரிக்கட்ட தகுதியுள்ள அனைவருக்கும் மாதம் 6,000 ரூபாய் கொடுக்கவேண்டும்'' என்று வலியுறுத்தியதுடன், காங்கிரஸ் செயற்குழுவில் வெளிப்பட்ட கருத்துகளை பிரதமர் மோடிக்கு கடிதமாக அனுப்பி வைத்திருக்கிறார் சோனியா காந்தி.