பா.ம.க.வில் அப்பாவுக்கும் (ராமதாஸ்) மகனுக்கும் (அன்புமணி) இடையே நடந்த உச்சகட்ட மோதல், சற்று தளர்ந்திருக்கிறது. ஆனாலும் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர ராமதாஸின் குடும்பத்தினர் போராடி வருகின்றனர். இந்த மோதலுக்கு மூல காரணமாக இருக்கும் சில வில்லங்கங்கள் தற்போது பகீர் கிளப்புகின்றன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramdass-anbumani.jpg)
அன்புமணியை ராமதாஸ் அவமானப் படுத்தியதால், இனியும் பொறுப்பதற்கில்லை என்கிற நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்று அன்புமணியின் ஆதரவாளர்கள் வலி யுறுத்தியதைத் தொடர்ந்து, கட்சியின் மா.செ.க் கள் கூட்டத்தைப் பகுதி பகுதியாக நடத்தினார் அன்புமணி. இதுகுறித்து விசாரித்தபோது, பா.ம.க.வின் தலைவராக பொதுக்குழுவின் ஏகோபித்த ஆதரவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நீங்கள். உங்களுக்கே கட்சியில் அதிக அதிகாரம் இருக்கிறது. ஒருவரை நீக்கவும், நியமிக்கவும் தலைவருக்கு இருக்கும் அதிகாரம் நிறுவனருக்கு (ராமதாஸ்) இல்லை. அதனால், துணிச்சலாக முடிவை எடுங்கள் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.
அன்புமணியின் இந்த கூட்டத்துக்குச் சென்ற மா.செ.க்கள் சிலரை நீக்கி, புதிதாக சிலரை நியமித்தார் அய்யா ராமதாஸ். உடனே அவர்களது நியமனத்தை நீக்கி பழையவர்களே தொடர் வார்கள் என அறிவித்தார் அன்புமணி. இதனால் கட்சியில் மேலும் மேலும் குழப்பம் அதிகரித்தபடி இருந்தது. இதனால் ராமதாஸின் கோபமும் அதிகரித்தது.
அவனை (அன்புமணி) நீக்கினால்தான் கட்சியை காப்பாற்ற முடியும். எத்தனையோ அரசியல் எதிரிகளை சமாளித்த எனக்கு, இவ னெல்லாம் சாதாரணம். என்னை நம்பித்தான் பா.ம.க.வும் நம் சமூகமும் இருக்கிறது. அதை பாதுகாக்க வேண்டும் என ஆவேசமான அய்யா, அதே வேகத்தில் அன்புமணி உள்ளிட்டவர் களை கட்சியிலிருந்து நீக்கவும் முடிவு செய்தார். ஆனால், அவரது குடும்பத்தினர் அதனை தடுத்து நிறுத்தினர். ராமதாஸின் கோபத்தைக் குறைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
இதற்கிடையே மாற்றுக் கட்சியிலிருக்கும் வன்னியர் சமூக சீனியர் தலைவர்கள் சிலர், அய்யா ராமதாசை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். ஓரளவுக்கு அய்யாவின் கோபம் தணிந்திருக்கிறது. இதனால் நீக்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அன்புமணி மீதுள்ள கோபம் மட்டும் குறையவில்லை''’என்கின்றனர் பா.ம.க.வில் இருக்கும் நடுநிலையாளர்கள்.
இந்த நிலையில், 1-ந் தேதி கட்சி நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோ சனை நடத்திய டாக்டர் ராமதாஸ், பத்திரிகையாளர்களை மீண்டும் சந்தித்தபோது, "கட்சியிலிருந்து அன்புமணியை நீக்குவீர்களா? இனி நான் சுதந்திரமாக செயல் படுவேன் என அன்புமணி சொல்கிறாரே?'' என்பது உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramdass-anbumani1.jpg)
அதற்கு அவர், "இதெல்லாம் தேவை யில்லாத கேள்விகள். ஒவ்வொரு கட்சியிலும் குடும்பத்திலும் இது போன்று நடப்பது சகஜமானதுதான். இதனை பெரிதுபடுத்த வேண்டாம். சுதந்திரமாகச் செயல்படுவது ஒருவரின் தனிப்பட்ட கடமை. நீக்குவது செல்லும், செல்லாது. நீக்கினால் திரும்பத் திரும்ப நியமிக்க வேண்டியதுதான். பா.ம.க.வில் எந்த குழப்பமும் இல்லை. எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள் நடக்கின்றன. எப்போது என்ன நடக்கும் என யாராலும் சொல்ல முடியாது” என்று பூடகமாகப் பதிலளித்தார் ராமதாஸ்.
இறுக்கமான சூழல் தளர்வதும், தளர்ந்த சூழல் இறுக்கமாவதுமான தட்பவெப்ப நிலை தைலாபுரம் தோட்டத்திலும் பா.ம.க.விலும் மாறி, மாறி அடித்துவரும் சூழலில், மோதலுக்கு அடிப்படைக் காரணம் என்ன என்பதற்கான விடை தேடி புலனாய்வு செய்தபோது, "கடந்த 2024 தேர்தலின்போது பா.ஜ.க.வுக்கு நெருக்கமான சினிமா தொழிலதிபரின் கிழக்கு கடற்கரை சாலை வீட்டில் ஒரு சந்திப்பு நடந்தது. அதில் அந்த தொழிலதிபர், அன்புமணி, அவரது மனைவி, பா.ஜ.க.வின் மாஜி தலைவர் ஆகியோர் இருந்தனர். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க பேரம் நடந்தது. 150 ஸ்வீட் பாக்ஸ்கள் மகனுக்கு கொடுக்கப்பட, கூட்டணிக்கு ஓ.கே. சொன்னார். ஆனால் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி என அப்பா உறுதி கொடுத்தார்.
இதனையறிந்த ஆளும் கட்சியான திமுக, அ.தி.மு.க-பா.ம.க. கூட்டணி அமையக்கூடாது என மெனக்கெட்டது. திமுகவின் அதிகார மையத்தின் முக்கிய பிரமுகர் ஒருவர், மகனிடம் பேரம் பேசினார். 150 ஸ்வீட்ஸ் பாக் ஸில் பேரம் படிந்தது. ஆக, மொத்தம் மகன் பெற்றது 300 ஸ்வீட் பாக்ஸ்கள்.
இதனையெல்லாம் ராமதாஸிடம் மறைத்துவிட்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தே ஆக வேண்டும் என அவரை புருஷனும் பொண்டாட்டியும் கை, காலில் விழுந்தும் புரண்டும் கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தனர். இப்படிப்பட்ட சூழலில்தான், தங்களுடன் கூட்டணி அமையாததால், மருத்துவரிடம் சற்று கடுமை காட்டி யது அ.தி.மு.க. அடுத்த தேர்தலில் சமன் செய்துகொள்ளலாம் என அப்பா சொல்லி அனுப்பினார்.
இந்த விவகாரம் நடந்து கொண்டிருக்கும்போதுதான், அந்த 300 ஸ்வீட் பாக்ஸ்களை வைத்து சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலை விலை பேச மகன் தரப்பில் நடந்த முயற்சிகளை அறிந்தார் அப்பா. எப்படி அவருக்கு 300 ஸ்வீட் பாக்ஸ்கள் கிடைத்தன என அப்பா ஆராய்ந்தபோது தான், மகனின் டபுள் கேம் அரசியல் புரிந்து டென்சனானார். கடந்த சில மாதங்களாகவே இது குறித்த பனிப்போர் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த சூழலில்தான், ஜீரணிக்க முடியாமல் மகனுக்கு எதிராக வெடித்துவிட்டார் அப்பா''‘’ என்று மோதலுக்கான சீக்ரெட் வில்லங்கங்களை விவரிக்கிறார்கள், அந்த சீக்ரெட்டை அறிந்த தோட்டத்துக்கு நெருக்கமானவர்கள்.
-நமது நிருபர்கள்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-06/ramdass-anbumani-t.jpg)