கொரோனா நோய்த்தொற்றுப் பரவலில் இரண்டாம் அலை, நாடு முழுக்கத் தீவிரமாகப் பரவிவரும் நிலையில், தடுப்பூசிக்குப் பற்றாக்குறை என்ற பிரச்சனை பூதாகரமாகியுள்ளது. கொரோனா பரவலில் முதலிடத்திலிருக்கும் மகாராஷ்டிராவில்தான் இந்த குற்றச்சாட்டு முதலில் எழுந்தது.
கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் இரண்டையும் மத்திய அரசுதான் மொத்தமாகப் பெற்று மாநிலங் களுக்குப் பிரித்தளிக்கும் பணியைச் செய்துவருகிறது. இந்நிலையில், மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் தடுப்பூசிகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக்கூறி, மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை காலையிலிருந்தே தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டன. மகாராஷ்டிராவில் மட்டுமல்லாமல், ஒடிஷா, சட்டிஷ்கர், தெலுங்கானா மற்றும் ஆந்திராவிலும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்து புகார்கள் வந்துள்ளன.
இப்பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ""கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்பது மிகவும் சீரிய ஸான விஷயம், மாநிலங் களுக்கு தடுப்பூசியைப் பகிர்ந்தளிப்பதில் மத்திய அரசு பாகுபாடு காட்டக்கூடாது'' என்று மத்திய அரசைக் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "நாட்டிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும். நமது அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தடுப்பூசித் தயாரிப்பாளர்களின் முயற்சிகள், மத்திய அரசின் தவறான நடைமுறைகளாலும், அசட்டையான தன்மையாலும் குறைவாக மதிப்பிடப்படுகின்றன. தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மூன்று மாதங்களில் ஒரு சதவீத மக்களுக்குத்தான் முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளோம். தற்போதைய வேகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டால், நாட்டின் 75 சதவீத மக்களுக்குத் தடுப்பூசியை செலுத்தி முடிக்க சில வருடங்கள் ஆகும். இந்த வேகத்தில் தடுப்பூசிகள் போடப்பட்டால் விளைவுகள் பேரழிவாக இருக்கும். நம் நாட்டிலேயே பற்றாக்குறையாக இருக்கும்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும்' என்று கடுமையாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், இந்த தடுப்பூசிச் சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றுள்ள விளம்பர அரசியலையும் சுட்டிக்காட்டி யிருந்தார். ராகுல் காந்தியின் விமர்சனக் கடிதம், பா.ஜ.க. வட்டத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. வழக்கம்போல பா.ஜ.க. அமைச் சர்கள் ராகுல் காந்தியைக் குறிவைத்து அறிக்கைகளால் தாக்கத் தொடங்கி னார்கள்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், ""இதுவரை இந்தியாவில் 9.1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப் பட்டுள்ளது. கைவசம் 2.4 கோடி தடுப்பூசிகள் உள்ளன. மேலும், 1.9 கோடி தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு போடப்பட்டு வருகின்றன"" என்று விளக்கமளித்தார். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தோ, ராகுல் காந்தியை திமிர்பிடித்தவரென்றும், அறியாமையிலிருப்பவரென்றும், அரசியலில் தோற்றுப்போன பகுதிநேர அரசியல்வாதி யென்றும் கடுமையாகச் சாடினார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோ னாத்தொற்று உலகமெங்கும் பரவத் தொடங்கிய ஜனவரி, பிப்ரவரி யிலேயே ராகுல் காந்திதான் முதன்முதலாக, வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் விமானப் போக்குவரத்தைத் தடைசெய்ய வேண்டுமென்றும், கொரோனா பரவல் பேரழிவாக இருக்குமென் றும் கூறியிருந்தார். அப்போதும் அவரது பேச்சை மத்திய அமைச்சர்கள் அனைவரும் எள்ளி நகையாடி னார்கள். ஆனால் ராகுல் காந்தி சொன்னதுபோலவே விமானப் போக்குவரத்தை முன்கூட்டியே தடை செய்திருந்தால் கொரோனா பரவலைப் பெருமளவு கட்டுப்படுத்தியிருக்கலாம் என்பதை காலம் நமக்கு உணர்த்தியது.
தற்போது, கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் மத்திய அரசு ஒரு கணக்கீடு சொன்னாலும், இன்னொரு கணக் கீட்டில், தற்போது இந்தியாவில் தினசரி 37 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி தேவைப்படுகிறதென்றும், கோவிஷீல்டு, கோவாக்சின் தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 24 லட்சம் தடுப் பூசிகளைத்தான் தயாரிக் கிறார்கள் என்றும் கூறப் படுகிறது.
எனவே தோராயமாக தினசரி 13 லட்சம் தடுப் பூசிகள் பற்றாக்குறை நிலவுகிறது என்று குறிப் பிடுகிறார்கள். இப்படியான தட்டுப்பாடு, கடந்த மாதம்வரை ஏற்படவில்லை. ஏனென்றால், அப்போது தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு பெரிதாக இல்லை. மேலும் பலருக்கு இதன்மீது அச்ச உணர்வும் இருந்தது. இந்த ஏப்ரல் மாதத்திலிருந்துதான் 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வத்தோடு பங்கெடுத்துள்ளதால் தினசரித் தேவை அதிகரித்துள்ளது.
இதை முறையாகக் கண்காணித்துச் செயல்படுவதில் மத்திய அரசு கோட்டைவிட்டதால் இந்த சிக்கல் எழுந்துள்ளது என்று கூறப்படுவதில் உண்மை இல்லாம லில்லை. எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஈகோ பார்க்காமல் தேவைக்கேற்ப சப்ளையை அதிகரிப்பதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தெ.சு.கவுதமன்