சேலம் மாவட்டத்திலுள்ள வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை தோல்வி கண்டுள்ள தி.மு.க., வரும் தேர்தலில் வெற்றிபெறும் முனைப்புடன் கழக உடன்பிறப்புகள் தீவிர களப்பணியில் இறங்கியுள்ளனர். 

Advertisment

வீரபாண்டி தொகுதி, மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் இருந்தவரை வி.ஐ.பி. அந்தஸ்து பெற்ற தொகுதியாக இருந்துவந்தது. இத்தொகுதியில், தொடர்ச்சியாக தி.மு.க., அ.தி.மு.க. தரப்பில் வீரபாண்டியாரின் குடும்ப வகையறாவுக்குள்ளிருந்தே சீட் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. தரப்பில் வீரபாண்டியாரின் மூத்த மகன் மறைந்த செழியனின் மருமகனான டாக்டர் தருணுக்கு சீட் தரப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வோ, முதன்முதலாக வீரபாண்டியார் குடும்பத்தைச் சாராத ராஜமுத்துவை களமிறக்கியது. அவரும் அதிரிபுதிரியாக வென்று எம்.எல்.ஏ. ஆனார். வரும் தேர்தலுக்கு தி.மு.க., அ.தி.மு.க. தரப்பில் சீட் பெறுவதில் தீவிர 'லாபி'யில் இறங்கியுள்ளனர். 

Advertisment

இது தொடர்பாக தி.மு.க. சீனியர்களிடம் பேசினோம். "வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி யில் வன்னியர், கொ.வெ.கவுண்டர் ஆகிய சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், நாடார், பட்டியலினத்தவர் கணிசமாகவும் உள்ளனர். தி.மு.க.வை பொறுத்தவரை, கடந்த முறை களமிறக்கப்பட்ட டாக்டர் தருணுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம்.

அதேநேரம் அவர், சேலம் மேற்கு தொகுதி மீதும் ஒரு கண் வைத்திருப்பதாகச் சொல்கின்றனர். ஒருவேளை, வீரபாண்டியாரின் குடும்பத்திலிருந்து நேரடியாக ஒருவர் வர வேண்டுமென்று கட்சித் தலைமை கருதினால், டாக்டர் தருணின் மனைவி சூர்யா அல்லது மறைந்த வீரபாண்டி ராஜாவின் மகள் டாக்டர் மலர்விழி ஆகியோரில் ஒருவரை களமிறக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

Advertisment

டாக்டர் மலர்விழி பொதுக்குழு உறுப்பினராக இருந்தாலும்கூட, கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. ஆனாலும் சிலர் ஆதாயத்திற்காக மலர்விழிக்கு சீட் பெற்றுத்தருவதாக தூபம் போட்டு வருகின்றனர். இன்னொருபுறம் வீரபாண்டியா ரின் துணைவி மறைந்த லீலாவின் மகனும், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாள ருமான டாக்டர் பிரபுவின் பெயரும் அடிபடுகிறது. அவரும் கட்சிக்கூட்டங்களில் ஒதுங்கியே இருக்கிறார்.  

வீரபாண்டியாரின் பங்காளி வகையறா குடும்பத்தைச் சேர்ந்தவரும், கிழக்கு மாவட்ட து.செ.வுமான பாரப்பட்டி சுரேஷ்குமாரின் பெயரும் வலுவாக அடிபடுகிறது. சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக கே.என்.நேரு இருந்தபோது அவருக்கு சேலத்தில் வலது கரமாக இருந்தவர் பாரப்பட்டி சுரேஷ்குமார்தான். அவர் மூலமாக எப்படியும் சீட் பெற்று விடுவார் என்கிறார்கள். 

பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் 10 ஆயிரம் குடும்பத்தினரை அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்தது, முதல்வர் கையால் 1,600 பேருக்கும், அமைச்சர் ராஜேந்திரன் மூலம் 700 பேருக்கும் வீட்டு மனைப்பட்டா ஏற்பாடு செய்தது, 4000க்கும் மேற்பட்ட இளைஞரணி, கிளைக்கழக நிர்வாகிகள், வாக்குச்சாவடி நிர்வாகிகளை நியமித்தது என கட்சிப்பணிகளில் தீவிரமாக செயல்படுகிறார் பாரப்பட்டி சுரேஷ்குமார். 

அதேபோல், வீரபாண்டியார் குடும்பத்திற்கு வெளியே, வீரபாண்டி தெற்கு ஒ.செ. வெண்ணிலா சேகருக்கு "ஜாக்பாட்' அடிக்கலாம். பெண் ஒ.செ.வாக நீண்ட காலமாக கழகப் பணியாற்றி வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படும்பட்சத்தில் வெண்ணிலாவுக்கு கூடுதல் வாய்ப்புள்ளது. இவர்கள் தவிர, அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் விஜயகுமார், மல்லூர் பேரூர் சுரேந்திரன் ஆகியோரும் சீட் வாங்கும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களிடம் முழுமையாகச் சென்றடைந்துள்ளன. இதனால் வீரபாண்டி தொகுதியில் தொடர் தோல்விக்கு இந்த முறை தி.மு.க. முற்றுப்புள்ளி வைக்கும்'' என்கிறார்கள் சீனியர் உ.பி.க்கள்.

இந்நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதி நடந்த தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வீரபாண்டி தெற்கு ஒ.செ. வெண்ணிலா சேகர், "வரும் தேர்தலில் வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட நபர்களுக்குதான் சீட் கொடுக்கவேண்டும். அப்போதுதான் எல்லோரும் ஒன்றிணைந்து வெற்றி பெற முடியும்'' என்று போகிற போக்கில் தன் உள்ளக்கிடக்கையை மறைமுகமாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.  

அதே மேடையில் பதிலளித்த கிழக்கு மா.செ. எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்.பி., "வெளியூர் அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவருக்கா கட்சித்தலைமை சீட் தரப்போகிறது? இந்த தொகுதிக்குட்பட்ட நபர்களுக்குதான் நிச்சயமாக சீட் கிடைக்கும்'' என்றார். 

இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், "இந்த தொகுதிக்கு வெளியே வசிக்கும் டாக்டர் தருண், டாக்டர் பிரபு ஆகியோருக்கு வாய்ப் பில்லை என்பதை எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்.பி. சூசகமாக சொல்கிறார்'' என்றனர். 

அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூத்த ர.ர.க்களிடம் கேட்டோம். "1977 முதல் 2021 வரை நடந்த 11 சட்டமன்றத் தேர்தல்களில் வீரபாண்டியில் அ.தி.மு.க. 8 முறையும், தி.மு.க. 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இப்போதும் இலைக் கட்சிதான் வலுவாக இருக்கிறது. சிட்டிங் எம்.எல்.ஏ. ராஜமுத்து அல்லது மாஜி எம்.எல்.ஏ. மனோன்மணி ஆகியோரில் ஒருவருக்கு சீட் கிடைக்க கூடுதல் வாய்ப்புள்ளது. இருவருமே சேலம் புறநகர் மா.செ. இளங்கோவ னுடன் நல்ல நட்பில் இருப்பவர்கள். இவர்கள் தவிர அரியானூர் வரதராஜ், சேகோ தமிழ்மணி ஆகியோருக்கும் சீட் கிடைக்கலாம். வரும் தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றியைத் தக்க வைக்கும்'' என்கிறார்கள் அழுத்தமாக. 

வீரபாண்டி தொகுதியில் இப்போதே தேர்தல் உக்கிரம் தொடங்கி விட்டது!