குறுவை பாசனத்திற்கு ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுமா? என்ற கேள்வி இப்போதே டெல்டா விவசாயிகளிடம் எழுந்துள்ளது. மேட்டூர் அணையில்தான் தண்ணீர் இல்லையே, பிறகெப்படி திறக்க முடியும்? அதேசமயம், கர்நாடகம் தண்ணீர் திறந்தால் மேட்டூர் அணையைத் திறக்கலாம்.

இப்போதைய சூழலில் டெல்டா மாவட்ட நீர்நிலைகள் அனைத்தும் வறண்டுபோய் கிடக்கின்றன. குடிநீருக்கே அல்லாடும் நிலை உள்ளது. கொள்ளிடத்தில் இருந்து புதுக்கோட்டை, ராமநாதபுரம்வரை குடிநீர் கொண்டு செல்லப்பட்டாலும் அதிலும் பற்றாக்குறைதான் இருக்கிறது.

ca

இந்த நிலையில்தான் மே 28-ந் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் அதன் தலைவர் மசூத் உசைன் தலைமையில் கூடியது. தமிழகம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநில அதிகாரிகள் பங்கேற்ற அந்தக்கூட்டத்தில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் மேகதாட்டு அணை பிரச்சனையை விவாதிக்க தமிழகம் மறுப்பு தெரிவித்தது.

Advertisment

""இந்தக் கூட்டத்தில் பிப்ரவரி முதல் மே வரை கர்நாடகம் தமிழகத்துக்கு திறக்கவேண்டிய 9.19 டி.எம்.சி. தண்ணீரை மூன்று தடவையாக திறக்க ஆணையத் தலைவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ஆணையம் நடைமுறைப்படுத்தும்'' என்று எதிர்பார்ப்பதாக தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

ca

கூட்டம் நடந்த இடத்தில் கூட்டம் முடியும்வரை காத்திருந்த நாகை மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்வுசெய்யப்பட்ட நாகை செல்வராஜ், ஆணையத் தலைவர் மசூத் உசேனை சந்தித்தார். ஆணையம் பிறப்பித்த உத்தரவை வரவேற்ற அவர், ஆணையத்தின் கண்காணிப்பில் தண்ணீர் திறப்பை உறுதிசெய்யும்படி வற்புறுத்தினார்.

Advertisment

நாம் அவரை தொடர்பு கொண்டபோது, ""என்னை தேர்வுசெய்த மக்களுக்காக ஆணையம் கூடியதுமே முதல் ஆளாக வந்தேன். எனது கோரிக்கைகளை மசூத் உசேன் ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்'' என்றார். எம்.பி.கள் பதவி ஏற்பு கூட நடக்காத நிலையில் டெல்டா விவசாயிகளின் குரலாக டெல்லியில் ஒலித்திருக்கிறார் தோழர் நாகை செல்வராஜ்.

dd

இதனிடையே, காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் நம்மிடம்.. ""ஆணையத்தில் தமிழகம் சார்பில் விவசாயிகளின் கோரிக்கையை வலுவாக வைத்ததாக தெரியவில்லை. அதாவது ஜூன் மாதம் திறக்க வேண்டிய தண்ணீரை திறந்துவிடுங்கள் என்று கேட்ட அதிகாரிகள் கடந்த டிசம்பர் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை நமக்கு கொடுக்க வேண்டிய தண்ணீர் 19.5 டி.எம்.சியை கேட்கவும் இல்லை, அவர்கள் அது பற்றி பேசவும் இல்லை. இருந்தாலும், ஆணையத்தின் உத்தரவை மதிக்கிறோம். கர்நாடகமோ, பருவமழை பெய்து அணை நிரம்பினால் திறந்துவிடுவோம் என்று எகத்தாளமாக கூறியுள்ளது. எனவேதான் காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் முழுநேரப்பணியாக அதிகாரிகளை நியமித்து தண்ணீரை ஒவ்வொரு மாதமும் பங்கிட்டுத் திறக்க வேண்டும். ஒழுங்காற்றுக்குழு அலுவலகம் பெங்களூருவில் இருக்க வேண்டும்'' என்றார்.

காவிரி ஆறு, காவிரி பாய்ந்த வயல்கள் அத்தனையும் வெடித்துக் கிடக்கிறது. இந்த ஆண்டும் குறுவை சாகுபடி என்பது கனவுதானோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் அதிக அளவில் வெற்றிபெற்றுள்ள பா.ஜ.க. எம்.பி.களும், பா.ஜ.க.வுடன் இணக்கமாக உள்ள எடப்பாடி அரசும் பேசி தண்ணீர் பெறவேண்டும் என்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.

-இரா.பகத்சிங்

________________

டெல்டா ஆறுகளின் பரிதாப நிலை!

ஆணையத் தீர்ப்புப்படி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டாலும், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை பாசனத்திற்கு செல்லுமா என்பது சந்தேகமே. பல இடங்களில் உடைப்பெடுக்கும் நிலையே இருக்கிறது. கடந்த ஆண்டு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்த நேரத்தில் மேட்டூரில் வழக்கமான அளவே தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில்கூட தஞ்சை அருகில் பல இடங்களில் கரை உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. அந்த உடைப்புகள் இன்றுவரை சீரமைக்கப்படவில்லை. தற்காலிகமாக அடுக்கப்பட்ட மணல் மூட்டைகளே இப்போதுவரை தடுப்புகளாக இருக்கின்றன. மணல் மூட்டைகளும் சாக்குகள் கிழிந்து மணல் சரிந்து விட்ட நிலையில், மீண்டும் தண்ணீர் திறந்தால் எப்படி கடைமடை வரை செல்லும்? கண்ட இடத்திலும் உடைத்துக் கொண்டுதான் போகும்.

கல்லணை வாய்க்கால், வெட்டாறு, வெண்ணாறு என்று எந்த ஆற்றையும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மராமத்து செய்யவில்லை. மணல் திருட்டுக்கு மட்டும் அனுமதி கொடுத்துவிட்டு ஆற்றில் தண்ணீர் வரும் வரை காத்திருக்கிறார்கள். தண்ணீர் வந்த பிறகு மராமத்து செய்ததாக பில் போட தயாராக இருக்கிறார்கள். ஆற்றங்கரைகளை உடனடியாக சீரமைக்காவிட்டால் உடைப்புகள் பலமாக இருக்கும். கடைமடைக்கு தண்ணீர் போகாது. போராட்டங்கள்தான் நடக்கும்.

- செம்பருத்தி