காங்கிரசின் கோட்டையாக தொடர்ந்து இருந்துவரும் குமரி மேற்கு மாவட்டத்திலுள்ள குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க.- காங்கிரஸ் அல்லது அ.தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கு வெற்றி உறுதி என்பதுதான் தேர்தல் வரலாறு. இதனால் இந்தத் தொகுதிகளை காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுப்பதில்லை.
இந்த சூழலில் வரும் தேர்தலில் இந்தத் தொகுதியிலும், வேட் பாளர்களிலும் மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும் என்று காங்கிரசாரே கூறும்நிலையில் அதற்கான போட்டிகளும் கடுமையாக உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறும்போது, "குளச்சல் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ.வாக இருக்கும் பிரின்ஸுக்கு இந்த முறை சீட் கிடைப்பது சந்தேகம். கடந்த முறை கடைசி நேரத்தில் சீட் வாங்கிய பிரின்ஸிடம் அடுத்தமுறை புதியவர்களுக்குத்தான் வாய்ப்பு எனக் கூறியே தலைமை சீட்கொடுத்தது.
இதனால் குளச்சலுக்கு கடந்த முறை கடும் நெருக்கடி கொடுத்த காங்கிரஸ் கி.மா. தலைவர் கே.ற்றி.உதயம், மே.மா. தலைவர் டாக்டர் பினுலால் சிங், அகில இந்தியர் இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் ஆகியோர் தங்களின் ஆதரவு தலைவர்களை அடிக்கடி சந்தித்து வருகிறார்கள்.
மேலும் மீனவர்கள் அதிகமுள்ள இந்த தொகுதியில் நாடார் சமூகத்தினர்தான் வெற்றி பெற்று வருகின்றனர். இதனால் இந்த தொகுதியை வைத்துதான் மீனவ சமுதாயத்தினர் எங்களுக்கு ஒரு தொகுதி தாருங்கள் என்று தி.மு.க., அ.தி.மு.க.வை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வும் மீனவருமான தாரகை கத்பட் தனது சொந்தத் தொகுதியான குளச்சல் தொகுதி மீனவ மக்களிடம் சமீபகாலமாக நெருக்கமாக இருந்து வருகிறார். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த லூர்தம்மாள் சைமனுக்கு தமிழக அரசால் கட்டப்படும் நினைவு மண்டபமும் குளச்சலில் வருகிறது. இதற்கான கோரிக்கையை வைத்தவர் தாரகை கத்பட் என்பதால் விளவங்கோடுக்கு பதிலாக குளச்சலில் போட்டியிடலாம் என்ற ஆசையும் தாரகை கத்பட்டுக்கு உள்ளது.
இது ஒருபுறமிருக்க, எம்.எல்.ஏ. பிரின்ஸ் நான்காவது முறையாக மீண்டும் குளச்சலில் சீட் வாங்கிவிட வேண்டுமென்ற முயற்சியில் அடிக்கடி டெல்லி சென்றுவருகிறார். ஒருவேளை தனக்கு சீட் கிடைக்கவில்லையென்றால் தன்னுடைய மகன் டோனலுக்கு குளச்சல் அல்லது சொந்தத் தொகுதியான விளவங்கோட்டில் சீட் வாங்கிவிட வேண்டுமென்ற முனைப்பில் மகனை செல்லுமிடமெல்லாம் அழைத்துச் சென்று காங்கிரஸ் தலைவர்களிடம் அறிமுகப்படுத்தி வருகிறார்''’என்கிறார்.
விளவங்கோடு தொகுதி பற்றி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறும்போது, "விளவங்கோடு இடைத்தேர்தலில் அந்த தொகுதியில் ஒரு சதவிகித வாக்குகள் மட்டுமே கொண்ட மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த தாரகை கத்பட்டை நிறுத்தி வெற்றிபெற வைத்தனர். அந்த தொகுதியில் நாடார்கள் அதிகமென்பதால் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மே.மா.தலைவர் டாக்டர் பினுலால் சிங் அப்போது சீட்டு கேட்டு நெருக்கடி கொடுத்ததோடு தாரகை கத்பட்டுக்கு எதிர்ப்பும் தெரிவித்தார்.
உடனே எம்.பி. விஜய்வசந்தும் கட்சி யின் டெல்லி தலைமையும் பினுலால் சிங்கை நேரில் அழைத்து எம்.பி. தேர்தலில் குமரி மாவட்டத்தில் ஒட்டுமொத்த மீனவர்கள் ஓட்டும் விஜய் வசந்துக்கு கிடைக்கவேண்டுமென்றால் இடைத் தேர் தலில் மீனவரான தாரகை கத்பட்டுக்கு சீட் கொடுப்பதுதான் நல்லது என்று அமைதிப்படுத்தினார்கள். இதனால்தான் வரும் தேர்தலில் விளவங்கோடு அல்லது குளச்சலுக்கு சீட் கேட்டு இப்போதே நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்ட பினுலால் சிங், அந்த இரண்டு தொகுதிகளிலும் உள்ள முக்கிய நிர்வாகி களைச் சந்தித்து ஆலோசனைகளையும் நடத்திவருகிறார்.
அதேபோல் டாக்டர் செல்லக்குமாரின் தீவிர ஆதரவாளரான மாநில செயலாளராக இருக்கும் ரமேஷ்குமார், கடந்த இடைத்தேர்தலில் சீட் தனக்கு என்று கடைசிவரை நம்ப வைத்துவிட்டு ஏமாற்றி னார்கள் என்ற கோபத்தில் இருக்கிறார். தொடர்ந்து தாரகை கத்பட்டுக்கு எதிரான மனநிலையில் இருந்துவரும் ரமேஷ்குமாருக்கு டாக்டர் செல்லக்குமார் நம்பிக்கை கொடுத்திருப்பதால் அதை நம்பி தொகுதி மக்களிடமும் தொண்டர்களிடமும் நெருக்க மாக இருந்துவருகிறார்.
அதே நேரத்தில் கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் ராஜேஷ்குமாரோ, "எனக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பொய்யும் அவதூறுகளும் பரப்பிவரும் ரமேஷ்குமாருக்கு விளவங்கோட்டில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமென்றால் அதை கிடைக்கவிடாமல் தடுப்பதுதான் என்னுடைய வேலையாக இருக்கும். என்னை மீறி அவர் சீட் வாங்கிவிடுவாரா?''”என ஓப்பனாகவே கட்சி நிர்வாகிகளிடம் பேசிவருவது ரமேஷ்குமாருக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையில் 2021-ல் சீட் கிடைக்காத அதிருப்தியில் விஜயதாரணியை எதிர்த்து கல்வி நிறுவனங்களின் அதிபரான ராஜீவ்காந்தி, சுயேட்சையாகப் போட்டியிட்டு 13,000 வாக்குகள் வாங்கினார். டாக்டர் சாமுவேல் ஜார்ஜும் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பின்வந்த இடைத்தேர்தலில் தாரகை கத்பட் வெற்றிபெற்றார். வரக்கூடிய பொதுத்தேர்தலில் இங்கு நாடார் ஒருவர் நின்றால்தான் வெற்றி பெறமுடியும் என கூறிவரும் அவரும் நெருக்கடி கொடுத்து வருகிறார்.
கிள்ளியூர் தொகுதி பற்றி முன்னாள் நிர்வாகி ஒருவர் கூறும்போது, "கிள்ளியூர் தொகுதியைப் பொறுத்தவரை மூன்றாவது முறையாக மீண் டும் ராஜேஷ்குமாருக்குதான் வாய்ப்பு. மற்ற எம்.எல்.ஏ.க்கள் போலில்லாமல் தொகுதி மக்களாக இருந்தாலும் கட்சிக் காரர்களாக இருந்தாலும் போன் எடுத்துப் பேசுவதோடு அவர் களின் நியாயமான கோரிக் கைகளை காவல் நிலையத்திலோ மற்ற அதிகாரிகளிடமோ பேசி முடிக்கிறார். இதனால் அவருக்கு எந்த ஒரு எதிர்ப்பும் இல்லை.
அதேநேரத்தில் மாணிக்தாக்கூர் எம்.பி.யின் தீவிர ஆதரவாளரான காங்கிரஸ் ஓ.பி.சி. அணி தலைவர் ஸ்டூவர்ட், நாள் தவறாமல் தொகுதியை சுற்றிவருவதோடு கட்சிக்காரர்களின் தேவைகளையும் கவனித்து வருகிறார். மகிளா காங்கிரஸ் தலைவி ஷர்மிளா ஏஞ்சலும் வழக்கம்போல் நம்பிக்கையோடு நடைபோட்டு வருகிறார்'' ’என்றார்.
இந்த நிலையில் குளச்சல் தொகுதி இந்த முறை காங்கிரசிடமிருந்து தி.மு.க.வுக்கு மாறுகிறது. தி.மு.க.வில் மாநில மீனவரணிச் செயலாளராக இருக்கும் ஜோசப் ஸ்டா லினுக்காக அந்த தொகுதியை தி.மு.க. கேட்கும் என்றும், பெரும் தொழிலதிபரான ஜோசப் ஸ்டாலின் தூத்துக்குடி, சென்னையில் செட்டிலாகியிருக்கும் நிலையில், தி.மு.க. மீனவரணிச் செயலாளர் பதவி கிடைத்ததும் சொந்த ஊரான குளச்சலுக்கு தற்போது அடிக்கடி வந்துசெல்கிறார். உதயநிதி ஸ்டாலினை குளச்சலுக்கு அழைத்துவந்து மீனவர் தின விழாவை பிரமாண்டமாக எடுத்தார்.
மே 3-ஆம் தேதி சென்னையில் தி.மு.க. மா.செ. கூட்டம் நடக்கவிருந்த நிலையில் அதற்கு முந்தின நாள் 2-ஆம் தேதி மாலையில் நாகர்கோவிலில் நடந்த ஜோசப் ஸ்டாலின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டது அவருக்கு குளச்சல் தொகுதியை உறுதிப் படுத்தும் விதத்தில் இருந்ததாகவும், அதனால்தான் ஜோசப் ஸ்டாலின் குளச்சலில் தி.மு.க. நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்வதுடன் மகளின் திருமணத்தையும் குளச்சலில் வைத்து நடத்தினார். எனவே 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குளச்சல் தொகுதி தி.மு.க.வுக்கு உறுதியாக வரப்போகிறது''’என்கின்றனர் உ.பி.க்கள் சிலர்.
குளச்சல் தொகுதி தி.மு.க.வுக்குப் போகிறது என்ற பேச்சு பரவி வரும் நிலையில் இது குளச்சல் காங்கிரசார் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் கூறும்போது, "குளச்சல் தொகுதி தி.மு.க.வுக்குப் போகிறது என உள்ளூர் தி.மு.க.வினர்தான் விசயம் தெரியாமல் பரப்பிவருகிறார்கள். அது காங்கிரஸ் தொகுதிதான். நான்தான் போட்டியிடப் போகிறேன். எனக்கு சீட் கிடைக்காதென்று சிலர் சொல்கிறார்கள் என்றால் அவர்கள் எனக்கும் கட்சிக்கும் விரோதமானவர்கள்தான்'' என்றார்.
ஆக, குளச்சல் தொகுதி பலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது!