முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டு 12 ஆண்டுகள் ஆகியும் நீதியின் கதவுகள் திறக்கவில்லை. உலகத்தின் மனசாட்சி உறங்குகிறது. இந்தாண்டு ஐ.நா. மனித உரிமைமன்றக் கூட்டத் தொடரிலும் இலங்கை அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த மறுக்கிறது சர்வதேச சமூகம். இராஜபக்சேக்கள் செய்த இன அழிப்புக் குற்றங்களை இராஜபக்சேக்களே விசாரித்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லும் தீர்மானங்களை இனியும் ஏற்பதற்கில்லை என்று ஈழத்தமிழர்கள் கொந்தளித்துகொண்டிருக்கிறார்கள்.

srilanka

இலண்டனில் கடந்த பிப்ரவரி 27 முதல் திருமதி அம்பிகை செல்வக்குமார் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் களமிறங்கியுள்ளார். இன்றோடு ஆறு நாட்கள் ஆகிவிட்டன. இவர் இங்கிலாந்தில் மனித உரிமை தளத்தில் செயல்பட்டு வந்தவர். இவர் தன்னுடைய 5 ஆம் வகுப்பு முதல் முதுநிலை படிப்புவரை தமிழ்நாட்டில் பயின்றவர், கலாக்ஷேத்ராவில் நடனப்பயிற்சியை முடித்தவர் என்பதோடு தமிழ்நாட்டு மக்கள் மீது பெருமதிப்பும் பேரன்பும் கொண்டுள்ளார். அவரிடம் ஈழ மனிதஉரிமை செயல் பாட்டாளர் சண் மாஸ்டர் தொடர்புகொண்டு போராட்ட இலக்கு குறித்து கேட்டார்.

""நான் தொடங்கியுள்ள இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் உணர்வுபூர்வமாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முதலில் என் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். இது உண்மைக்கும் நீதிக்குமான போராட்டம்.

Advertisment

போர் முடிந்து இந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் எங்கள் மக்கள் சிங்கள இராணுவத்தின் முற்றுகைக்குள் திறந்தவழிச் சிறைச்சாலையில் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் உறவுகளைத் தேடி அலைந்து நொந்துபோய் கடைசிவரை பார்க்க முடியாமலே கண்மூடிய தாய்மார்கள் மட்டும் 83 பேர். இன்றும் இனஅழிப்பு தொடர்கிறது எவ்வித தண்டனையும் இன்றி.

அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் போர்க் குற்றத்தின் சாட்சியங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்து கோயில்கள் இடிக்கப்படுகின்றன. புத்த விகாரைகள் நிறுவப்படுகின்றன. சிங்களக் குடியேற்றங்கள் தொடர்கின்றன. தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன.

srilanka

Advertisment

இனியும் நாங்கள் பொறுத்துக் கொண்டிருந்தால் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் இல்லாமல் அழிந்து போய்விடுவோம். இலங்கை அரசு செய்த இன அழிப்புக்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமாறு ஐ.நா. பொதுப்பேரவைக்கும் ஐ.நா. பாதுகாப்பு அவைக்கும் பரிந்துரை செய்யும் தீர்மானத்தை இந்த கூட்டத் தொடரில் இயற்ற வேண்டும்.

தமிழர்களுக்கு எதிரான பன்னாட்டு சட்டமீறல்கள் குறித்த சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கு மியான்மர் மற்றும் சிரியாவுக்கு அமைத்ததைப் போன்ற பன்னாட்டுப் பொறியமைவு ஒன்றை உருவாக்க வேண்டும். இலங்கையில் நடக்கும் மீறல்களைக் கண்காணிக்க ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும். இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதி தமிழர் தாயகம், தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்ற அடிப்படையில் ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழர்களின் விருப்பத்தை அறியவேண்டும்.

srilanka

இந்த நான்கு கோரிக்கைகளில் ஒன்றேனும் நிறைவேற்றப்படாமல் நான் எனது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை. இது என்னுடைய கோரிக்கை மட்டும் இல்லை. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சனவரி 15இல் தமிழ்ப் பிரதிநிதிகள் ஐ.நா. உறுப்பரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். பிப்ரவரி முதல் வாரத்தில் இலட்சம் தமிழர்கள் பங்குபெற்ற பொத்துவில் முதல் பொலி கண்டி வரையிலான எழுச்சிப் பேரணியும் இதே கோரிக்கைகளை முன்வைத்துதான் நடந்தது.

ஈழத் தமிழினத்தின் இருப்பிலும் பாதுகாப்பிலும்தான் தமிழ்நாட்டு மக்களுடைய பாதுகாப்பும் இந்தியாவின் பாதுகாப்பும் தங்கியுள்ளது. நீதிக்காகவும் உண்மைக்காகவும் இந்தியாவின் நலனுக்காகவும் தமிழர்கள் முன்வைக்கும் இந்த கோரிக்கைகளை ஐ.நா.வில் தர்மத்தின் வழிநின்று நிறைவேற்ற வைக்கவேண்டிய கடமை இந்தியாவுக்கு இருக்கிறது.

33 ஆண்டுகளுக்கு முன்பு திலீபன் அண்ணா இந்தியாவை எதிர்நோக்கி தண்ணீர்கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்தார். அதுபோல் நானும் இப்போது இந்தியாவையும் சர்வதேச சமூகத்தையும் எதிர்நோக்கி தண்ணீர் குடித்து உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் நிற்கிறேன். திலீபன் அண்ணாவை கைவிட்டதுபோல் என்னையும் கைவிட்டுவிடக் கூடாது என்று இதன் வாயிலாக இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.''

-கீரன்