இந்திய பட்ஜெட் வெகுகாலமாகவே வரவு எட்டணா… செலவு பத்தணா என்ற ரீதியில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. பேப்பர் இல்லாத முழு டிஜிட்டல் பட்ஜெட் என்ற அலங்கார வார்த்தைகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்த 2021-22 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஆதரவுக் கட்சிகளிடமிருந்து பாராட்டையும் எதிர்க்கட்சிகளிடமிருந்து விமர்சனங்களையும் பெற்றுக்கொண்டிருக்கிறது.
தமிழகத்துக்கு என்ன ஆதாயம்?
விரைவில் தேர்தல் வரப்போகும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி மாநிலங்கள் மீது உரிய கவனம் செலுத்தி சில தாராளமான திட்டங்களை அறிவித்திருக் கிறது. குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ 63,246 கோடியும், தமிழகத்துக்கான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ரூ 1.3 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ரூ.2000 கோடி மதிப்பீட்டில் 7 துறைமுகப் பணிகள் மேம் படுத்தப்பட உள்ளன. இவற்றில் சென்னை காமராஜர் துறைமுகம், வ.உ. சிதம்பரனார் போன்றவையும் அடங்கும். அதேசமயம் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதாயத்தை மையமாகக் கொண்டு இத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன எனக் கூறி திட் டங்கள் அறிவிக்கும்போதே எதிர்க்கட்சிகள் "அதானி... அதானி' என முழக்கமிட்டன. தவிரவும் தமிழகத்தில் கடல்பாசி பூங்கா ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை திட்டமும் துரிதப்படுத்தப்பட உள்ளது என்னும் அறி விப்பால் தமிழக விவசாயிகள் மேலும் அதிருப்தியடைந்துள்ளனர்.
வேளாண் துறை
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்தியத் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடிவரும் நிலையில், மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ 16.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க ஒதுக்கப்பட்டுள்ளதை பா.ஜ.க. பெருமையாகக் குறிப்பிடுகிறது. தவிரவும் நெல், கோதுமை உள்ளிட்ட இதர பயிர் களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக் காக ரூ 1,75,760 கோடி ஒதுக்கப்பட் டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிடு கிறது. மாறாக, உ.பி. எல்லையில் போராடும் பி.கே.யூ. தலைவர் ராகேஷ் திகைத், “""எங்களது கோரிக்கை விவசாயக் கடன் அல்ல. விளைபொரு ளுக்கு அதிக விலை. அதுபோல, குறைந்தபட்ச ஆதார விலை பற்றி அவர்கள் நேரடியாக எதுவுமே பேசவில்லை. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எதுவுமே இல்லை'' ’என்கிறார்.
பள்ளிக்கல்வித் துறை
கடந்த ஆண்டைவிட ஐந்தாயிரம் கோடி ரூபாயைக் குறைத்து இந்த ஆண்டு கல்வித்துறைக்கு ரூ 54,873 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு கடந்த ஆண்டைவிட 1200 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கியிருப்பதை கல்வியாளர்கள் விமர்சிக்கின்றனர். மத்திய அரசின் கல்வித் திட்டத்தை நோக்கி மாநில அரசுகளை நெருக்கும் வியூகமாக இது பார்க்கப்படுகிறது.
சுகாதாரத் துறை
உலகத்தையே புரட்டிப்போட்ட கொரோனா, இன்னும் தன் இடத்தைக் காலி செய்யாத நிலையில் எந்த ஒரு நாடும் பட்ஜெட்டில் சுகாதாரத்துறையை தனி அக்கறையுடன் கவனித்தாகத்தான் வேண்டும். இத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ 2 லட்சத்து 23,846 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 137 சதவிகிதம் அதிகம். கொரோனா தடுப்பூசிக்கு மட்டும் ரூ 35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தியா முழுமைக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படுமா என்பதுகுறித்து பட்ஜெட்டில் தகவல் ஏதுமில்லை.
ரயில்வே துறை
மெல்ல மெல்ல தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுவரும் ரயில்வே துறைக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் 1.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது பலரது புருவத்தையும் உயரவைத் திருக்கிறது. உட்கட்டுமானம், பயணியர் வசதி, பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்துறை
வீடும் நாடும் வெளிச்சமாக இருக்க மின்துறை ஆரோக் கியமாக இருக்கவேண்டும். ஆனால் இந்தியா முழுவதுமுள்ள மாநில மின்துறைகள் பெருந்தொகை கடனில் தள்ளாடுகின்றன. அதனால், மின்துறையை தனியார்மயமாக்கிவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கான நாளை மத்திய அரசு ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
இவ்வாண்டு மின்துறைக்கு ரூ 3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மின்விநியோகத்தில் தனியாருக்கு முக்கியத் துவம் தரப்படுமென நிதியமைச்சர் கூறியுள்ளார். தனியார் நிறுவனங்களிடமும் மின் இணைப்புப் பெறலாம் என தாராளம் செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் நிலவரப்படி மின்விநியோக நிறுவனங்களுக்கு மின்துறை செலுத்தவேண் டிய கடன்தொகை மட்டும் ரூ 1.35 லட்சம் கோடியாகும்.
எதிர்மறை அம்சங்கள்
மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள் செலுத்தும் வருங்கால வைப்பு நிதிக்கான தொழிலாளர் பங்குத் தொகை வருடத்துக்கு ரூ 2.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் அதற்கு வரிப் பிடித்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மகாத்மா காந்தி தேசிய ஊரக நூறுநாள் வேலைத் திட்டத்துக்கான நிதி கடந்த ஆண்டு 1.15 லட்சம் கோடியாக இருந்தது இவ்வாண்டு 73,000 கோடியாகக் குறைக்கப்பட்டுளளது. விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக "செஸ்' வரி கூடுதலாக விதிக்கப்பட்டுள் ளது. தங்கம், பெட்ரோல், ஆல்ஹகால் உள்ளிட்ட பொருட்களின் மீது விதிக்கப்படும் செஸ் வரி மாநில அரசுகளுக்குத் தலைவலியாக அமையும். மேலும் இத்தகைய செஸ் வரியில் மாநில அரசுகளுக்கு எந்தப் பங்கும் கிடைக்காது.
ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்க 7 ஜவுளி பூங்காக்கள் வரவுள்ளன. ஆனால் பருத்தி மீது 10% விரிவிதிக்கப்பட்டிருக்கையில்- எப்படி பலன் கிடைக்கும் என்கிறார்கள் துணி ஆலை நிறுவனர்கள்.
கிட்டத்தட்ட ரூ 1.75 லட்சம் கோடிக்கான பொதுத்துறை நிறுவனப் பங்குகள் தனியாருக்கு விற்கப்பட உள்ளது. வரிவிதிப்பிலிருந்து விலக்களிக்கப் பட்டுள்ள 400 பொருட்களுக்கு வரிவிதிப்பது குறித்து மத்திய அரசு கவனம் செலுத்திவருகிறது. இது நுகர்வோர் தலைச்சுமையையே அதிகரிக்கும்.
காப்பீட்டுத் துறையில் 49 சதம் அந்நிய முதலீடு என்பதை 74 சதவிகிதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் எல்.ஐ.சி. போன்ற நிறுவனங்கள் வேகமாக தனியார்மயமாகும் ஆபத்திருக்கிறது.
நலிந்த வங்கிகளுக்கு உயிர்கொடுக்க ரூ 20000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் நலிவுக்குக் காரணமான வாராக் கடன், கடன் வாங்கிவிட்டு தலைமறைவாகும் தொழிலதிபர்கள் குறித்து உரிய தீர்மானத்துக்கு வராமல் நிதிஒதுக்கி என்ன பலன்?
மாநிலங்கள் தங்கள் மாநில ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 4% சதவிகிதம் கடன் வாங்க அனுமதியளித்துள்ளது. ஜி.எஸ்.டி. பாக்கிகளை மாநிலங்களுக்கு முழுமையாக அளிக்காத நிலையில், அந்த எதிர்ப்புகளை சமாளிக்கும் ஒரு வழிமுறையாகத்தான் இந்தக் கடன் அனுமதியை பொருளாதார நிபுணர்கள் பார்க்கின்றனர்.
ஜி.எஸ்.டி. பாக்கி மாநிலங்களின் கைக்கு வரும்போது அது அவர்களது பணம். அதனை முறையாக செலவழிக்கலாம். ஆனால் கடன் வாங்கிச் செலவழிக்கும்போது அதற்கு வட்டி செலுத்தியாக வேண்டும். அந்தச் சுமையும் கூடுதலாக மாநிலங்களின் தலையில்தான் விடியும்.
இவ்வாண்டு பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை 9.5 சதவிகிதம் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதைச் சரிக்கட்டத்தான் பொதுத்துறைப் பங்குகள் விற்கப்படுகின்றன.
இதையும் தாண்டிய பற்றாக்குறைகளுக்காக 12.05 லட்சம் கோடி கடன் வாங்கத் திட்ட மிடப்பட்டுள்ளது. இதில் முந்தைய கடன்களைத் திருப்பிச்செலுத்துவதற்காக வாங்கும் கடன் மட்டும் ரூ 2.8 லட்சம் கோடியாகும்.
பட்ஜெட் குறித்து இந்தியப் பிரதமர் மோடி, “""இந்த பட்ஜெட் யதார்த்த உணர்வையும் வளர்ச்சிக் கான நம்பிக்கையையும் அளிக்கிறது''’என்றார். மாறாக எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியோ, ""மோடி அரசாங்கம் இந்தியாவின் சொத்துக்களை, அவரது நட்புவட்டத்திலுள்ள முதலாளிகளுக்கு கையளிக்கத் திட்டமிடுகிறது''’’ என காட்டமாக விமர்சித்தார்.
தமிழகத்திலும் எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், “""தமிழக சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, மத்திய அரசு தமிழக மக்களுக்கு ஒரு மாய "லாலிபாப்'பைக் கொடுத்து ஏமாற்ற நினைக்கிறது''’என்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளரான டி.ராஜா, “""மோடி அரசின் பட்ஜெட் வழக்கம் போல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதரவாக உள்ளதென''க் குறிப்பிட்டார்’’
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமோ, ""இதுவரையில்லாத மோசமான பட்ஜெட். தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களை மட்டுமே மனதில் வைத்து தயாரித்திருக் கிறார்கள். ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு இல்லை''’ என பல்வேறு அம்சங்களைச் சுட்டிக்காட்டி ஒரு பிடி பிடித்துள்ளார்.
பாமரர்களோ, "மளிகை, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை இறங்கினால் நல்ல பட்ஜெட். ஏறினால் மோசமான பட்ஜெட். நாங்கள் நல்ல பட்ஜெட்டை பார்த்து வருஷம் பல ஆச்சு...'’ என சோகப் பெருமூச்சு விடுகிறார்கள்.