அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அதிகாரப் பூர்வமாக அமைந்ததையடுத்து மா.செ.க்களின் கூட்டத்தை 25-ந் தேதி கூட்டியிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததில் பெரும்பாலான மா.செ.க்களுக்கு அதிருப்திகள் இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், இந்த கூட்டம் கூட்டப்பட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழலில், அதனை எதிர்கொள்ள பிரதான கட்சிகளெல்லாம் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கின்றன. அந்த வகையில், தேர்தல் பணிகளில் வேகம் காட்டிவந்த அ.தி.மு.க.வின் தலைமையில், கூட்டணி அமைவது குதிரைக்கொம்பாக இருந்தது.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததால் அ.தி.மு.க.வுடன் அவர் கூட்டணி அமைக்க முன்வருவார். பல தேர்தல்களாக தனித்துப் போட்டியிட்டு இதுவரை வெற்றியை ருசிக்காத நாம் தமிழர் கட்சியின் சீமான் கூட்டணியில் சேர்வதற்கு முன்வருவார், தி.மு.க. கூட்டணிக்குள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த திருமாவளவனின் கவனம் அ.தி.மு.க. பக்கம் திரும்பும் என்றெல்லாம் கூட்டிக் கழித்து கணக்குப் போட்டிருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த நிலையில்தான், பா.ஜ.க.வின் அழுத்தங் களையும் எதார்த்தத்தையும் புரிந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி, பா.ஜ.க.வுடனான கூட்டணியை கடந்த மாதம் உறுதிப்படுத்தினார். இதற்காக சென்னைக்கு வந்த பா.ஜ.க.வின் தேர்தல் சூத்திரதாரியும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா -எடப்பாடியை சந்தித்தார். சந்திப்பைத் தொடர்ந்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியும் இறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டணி உருவானதிலிருந்தே எடப்பாடி பழனிச்சாமியின் இந்த முடிவில் அ.தி.மு.க. மா.செ.க்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் அதிருப்திகள் வெடித்தபடியிருந்தன. குறிப்பாக, சீனியர் லீடர்களில் ஒருவரான செங்கோட்டையன் முறுக்கிக்கொண்டிருந்தார். அந்த முறுகலை சட்டமன்றத்திலேயே கவனித்தனர் அ.தி.மு.க. தலைவர்கள். இதனையடுத்து மூத்த தலைவர்கள் அவரிடம் சூழல்களை விவரித்துப் பேசும்போது சமாதானமாவதும், பிறகு முரண் படுவதுமாக இருந்துவந்தார் செங்கோட்டையன்.
இதற்கிடையே "பா.ஜ.க.வுடனான கூட்டணியை எடுத்தேன், கவிழ்த்தேன் பாணியில் எடப்பாடி எடுத்திருக்கிறார், எங்களிடம் கலந்தா லோசிக்க வில்லை; அவர் எடுக்கும் முடிவுகளை கட்சியின் முடிவாக மாற்றுவது சர்வாதிகாரம்' என்றெல்லாம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் வெடித்துக்கொண்டிருப்பதாக கிடைத்த தகவல்களால் அப்-செட்டான எடப்பாடி, அந்த அதிருப்தியைப் போக்க கடந்த 23-ந் தேதி எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் விருந்தளித்தார்.
இதில் செங்கோட்டையன் உட்பட 4 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ளவில்லை. செங்கோட்டையன் தவிர மற்றவர்கள், விருந்தில் கலந்துகொள்ள இயலாத சூழலையும் எடப் பாடியிடம் தெரிவித்துவிட்டனர்.
அந்த விருந்தில் மனம்விட்டுப் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது ஏன்?' என்பது பற்றி விரிவாகப் பேசி, எம்.எல்.ஏ.க்களின் மனதைக் கரைத்தார். அவர்களும் எடப்பாடியின் விளக்கத்தில் மயங்கினார்கள்.
இதற்கிடையே, "எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும்தான் விருந்தா? எங்களுக்குக் கிடை யாதா?' அதிருப்தியை வெளிப்படுத்தினால்தான் ஆலோசனைக் கூட்டம் நடத்துவாரா?' என்று கட்சியின் மா.செ.க்கள் குரல் எழுப்பினர். அந்தக் குரல் எடப்பாடியை எட்டியதும், அவர்களின் அதிருப்தியைப் போக்குவதற்காகவே 25-ந் தேதி மா.செ.க்களின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார்.
கூட்டத்தில் மா.செ.க்கள் மட்டுமல்லாமல் மாநில நிர்வாகிகள், அணித் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். எம்.எல்.ஏ.க்கள் விருந்தைப் புறக்கணித்திருந்த செங்கோட்டையன், மா.செ.க்கள் கூட்டத்தை புறக்கணிக்கவில்லை. முதல் ஆளாக கூட்டத்துக்கு வந்திருந்து முதல் வரிசையில் அமர்ந்தார் செங்கோட்டையன்.
அ.தி.மு.க. தலைமையகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வ நாதன், தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மா.செ.க்கள் அனைவரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "பா.ஜ.க.வுடன் ஏன் கூட்டணி வைத்தோம்' என்பதை விளக்கியிருக்கிறார்.
இதுகுறித்து அ.தி.மு.க.வில் விசாரித்தபோது, "கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததில் உங்களில் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். சிலருக்கு, தங்களிடம் கலந்தாலோசிக்காமல் முடிவு எடுக்கப்படுகிறது என்கிற ஆதங்கம் இருக்கக்கூடும். ஆனால், சூழல்கள் அந்த முடிவை எடுக்க வைத்தது. மற்றபடி ஆலோசிக்காமல் முடிவெடுக்கவேண்டும் என யாரும் திட்டமிடவில்லை. அதுமட்டுமல்லாமல் மூத்த நிர்வாகிகளிடம் விவாதித்துவிட்டுத்தான் முடிவு எடுக்கப்பட்டது.
2026 சட்டமன்றத் தேர்தல் நமக்கு மிக முக்கியமானது. ஜெயித்தாக வேண்டும். தி.மு.க.வை வீழ்த்த அனைத்து காரணிகளும் நமக்கு சாதகமாக இருக்கிறது. ஆனால், நம்மிடம் இல்லாதது கூட்டணி பலம்தான். அந்தக் கூட்டணி பலம் இருந்தால் வெற்றி நமக்கு ஈசியாகக் கிடைக்கும் எனப் பல தரவுகள் என்னிடம் கொடுக்கப்பட்டன.
அந்த வகையில், பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதிப்படுத்தினோம். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் அ.தி.மு.க.வை ஆதரிக்கும் சிறு பான்மையினர் வாக்குகள் நமக்கு கிடைக்காது என சிறுபான்மையினர் யாரும் விமர்சிக்கவில்லை. தி.மு.க.தான் இப்படி இட்டுக்கட்டி பரப்புகிறது. சிறுபான்மையின மக்கள் எதையும் சீர்தூக்கிப் பார்ப்பவர்கள். நிச்சயம் அவர்கள் அ.தி.மு.க.வை புறக்கணிக்கமாட்டார்கள். அதனால் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.
பா.ஜ.க. மட்டுமல்ல இன்னும் சில முக்கிய கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணிக்குள் வர விருக்கின்றன. தேர்தல் நெருக்கத்தில் இது நடக்கும். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. நாம் அமைக்கும் கூட்டணி வலிமையானதாகவும் மெகா கூட்டணியாக வும் இருக்கும். பொறுத்திருந்து பாருங்கள். 100 சதவீத வெற்றி நம் கூட்டணிக்குத்தான். அதேசமயம், அ.தி.மு.க.தான் ஆட்சியமைக்கும். கூட்டணி ஆட்சி என்பதெல்லாம் இல்லை. கூட்டணி ஆட்சின்னு பரப்பப்படுகிற செய்தியை நம்பாதீர்கள். அது வதந்தி என விளக்கினார் எடப்பாடி. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகை யில் ஏகத்துக்கும் கைதட்டி ஆரவாரம் செய்தனர் மா.செ.க்கள்''’என்று விவரிக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
மேலும் நாம் விசாரித்தபோது, "சட்டமன்ற தொகுதிகள்வாரியாக நடந்துவரும் தேர்தல் பணிகளில் சுணக்கம் இருப்பதை சுட்டிக்காட்டிய எடப்பாடி, இதுவரை எப்படியோ, இனி துரிதமாகக் களமிறங்குங்கள்'' என அறிவுறுத்தினார். அதேசமயம் தங்கள் தொகுதியில் நடந்து வரும் தேர்தல் பணிகள் குறித்து எம்.எல்.ஏ.க்கள் விவரித்தனர்.
இதனையடுத்து பூத் கமிட்டிகள் குறித்து ஆராயப்பட்டது. "இன்னும் சில தொகுதிகளில் பூத் கமிட்டி முழுமையாக செயல்படவில்லை. மக்கள் நமக்கு வெற்றியைத் தரத் தயாராக இருந்தாலும் அதனை பெறுகிற வழிகளில் அக்கறை கொள்ளாமல் அலட்சியமாக நீங்கள் இருக்கிறீர்கள். இப்படி அலட்சியமாக இருந்த தால்தான், 2021 தேர்தலில் வெறும் 100, 150, 1000, 1200, 3000-த்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் 30 தொகுதிகளுக்கும் மேற்பட்ட இடங்களை நாம் இழந்திருக்கிறோம். அம்மா காலத்தில் இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வோடு தேர்தல் பணிகளை செய்திருந்தால் ஆட்சியை நாம் இழந்திருக்க மாட்டோம். அதனால், அம்மா காலத்து அர்ப்பணிப்பை வருகிற தேர்தலில் காட்டுங்கள்'' என்று தங்களின் கோபத்தை சீனியர்கள் வெளிப்படுத்தினர்.
அப்போது பேசிய எடப்பாடி, ‘’"பூத் கமிட்டியின் பணிகளை விரைவுபடுத்துங்கள். மக்கள் நம்மை ஆதரிக்கத் தயாராக இருக்கின்றனர். அதனை பயன்படுத்திக்கொள்வது தான் தேர்தல் களத்தில் முக்கியம். இப்போ தைக்கு அடிப்படைத் தேர்தல் பணிகளை முன்னெடுங்கள்.
அவ்வப்போது தேர்தல் வியூகம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். அ.தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும் எங்கிற உத்வேகமும், நம்பிக்கையும் உங்களிடம் கொஞ்சமும் குறையக்கூடாது''” என்று அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறார்.
கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த கே.பி.முனுசாமியிடம் பத்திரிகையாளர்கள் சிலர் பேசியபோது, "அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியை மா.செ.க்கள் ஆக்கப்பூர்வமான செயலாகப் பார்க்கிறார்கள். அமோக ஆதரவு கூட்டணிக்கு இருக்கிறது. தேர்தல் பணிகளை எப்படி துரிதப்படுத்த வேண்டும் என மா.செ.க்களுக்கு க்ளாஸ் எடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி. கூட்டணி குறித்து மா.செ.க்களுக்கும் எம். எல்.ஏ.க்களுக்கும் அதிருப்தி இருப்பதாக ஊடகங்கள் தான் செய்திகளை பரப்பியது. ஆனால், கூட்டத்தில் அப்படிப்பட்ட அதிருப்தி எதுவும் வரவில்லை''’என்றார்.