ஏழு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மந்திரியான மனோதங்கராஜ் 3-வது முறையாக பத்மனாபபுரம் தொகுதியைத் தக்கவைப்பாரா? அல்லது தொகுதி கூட்டணி கட்சிக்குப் போகுமா? என்ற கேள்வி உ.பி.க்கள் மத்தியில் உஷ்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மா.கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரும் தேர்தலில் தி.மு.க.விடம் அதிக தொகுதிகளை கேட்போம் என்கிறார்கள். அவர்கள் கேட்கும் அதிக தொகுதிகளில் பத்மனாபபுரமும் ஒன்று என்கின்றனர் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள். இதற்கு காரணம் குமரி மாவட்டத்தில் காங்கிரசுக்கும், கம்யூனிஸ்ட்டுக்கும் எப்போதும் கணிசமான வாக்கு வங்கியும் செல்வாக்கும் இருக்கத்தான் செய்கிறது.
இதே பத்மனாபபுரம் தொகுதியில் 1954-லிருந்து தொடர்ந்து 6 முறை வெற்றிபெற்ற காங்கிரஸ், 1977-க்குப் பிறகு கூட்டணிக் கட்சியிடமிருந்து தொகுதியை வாங்க முடியவில்லை. பத்மனாபபுரம் தொகுதியில் 1989-ல் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்ற நிலையில் 1991-ல் மீண்டும் போட்டியிட்டு தோல்வியடைந்ததால், அதன்பிறகு கூட்டணிக் கட்சிதான் போட்டியிட்டு வருகிறது.
இந்த நிலையில் 2006-லிருந்து தொடர்ந்து இந்தத் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்று அதன் கோட்டையாக மாற்றியுள்ளது. 2016, 2021-ல் வெற்றிபெற்ற மனோதங்கராஜ் மீண்டும் 2026-ல் மூன்றாவது முறையாக களம்காணும் முயற்சியில் இருக்கிறார். ஆனால் அதற்கு செக் வைக்கும் விதமாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகிகள் பேசிவருவது மனோதங்கராஜுக்கு ஒருவிதத்தில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.பி. பெல்லார்மின், “""2021-ல் குமரி மாவட் டத்திலுள்ள 6 தொகுதிகளில் மூன்றில் தி.மு.க., மூன்றில் காங்கிரஸ் போட்டியிட்டது. நமக்கு ஒரு தொகுதிகூட தரவில்லை. ஆனால் இந்தமுறை அப்படி சும்மா விடமாட் டோம். பத்மனாபபுரம் தொகுதியை கண்டிப்பாகக் கேட்டுவாங்குவோம்''’என்று தோழர்களிடம் நம்பிக்கையோடு பேசி வருகிறார். மேலும் தொகுதியிலுள்ள கிளை மற்றும் வட்டாரக்குழு கூட்டத்திலும் இதைத் தீர்மானமாகவும் போட்டு வருகிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள்.
இதேபோல் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும்போது, “""நாங்கள் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதியைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம். மீண்டும் 3 தொகுதிகளில் கண்டிப்பாகப் போட்டியிடுவோம். அதில் தொகுதி மாறுமே தவிர, எங்கள் எண்ணிக்கை மாறாது. இதில் குளச்சல் தொகுதி எங்களிட மிருந்து தி.மு.க. எடுக்கும் என்று பேச்சு அடி படுகிறது. அப்படி குளச்சல் மாறுமென்றால் அதற்கு மாற்றாக பத்மனாபபுரம் தொகுதியைக் கேட்போம். இந்த கூட்டணியில் இதுவும் எங்களுக்கு சாதகமான தொகுதிதான். இப்போதும் காங்கிரஸ் செல்வாக்குள்ள தொகுதியாகத்தான் இருக்கிறது''’என்கின்றனர்.
இந்த நிலையில் தொகுதியை மனோதங்கராஜ் மீண்டும் தக்கவைப்பாரா? என்று பத்மனாபபுரம் நகர தி.மு.க.வினரிடம் நாம் பேசியபோது, ""இந்த தொகுதியில் மதரீதியாக கிறிஸ்தவர்களுக்கு அடுத்தபடி யாக இந்துக்கள், முஸ்லீம்கள் உள்ளனர். ஜாதிரீதியாகப் பார்த்தால் நாடார், நாயர், பட்டியலினத்தோர் என மற்ற சமூகங்களும் உள்ளனர். தேர்தல் நேரத்தில் மதம்தான் இங்கு தூக்கிப் பிடித்துக்கொண் டிருக்கும்.
இந்த தொகுதியைக் கைப்பற்ற தலைமைக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எவ்வளவு நெருக்கடி கொடுக்கிறதோ அதே போல் தி.மு.க.வில் சீட் வாங்க மனோ தங்கராஜுக்கு நெருக்கடியும் போட்டியும் கட்சியில் அதிகரித்துள்ளது. சுரேஷ்ராஜனின் தீவிர ஆதரவாளரான மா.து.செ.ஆக இருந்த தொழிலதிபர் ஜான் கிறிஸ்டோபர் 2016, 2021-ல் தலைமையிடம் தனக்கு சீட் கேட்டு மனோ தங்கராஜுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் இருவருக்குமிடையே கடுமையான உரசல் ஏற்பட்டதுடன் மனோதங்கராஜ் மந்திரியானதும், முதலில் ஜான்கிறிஸ்டோபரின் மா.து.செ. பதவியைப் பறித்தார். இதனால் இருவருக்குமிடையே பூசல் இன்றைக்கும் குறைந்தபாடில்லை. ஒரு மாதத்துக்கு முன் ஜான்கிறிஸ்டோபரின் மகள் திருமணம். தலைமையிலிருந்து ஆர்.எஸ்.பாரதி மற்றும் இளங்கோவன் கலந்துகொண்டனர். அந்த திருமணத்துக்கு அழைப்பிருந்தும், உள்ளூரி லிருந்த மனோதங்கராஜ் கலந்துகொள்ள வில்லை. இதனால் வரும் தேர்தலிலும் தனக்கு சீட் கேட்டு சென் னையில் அடிக்கடி முகாம் போட்டு வருகிறார் ஜான் கிறிஸ்டோபர்.
ஏற்கனவே இந்தத் தொகுதியில் 2016-ல் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்டு இரண்டாம் இடத்துக்கு வந்த, தற்போது தி.மு.க. மே.மா. இளைஞரணி அமைப்பாள ரான ஜெகநாதனுக்கும் மனோதங்க ராஜுக்கும் ஆரம்பத்திலிருந்தே ஏழாம் பொருத்தம்தான். மா.செ. மனோதங்கராஜின் எதிர்ப்பை மீறி உதயநிதி ஸ்டாலினை அழைத்துவந்து, தனது சொந்த ஊரில் கலைஞர் நூலகத்தை திறந்துவைத்ததன் மூலம் உதயநிதி ஸ்டாலினிடம் நெருக்கமாக இருந்துவருவதால் தனக்குத்தான் தொகுதி என்று இப்போதே அந்த வேலைகளில் இறங்கிவிட்டார் ஜெகநாதன்.
இதேபோல் முன்னாள் எம்.எல்.ஏ.வான டாக்டர் புஷ்பலீலா ஆல்பன், தனக்கு அல்லது தன்னுடைய மகன் டாக்டர் பிஸ்வாஸ் ஆல்பனுக்கு சீட் கேட்டுவருகிறார். திருவட்டார் ஒ.செ. ஜான்ப்ரைட்டும் களப்பணியில் தீவிரம் காட்டி வருகிறார். மனோதங்கராஜுக்கு எதிராகக் களத்திலிருக்கும் இவர்கள் எல்லாருமே சுரேஷ்ராஜனின் தீவிர ஆதரவாளர்கள். இதனால் இதில் ஒருவருக்கு சுரேஷ்ராஜனின் ஆசியும் உண்டு.
அதேநேரத்தில் மனோதங்கராஜ் உறுதியுடனும் அவருடைய ஆதரவாளர்கள் நம்பிக்கையுடனும்தான் இருக்கிறார்கள். இதற்கு காரணம் "கனிமொழியின் தீவிர ஆதரவாளரான மனோதங்கராஜுக்கு மீண்டும் மந்திரி பதவி கிடைக்க கனிமொழிதான் காரணம். மேலும் குமரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி இருப்பதால் தொகுதி மனோதங்கராஜை தாண்டி வேறு யாருக்கும் போவதற்கு வாய்ப்பில்லை' என் கின்றனர்.
இந்த நிலை யில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ் டைச் சேர்ந்த சிலர் நம்மிடம், “""மனோதங்கராஜ் ஆரம்பத்திலிருந்தே கூட்டணிக் கட்சியான எங்களைக் கண்டு கொள்வதும் இல்லை, மரியாதை தருவதும் இல்லை.
இதனால்தான் உள்ளாட்சித் தேர்தலில்கூட மேற்கு மாவட்டத்தில் தி.மு.க.வும், காங்கிரசும் தனித்தனியாகப் போட்டியிட்டது. மேலும் கம்யூனிஸ்ட் மா.செ.கூட மனோதங்கராஜ் மீது தலைமையிடம் நேரிடையாகவே புகார் கூறியதால், கூட்டணிக் கட்சி சார்பில் நடக்கும் எந்தக் கூட்டங்களுக்கும் அவர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இன்றுவரை அழைப்பு கொடுப்ப தில்லை. எங்க தலைமை கொடுக்கும் அழைப்பை ஏற்றுத்தான் கம்யூனிஸ்ட் கலந்துகொள் கிறது.
பத்மனாபபுரம் தொகுதி யின் முக்கிய பேருந்து நிலையமான தக்கலை பேருந்து நிலையத்தை இடித்து புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நான்கு ஆண்டுகளாகியும் ஆமைவேகத்தில்தான் நடக்கிறது இதனால் பொது மக்கள், வியாபாரிகள் ரொம்ப கஷ்டப்படுறாங்க. அதைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க மனோதங்கராஜுக்கு நேரில் கோரிக்கை வைத்தும் அதை கண்டுகொள்ளவே யில்லை. எதிர்க்கட்சியினரும், தொகுதி மக்களும் உங்க கூட்டணிக் கட்சியின் ஆட்சி இப்படிதான் இருக்கும்னு எங்களிடம் நக்கலா பேசுறாங்க. நாங்க நூறு சொல்வதில் ஒன்றைக்கூட மனோதங்கராஜ் கேட்கிறது இல்லை. அதனால மீண்டும் அவருக்கு எப்படி தேர்தல் வேலை செய்வது என்று யோசிக் கிறோம்''’என்றனர்.
"தி.மு.க. கூட்டணியில் இருக்கும் இரண்டு தேசிய கட்சிகள், மந்திரியின் தொகுதிக்கு மல்லுக்கட்டுவது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது' என்கிறார்கள் தொகுதிவாசிகள்.