அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளில் இராணிப் பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர், ஆற்காடு என இரண்டு தொகுதிகளையும், திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் தொகுதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர், வந்தவாசி (தனி) ஆகியவையும், காஞ்சிபுரம், திருப்போரூர் என 7 தொகுதிகள் தரப்பட்டன. பா.ம.க. வென்றுள்ள 5 தொகுதிகள் இந்த 7 தொகுதிகளில் எதுவுமில்லை.

ramdoss

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் பா.ம.க. தனித்து நின்று 52 ஆயிரம் வாக்குகளை வாங்கியது. கடந்த 2019-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்தத் தொகுதியில் பா.ம.க. ஆதரவோடு தி.மு.க.வை தோற்கடித்தது அ.தி.மு.க. அதனால், 2021 தேர்தலில் பா.ம.க. நம்பிக்கையுடன் களமிறங்கியது. ஆனால், தி.மு.க. கூட்டணியில் நின்ற காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்தினத்திடம் சுமார் 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ம.க. வேட்பாளர் கிருஷ்ணன் தோற்றுப்போனார். சாதிக் கட்டுமானம் நிறைந்த வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதியில் பா.ம.க. தோல்வியை சந்தித்ததை அந்தக் கட்சித் தலைமையாலே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆற்காடு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரப்பன், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் தி.மு.க. பிச்சாண்டி, வந்தவாசி தனி தொகுதியில் தி.மு.க. அம்பேத்குமார், காஞ்சிபுரம் தொகுதியில் தி.மு.க. எழிலரசன் ஆகியோர் பா.ம.க. வேட்பாளர்களை வென்றனர். திருப்போரூர் தொகுதியில் வி.சி.க. பாலாஜியுடன் மோதினார் பா.ம.க. திருக்கச்சூர் ஆறுமுகம். இந்தப் பொதுத்தொகுதியில் வி.சி.க. வெற்றிபெற்றது. பா.ம.க. வாக்கு வங்கியை நம்பி அ.தி.மு.க. நின்ற பல தொகுதிகளிலும் இதே நிலைதான்.

Advertisment

rm

வலிமையான வட மாவட்டத்தில் பா.ம.க.- அ.தி.மு.க. கூட்டணியின் தோல்விக்கான காரணம் என்னவென பா.ம.க.வின் முக்கிய நிர்வாகிகளிடமே கேட்டபோது, "அ.தி.மு.க. மீதுள்ள அதிருப்தி, பா.ஜ.க. மீதுள்ள அதிருப்தி, எங்கள் வாக்கு வங்கியையும் பதம் பார்த் துள்ளது. வெளிப்படை யாக சொல்லணும்னா 10.5. இடஒதுக்கீடு எங்கள் தலைவர் ராமதாஸ்தான் பெற்றுத் தந்தார் என்பது வடமாவட்டத்தில் உள்ள எங்கள் மக்களிடமே சரியாகப் போய்ச் சேர வில்லை. தேர்தல் அர சியலாகத்தான் பார்த்தனர். "இது தற்காலிக இட ஒதுக்கீடு' என அமைச்சர் உதயகுமார் பேசியதும் அதிருப்தியை உண்டாக்கி விட்டது. அதே நேரத்தில் இந்த ஒதுக்கீடு வன்னியர் அல்லாத எம்.பி.சி. கோட்டாவில் உள்ள பிற சாதிகளை அதிருப்தி யடையச் செய்தது. அது தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாகிவிட்டது. நாங்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்ததை எங்கள் தரப்பிலும் விரும்பவில்லை. அதனால்தான் செல்வாக்குள்ள தொகுதிகளிலும் தோல்வி கிடைத்துள்ளது. நாங்கள் வெற்றிபெற்ற தொகுதிகளைப் பாருங்கள், அது 10.5 சதவிகித இட ஒதுக்கீடுக்காக வந்த வெற்றியல்ல. அது சாதி, எதிர் வேட்பாளர் சரியில்லாததால் கிடைத்த வெற்றி'' என்றார்கள்.

தி.மு.க. தரப்பில் வன்னியர் பகுதிகளில் தீவிரமாக களப்பணியாற்றிய பிரமுகர் களிடம் இதுகுறித்து கேட்டபோது, "களத்தில் அ.தி.மு.க. நிர் வாகிகளைக்கூட எங்களால் சரிக் கட்ட முடிந்தது. பா.ம.க. நிர்வாகிகளை நிச்சயமாக எங்களால் சரிக்கட்ட முடியவில்லை. கூட்டணி தர்மத்துக்காக கடுமையாக உழைத்தார்கள். அப்படியிருந்தும் வன்னியர் சமுதாய வாக்குகள் உள்ள அணைக்கட்டில் நந்தகுமார், கீழ்பென்னாத்தூரில் பிச்சாண்டி, செஞ்சியில் மஸ்தான் என மாற்று சமூகங்களைச் சேர்ந்த தி.மு.க.வினர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த மாவட்டங்களில் உள்ள வன்னிய சமுதாயத்தினர் சாதியைக் கடந்து, தங்கள் ஆதரவுக் கட்சிக்கே வாக்களித்துள்ளனர். பெரும்பாலானவர்கள் பா.ம.க.வின் பிரச்சாரத்தை கண்டுகொள்ளவில்லை. தி.மு.க.வை உறுதியாக ஆதரித்தனர் அதனால் தான் தோல்வியை சந் தித்தது. இதனை நாங்கள் களத்தில் வேலை செய்தபோதே உறுதியாக நம்பினோம். மேட்டூர், சேலம், பென்னாகரம், மைலம், தர்மபுரி போன்ற தொகுதிகளில் பா.ம.க. வெற்றிபெறக் காரணம்... இவற்றில் மயிலத்தை தவிர மற்ற தொகுதிகளில் கொங்குக் கவுண்டர்கள் வாக்குகள் கணிசமாக உண்டு. அந்த ஓட்டு பா.ம.க.வுக்கு அப்படியே விழுந்தது. மேலும் அந்த தொகுதிகளில் தி.மு.க.வில் உட்கட்சி பூசல் அதிகமாகவுள்ளன. இதனால் தான் பா.ம.க. வெற்றிபெற முடிந்தது'' என்கிறார்கள்.

Advertisment

ramdoss

தோல்வி குறித்து ஆராய முடிவு செய்துள்ளது பா.ம.க. தலைமை. தொகுதியில் சாதி மக்கள் நிரம்பியுள்ள கிராமங்களில் நமக்கு விழுந்த வாக்குகள் எவ்வளவு என்பது குறித்த டேட்டாக்களை வாங்கியுள்ளார்கள் மருத்துவர் ராமதாசும் அன்புமணியும்.

அதோடு தோல்விக்கான காரணம் குறித்து வேட்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களிடம் அறிக்கை கேட்டுள்ளது. வந்தவாசி வேட்பாளர் முரளிசங்கர், கீழ்பென்னாத்தூர் வேட்பாளர் செல்வகுமார், ஆற்காடு வேட்பாளர் இளவழகன் போன்ற சில வேட்பாளர்கள் கட்சியில் தங்களுக்கு எதிராக வேலைசெய்த நிர்வாகிகள் என சில பெயர்களை குறிப்பிட்டு தலைமைக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பது பற்றி தைலாபுரத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார் என்கிறார்கள் மருத்துவர் ராமதாசுக்கு நெருக்கமான நிர்வாகி கள்.

-து.ராஜா