சோழர் காலம் முதல் ஆங்கிலேயர் காலம்வரை வரலாற்றில் இடம்பெற்ற ஊர் வந்தவாசி. சுதந்திரத்துக்குப் பின்பு தி.மு.க. வரலாற்றிலும் வந்தவாசி தொகுதிக்கு முக்கிய பங்குண்டு. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் தி.மு.க.வுக்கு தொடர்ந்து வெற்றிகளைத் தரும் தொகுதியிது. 

Advertisment

தனித் தொகுதியான இத்தொகுதியில் 1962, 1967, 1971, 1989, 1996, 2006, 2016, 2021ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது. 1977, 1980, 1991, 2011-ல் அ.தி.மு.க.வும், அ.தி.மு.க. கூட்டணியில் 1984-ல் காங்கிரஸ், 2001-ல் பா.ம.க.வும் வெற்றிபெற்றன. தொகுதியில் பட்டியலின மக்களுக்குச் சமமாக வன்னியர்கள் உள்ளனர். அதனையடுத்து யாதவர், இஸ்லாமியர் வாக்குகள் உள்ளன. 

2016, 2021 என இரண்டு தேர்தல்களில் தி.மு.க.வின் அம்பேத்குமார் வெற்றிபெற்று சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் குடும்பத்தோடு சென்னையில் வசிக்கிறார். பிரபல சினிமா தயாரிப்பாளராக இருப்பதால் தேர்தலின்போது, தொகுதிக்கு அமைச்சர் வரும்போது, பெரிய அரசு நிகழ்ச்சிகள் தொகுதியில் நடக்கும்போது, கட்சி         நிகழ்ச்சிகள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் குடும்ப நிகழ்ச்சிகள் நடக்கும்போது தொகுதிக்கு மின்னல் வேகத்தில் வந்து மின்னல் வேகத்தில் போய்விடுகிறார். அதேபோல் கட்சி நிர்வாகிகள்                   போன் செய்தால் அவசரத்துக்கு எடுக்கமாட்டார். பத்து முறை அழைத்தால் ஒருமுறை எடுத்துப் பேசுவார் என்கிறார்கள் கட்சியின் நிர்வாகிகளே. 

முன்பெல்லாம் தொகுதிப் பணிகளை எம்.எல்.ஏ.வின் சகோதரரும் வந்தவாசி மேற்கு ஒ.செ.வாக இருந்த பிரபு செய்துவந்தார். அவர் திடீரென உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதால் அவரிடமிருந்த ஒ.செ. பதவியை தனக்கே வாங்கிக்கொண்டார் அம்பேத்குமார். கட்சி ஒன்றியச் செயலாளருக்கான பணியையும் அவரது ஆதரவாளர்களான தியாகராஜன் உட்பட இருவர்தான் செய்துவருகிறார்கள் என்கிறார்கள். அமைச்சர் வேலுவின் குட்புக்கில் எம்.எல்.ஏ. இருப்பதால், கட்சியினர் அமைச்சரிடம் புகார் சொல்லவே தயங்குகின்றனர். வடக்கு மா.செ.வும் ஆரணி தொகுதி எம்.பி.யுமான தரணிவேந்தன் -எம்.எல்.ஏ. அம்பேத்குமார் இடையே முரண்பாடு உள்ளது. அது எந்தளவுக்கு என்றால், கடந்த ஜூலை மாதம் தென்னாங்கூர் அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. எம்.பி.க்காக ஒரு பட்டமளிப்பு விழா, எம்.எல்.ஏ.வுக்காக ஒரு பட்டமளிப்பு விழா என அடுத்தடுத்த நாட்களில் நடந்தது. ஒருவர் நிகழ்ச்சியில் மற்றவர் கலந்து கொள்ளவில்லை. 

Advertisment

vanthavasi1

தேர்தல் பிரச்சாரத்தின்போது, வந்தவாசியில் பல்நோக்கு மருத்துவமனை, நவீன நூலகம், பெரணமல்லூர் தாலுகா உருவாக்கம், மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானம், வெண்குன்றம் மலையைச் சுற்றி கிரிவலப்பாதை, வந்தவாசியில் ஸ்டேடியம், மழையூர் ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும் எனச் சொன்ன எந்த வாக்குறுதியையும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தும் நிறைவேற்றவில்லை. தனித்தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் மக்களிடம் சாதி பார்ப்பதில்லை. இது அவருக்கு ப்ளஸாக இருக்கிறது. அ.தி.மு.க. வலிமையாக உள்ள ஊராட்சிகளான மேல்கொடுங்காலூர், வழூர், அம்மையப்பட்டு, வெண்குன்றம், பா.ம.க. வலிமையாக உள்ள இரும்பேடு, இளங்காடு, மேல்பாடி கிராமங்களில் கவனம் செலுத்தி கட்சியை வலிமைப்படுத்தவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தனக்கே மீண்டும் சீட் எனச் சொல்லிவருகிறார். சீட் வாங்கவேண்டும் என்பதற்காக தற்போது அடிக்கடி தொகுதிப் பக்கம் எட்டிப்பார்க்கிறார். இந்தமுறை எனக்கு வாய்ப்பு தாருங்கள் என வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் லோகநாதன், தேசூர் பேரூராட்சி தலைவர் ராதா ஜெகவீரபாண்டியன் ஆகியோர் சீட் கேட்கும் முடிவில் உள்ளார்கள். பொறியாளர் அணியின் வடக்கு மாவட்ட அமைப்பாளர் ஒப்பந்ததாரர் சுந்தர் கருணாநிதியும் எதிர் பார்க்கிறார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தெள்ளார் நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவரும் ஒப்பந்ததாரர் சங்க மாநில தலைவராகவும், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்ததாரராகவும் உள்ள சங்கர், வி.சி.க. தலைவர் திருமாவளவனிடம் நேரடியாகவே தனக்கு வந்தவாசி சீட் கேட்டு கோரிக்கை வைத்துள்ளார். இது தனித்தொகுதி என்பதால் வி.சி.க. கேட்கும் பட்டியலில் இந்த தொகுதியையும் வைத்துள்ளது. 

Advertisment

அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி ஆதரவாளராக அடையாளம் காட்டிக்கொள்ளும் மாவட்ட ஜெ.பேரவை நிர்வாகியும், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுசாமியின் மருமகனும், 2016-ல் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவருமான மேகநாதன் மீண்டும் சீட் கேட்கவுள்ளார். அதேபோல் வடக்கு ஒ.செ. வெண்குன்றம் முனுசாமி சீட்டுக்கான முயற்சியில் தீவிரமாக உள்ளார். இவரது சகோதரர் தலைமைச் செயலகத்தில் உயர்பொறுப்பில் உள்ளார், அவர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுடன் நெருக்கமென்பதால் அவர் மூலம் நேரடியாக இ.பி.எஸ்.ஸிடம் பேசி சீட் வாங்கும் முயற்சியில் உள்ளார். முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் ஒப்பந்ததாரருமான கஸ்தூரி ஏகாம்பரம், இந்த தொகுதியில் மகளிருக்கு இதுவரை தரவில்லை, தனக்கு சீட் கேட்டு மாஜி அமைச்சர் முக்கூர் சுப்பிரமணி மூலம் தலைமையிடம் கோரிக்கை வைத்துவருகிறார். 

பா.ம.க.வும் ஓரளவு வலிமையாக இத் தொகுதியில் இருக்கிறது. கூட்டணியில் இரண்டு முறை இத்தொகுதியை வாங்கி ஒருமுறை வெற்றி பெற்றது. கடந்த முறை அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. நின்று தோற்றது. இப்போது கட்சியிலுள்ள குழப்ப நிலையில் யாரும் சீட் கேட்க முன்வரவில்லை என்கிறார்கள் பாட்டாளிகள். 

அ.தி.மு.க.வோடு கூட்டணியிலுள்ள பா.ஜ.க.வில் பட்டியல் அணி நிர்வாகியாக இருந்த, தற்போது ஒன்றியத் தலைவராகவுள்ள நவநீதி சீட் கேட்டு கமலாயத்தை சுற்றிவருகிறார்.

-கிங்