சென்ற ஆண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததைக் காரணம்காட்டி, மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியைக் கைதுசெய்து சிறையில் அடைத்த அ.தி.மு.க. அரசின் செயல் அரசியல் வட்டாரத்தை அதிர வைத்திருக்கிறது.
தமிழகத்தின் உணர்வை சுட்டுக்கொன்ற ஸ்டெர்லைட் படுகொலைகள் மற்றும் வாழ்வாதாரத்தை விலைபேசும் எட்டுவழிச்சாலை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு திரும்பினார் திருமுருகன் காந்தி. அவரை பெங்களூரு விமான நிலையத்தில் வைத்தே கைதுசெய்தது காவல்துறை. இந்தக் கைது நடவடிக்கை குறித்து மே-17 இயக்க நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, “""மே 22-ஆம் தேதி வெளிநாடு சென்ற திருமுருகன் காந்தி தமிழீழம், தூத்துக்குடி படுகொலைகள் மற்றும் இந்தியாவில் மக்களுக்காக போராடுபவர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் போடப்படுவது குறித்து ஐ.நா.வில் பேசினார். குறிப்பாக, தமிழகத்தில் தொடர்ச்சியாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வேல்முருகன், வளர்மதி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டதையும் அங்கு பதிவுசெய்தார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் மே-17 இயக்கத்தின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டன. தற்போது இரண்டு மாத வெளிநாட்டுப் பயணத்திற்குப் பின்னர் பெங்களூருவில் நேரடியாக நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ள வந்தவரை, பெங்களூரு விமானநிலையத்தில் கைது செய்திருக்கிறார்கள். காரணம் கேட்டதற்கு, "இந்தியாவின் எந்த விமானநிலையத்திற்கு வந்தாலும், திருமுருகன் காந்தியைக் கைது செய்யவேண்டும்' என லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறினர். ஆனால், இதுபற்றி எங்கள் அலுவலகத்திற்கோ, திருமுருகன் காந்திக்கோ எந்தவிதமான அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை.
பெங்களூரு காவல்நிலையத்தில் 18 மணிநேரத்திற்கும் மேலாக வைக்கப்பட்டிருந்தவரை, தமிழக போலீஸார் தீவிரவாதி என குறிப்பிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஐ.நா.வில் பேசியதற்காக அவர்மீது அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு புகார் கொடுத்திருக்கிறது. மேலும், ஐ.நா.வில் பேசியது உள்ளிட்ட சில வீடியோக்களின் யூடியூப் லிங்குகளும் மற்றொரு புகாரில் இணைக்கப்பட்டுள்ளன. அவரை சென்னை அழைத்துவந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், “"வெளிநாட்டில் பேசியதற்கு லுக்-அவுட் கொடுத்தது தவறு. இதற்கெல்லாம் ரிமாண்ட் செய்யமுடியாது'’என மாஜிஸ்திரேட் தெரிவித்தார். மேலும், "வேண்டுமானால் 24 மணிநேர விசாரணைக்கு மட்டும் உத்தரவிடுவதாக'’ கூற, விசாரணை முடிந்து வெளியே வந்தவரை மீண்டும் காரணம் சொல்லாமல் கைதுசெய்தது காவல்துறை.
எங்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதைக்கூட சொல்லாமல், ராயப்பேட்டை காவல்நிலையத்திற்கு கூட்டிச்சென்றனர். அங்கு சென்று விசாரித்தால், 2017-ல் குண்டர் சட்டம் ரத்தாகி வெளிவந்தபோது, கூட்டம்கூட்டமாகச் சென்று பெரியார் சிலைக்கு அனுமதியின்றி மாலை அணிவித்ததற்காக வழக்குப் பதியப்பட்டுள்ளதாகக் கூறினர்.
இதற்கு முன்னர் பதியப்பட்டுள்ள வழக்குகளுக்கு ஜாமீன் கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், எஃப்.ஐ.ஆரை மாற்றியமைத்து, அதில் குறிப்பிடாத 124ஏ தேசத்துரோக வழக்கு மற்றும் 153 ஆகிய பிரிவுகளைப் புதிதாக இணைத்துள்ளனர். இரவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். எந்த முன்னறிவிப்புமின்றி, அங்கிருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றியிருக்கிறது தமிழக அரசு. தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக அ.தி.மு.க. ஆட்சியில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது''’என்கின்றனர் ஆதங்கத்துடன்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரியிடம் பேசியபோது, ""மக்களைப் போராட்டத்திற்குத் தூண்டும், தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைத் தொடர்ந்து கைதுசெய்து வருகிறோம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து திரும்பியிருக்கும் திருமுருகன் காந்தி, தமிழகத்தில் தொடர் போராட்டங்களை நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகின. அதனடிப்படையிலேயே அவரைக் கைது செய்திருக்கிறோம். தேசத்துரோக வழக்கு போன்ற முக்கிய வழக்குகள் முடிக்கப்படாமல் இருப்பதால், அதிலும் தீவிரம் காட்டி வருகிறோம்''’’ என்றார்.
மக்கள் வாழ்வாதாரங்கள் மற்றும் உரிமைகளைப் பறிக்கும் அரசுத் திட்டங்களையும், செயல்பாடுகளையும் விமர்சிப்பவர்களையும், அரசுக்கு எதிராக போராடுபவர்களையும் தொடர்ந்து கைதுசெய்து வருகிறது தமிழக அரசு. அதோடு சேர்த்து அவர்கள் மீதான பழைய வழக்குகளைத் தூசிதட்டி, தேசத்துரோக வழக்கையும் பதிவுசெய்து மிரட்டி வருகிறது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மாணவி வளர்மதி போன்றோரை, மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக வலுக்கட்டாயமாகக் கைதுசெய்த காவல்துறை தேசத்துரோக வழக்கைக் காட்டியே மிரட்டியது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். நாம் தமிழர் சீமான், இயக்குனர்கள் அமீர், கௌதமன் உள்ளிட்டோரையும் குறிவைத்து ஒடுக்கும் வேலைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. "மக்கள் அதிகாரம்' தோழர்கள் குறிவைக்கப்படுகின்றனர். இதன் பின்னணியில் முழுவீச்சில் இறங்கியிருக்கும் மத்திய உளவுத்துறை, ஒரு லிஸ்டைத் தயார்செய்து தமிழக அரசுக்கு நெருக்கடி தருகிறது. மத்திய அரசின் கட்டளைகளுக்கு அடிபணியும் மாநில அரசின் சர்வாதிகாரப்போக்கு முடிவுக்கு வரவேண்டும்.
-சி.ஜீவாபாரதி