கடந்தமுறை 6-க்கு 6 வாங்கிய கன்னியா குமரி மாவட்டத்தில் இந்தமுறை, காங்கிரஸ் தன்னைத் தக்க வைத்துக்கொள்ள, ஆளுங்கட்சியான தி.மு.க. இரண்டு தொகுதிகளைப் பறி கொடுத்துள்ளது. இத்தனைக்கும் சட்டமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. மட்டும் சறுக்கியதற்கு காரணம் என்ன?
நாகர்கோயிலில் காங்கிரஸ் வாக்காளர்கள் அதிகம். அதற்கு அடுத்தநிலையில் தி.மு.க.தான் அங்கே செல்வாக்கோடு திகழ்கிறது. மூன்றாம் இடத்தில்தான் பா.ஜ.க.வுக்கு அங்கே வாக்கு பலம். எனினும், மூன்றாம் இடத்தில் இருக்கும் பா.ஜ.க. அங்கே முதலிடத்தை எப்படி எட்டிப் பிடித்தது என்பது ஆச்சரியக்குறியாகி நிற்கும் கேள்விக்குறி.
1984-ல் குளச்சல் தொகுதியில் வெற்றிபெறும் நிலையில் இருந்த, இதே பா.ஜ.க. காந்தியை, அங்கே 405 வாக்கு வித்தியாசத்தில் தோற்றதாக அ.தி.மு.க.வினர் காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு அறிவித்தனர். அதேபோல் இந்தமுறை, அதே அ.தி.மு.க. கூட்டணியில், பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்ட அதே காந்தியை, காவல்துறையினரும் அரசு ஊழியர்களும் கை கோத்துக்கொண்டு வெற்றிபெற வைத்திருக்கிறார் கள். காரணம், அதிகாரிகள் தரப்பை சகட்டு மேனிக்கு எதிர்த்துவரும் தி.மு.க. மாஜி அமைச்சர் சுரேஷ்ராஜனின் அதிரடிகள்தான். "அதிகாரிகள் அனைவரையும் அவர் ஒருமையில் விமர்சிப்பதை, கட்சியினரே ரசிக்கவில்லை' என்கிறார்கள்.
"கோட்டாறு காவல்நிலைய உதவி ஆய்வாளரைத் துரத்தியடித்தது, தன்னைக் கண்டதும் எழுந்து நிற்காத கூட்டுறவு இணை பதிவாளரை ஒருமையில் திட்டியது' என அவரது அதிரடி லீலைகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வைரலாகி முகம் சுளிக்க வைத்தன. இதனால், தேர்தல் நேரத்தில் அவரை எதிர்த்து கோட்டாறு, வடசேரி, நேசமணி நகர், ஆசாரிப்பள்ளம் பகுதிகளில் இருக்கும் மகளிர் காவலர்களும்கூட சுரேஷ்ராஜனுக்கு எதிராக மறைமுக வாக்கு சேகரிப்பில் இறங்கினராம். உளவுத்துறையினரும் பா.ஜ.க.வின் எம்.ஆர். காந்திக்காக களமிறங்கி, அவர் தரப்புக்காக வைட்டமின் "ப' சப்ளையில் இறங்கினராம். இப்படி ஒட்டுமொத்த அதிகாரிகள் தரப்பும், சுரேஷ்ராஜனைத் தோற்கடிக்கக் கங்கணம் கட்டி வேலை பார்த்திருக்கிறது.
இது குறித்து தி.மு.க.வினர் நம்மிடம், "அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த சுரேஷ்ராஜனை, அவருடைய செயல்பாடுகளே தோற்கடித்து விட்டன. என்னதான் கட்சி பலம் இருந்தாலும், அதிகாரிகள் வர்க்கத்தைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்ற உண்மை இதன் மூலம் தெரிகிறது. அநியாயமாய் தோற்றுவிட்டோம்''’என்கிறார்கள் வருத்தமாய்.
"குமரி மாவட்ட தி.மு.க.வில் நிறைய உள்குத்துகள் நடக்கின்றன. மாஜி அமைச்சரை மட்டும் குறை சொல்லிவிட முடியாது என்கிற சீனியர்கள், இத் தகைய உள்குத்து கள்தான் கன்னியா குமரி சட்டமன்றத் தொகுதியையும் காவு வாங்கி விட்டது' என்கி றார்கள்.