சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவவமனையில் தான் இந்தியாவிலே முதலாவதாக நாளமில்லா சுரப்பித்துறை துவங்கப்பட்டது. அதன் பிறகுதான் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலும், வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துமனை யிலும் இத்துறை உருவாக்கப் பட்டது. அப்படிப்பட்ட துறையின் தலைவராக இருக்கும் ஒருவரின் பட்டயப் படிப்பு செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தும், அதனை மறைத்து இன்றுவரை பணி யாற்றிவருவது அத்துறைக்கே கரும்புள்ளியாக உள்ளது என மருத்துவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னை மருத்துவக்கல்லூரியில் உள்ள நாளமில்லா சுரப்பித்துறையில் எம்.சி.எச். என்டோகிரைன் சர்ஜரி என்ற பட்டயப்படிப்பு 2007ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. சென்னை மருத்துவக்கல்லூரியில் இத்துறைக்கு ஒரு ஆண்டிற்கு ஒரு எம்.சி.எச். சீட் மட்டுமே மருத் துவக் கவுன்சில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அந்த எம்.சி.எச். சீட்டு, உள்ளிருப்பு சர்வீஸ் கோட்டா இல்லாமல், பொது கோட்டாவில் முதலாவது வரும் மாணவருக்கு மட்டுமே கிடைக்கும். அவ்வாறு 2007ஆம் ஆண்டு டாக்டர் நாகராஜ் என்பவர் எம்.சி.எச். துறையில் சேர்ந்து பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு நீர்முஸ்தப்பா உசேன் என்பவர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத் திற்கு துணைவேந்தராக இருந்தபோது நடைபெற்ற என்.சி.எச். நுழைவுத்தேர்வில், ஏ.சி.செந்தில்குமார் என்பவர் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். முறையாக அந்த எம்.சி.எச். சீட் முதல் மாணவருக்கு வழங்கப்படாமல் குளறுபடி செய்யப்பட்டு, ஏழாவது மாணவராக இருந்த மருத்துவர் ஜாகீர் உசேன் என்பவருக்கு வழங்கப்பட்டது.
முதலாவதாக வந்த ஏ.சி.செந்தில் குமாருக்கும் வழங்காமல், அடுத்துவந்த உமா மகேஸ்வரன் என்பவருக்கும், அடுத்தடுத்து வந்தவர்களுக்கும் வழங்காமல், எதற்காக ஏழாவதாக வந்த ஜாகீர் உசேனுக்கு வழங்கப்பட்டது என்ற கேள்விக்கு அரசு தரப்பில் பதிலில்லாத காரணத்தால், பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத் தனர்.
இந்த வழக்கில் 2009ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஜாகீர் உசேன் பெற்ற எம்.சி.எச். படிப்பு செல்லாது என்றும், முறைகேடாகப் பெறப்பட்ட சீட்டு முதல் மாணவருக்கே தரப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டது.
ஆனால் இதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், அப்போதிருந்த அதிகாரிகள் துணையுடன், சென்னை மருத்துவக் கல்லூரியில் நாளமில்லா சுரப்புத்துறையில் எம்.சி.எச். முதுநிலை மருத்துவராக ஜாகீர் உசேன் சேர்ந்தார். இந்த சிக்கல் காரணமாக சிறிதுகாலம் தலைமறைவாக இருந்தபடி தேர்வெழுதி தேர்ச்சி பெற்றதோடு, அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலமாக, அத்துறையில் உதவிப் பேராசிரியராகவும் சேர்ந்து, துறைத்தலைவ ராகியுள்ளார். இன்னும் சில நாட்களில் ஓய்வுபெறும் நிலையில்தான் அனைத்துத் தகவல்களும் வெளியில் கசிந்து சர்ச்சை யாகியுள்ளது.
நீதிமன்ற உத்தரவைமீறிப் படித்ததும், பணியில் சேர்ந்ததும் இப்போதுவரை மர்மமாகவே உள்ளது. அதேபோல், எவ்வித கவுன்சிலிங்கும் இல்லாமல் உதவிப் பேராசிரியரிலிருந்து துறைத் தலைவரானதும் ஆச்சர்யப்படுத்துகிறது. இப்படி முறைகேடாகப் பதவியைப் பெற்றவர், சென்னை மருத்துவக் கல்லூரியிலிருந்து நோயாளிகளின் ரத்த பரிசோதனைகளைத் தன் சொந்த லேபில் நடத்துவதாக புகார் கூறப்பட்டு, அதுகுறித்து சிறுநீரகத்துறை பேராசிரியர் மெய்யப்பன் விசாரணை நடத்தினார். அதேபோல், அப்போதைய டீன் விமலா தலைமையிலும் விசாரணை நடந்தது. இரண்டு விசாரணை முடிவுகளும் என்னானது என்பது புதிராகவே உள்ளது.
மேலும், அதே விமலா டி.எம்.இ.யாக பணிஉயர்வு பெற்று வந்தபோது, ஜாகீர் உசேன் இரண்டாண்டு காலமாக பணியிலிருந்து தலைமறைவாகி வெளிநாட்டிற்கு சென்றிருந்த சூழலில், அந்த இரண்டாண்டுகள் பணி வரையறையை 339 நாட்களாகக் குறைத்து, மருத்துவ விடுப்பாகக் காட்டியது எப்படி என்ற கேள்வியை முன்வைத்து மீண்டும் நடத்தப்பட்ட விசாரணை முடிவு என்னானது என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
இது தொடர்பான விசாரணையை நாம் செய்தபோது, அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர் தான் டீனாக இருந்த விமலாவை டி.எம்.இ.யாக பதவி உயர்வு கொடுத்துள்ளார். இதனால் அவர் அமைச்சருக்கு விசுவாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் தான் ஜாகீர் பற்றிய முழுவிவரமும் விமலாவிற்கு தெரிந்த காரணத்தால், அவற்றை அப்படியே அமைச்சரிடம் சொல்ல, விசாரணை மூலம் உறுதிப்படுத்தியபின், ஜாகீரிடமிருந்து ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு திட்டமிட்டு அதனை மூடி மறைத்துள்ளனர். இப்படியாக, படிப்பில் சேர்ந்தது முதல், பணி வாய்ப்பு பெற்றது, பணி உயர்வு பெற்றதென ஒவ்வொன்றிலும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள ஒருவர், அதன்மூலம் அரசின் நிதியையும் மோசடி செய்துள்ளார். இப்படிப்பட்ட ஜாகீர் மீது அரசு நடவடிக்கை எடுக்கப்போகிறதா? அல்லது பல குற்றச்சாட்டுகளை "வைட்டமின் ப' மூலமாக மறைத்து பணி ஓய்வுபெற்ற ஸ்டான்லி டீன் பாலாஜியைப் போல் இவரையும் விடப் போகிறதா?